காலங்காலமாக ஆரம்பநிலை பள்ளியின் சுவர்கள் பாசிக் கரைபடிந்த சுவர்களோடு காட்சியளித்தன. மேற்கூரை ஒழுகும் வண்ணமாக உடைந்த ஓடுகளாய் சொருகியிருந்தன. பள்ளியின் வலது புறம் ஆசிரியர்களுக்கென்று.. ஒரே ஒரு கழிவறை மட்டும் அதுவும் நிரந்தப் பூசனம் பூத்ததாய் நிராகரிக்கப்பட்டிருந்தது. கழிவறையை ஒட்டி உயரமாக வளர்ந்து நின்ற ஒற்றை புளியமரம். புளியமரத்திற்கென்று தனி வரலாறும் உண்டு.. புளிய மரத்தின் கதையைக் கேட்கும் போதெல்லாம் ராசமணி தான் ஞாபகத்திற்கு வருவதுண்டு.

சக ஆசிரியர்களுக்கும் அவரிடம் படித்த மாணவர்களுக்கும் ஊர்காரர்களும் அவ்வப்போது இக்கதையை வாயில் போட்டு மெல்வதுண்டு. குப்பை மேடாகக் கிடந்த பள்ளியை சீரமைக்கத் தொடங்கிய காலம் என்பது, ராசமணி பள்ளிக்கு ஆசிரியராக பொறுப்பேற்று வந்த நாள் தான் பள்ளிக்கு விடிவுகாலம் ஆரம்பித்தன என்பது தான் அன்றைய அவ்வூரின் வரலாறு. கிழக்கு எப்போது விடியும் என்பதே உழைக்கும் வர்க்கத்தின் குறியீடு. ஆனால் மனிதப்பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டைத் தாண்டித்தான் அவ்வூரின் ஒரு நுழைவாயில்.  வழிநெடுக புன்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருக்கும் ராஜபாட்டை தான் அவ்வூரின் கிழக்கு எல்லை. மேற்கின் எல்லையாக சுந்தரநாச்சியம்மன் கோயில் இருக்கும். வடக்கேயும் தெற்கேயும் கழனிகளும் தோப்புகளுமே எல்லைகளாக விரிவடைந்திருக்கும்.

எங்கும் பச்சை வண்ணம் வாழ் சுழற்றியபடியே இருந்தது. தெற்கு தேயாமலும் வடக்கு வாடாமலும் பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும் ரசிப்பதாகவும் இருந்தது. வயகாட்டுக்குச் செல்லவும் நாற்று நடவ, தண்ணீர் பாய்ச்ச என எல்லாவற்றிற்கும் நாச்சியாத்தாளை வழிபட்டு பிள்ளையார் சுழி யிட்டுச் செல்வது தான் வழக்கம். முப்போகமும் செழித்து வளர நாச்சியாத்தா எப்போதும் குறை வைத்ததில்லை அவ்வூருக்கு ஆகவே நாச்சியம்மாளை போற்றும் விதமாக பெண்பிள்ளைகளுக்கு பெரும்பாலும் சுந்தரநாச்சியார், வள்ளி, வீரநாச்சி, வீராத்தாள் என பெயர் சூட்டுவது வழக்கமாகவே தொன்று தொட்டு வருகின்றது.

ஊரின் செழிப்பை கண்களால் ரசித்து வார்த்தைகளால் வர்ணிக்க அவ்வூரார் ஒன்றும் கவிகளல்ல பெரும்பாலும் சம்சாரிகளே.  நெல், வாழை, கரும்பு, பருத்தி, தட்டாம்பயறு, மொச்சை, சூரியகாந்தி எனப் பயிரிட்டு பக்கத்து ஊர் வியாபாரிகளிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பதுண்டு. ஊரின் செல்வத்திற்கொன்றும் குறையில்லை என்பதை வந்த முதல் நாளிலேயே ராசணிக்குடும்பர் தெரிந்து கொண்டார். ஆனால் ஆரம்பநிலை பள்ளிக்கூடத்தைப் பார்த்ததுமே சரி செய்ய வேண்டுமென்ற எண்ணம் தளிர்த்தது அவரது மனதில்.

படர்ந்திருந்த வேலி முட்களை ராசமணியே முன்னிற்று வெட்டி எடுத்து தீ வைத்துக் கொளுத்தினார். மண்வெட்டி எடுத்து சுவரோரம் மெல்லியதாக சுரண்டி மெத்தை போல் மண்ணரன் அமைத்து விட்டு சோ.. என்று நிமிர்ந்ததில் ராசமணியின் குறுக்கு வலித்திருக்க வேண்டும் என அத்தெருவில் சென்றவர்கள் பேசிக்கொண்டே சென்றார்கள். மேடும் பள்ளமுமாக இருந்த பள்ளியின் முன் பகுதியை சமன் செய்து விட்டு வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் கற்றாழைச் செடியை நட்டு வைத்து தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார். பள்ளிக் குழந்தைகள் விளையாடவும் மதியச் சோறுண்ணவும் பெரிய நிழல் தருகின்ற மரமொன்றை அமைக்கலாம்  என்ற ஓங்கிய எண்ணம் அவருக்குள் எழுந்தது. அப்போது தான் புளியங்கன்று ஒன்று வாங்கி வந்து நட்டும் வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு பள்ளிச் சிறுவர்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அன்புக் கட்டளை விதித்தார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து தளிர்த்து இளங்கன்றாய் நிமிர்ந்து தென்றலான காதலியுடன் உரையாடுவது போல அடிக்கடி தலையாட்டி கொண்டெயிருந்தது..

ஆசிரியர் சேவைக்கு வந்தாகிவிட்டது.. கொஞ்ச நாட்கள் கழிந்திருந்த நிலையில், ராசமணி பள்ளிக்கூடத்தின் சுற்றுப்புறச் சுவர்களுக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, அவ்வூர் நாட்டாமையான தெய்வேந்திரனிடம் 'யப்பா நம்ம பள்ளிக்கு வெள்ளையடுச்சா நல்லா இருக்கும் னு தோணுது அதான்' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டி விட்டு சென்றார்.

அன்றிரவே ஊர்க்கூட்டம் கூடி பள்ளிக்கு புத்தாடை வழங்கி விடலாம் என முடிவெடுக்கப்பட்டது. தலைக்கட்டுக்கு இவ்வளவென தீர்மானித்து வசூலித்து பெரும் தொகையொன்றை சம்சாரிகள் ராசமாணிக்கத்திடம் ஒப்படைத்தனர். அவருக்கு ஊரின் மேலும் சம்சாரிகளின் மேலும் அளப்பரிய மரியாதை உண்டாயிற்று. சுற்றுச் சுவற்றுக்கும் வர்ணம் பூசியாயிற்று. ராசமணிக் குடும்பருக்கு விரைவிலேயே இவ்வூர் பிடித்துப் போயிருந்ததை அவ்வூர்வாசிகள் புரிந்து கொண்டனர்.

அதிகாலையிலேயே மக்கள் ஆடுமாடுகளையும் காளைகளையும் அழைத்துக் கொண்டு கழனிக்குச் செல்லுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஏனெனில் அதிகாலை முதலே அவர்களின் உழைப்பு தொடங்கிற்று இவ்வூரார் சோம்பேறிகள் அல்லவே என அடிக்கடி நினைத்துக் கொள்வார். சோலைக் குருவிகளின் கீச்சிடலும் வயல்வெளிக் கொக்குகளின் படபடப்புகளும் மைனாக்களின் கத்தல்களும், சிட்டுக்குருவிகளின் சிலாகித்துப் பறத்தலும் வண்டிகளின் டடக் டடக் சத்தங்களும் ராசமணிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. காலைக் கடன் கழிக்க ஆற்றுக்குச் சென்ற போது உழுது கொண்டிருந்த மள்ளாண்டி கேட்டான்

"என்ன வாத்தியாரே ஒமக்கு இன்னும் விடியலையோ?"

"இல்லப்பா ராப்பொழுது எழுத்து வேலை இருந்தது அதான் கொஞ்சம் அசதில படுத்திட்டேன்."

"வாத்தியார் வேலைனா சும்மாவா" எனக் கேட்டுக்கிட்டே  "பள்ளிக் கொட வேலைலாம் என்னாச்சு வாத்தி" என்றான் மள்ளாண்டி,

"ஆமாப்பா பூராம் முள்ளு செடி செத்தைனு அதையெல்லாம் சுத்தப்படுத்துறதுக்குள்ள போதும் போதுமென்றாகிவிட்டது. இப்போது புதுமணல் பரப்பி ஒரளவுக்கு பார்க்க பரவாயில்லப்பா"

"ஏதோ மரக் கன்னலாம் வைக்கிறீகளாமே?"

"தெய்வேந்திர நாட்டாமை நேத்து டீ கடையில இருக்கும் போது பேசிட்டிருந்தாரு அதான் கேட்டேன் வாத்தி"

"ஆமா மள்ளா.. பள்ளிக் கட்டடித்திற்கு தொணையா மரமொன்னு வைக்கலானு தோணுச்சு அதான் புளியமரத்த வச்சு விட்டேன்"

"சரிப்பா நேரமாயிற்று"  என கௌம்பினார்..

ஒன்பதே கால் மணி அடித்தது.. பள்ளி சிறார்கள் பிரேயர் சாhங் பாடினார்கள்.. பின் உறுதிமொழி எடுத்துக் கொண்டு அவரவர் வகுப்பரைக்குள் சென்றனர். ராசமணி ஐந்தாம் வகுப்பு வாத்தியார்..
வகுப்புக்குள் நுழைந்தார்..

"குட்மார்னிங் சார்"

"வணக்கம் வணக்கம் ஒட்காருங்க"

வருகைப் பதிவேட்டை எடுத்து

"பேதுரு "

" உள்ளேன் அய்யா"

" ஐசக்'

" உள்ளேன் அய்யா"
"மோகன் சுதா, வள்ளிநாச்சி, என நீண்ட பதிவேட்டின் கடைசிப் பெயர் பாக்கியம்..

"சரி இந்த வகுப்பு தமிழ் வகுப்பு.  உழவைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கின்றார்?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் தொழுதுண்டு அவர் பின் செல்வர்.

சுழன்று ஏர் பின்னது உலகம்"

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

சுந்தரநாச்சி எழுந்து "ஐயா புளியங்கண்ணுக்கு இன்று நான் தண்ணீர் ஊற்றும் முறை"  என்றாள்.

"போ ஓடு ஓடு" என்றார்..

சொன்னது தான் தாமசம் குடுகுடுவென்று ஓடினாள்.. இதே போல் அடுத்தடுத்த வகுப்பு போனது.. மணி நான்கானதும் டங் டங் டங் என்ற பெல்லோசை கேட்டதும் வில்லிலிருந்து புறம்படும் அம்பென வீட்டிற்கு விரைந்தனர். ராசமாணிக்கத்திடம் சக ஆசிரியர்கள் சொல்லிக் கொண்டு விடைபெற . பள்ளியை மூடி புள்ளையான புளியங் கன்றைத் தேடிச் சென்றார். நன்றாக இருகிளை பரப்பி செழுமைப் பச்சையில் அவரது இடுப்புவரை வளர்ந்திருந்தது.. தன் வளர்ப்பை பார்த்ததும் இவ்வாறாக மனதிற்குள் நினைத்துக் கொண்டார். எப்பேர்பட்ட பூமி உழவனின் கால்பட்ட உழைப்பு, இரத்தம், வியர்வை எனப் புண்ணியம் செய்த மண் என்று. ஊருக்கே படியளக்கும் உழவன் இடத்திலே இக்கன்று செழித்து தானே ஆக வேண்டுமென்று.

காலம் விரைந்தோடியது.. அறுவடைக்காலத்தில் எல்லாம் புளியங்கன்று மரமாகிப் போனது. சனிக்கிழமைன்று… பொழுது சார்ந்த வேளை.. ராசமணி புளியமரத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துக் கொண்டார். பிள்ளையைப் போல பாசத்தை கொட்டி வளர்த்ததை நினைத்து மரத்தின் கீழ் அமர்ந்தவர் அப்படியே நெஞ்சு பிடித்து மரத்தில் மரணித்துப் போனார்.  தந்தை இழப்பைத் தாங்காத மரம் காற்றடியில் பேயாட்டம் ஆடி ஊரைக் கூப்பிட்டது அலறியது என்று கூடச் சொல்லாம். உழைக்கும் வர்க்கத்தாரல்லவா  எட்டு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கிப் போனார்கள். புளியப் பிள்ளை கத்தியது, பதறியது. அல்லாடியது, ஓலமிட்டது, பெருங்குரலெடுத்தது… கேட்கவில்லையே ஊரார் காதுகளுக்கு.. அடங்கிப் போய் கண்ணீர் விட்டது. காலையில் கூட்ட வந்த ஆயாம்மா பார்த்துத் தான் கூப்பாடு போட்டாள். ஊர் கூடியது, அலறியது ராசமாணிக்கத்தின் பெருமை பேசியது .  பள்ளியின் தற்கால வரலாறு பேசப்பட்டது. உறவினர் இருக்கிறார்கள் வருவார்கள் என்றெண்ணிய ஊரார் ஏமாந்து போயினர்.

இடுகாட்டுக்கு ராசமாணிக்கத்தை எடுத்துச் செல்லும் போது இவர் போல யாருண்டா என ஊரின் கூற்றாகிப் போனது. இப்போதெல்லாம் இக்கதையை எப்போதாவது தான் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் பள்ளியின் சுவர்கள் அவரது காலடி பட்ட பாதைகள் அவரின் பிள்ளை புளியமரம் என எப்போதும் இவைகளுடன் வாழ்ந்து வரும் ராசமாணிக்கர் வரலாறாகிப் போனார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.