* ஓவியம் - AI

மலையன் பெற்றோர் யார்? என்பது குறித்த சர்ச்சை மீண்டும் பேசுபொருளாக மாறியது. அந்த ஆண்டின் பிறந்தநாள் விழாவின்போது தான் அது நடந்தது.

அது அவனுடைய ஆயிரத்தெண்ணூறாவது பிறந்தநாள். சிலர் அது அவனுடைய ஆயிரத்து நூறாவது பிறந்தநாள் என்றும் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தனர். கொண்டாட்டத்தில் மதி கலந்துகொண்ட போதுதான் மலையன் பற்றிய செய்தியை முதல்முறையாக கேட்ட நினைவு மெல்ல அவனுக்குள் எழ ஆரம்பித்தது.

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அந்த ஆண்டு நல்ல மழை. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபொழுது, ‘பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஆறு நிறைய தண்ணீர் சென்று கொண்டிருப்பதாக’ தந்தைக் கூறினார்.

வழக்கம்போல பள்ளிக்கூடத்தில் மூன்றாவது இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டிருப்பான். ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைய அனைத்து மாணவர்களும் எழுந்து இருகைகள் கூப்பி வணக்கம் தெரிவித்து அமர்ந்தனர்.

பொறுமையின் வடிவமாய்த் திகழும் அந்த ஆசிரியர் பெயர் பொன்முடி. அன்று வழக்கமாய் ஏற்றும் மாயவிளக்கை ஏற்றிக் கொண்டிருந்தார். அதை பல நாட்களாய்ச் சரியாகக் கவனிக்கத் தவறிய மதி மேசையின்மீது நிறுத்தப்பட்டு இருந்தான். விளக்கின் அவசியம் குறித்து அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. மாயவிளக்கு ஏற்றுவதில் கைதேர்ந்தவர் என்ற சிறப்பைப் பெற்றிருந்த அந்த ஆசிரியர் தன்னுடைய வித்தையைச் சில காரணங்களுக்காக ஒரு வாரகாலமாகத் செய்யாமல் இருந்தார். அது பற்றி அவனுக்கு எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

‘அம்மையீர்’… என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். பொன்முடி என்ற பெயரில் ஒருவர் பிரபலமாகிக் கொண்டிருந்த கட்சி பற்றியோ அக்கட்சியில் முக்கியமானவர்களுள் ஒருவராகப் பின்னாளில் வரக்கூடியவராக வளர்ந்து கொண்டிருந்தது பற்றியோ அப்போது மதிக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், பொன்முடி என்ற அந்த அம்மையார் அவனது வாழ்வில் என்றும் மறக்க முடியாதவராய் மாறுகிறார் என்பது பற்றி மட்டும் அப்போது நன்றாகப் புரிந்திருந்தது.

மூன்று பொன்முடிகள் பற்றித் தெளிவாகத் தெரிந்தபோது அவனுக்கு வயது 42. மேசைமேலே நின்றுகொண்டுடிருந்ததற்கான காரணம் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு ‘சக மாணவர்கள் ஒருவரை ஒருவர் மனதாரத் திட்டிக் கொண்டிருந்தது நகைப்பை உண்டாக்கியது. ஒருவருக்கும் பதில் தெரியாமல்போனது அப்பொழுது ஆச்சரியமாகத்தான் பார்க்கப்பட்டது. மதி ஒன்றும் பெரிய படிப்பாளி கிடையாதுதான். ஆனால், அம்மாதிரியான சின்ன சின்ன விஷயங்களைப் பற்றிக் கேட்கும்போது பலமுறை சரியான பதில்களைச் சொல்லியிருக்கிறான்.

அம்மையார் கேட்ட அந்தக் கேள்வியைத்தான் 42 வயதான மதி தன்னுடைய மாணவர்களைப் பார்த்துக் கேட்டுக் கோபமடைந்தான். அப்பொழுது சார் என்று அழைக்கக்கூடிய நபராக அவன் மாறி இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லை மாறி இருந்தார் என்று நீங்கள் விரும்பினால் வாசித்துக் கொள்ளலாம். மாறி இருந்தான் என்றழைக்கவே அவனுக்கு அதிகம் பிடித்திருந்தது.

அம்மையீர்! என்ற சொல் அம்மா, மேடம், மேம் ம்ம்... என்று பல வடிவங்களைப் பெற்றதைப் போல் ஐயா என்பது தோழரே, சார் ர்ர்… என வழங்கப்பட்டது. ஐயா... ஐய்யா... ஆயா... யாஆ... என்றழைக்கப்படுவதும் அவற்றுள் அடக்கம். மதிக்குத் தன்னைத் தோழர் என்றோ ஐயா என்றழைப்பதோ பெரிதாகப் பிடிக்கவில்லை. என்றாலும், மற்றவர்களை அவன் அவ்வாறுதான் அழைத்தான். அதில் ஒர் உள்நோக்கமும் ஒளிந்துகொண்டிருந்தது. அது வயிறு பற்றியது... அது ஒரு தனிக்கதை. அது பரமரகசியமும் கூட...

மலையனின் தமக்கையின் பெயர் மேகவர்தினி. எத்தனை தடவை நீங்கள் இதைக் கேட்டிருப்பீர்கள்! என்று கோபத்தோடு சொன்ன மதி தொடர்ந்தான்.

கோணங்கி மானங்கி என்ற துறவிகள் தங்களுடைய சித்தாந்தங்களைப் பரப்புவதற்காகச் சீடர்களைத் தேடிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு தலா ஐந்து சீடர்கள் கிடைத்தாலும் ஒருசிலர் இருவருக்கும் சீடர்களாக இருந்ததினால், யாருடைய சீடர் இவர் என்று துல்லியமாக அடையாளம் காட்டி விளக்குவது மதிக்குச் சிரமமாகத்தான் இருந்ததுதான். ஆனால், பல இடங்களில் உள்ள குறிப்புகளைக் சுட்டிக்காட்டிக் கோணங்கி மானங்கியின் கருத்துக்களையும் அவர்களின் உள்நோக்கங்களையும் அடையாளப்படுத்திக் கனகச்சிதமாக விளக்கிவிடுவான். அப்படி விளக்கம் தரும் நாட்களில் அவனுக்கு நிம்மதியான உறக்கம் வரும். அப்படி நன்றாக உறங்கும் நாட்களில் கனவுகளும் வருவதுண்டு. அதுவும் நல்ல நல்ல கனவுகள்...

பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தான் கோணங்கி மானங்கி கதை ஆரம்பிக்கிறது.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான இவர்கள், இளமையிலேயே கூட்டநெரிசல்கள் தரும் தவிப்பின் இன்னல்கள் குறித்து அதிகமாகச் சிந்தித்ததால் ஊர் மக்களிடமிருந்து விலகி இருந்தார்கள். மக்களை விட்டு விலகி நின்றாலும் மக்களின் மகிழ்ச்சி குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் தொடர்ந்து சிந்திப்பதிலிருந்து ஒரு நாளும் பின்வாங்கியதில்லை. மக்களின் வாழ்க்கை மேம்பாட்டின்மீது அதிகம் அக்கறை கொண்டிருந்தார்கள்.

அதனால், மக்களுக்கும் இவர்களுக்கும் ஓர் அணுக்கமான உறவு பிரிக்க முடியாததாய் அமைந்திருந்தது. அந்த உறவின் விரிவாக்கம் தான் அவர்களுக்குக் கிடைத்த 10 சீடர்கள்.

அதில் முதலாவது சீடன் பெயர்தான் மலையன். அவனுடைய தமக்கை மேகவர்தினி. “அடைமழை பெய்த தருணத்தில் இவர்கள் இருவரும் ஜனித்த காரணத்தினால் இவர்களுடைய பெற்றோர்கள் மலையன், மேகவர்தினி என்று பெயர் வைத்தனர்” என்று இவர்களுடைய பெயர்க்காரணம் பேசுப் பொருளானபோது இவர்களுக்கு வயது ஆயிரத்தெண்ணூறு என்றும் ஆயிரத்தைந்நூறு என்றும் தனித்தனியே கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இவர்களது வயது ஆயிரத்தைந்நூறு என்றவர் பக்கம் நின்றிருந்தான் மதி.

முன்னூறாண்டு கால வேறுபாட்டைவிட இவர்களுக்கிடையில் இருந்த முக்கியமான வேறுபாடு இருவரும் யாருடைய சீடர்கள் என்பதுதான். அது ஓர் இடியாப்ப சிக்கலாகவே இருந்தது.

மேகவர்தினி மானங்கியின் சீடன் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தது. மலையன் கோணங்கியின் சீடர் என்று திடமாக அறிவான் மதி.

பொன்முடி ஆசிரியர் கோணங்கி மானங்கி வாழ்ந்த காலத்தில் மலையன் இருந்தான் என்றும் ஆனால் மேகவர்தினி போல் மலையன் இவ்விருவரில் யாருக்கும் சீடனாக இல்லை என்று சொல்லியதாக இவனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அப்போது அவன் மேசையின் மீது நின்றிருந்தான்.

இல்லை இல்லை மேசையின் மீது நிறுத்தப்பட்டிருந்தான்.

இருவருக்கும் சீடன் இல்லை என்றால் அவன் யாருக்குத்தான் சீடனாக இருந்திருப்பான். யாருக்காவது சீடனாக இருந்திருக்க வேண்டும் அல்லவா? மலையன் கோணங்கியின் சீடன்தான் என்ற உண்மையை மதி கண்டுகொண்டபோது அவனுக்கு வயது நாற்பதாகியிருந்தது.

இரு சீடர்களும் இரட்டையர்கள் என்று அழைக்கப்படக் கூடியவர்கள்  என்பதற்கு இருவருக்குமிடையில் உள்ள உறவு ஒரே தாயின் வயற்றில் பிறந்தவர்கள் என்பது மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது. அவர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கவும் செய்தார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இருவரும் ஊர்மக்கள் மீது தங்களுடைய குருமார்கள் மாதிரியே அன்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள். கருணை வள்ளல்களாக வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இந்த இரு சீடர்களுக்கு அடுத்ததாக நாம் கவனம் கொள்ள வேண்டிய சீடன் பெயர் மணி. மணி என்ற சொல்லுக்கு பல பொருளைக் கொள்ள முடியும். அதுவும் தோழர், ஐயா, சார் என்று அழைக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் மணி என்பதற்கு செல்வம், வளம், வெளிச்சம் அல்லது பிரகாசம் என்று எந்தப் பொருளை வேண்டுமானாலும் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப கொள்ளலாம் என்பது மதியின் விளக்கமாக இருந்தது.

அவ்வாறு அவன் கூறிக்கொண்டிருந்த பொழுது குறுக்கிட்ட மாணவன் அவனுக்குச் சித்தர் என்று மதி பெயர் வைத்திருந்தான். ஆனால், அவனுடைய உண்மையான பெயர் முருகன். சுமாராகப் படிக்கக் கூடிய மாணவன்தான் என்றாலும், நன்றாகச் சிந்திக்க கூடியவனாக இருந்ததால் அவனை மதிக்கு மிகவும் பிடிக்கும்.

‘இவர் மலையனைப் போலவே இருந்திருக்கிறார் தானே’ என்று கேட்க, ‘ஆம் மலையன் சிறந்த பாடகன் கூட. தன் பாடும் திறத்தால் தன் மனைவியை அதிகமாக கவர்ந்தான். அவனுக்கு ஒரு அன்பு காதலியும் கிடைத்தாள். ஆனால் அது அவனுக்கு நிலைக்கவில்லை பாவம்.

ஆனால், மணி அப்படியல்ல. ஆடல் பாடல் என்று பல கலைகளில் சிறந்து விளங்கிய அவனுக்கு மலையனைப்போல் இல்லாமல் போகும் இடங்களிலெல்லாம் பெருமை கிடைத்தது. இவனுக்கும் மலையனுக்கும் உள்ள முக்கியமான உறவு இவனும் மலையனைப் போல உயிர்களிடம் அன்பு செலுத்தக் கூடியவனாக இருந்தான். அதனால்தான் இவன் பின்னாளில் கோணங்கியின் சீடர்களில் ஒருவனாக நிலைபெற்று விட்டான். ‘கோணங்கியின் முக்கியமான சீடர்களில் இவனும் ஒருவன் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நாம் கவனம் செலுத்த வேண்டியது கோணங்கி மானங்கிக்குக் கிடைத்த மற்ற சீடர்கள் பற்றித்தான்’ என்று மதி கூறிக் கொண்டிருந்தபோது மணி ஓசை குறுக்கிட்டது… அத்துடன், அன்றைய பாடம் நிறுத்தப்பட்டது.

பயணத்தின் பாதையில்  பெரிய தூண் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. இந்தப் பயணம் மதியின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருந்தது. இதை அவன் நிச்சயம் விரும்பவில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் இந்தப் பயணத்தைக் குறித்து சிறுவயதில் என்றும் ஆசைப்பட்டதில்லை.

ஒரு நாள் வகுப்பிற்குள் நுழையும்போதே ‘அனைவரும் கை தட்டுங்கள் என்று’ அம்மையீர் மகிழ்ச்சியோடு வந்தபோது கூட்டத்தில் ஒருவனாய் இவனும் மகிழ்ச்சியோடு கைதட்டிக் கொண்டிருந்தான். ‘மதி இங்க வா!’ என்று அழைத்த போது தனக்கு ஏதோ ஒரு வேலை வைக்கப் போகிறார் என்று சென்றவன் ஒரு புதிய எழுதுகோலைக் கையில் கொடுத்த பொழுது எவ்விதச் சலனமுமின்றி அதை வாங்கி நின்றபோது அவன் நிச்சயம் நினைத்திருக்க மாட்டான் இதுதான் தான் வாங்கும் கடைசி பரிசு என்று.

அதுவும், அந்தப் பரிசுக்குத் அதான் தகுதியற்றவன் என்று பின்னாளில் பலமுறை அவன் நினைத்துப் பார்த்திருக்கிறான். ‘நடந்துமுடிந்த வகுப்புத் தேர்வில் அவன்தான் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்திருந்தான். அதை அம்மையீர் சொல்லிய பொழுது அவன் வெட்கித் தலைகவிழ்ந்து நின்றதை அவனைத் தவிர வேறு யாரும் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னுடைய வாழ்க்கையில் இனி இப்படிப்பட்ட ஒரு நிலை எப்பொழுதும் வரக்கூடாது என்பதில் அவன் அதன் பிறகு கவனமாக இருந்தான்.

‘உழைப்பு ஊதியம் என்பதில் அவன் விடாப்பிடியான கொள்கையாகக் கொண்டதற்கு பின்னாளில் வாசித்த பெரியார், ஆம்பேத்கார், காரல் மார்க்சு... இன்குலாப்... பட்டுக்கோட்டை வகையறாக்களின் எழுத்துக்களைவிட ‘இரண்டு ரூபாய் பெறுமானமுள்ள அந்த எழுதுகோல்தான் அவனை இன்னமும் இயக்கிக் கொண்டுள்ளது என்பதை அவனைத் தவிர வேறு யார் அறிய முடியும்.

தோழர்! என்ற சொல் அவனைப் பல வேளைகளில் எரிச்சலடையச் செய்திருக்கிறது. சார் என்றோ ஐயோ என்றோ அழைப்பதையே அவன் அதிகம் எதிர்பார்த்திருக்கிறான். பெரியார், ஆம்பேத்கார், காரல் மார்க்சு... என நீளும் பெயர்கள் மேல் அவனுக்கு நம்பிக்கை இருந்தது என்றாலும் அவன் வாழும் சூழலில் உள்ள தோழர் என்ற சொல் அவனை எப்பொழுதுமே எரிச்சலடைய வைக்கிறது. அதற்கான காரணம் அவனுக்குத் தான் வெளிச்சம்.

‘மணியின் வாழ்க்கை சரிதம் குறித்து அவன் விளக்கிக் கொண்டிருந்த பொழுது, ஐயா! ஒரு சந்தேகம்! என்று எழுந்த சித்தர் என்று அழைக்கக்கூடிய முருகன் என்ற அந்த மாணவன் இன்று வெளியான விசித்திரமான இட ஒதுக்கீடு குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டான்.

இந்திய பாராளுமன்றத்தில் அந்த ஏழைகளுக்கு ஆதரவாக யாரெல்லாம் வாக்களித்தார்கள் என்று நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? சரி விசயத்துக்கு வருவோம் என்று ஸ்ரீஸ்ரீ வேதாந்திக்கும் கொல்லப்பட்ட மலையனின் மனைவியான விண்ணரசிக்கும் இருந்த கள்ள உறவு குறித்து எனத் தொடர்ந்தார்...

ஸ்ரீஸ்ரீ வேதாந்தியும் விண்ணரசியும் முதல் முதலாக சந்தித்தபோதே அந்த உறவு வெளிப்பட்டாலும் அதை யாரும் இன்றும் ஒரு பொருட்டாகக் கண்டுகொள்ளத் தாயராக இல்லை என்று விரிவாகத் தொடர...

நான்காவது மகனாகப் பிறந்ததால் அவனுக்குக் கடைகுட்டிச் சிங்கம் என்று தொடக்கத்தில் அவனது தாயாரால் அழைப்பெற்றாலும் இளையவன் என்றே அவனை அனைவரும் அறிந்திருந்தனர். சிலர் அவனைக் க.கு.சி என்றும் சுருக்கி அழைத்ததுண்டு. அது அவருக்கான செல்லப்பெயராக நிலைபெற்றும் விட்டது என்று அவர் கூறிபோது சரியாக மணி ஒளித்தது...

அடுத்த வகுப்பில் அவர் வருவார் என்று மாணவர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்... ஆனால், அவரது வழக்கமான நேரத்தில் அவர் வரவில்லை... மாணவர்கள் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தனர். வகுப்பில் இருந்த சித்தரால் மட்டும் ஏனோ இருப்புக் கொள்ளமுடியவில்லை…

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.