* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி : VNG
2. அவளின் நினைவுமரம் துளிர்த்தது.
'சனியன்..சனியன்..' அம்மா புறுபுறுத்துக்கொண்டிருந்தாள்.
வழமையான நிகழ்வுதான்.
.மாமாவிற்குத் தான் பேச்சு விழுகுதுபோல..இண்டைக்கும் ஏதாவது சில்மிசம் செய்திருப்பார்..
மாமா பாவம்..அம்மாவின் கூடப்பிறந்த தம்பி.
பெயர் பாலசுப்பிரமணியம். பாலு என்றே யாவரும் அழைப்பார்கள்.
அவ்வளவாகப் படிக்கவில்லை.
எனினும் அவர் ஒரு தலையாகக் காதலித்த துளசி என்கிற பெண் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று நினைத்தபடி குடித்துவிட்டு அவளின் வீட்டுக்கு முன் போய் நின்று சத்தமிட்டிருக்கிறார்.அவளால்தான் எல்லாம் என்று துளசியும் அவளது பெற்றோரால் தாக்கப்பட்டிருந்தாள்.
அவமானத்தால் அவளால் வெளியே வரவும் இல்லை..ஊர் கூடிய அவமானத்தில் துளசியின் பெற்றோர் ஊரை விட்டே போய்விடத் தீர்மானித்தார்கள்.எனினும் பாலு மாமாவின் மீதான கோபம் அதிகரிக்க ஒருநாள் இரவு தனியே குடித்துவிட்டு வரும் போது இரும்புக்கம்பியால் தாக்கியிருக்கிறார்கள்.
மயங்கி விழுந்த மாமாவை யாரோ பிரதான வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார்கள்.மக்கம் தெளிந்த மாமாவினால் சுயமாக சிந்திக்க முடியாதபடி ஆயிற்று.மருந்துகளை மருத்துவர்கள் அதிகமாகவே தந்திருந்தார்கள்.மாமாவினால் துளசியின் வீட்டிற்கு முன்னால் போகும்போது ஞாபகம் வர கூச்சலிடுவார்.உள்ளுக்குள் நிறையவே பாதிக்கப்பட்டிருந்தார்.
கேட்டால் பதில் தருவார்..
ஆடச் சொன்னால் ஆடுவார்.
பாடச் சொன்னால் பாடுவார்.
சந்தைக்கு போய்வருவார்..கள்ளுக்குக் காசு கொடுத்தால் சைக்கிளில் டபிள் ஏத்தி அம்மாவை அழைத்துச் செல்வார்.
‘பாவம் மாமா..’
அவர் தனித்துவிடப்பட்டதாகவே உணர்ந்தேன்.மாமா என்னை கோயிலுக்கு அழைத்துப்போங்கோ என்றால் மறு பேச்சின்றி அழைத்துச் செல்வார்.
செல்லமாக பகிடி விட்டால் சிரித்துக் கொள்வார்..அம்மா மட்டும் அடிக்கடி கரிச்சுக் கொட்டிக்கொண்டிருப்பார்.
'விசரா..பொம்பிளைப்பிள்ளைகள் இருக்கிற வீட்டில சாரத்தைக் கட்டிக்கொண்டு குளிக்காமல்..இப்படி..சனியன்..சனியன்..'
கிணற்றைச் சுற்றி உயரமாக கிடுகுகளால் மறைக்கப்பட்டிருந்தாலும் மாமாவைத் திட்டுவார்..மதிலும் மறைக்கும் தானே..
'விடுங்கோ அம்மா..பாவம் மாமா..சுகமில்லாத மனுசனிட்ட..'
'ஓமடி..ஓமடி..நீதான் அவனுக்குச் செல்லம் கொடுத்துக்கொண்டு...'
மாமாவிற்குப் பிடித்த ஆட்டிறைச்சிக்கறி மணத்தது.
அம்மாவிற்குத் தம்பிப்..பாசம் இல்லாமலா இருக்கும்?
'மாமா வாங்கோ..குளிச்சது காணும்..'
'வாறன் பிள்ளை'
அம்மாவிற்குக் குசினியால் எட்டிப்பார்த்தால் மாமாவை வடிவாய்த் தெரியும்..பத்மா அக்கா தண்ணி எடுக்க அடிக்கடி வாறது..உவன் கிணற்றடியால் வந்தால்தானே?'
படுக்கை அறையின் சன்னலில் நின்று பார்த்தால் வீதியால் போவோர் வருவோரைத் தெரியும்..
காலையில் பாடசலைக்கும் போகும் மாணவர்கள்..ஆசிரியர்கள். கச்சேரிக்கு வேலைக்குப் போகும் தில்லை அண்ணர்.. சந்தைக்கு வாழைக்குலையை கொண்டு போகும் சித்தம்பலம் மாமா..பத்து மணி போல வரும் மீன்காரர் ...பதினொரு மணி போல வரும் தபால்கார தேவன் அங்கிள்..
அப்படியே கண்ணைத் திருப்பினால் கிணற்றடியில் யார் யார் நிற்கினம் என்று பார்க்கலாம்.
அன்றும் மாமாவை பார்த்ததும் வெட்கமாகவும் இருந்தது..மாமா மீதான கரிசனையும் அதிகரிக்கவே செய்தது.
‘பாவம் மாமா...துளசியின் மீதான காதல் நிறைவேறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..’
நிராகரிப்புக்கள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ அந்தளவிற்கு அவரவர் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிடும்..மாமாவின் ஏமாற்றம்..?
'ஏன் அம்மா.மாமாவிற்கு கலியாணம் செய்துவைத்தால் நல்லதெல்லே?'
தண்ணீர் அள்ள வந்த பத்மா அக்கா பேசாமல் போயிருக்கலாம்.இப்படி அடிக்கடி அம்மாவிடம் கேட்பாள்.
'ஓம்..ஓம்..அவனை யார் பொறுப்போடு கவனிப்பார்கள்...அவனை நம்பி யார் பெண் தருவார்கள்.எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள்.அப்படி யாராவது வந்தால் தியாகிகள் தான்..'
'ஏன் உங்கடை தம்பிதானே..உங்கட மகளில் ஒருத்தியைக் கட்டிக் கொடுத்திருக்கலாம் தானே?'
அம்மா முறைத்தாள்.அதில் அவளுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்பது முகத்தில் தெரிந்தது.
'மாமா!இந்தப்பாட்டைப்பாடுங்கோ.'
சொன்னவுடன் சிவாஜியாகிவிடுவார்.
'பாலூட்டி வளர்த்த கிளி.
பழம் கொடுத்து பார்த்த கிளி..
நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு..
செல்லம்மா...'
மீசையை நீவிவிடும் அழகு தனி அழகு...
மாமா..இந்தப்பாட்டு... கெஞ்சினால்,
'கேட்டுக்கோடி உருமி மேளம்.'
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன்கிட்ட
பாட்டிக்காட்டு ராகம் பாவம்’
விசிலத்து ஆடிப் பாடுவார்..
பத்மா அக்கா வேலியால் எட்டிப்பார்ப்பார்..
அம்மா மீண்டும் திட்டிக்கொண்டிருப்பார்..
'மாமா!'
'ம்' என்ன என்பது போல பார்த்தார்.
துளசியும் உங்களைக் காதலித்திருந்தால்'
அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..அவர் சிரிப்பில் பூரிப்புத் தெரிந்தது.
விழியோரத்தில் கண்ணீர் அரும்ப...எங்கோ வலித்தது..
'அவளை மறந்துவிட்டு வேற கலியாணம் கட்டியிருக்கலாம் தானே?'
'போடியம்மா..நடக்கிற கதையைச் சொல்லு..'
'இந்த விசரனை ஆர் கட்டுவினம்?'
'நான் கட்டட்டே..'
மாமாவிடமிருந்து எந்தவித பிரதிபலிப்பும் இல்லை..அவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
அம்மா மட்டும் கோபத்தில் பொங்கினால்..
'அம்மா..சும்மா பகிடிக்குக் கதைக்கிறதை ஏன் தூக்கிப்பிடிக்கிறீர்கள்?மாமாவின்ரை வயசென்ன? அவரின் நிலையென்ன?அவரை நாங்கள் தான் அன்பாக நடத்தவேண்டும்..நீங்கள் இப்படி பொரிஞ்சுகொண்டிருந்தால் பாவம் மாமா..எங்கு போவார்?'
சில வருடங்களுக்கு முன் லண்டனிலிருந்து வந்து தந்த மச்சான் தந்த சாரத்தை தோய்ச்சுச் தோய்ச்சு கட்டியே கிழிஞ்சுபோயும் தைய்ச்சுக் கட்டியதால் ஆங்காங்கே கிழிசல்கள் தெரியும். புதுச்சாரங்கள் இருந்தும் ஏனோ பழசையே கட்டுவார்.சொன்னாலும் கேட்கார்.
உடலில் ஏற்பட்ட காயங்கள் தழும்புகளாகிய இடங்கள் போல அவரின் சாரம் பார்க்கத்தோன்றும். கழன்று விழாமல் இருக்க இடுப்பில் ஒரு கயிற்றால் கட்டியிருப்பார்.பிறகு சண்டியன்காட்டு கட்டியிருப்பார்.மெல்லிய கால்கள்..முழங்காலில் விழுந்த சிராய்ச்ச அடையாளம்.
அம்மா சந்தைக்குப் போய் மரக்கறி,இறைச்சி என வாங்கிவருவார்.படலைக்கை நின்று மீன்காறர் போகேக்கை வேலியில இருக்கிற பூவரசம் இலையைப் பிடுங்கி அதிலை மீனை வைச்சுக் கொண்டுவந்து அப்படியெ கிணற்றடிக்குப் போய் கழுவிக்குண்டுவந்து காய்ச்சுவார்.சிலநேரம் மச்சங்களை குசினிக்குள்ளோ,கிணற்றடிப்பக்கம் இருக்கிற பத்திக்குள்ளேயோ சமைப்பாள்.அம்மாவின் சமையல் மூக்கைத் துளைக்கும்..மாமாவும் ஆசை தீர உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட எல்லோரும் சிரிப்போம்.பிறங்கையில் ஒழுகுவதையும் நக்கி உறிஞ்சேக்கை அம்மா சத்தம் போடுவார்.
'சாப்பிடேக்கை சத்தம் போடாமல் சாப்பிடவேணும். உள்ளங்கையில படாமல் சாப்பிடோணும் எண்டதும் தெரியேல்லை..எத்தனை தரம் சொல்லிப்போட்டன்.ஆரும் கேட்கிறேல்ல'
அம்மா.பெருமூச்சொன்றை விட்டது கேட்டது,
மனிதனை இலகுவில் எடைபோட்டு விடமுடியாது.மனிதரைப் புரிந்துகொள்ளும் மனநிலையும் யாரும் புரிந்து கொள்வதிலும் அக்கறையில்லை.மாமாவுடன் கூடப்பிறந்த அம்மாவினால் புரிந்துகொள்ளமுடிந்திருக்கிறதா?தான்,தனது குடும்பம் என்றானபின் உடன்பிறபெல்லாம் பிறத்தியாகிவிடுமா?
'அம்மா கொஞ்சமாவது மாமாவைப் புரிந்துகொள்ளேன்'
'எல்லா அழுக்குகளையும் உடலில் ஏற்றி மனிதனாக வலம் வருபவர்களிடையே மாமா நிர்வாணியாக நிற்பது இவர்களுக்கு ஏன் அருவருப்பாக இருக்கிறது?
'மாமாவைப் பைத்தியம்,விசர் என்றெல்லாம் அழைப்பார்கள்.அப்படிச் சொல்வதில் நிறையச் சங்கடங்கள்.மனிதனை,அவனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அவனை ஒதுக்கிவிடுவததென்பது எவ்வளவு கொடுமை.அவருக்குள்ளும் எவ்வாளவோ ஆசா பாசங்கள்.அவர் பேசுவதெல்லாம் அர்த்தம் நிறைந்திருந்தாலும் அவரை யாரும் கணக்கிலெடுத்ததில்லை..அம்மாவும் தன் தம்பி தானே என்றில்லாமல் ஏசுவது அல்லது திட்டிக்கொண்டிருப்பது மனதை வலிக்கச் செய்யும்'
இரக்கமில்லாமல் இல்லை..இரத்த உறவுதானே.திருமணமாகி கணவன்,பிள்ளைகள் ,அவர்களின் குடும்பம் என உறவுகள் விரிவுபட உடன்பிறப்புக்களுக்கிடையேயான பாசம்,அன்பு அடர்த்தியாக இல்லாவிட்டாலும் உறவை மறுத்துவிடமுடியாது.
மனிதனின் வாழ்வில் காதலும்,காமமும் வந்துபோகவே செய்யும்.விதிவிலக்கு என்பதில்லை.மாமாவின் உள்ளுக்குள் அவை நிச்சயம் இருக்கும்.துளசியின் மீதான காதல்,அவளின் நிராகரிப்பு,அந்த ஏமாற்றம் தந்த வலிகள்,அக் காதலுக்காகவே தன்நிலை இழந்து இப்படியான வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்.அவருக்கென உறவுகள் இருந்தும் எல்லோரும் வெளிநாடு சென்றுவிட,எங்களுடன் தங்கிவிட்டார்.இப்போது நம்மைவிட்டால் வேறெங்கும் போகும் நிலையிலும் இல்லை.
வீட்டில் யாரும் இருக்கவில்லை.
புத்தகத்துள் மூழ்கிப்போன நிலையில் மாமா குளித்துவிட்டு வந்து சாமிப்படத்திற்கு முன் நின்று கும்பிட்டுவிட்டு போகையில் தான் கண்ணில்பட்டார்.
எல்லாம் நிதானமாக,சாவகாசமாக ஒழுங்கு முறைப்படி செய்பவரை எப்படி பைத்தியம் என்று சொல்லமுடியும்?
மாமா!
கூப்பிட்டவுடன் வந்துவிட்டார்.
'என்ன பிள்ளை? ஏதாவது வேணுமே?'
இடுப்பில் கட்டியிருந்த துவாயின் முனையை வெட்கத்துடன் பிடித்திருந்தமை சிரிப்பைத் தந்தது.சாரத்தைக் காயவிட்டிருப்பார்.காய்ந்துவிடும் நேரத்திற்கும் சாமி கும்பிடுவது,சாப்பிடுவது...யாவருக்கும் இது பழகிவிட்டிருந்தது.
பல நாட்களின் பின் முகச்சவரம் செய்திருந்தார்.கன்னம் பளிச்சென்றிருந்தது.சிறுவயதில் அவரின் கன்னத்தை ஆசையாய் கிள்ளிவிடுவோம்.இப்போது வளர்ந்துவிட்டதால் இடைவெளியும் அதிகமாகிவிட்டது.
கிள்ளவேண்டும் போலிருந்தது.மாமா எதிர்பாக்கவேயில்லை..
'பிள்ளை சும்மா விடு..கொம்மா கண்டால்?'
'கன்னத்தை தொட்டுப்பார்க்க ஆசையாயிருந்தது.அதுதான்..'
தன் இரு கைகளாலும் தன் கன்னத்தைப் பொத்திக்கொண்டார்.
எழுந்து நெருங்கிப்போய் 'கையை விடுங்கோ' என்று சொல்லியும் மாமா கேட்கவில்லை.அப்படியே மாமாவின் உதட்டில் முத்தத்தைப் பதிக்கையில் மாமா தடுமாறிவிட்டார்.
அவரைப் பேசவே விடவில்லை.
நெற்றியில் அப்பியது போலவே வீபூதியை பூசியிருப்பார்.சந்தனத்தைக்கூட கண்டபடி உடம்பில் பூசிக்கொள்வார்.அவரின் உடம்பின் வியர்வைநாற்றத்தை ஓரளவிற்குப் போக்கிவிடும்.இன்றும் அப்படித்தான்..
மாமா தன் தாபத்தை இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த உணர்வுகளை கொட்டித்தீர்த்துக்கொண்டிருந்தார்.அவரின் மூச்சுக்காற்று கழுத்தின் வழி இறங்குகையில் அவரின் அற்றாமை,பிறர் மீதான கோபம் எல்லாம் வெக்கையாவதை உணர்க்கூடியதாக இருந்தது.
‘மாமா பாவம்'
மாமாவின் கைகளில் நடுக்கம் தெரிந்தது.அவரின் கைகளை இறுக்கிப் பற்றிய போது அவரால் மறுப்பேதும் செய்யமுடியாது போயிற்று..மாமாவின் உடலை இறுக்கமாக்கியபோது அவரால் ஒன்றும் செய்யமுடியாதுபோயிற்று.
அவரால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத தருணம்.வெளியில் மழை வருமாப் போல் இருந்தாலும் வெய்யிலும் அவ்வப்போது வெளிச்சம் காட்டியது.
'கொம்மா வந்திடுவாவோ?'
'ம்'
'கொம்மா வந்தா கொடுவாக்கத்தியால வெட்டிப்போடுவா'
மாமா கேட்டுக்கொண்டிருந்தாலும் அவரால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திவிடமுடியவில்லை.
கண்ணிலிருந்து கண்ணீர் கன்னம் வழி வடிந்தது.
உடல்கள் வேறு வேறாக களைத்துப் போய் கிடந்தன.
அறையின் நிசபத்தை பூனையின் சத்தம் குழப்பியது போலிருந்தது.
உடல் முழுக்க காயங்களின் வடுக்கள் துல்லியமாகத் தெரிந்தன..குடித்துவிட்டு சண்டைபிடித்த காயங்களாயிருக்கலாம்.சைக்கிளில் விழுந்தெழும்பியிருக்கலாம்.தழுவும் போதே தட்டுப்பட்டது..அந்த நிலையில் கேட்கும் நிலையிலோ சொல்லும் மனநிலையிலோ இருவருக்கும் இல்லையே..
'இன்னொருக்காத் தருவியா?'
'ம்' என்ற போது அவரின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம்....
உடல் மெல்ல வலி எடுத்தாலும் மாமா கண்ணில் தெரிய கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
எல்லாம் ஆயிற்று.
ஆனால் யாருக்கும் தெரியாதிருக்கவேண்டும்.என்னைக்கொடுத்ததில் ஏதோ திருப்தி என்றாலும் பிரச்சினை எதுவும் வந்துவிடக்கூடாது.மாமா குடிப்பவர்..குடிபோதையில் உளறிவிட்டால்..குடித்துவிட்டு தொந்தரவு செய்தால்...பிரச்சினை பெரிதாகிவிடுமே..
கொஞ்சம் கொஞ்சமாக பயமும் குடிவரத்தொடங்கியது.
[தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.