
“செக்கூரட்ரி.... மதுரையிலயிருந்து வசந்தன் வந்தால், காம்பவுண்டுக்குள்ளை எலவுட்பண்ண வேண்டாம்.... இதோ உங்க ரூம்ல அவன் ட்ரெஸ்சு வெச்சிருக்கிற சூட்கேசை வெச்சிருக்கேன்.... இந்தா பாருங்க, உங்க டேபிள்ள ரூவா ஐயாயிரம் வெச்சிருக்கேன்....
இந்த ரெண்டையும் அவன் கையில குடுத்து, திருநெல்வேலிக்குப் போயி, அவுங்க வீட்டிலயே இருக்கச் சொல்லுங்க.... இனி, கனவிலகூட இந்தக் கல்லிடைக்குறிச்சியை நெனைச்சும் பாக்கவேண்டாம்னு, ஓனர் அம்மா சொன்னாங்கன்னு சொல்லியிடுங்க....”
வெளியே காம்பவுண்டு வாசல் காவலாளியிடம் என் மனைவி மீனாட்சி சத்தமாகச் சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள்ளே வந்து வாசல் கதவை பலமாக அடித்துச் சாத்தினாள்.
குளித்துவிட்டு வந்து வேட்டியை மாற்றிக்கொண்டிருந்த நான், குரல் கொடுத்தேன்.
“மீனு....என்ன பண்றே.... விடிஞ்சு ஏழு மணிதானே ஆகுது.... அந்தப்பையன் நேத்து மதியந்தானே மதுரைக்கு கெளம்பினான்.... போன வேலையை முடிச்சிட்டு, நைட்டோடு நைட்டா ரிட்டன் ஆகிறப்போ ட்ராவலிங் புராப்ளெம் இருந்தா, கொஞ்சம் முன்னப்பின்ன லேட் ஆகத்தானே செய்யும்.... அவசரப்பட்டு அவனை வேலையவிட்டு அனுப்பணும்னு முடிவு பண்ணிட்டியே.... ஒரு மாலைக்காக மதுரைக்கு அனுப்பி அவங்க பணக்காரத் திமிரைக் காட்டிப்புட்டாங்கண்ணு நாலுபேரு சொல்றமாதிரியா பண்ணிப்புட்டியே....”
“என்ன பேசிறிய.... கோயில்ல அம்பாளுக்கு கச்சிதமா சாத்துறத்துக்கு, இத்துனூண்டு பட்டு வாங்க இந்தக் கல்லிடைக்குறிச்சி உள்ளூரிலயோ பக்கத்தில அம்பாசமுத்திரத்திலையோ ஜவுளிக்கடையே கெடையாதா....?
காஞ்சிபுரத்திலயிருந்து உங்க தம்பிக்கு வாக்கப்பட்டு வந்ததுக்காக காஞ்சிபுரத்திலயிருந்துதான் வாங்கிவரணும்னு சொல்லி, மெனைக்கெட்டு ஆள் அனுப்பி வாங்கி, தன்னோட பணக்காரத் திமிரைக் காட்ட உங்க கொழுந்தியா காமாச்சி ரெடியா வந்து இருக்கிறப்போ.....
மதுரையிலயிருந்து உங்களுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த மீனாச்சி மட்டும், அம்பாளுக்கு சாத்த நேரா மதுரையிலயிருந்தே மருக்கொழுந்து மாலை தயார்பண்ணி கொண்டுவந்து ஏம் பணக்காரத் திமிரைக் காட்டினா தப்பாயிருமா....”
“சரி சரி.... டென்சன் ஆகாதை மீனு....ரெட்டைப் புள்ளைங்களா பொறந்ததால ரெண்டுபேத்துக்குமே ஒரே நாள்தான் பொறந்த நாள்ங்கிறது மாத்த முடியாதது இல்லியா....
பரம்பரைக் கோயிலும் ஒண்ணுதான்ங்கிறதையும் மாத்த முடியாது இல்லியா....”
அமைதியாகப் பேசினேன் நான்.
எங்கள் வீடு கல்லிடைக்குறிச்சியில் கிராமத்துக்குள் இருந்தாலும், கனரக வாகனங்கள் வரக்கூடிய அளவிலான மடவிளாகம் தெருவில் உள்ளது.
பத்து வீடுகள் அடங்கிய காம்பவுண்ட்.
எங்கள் அப்பாவின் உழைப்பிலே உருவான படைப்பு அது. அவரது கடைசிக்காலத்தில், தனது இரண்டே பிள்ளைகளான எனக்கும், தம்பிக்கும் ஆளுக்கு ஐந்து வீடுகளாக பிரித்து எழுதித் தந்தார்கள்.
ஆளுக்கு ஒரு வீட்டில் குடியிருந்துகொண்டு, மீதமாயுள்ள எட்டு வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளோம்.
காம்பவுண்ட் வாசலில், காவலுக்கு ஒரு செக்கூரட்ரி வைத்துள்ளோம். வீட்டுவேலைக்கு ஒரு பையனை வைத்திருக்கின்றோம். அவன்தான் வசந்தன்.
இப்போது மீனாட்சியின் பேச்சிலே வேகம் குறைந்திருப்பது தெரிந்தது.
“போனவருசம் வரைக்கும் ரெண்டு குடும்பமும் ஒண்ணாத்தானே கோயிலுக்குப் போய் வந்துகிட்டிருந்தோம்.... திடீர்ன்னு உங்க கொழுந்தியா போட்ட சண்டையால, பிரிஞ்சுபோயி இப்போ தனித்தனியா போறோம்....அது விதி.....
ஆனா எங்கண்ணன் பேரில அர்ச்சனை பண்ணினத்துக்கு அப்புறமா, ஏம் பேரில பண்ணிக்கலாம்னு ஒங்க தம்பி ஒதுங்கி நிண்ணா அது பண்பு.....
அதைவிட்டு, இந்தத்தடவை முதல்பூஜையை அவங்கதான் முடிக்கிறதா சவால் விட்டிருக்கா அந்த காமாச்சி....
அதுக்கு ஏத்தமாதிரி இந்த வசந்தன் பயல்.....
நேத்தைக்கு மதியம் மதுரைக்கு கெழம்பினவன்.... மருக்கொழுந்து வாங்கி மாலை தயார் பண்ணிக்கிட்டு, அதிகாலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவேன்னு சொல்லிட்டு போனவன், இம்புட்டு நேரமாயும் காணல்ல..... கையில் போன் வெச்சிருக்காந்தானே.... லேட்டாகிறதுக்கு காரணத்தையாச்சும் சொல்லியிருக்கலாமில்லியா.... சரி, நாம போன் பண்ணினாலும் எடுக்கவே மாட்டேங்கிறானே....
இப்பிடியான ஒரு வேலைகாரப் பயல் தேவையாங்க.....
எங்க மதுரையிலையிருந்து யாராச்சும் ஒரு பையனைக் கூட்டிவந்திருந்தாலும், அவன் சொல்லுக்கேட்டு நடந்திருப்பான்.... இது திருநெல்வேலி டவுன்லயிருந்து உள்ளூர் பயலைக் கொண்டுவந்தது தப்பாப் போச்சு....பாத்தீங்களா.....”
“சரி மீனு.... வசந்தனையே எதிர்பாத்துக்கிட்டிருக்காம கோயிலுக்கு கெழம்பும்மா.... முதல் பூஜை, கடைசிப் பூஜைன்னு சாமி முன்னாடி போட்டி போடுறது சரியில்லை....”
கோவில் வாசலை நெருங்கும்போது, தம்பி கூடும்பத்தார்கள் பூஜையை முடித்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.
மீனாட்சி முழங்கையால் லேசாக இடித்தாள்.
“பாத்தீங்களா.... அந்தக் காமாச்சிய..... மொதல் பூஜை முடிச்சிட்டாங்கிற மெதப்பில போறா.... சொன்ன மாதிரியே சவால்ல ஜெயிச்சிட்டால்ல.... அந்த வசந்தன் பயலை நான் வேலையவிட்டு தூக்கினதில தப்பே இல்ல....”
ஏமாந்துபோன வேதனை அவளைத் தின்றது.
“மீனு.... பொஸ்ட்டு, செக்கண்டு பாக்கிறத்துக்கு இது ஒண்ணும் மரத்தான் ரேஸ் இல்ல.... ஆண்டவன் சமாச்சாரம்.... இங்க மனசைக் காட்டித்தான் வரம் வாங்கலாமே தவிர, பவிசைக் காட்டி இல்ல..... ஆராயாமல் அவசரப்பட்டு எடுக்கிற எந்தவொரு முடிவும் சரியா இருக்காதுங்கிறதை இந்த அம்பாள் எப்ப உனக்கு மண்டையில ஏத்தப் போறாளோ.....”
சந்நிதியை நெருங்கும்போது, கருவறையிலிருந்து குருக்கள், பூஜைப் பிரசாதத் தட்டோடு சிரித்தபடி வெளியே வந்தார்.
அதிலே தேங்காய், பழக் குழுமத்தோடு மருக்கொழுந்து நிறைத்துக் கட்டப்பட்டிருந்த மாலை கண்ணைச் சிமிட்டியது. கணப்பொழுதுக்குள் அந்த இடமெல்லாம் அதன் வாடையால் ஆக்கிரமிக்கப்பட்டது.
புரியாமல் விழித்தோம். குருக்களே பதில் சொன்னார்.
“நல்ல விசுவாசமான பையனை வேலைக்கு வெச்சிருக்கேள்.... பிள்ளையாண்டான் அதிகாலை மூணு மணிக்கே வந்து என்னய எழுப்பிட்டான்.... இந்த மருக்கொழுந்து மாலையோட சேந்த மத்த பூஜை சாமான் அத்தனையையும் மதுரை மீனாட்சி சந்நிதி வாசல்லையே வாங்கிட்டதா சொல்லி, ஏங் கையில குடுத்து, போதுமான தெட்சனையும் குடுத்து, சாமி திருநெல்வேலி ஹைகிரவுண்டு ஆஸ்பிட்டல்ல எங்கப்பாவ வெச்சிருக்கிறதாகவும், கண்டிசன் நல்லால்லைன்னும் தம்பி போன்பண்ணியிருக்கான்.... வார்ர வழியில பாத்திட்டு வரலாம்னா, இந்த பூஜை சாமான் எல்லாத்தையும் கையில வெச்சுக்கிட்டு அந்த இடத்துக்கெல்லாம் அலையிறது சரியில்ல..... அத்தோட நான் வர்ரத்துக்கு லேட் ஆனாலும் ஆகிடும்....
அதுபோக எங்க ஓனர் ஐயாட தம்பி குடும்பத்துக்காரங்க முதல் அர்ச்சனையை அவங்கதான் பண்ணுவோம்னு எங்க ஓனர் அம்மாகிட்ட சவால் விட்டிருக்காங்க.... அந்த சவால்ல ஜெயிக்கிறத்துக்காகவே நைட்டு தூங்காம இருந்து, காலையில ஆறுமணிக்கே வந்தாலும் வந்திடுவாங்க....
அதனால தயவு பண்ணி கோயில் நடை தொறந்த கையோடையே அர்ச்சனையை முடிச்சு வெச்சிருங்க.... எந்த சிட்டிவேசனிலையும் எங்க ஓனர் அம்மா யாருகிட்டையும் தோத்துப் போயிடக்கூடாது.... எங்க ஓனர் ஐயா பேரு நட்சத்திரந்தான் உங்களுக்கு தெரியுமில்லியா....
அப்பிடீன்னு சொல்லி கையில குடுத்திட்டு ஹைகிரவுண்டுக்கு கிளம்பினான்.....
இங்க எங்கிட்ட கொண்டுவந்த இந்தப் பொருள் எல்லாத்தையுமே நீ வீட்டிலையே குடுத்து, வெவரத்த சொல்லிட்டு அங்கையிருந்தே போயிருக்கலாமில்லியான்னு கேட்டேன்.....
எதுக்கு சாமி.... நல்ல சமாச்சாரம் நடக்கப்போற இடத்தில, காலங்காத்தால மனசுக்கு கஷ்டமான வெசயத்தையெல்லாம் பேசணும்... அதனாலதான் அவங்க எனக்குப் போன் எடுத்தும் நான் அட்டேன் பண்ணாம இருக்கேன்.....
என் வேதனை என்கூட இருக்கட்டும்.... நான் எங்கப்பாவ பாத்திட்டு உடனையே ரிட்டன் ஆகி வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன்....
முடிஞ்சா அர்ச்சனையை முடிச்சிட்டு ஓனர் ஐயாகிட்ட நீங்க போன்பண்ணிச் சொல்லிடுங்க.... அதுவும் போனில சொல்லலாம்னு ஒங்க மனசுக்குப் பட்டா சொல்லுங்கன்னு சொல்லிட்டு அந்தப் பிள்ளை கிளம்பிட்டான்....
தப்பா நெனைக்காதேள்.... நீங்க எல்லாம் சந்நிதிக்குள்ள வரும்வரைக்கும் அப்பிடியானதொரு மனக்கஷ்டமான சமாச்சாரத்தை சொல்லாமல் தவிர்த்துக்கலாம்னு எனக்கும் பட்டிச்சு....
ஆனா ஒண்ணு.... முதல் அர்ச்சனையை தாங்கள்தான் முடிச்சதா உங்க தம்பி குடும்பம் நெனைச்சுக்கிட்டிருக்கலாம்.... உண்மையில முடிச்சது நீங்கதான்....
அவங்கப்பா சீரியஸா இருக்கிற நெலையிலையும், வேலைபாக்கிற இடத்து முதலாளியும்,குடும்பமும் நல்லாயிருக்கணும்னு நெனைச்சுத் துடிக்கிற வேலையாளை இந்தக்காலத்தில எங்கே பாக்க முடியிது.... இப்பிடியொரு வேலையாள் கிடைக்க நீங்க குடுத்துவெக்கணும்.... எந்தக் காலத்திலையும் இவனை நீங்க எழந்திடாதீங்க....
சரி சரி.... வந்ததும் வந்தீங்க.... தரிசனத்த பண்ணிக்குங்க....”
கோவிலைவிட்டு வெளியே வந்து வண்டியில் ஏறும்போது, மீனாட்சியைக் கவனித்தேன். கண்கள் பனித்திருக்க, முகம் தொலைந்து போயிருந்தது.
வீட்டுக்கு வந்தபோது, காம்பவுண்டு கேட் செக்கூரட்ரி கூறினார்.
“ஐயா....இப்ப பத்து நிமிசத்துக்கு முன்னாடிதான் வசந்தன் வந்திருந்தான்.... அம்மா சொன்னமாதிரியே சொல்லி, பணத்தையும் சூட்கேசையும் குடுத்தேன்..... ரொம்பவும் அப்செட் ஆகிட்டான்....
அந்தநேரம் பாத்து அவனுக்கு போன் வந்திச்சு.... தனியா போய் பேசிட்டு அழுதுகிட்டே வந்தான்....
செக்கூரட்ரி அண்ணாச்சி.... எங்கப்பா எறந்திட்டாங்க.... கடைசி நேரத்தில அவர்கூட இருக்க முடியாம போச்சு.... நான் குடுத்துவெச்சது அம்புட்டுத்தான்....
யாரை வாழவைக்கணும்.... நல்லபடியா பாத்துக்கணும்.... அதுக்காக நெறய சம்பாதிக்கணும்னு வேலைக்கு வந்தேனோ....
அவரே போனதுக்கு அப்புறம், நான் எதுக்கு மெனைக்கெட்டு இம்புட்டு தூரம் வந்து வேலை பாக்கணும்....
அதுமட்டுமில்லாம, எனக்கு சம்பளம் குடுத்து வேலை வாங்கிறவங்க மனசு நொந்து, என்னய வேலையிலயிருந்து தூக்கிற அளவுக்கு ஆகியிருக்கிண்ணா, இத்தனை காலம் இருந்தும், அவங்க நம்பிக்கைக்கு ஏத்தாப்போல நடக்க எனக்கு லாயக்கு இல்லைன்னுதானே அர்த்தம்.... ஏதோ இம்புட்டு நாளும் எனக்கு வேலை தந்து வெச்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றின்னு நான் சொன்னதா சொல்லியிருங்க.... நான் வர்ரேண்ணே.....
அப்பிடீன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.....”
அவர் சொல்லி முடித்தபோது, அனைவர் கண்களும் குளமாகின. மீனாட்சி வாய்விட்டே கதறிவிட்டாள்.
வசந்தனின் விசுவாசத்தோடு, மதுரை மருக்கொழுந்தின் வாசனை போட்டியிட்டுத் தோற்றுப்போயிருந்தது.
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]