1. அலாரம் அலற விழித்தன விழிகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!இரவெனும் நதியிலேகி வண்ணக்
கனவெனும் படகிலேறி வானில்
மிதந்து சென்ற உணர்வினையேந்தி
வியந்து நின்ற வகையிங்கு பகர

சின்னச் சின்னச் நட்சத்திரங்கள்
சொன்ன பல சுவையான கதைகள்
வண்ண முழு நிலவது தானும்
மெல்லத் தேயும் விந்தை விளக்க தவழ்ந்து மெல்ல நகரும் வெண்முகில்
கனத்த பொழுதொன்றில் தானும்
கறுத்துக் கார்மேகமாய் பொழியும்
கனத்த மழையின் காரணம் சொல்ல

அனைத்தும் கலைந்து மறைந்து போக
ஆதவன் கதிர்களை ஒளியாய்ப் பொழியும்
வேளை வந்தது என்றே அருகிருந்த
அலாரம் அலற விழித்தன விழிகள்


2. அன்னைத்தமிழ் தந்த அன்புமிகு ஆசியென உணர்ந்திடுவேன்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!பாடிடுவேன் என் தாய்த் திரு தமிழ்தன்னை
பாமாலை சூட்டிப் பாடிடுவேன்
சூடிடுவேன் அன்னைத் தமிழ் தந்த மொழியை
சுந்தரமாய் என் நெஞ்சில் சூடிடுவேன்
போற்றிடுவேன் கண்ணென அவள் தன்
பண் செய்த பொன் மைந்தர்களை போற்றிடுவேன்
கற்றிடுவேன் ஓய்வின்றி அன்னைத் தமிழை
கற்கக் கசடறக் கற்றிடுவேன்
மீட்டிடுவேன் சிந்தையெனும் யாழெடுத்து அதில்
சிந்தும் பல கவி புனைந்து மீட்டிடுவேன்
சாற்றிடுவேன் புகழ்மாலை என் சோதர சோதரியருக்கு
அவர் தமிழ் பாடுகையில் புகழ்மாலை சாற்றிடுவேன்
பீற்றிடுவேன் என் அன்னைத் தமிழின் பெருமைதனை
வாழ்விருக்கும் நாள்வரை ஓயாமல் பீற்றிடுவேன்
யாத்திடுவேன் அவள் புகழ் கூறும் பாமலை ஒராயிரம்
சளைக்காது இன்மொழி கூட்டி யாத்திடுவேன்
சேர்த்திடுவேன் அரிய பல தமிழ் நூல்களை
பேறாக எண்ணிப் பெரும் செல்வமென சேர்த்திடுவேன்
உணர்ந்திடுவேன் இவையெல்லாம் என் திறமையல்ல
அன்னைத்தமிழ் தந்த அன்புமிகு ஆசியென உணர்ந்திடுவேன்

3. இரண்டையும் படைத்தது இயற்கையோ ?

கவிதை வாசிப்போம் வாருங்கள்!வானூர்வலம் போகும்
அந்த நிலவழகா ?
இல்லை
வண்ணத்தேர் போல
ஊர்கோலம் போகும்
இந்தச் சிலையழகா ?

இருளென்னும்
மேடையிலே விரித்த
நீலவானத் திரையினில்
கண்சிமிட்டி விளையாடும்
விண்மீன்கள் அழகா ?
இல்லை
ஓர்கணப் பார்வையில்
மெல்லத் தன் இமைமூடி
செவ்விதழ் ஓரங்கள்
மெல்லென விரியப்
புன்னகை பூத்தே செல்லும்
பூவையிவள் அழகா ?

இளம் மாலைப் பொழுதில்
செந்நிறக் கோலத்தில்
அகிலத்தின் அந்தத்துள்
ஆதவன் தனை மறைக்கும்
அக்காட்சி அழகா ?
இல்லை
பார்வையோடுடு பார்வை
மோதியதால் நாணிக் கன்னம்
சிவக்கச் சிரிக்கும்
அச்சிங்காரக் காட்சி அழகா ?

வியந்தேன் ! வியந்தேன் !
நான் காணும்
இயற்கையின் காட்சியோடு
போட்டி போடும் இந்த
இலக்கியக் காதலைக் கண்டு
இரண்டையும் படைத்தது
இயற்கையோ ?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.