'பதிவுகள்' ஆகஸ்ட் கவிதைகள் -2

 வாசிப்பின் இடைவெளி


- துரைகுமரன் -

நேற்றிரவும் வழக்கம் போலவே
வழக்கத்திற்கு மாறான உன் நடத்தை
என் ஏதோவொரு செயலுக்கான
எதிர்ப்பைத்தெரிவித்தது
நடத்தை மாற்றத்தின் தீவிரம்
உணர்ந்த மனம்
உள்ளூரக் கொள்ளும் நடுக்கத்தில்
உன் பார்வையில் பரிவு தேடும் விழிகள்
ஏமாற்றத்தில் வெளிறுகின்றன
உன் புறக்கணிப்பை அர்த்தப்படுத்த
காரணம் தேடிச் சலித்துப் போகிறேன்
வினாச்சொற்களுக்கான
உன் மௌனப் பதிலால்
உலர்ந்த நாக்கு மேலண்ணத்தில்
ஒட்டிக்கொள்கிறது
தயக்கத்தால் நேரும்
சொற்களுக்கிடையிலான என் மௌனம்
நமக்கிடையியே மிகைப்படுத்தும்
இடைவெளி கண்டு திகைக்கிறேன்
ஆனால்
விடியலை நீ வரவேற்ற பாவனையில்
மற்றுமொரு நாளை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன்
ஆழமான வாசிப்பை வேண்டி நிற்கும்
கவிதையைப் போல.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


 கிண்ணியா எஸ். பாயிஸா அலியின் கவிதைகள்!


1.  உன்னிரு மின்வரிகள்

கமழும் பூக்கூடையாய் பாசத்தை மட்டுமே ஏந்தி வருமென்

ஆயிரங்கேள்விகளுக்கோர் ஒற்றைப் பதிலாய்…..

வானம் பத்திரப் படுத்தும் அபூர்வ மின்னலென…..
இருந்து நின்று எப்போதாவது வந்துசேரும்
விளிப்பு முடிப்பற்ற உன்னிரு  மின்வரிகள்.
பரிவு பந்தமெலாஞ் சீவிச்சீவிக் கழித்தபடி தனித்திருக்குமவை
சுமாராய் உன்போலான போதுமென்ன
வரிக்குறளை விரித்து விரித்து வாங்கிய பட்டமுண்டு

வரிக்கு முன்னும் பின்னுமாய்
விட்டிருக்கும் நெடிய இடைவெளிகளை

முன்னம் நீ புழங்கிய சொல்லிட்டே நிரப்புவேன்.
அழகிய கவிதையாயது மேலெழுந்து மேகமாய் மிதக்கும்
சடசடத்துக் கீழிறங்கும்

அலையெழுப்பி அகவும்
கீச்சிட்டபடி ரீங்காரமிடும்
தென்னம்பிஞ்சுகள் சொரித்தவாறே
பூவிதழை அசைத்தசைத்துப் பனியுதிர்க்கும்
பாகாய் பரவிப்பரவி உறைய வைக்கும்
ஆய்ந்து முடித்ததுதான் நியுற்றன் விதியெனில்

ஒரு தென்னைமரமாய்
நெடிந்தோங்கியிருக்குமுன் பெருங் கர்வங்கூட
என்றாவதுடைந்து சிதறத்தானே கூடும்

ஓயாது தட்டுமென் வலிய அன்பின்முன்.

2.  குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி

குவிந்த விரல்களூடே
குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற

உள்ளங்கைச் சிறைக்குள்
படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள்

குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை.
கரைந்திடுங் கணங்களில்
வர்ணங்களின் பிசுபிசுப்பும்

படபடப்பின் அமர்முடுகலும்
ஒருசேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு
சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ
விண்ணளவுக்குமான அதன்  விடுதலையை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


அந்தக் குழந்தை...

-சு.திரிவேணி,கொடுமுடி

வேலை நேரம் முடிந்த மாலை.
சுமைகளற்ற பை,
பேருந்தில் ஜன்னல்ஓர இடமென
மகிழ்ச்சிகளின் அணிவகுப்பு.
எல்லா சந்தோஷத்தையும்
விஞ்சி விட்டது அந்தக் குழந்தை.

நிர்மலமான விழிகளையும்
நெகிழ்த்தும் புன்னகையையும்
கண்டு நான் ரசிக்கையில்...
குழந்தைக்கோ -
குட்டியாய் குண்டாய்
அதைப் போலவே இருந்த
என் பை பிடித்துப் போனது.

என் முகம் பார்த்து
விரல் தொட்டு
கரம் பிடித்து என
பையை நோக்கிய
அதன் பயணம் ஆரம்பமானது.
மெதுவாய்த் தன் வசப்படுத்தி
சாப்பிடத் தொடங்கியது.
புதிதாய் முளைக்கும் பற்களின்
குறுகுறுப்புக்குப் பையை
இரையாக்க முயன்றது.
குண்டுக் கைகளால் மத்தளம் தட்டியது
வாங்கி விடுவேனோ என ஐயத்துடன் 
ஒருமுறை தவற விட்டு
என் முகம் பார்த்தது.
எடுத்து அதனிடமே கொடுத்ததும்
பரிசாய்ப் புன்னகை கிடைத்தது.
வேறோர் உலகுக்குப் பையொடு
பயணித்து விட்டது குழந்தை.

இறங்குமிடம் வந்ததும்
சேயறியாமல் தாய் மூலம்
வந்தடைந்தது என் பை.
திரும்பிப் பார்த்தேன்-
இறங்கிய பின்னும் பையை
ஏக்கமுடன் தேடியது குழந்தை
மடியிலிருந்த பை
கனக்கத் தொடங்கியிருந்தது!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


யாழ். ஜே.ஜுமானா. கவிதைகள்!

1. கனவு
 
வெகு தூரப் பயணம்.. இது…                                                                       
ஆனால்
ஒரே இடத்தில் இருந்து கொண்டே                     
பயணம் செய்யும் வினோதம்!
 
இங்கு தான் -
கண்கள் இரண்டை மூடினாலும்
பார்வை வரும்…
ஒளி முதல்கள் இல்லாமலே
வெளிச்சம் வரும்…
வாய் கூடத் திறவாமலே
வார்த்தை வரும்…
 
ஓராயிரம் குண்டுகள் வெடிக்கும்
ஆனால்
ஒரு சலனமும் இருக்காது…
ஒரு மொட்டு மலர்ந்து விட்டால்
எத்தனை கோடி சப்தங்கள் இங்கே!
 
தொலை தூரப் பயணம்.. இங்கே
தொடுவானில்
தொங்கு பாலம் தொங்கும்… அதிலே…
“குதி”யிலாமல்
உடல் மட்டும் நடைபோடும்…!
 

2. ரமழான் வந்ததே…!
 
 
நிழல் நிஜங்களைக் காட்டிடும்
ரமழான்…
இனி தினம் நன்மைகள் ஈட்டிட
ரமழான்…
பசி வாட்டிடும் போதும்
“உளம்”
அமல்களை நிலைநாட்டிடுமே…
நடு நிசியினில் தொழுகை…
நாளும் இறையருளினில்  தஃலீம்…. 
பாவம் கரைத்திடும் தவ்பா… 
பாரில் முழங்கிடும் தஸ்பீஹ்… 
பூமி சுழன்றதின் பயனாய்
ரமழான் மாதத்தை அடைந்தோம்…,
 
உனது அருளால் யா அல்லாஹ்…!
 
கண்கள் வடித்திடும் நீரில்
“கல்பு” குளித்திடும் தோய்ந்து…
என்றும் துடித்திடும் “இதயம்”  -
“என்றோ” நிற்பதை அஞ்சும்…
வென்று குவித்தது எல்லாம்,
“வேண்டும்”; ஏழைக்கு செல்லும்…!
குர் ஆன் ஓதிடும் “கண்கள்”…
வெண்மை ஆகிடும் “உள்ளம்”…
 திண்மை ஆகிடும் “ஈமான்”..
சொல் செயல் எண்ணமெல்லாம்
நன்மையாக மாறிடுமே…
 
உனது அருளால் யா அல்லாஹ்..!
 
நிழல் நிஜங்களைக் காட்டிடும் ரமழான்…
அனு தினம் நன்மைகள் ஈட்டிட நாம்;
உனை தினம் போற்றிடுவோமே…!!
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


ங போல் வளை

- துவாரகன் -

உடல் குறுகு
எலும்பை மற
கும்பிடு போடு
நாணலாய் இரு
தவளையாவாய்.

இனிப்பெனச் சொல்
குட்டையைக் குளமாக்கு
இன்னும்...
ங போல் வளை
தமிழ்ப்பாட்டிக்கு நன்றி சொல்
நீ துளிர்ப்பாய்.
8/2011

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.