-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தீபமொடு நன்னெறியும் திரும்ப வேண்டும்
தேசமொடும் மந்திரமும் சேர வேண்டு;ம்
கோபமின்றி மன்பதைகள் குலவ வேண்டும்
குடிசையொடும் வாழ்வியலும் கொடுக்க வேண்டும்
தூபமொடும் திருமறைகள் துலங்க வேண்டும்
தேவாரம் வாசகங்கள் செழிக்க வேண்டும்
சாபமின்றிச் சமவாழ்வுச் சால்பு வேண்டும்
சங்கமெனச் சத்தியமும் சாற்று வீரே !

தாமரையும் சண்பகமும் தழைக்க வேண்டும்
தக்காளி பயிர்வகைகள் தளிரும் கீரை
கோதுமையும் வெங்காயம் குவிய வேண்டும்
கூர்மரபுக் காய்கறிகள் கொழிக்க வேண்டும்
சேமமுறு நித்தியமாய்ச் சிறக்க வேண்;டும்
செகத்திலுறு வார்கலைகள் தெளிதல் வேண்டும்
தேமதுரப் பாவாறு தெளிவுங் கூட்டித்
தேம்மாங்குத் தமிழ்மரபு தேற்று வீpரே !

பாவமெலாம் போகட்டும் படிந்த நாட்கள்
பத்திரமாய் மாறட்டும் பருத்தும் நோய்கள்
காவலின்றிப் போகையிலே கதறும் பூமி
கட்டுக்குள் ஆகட்டும் கலிங்கம் கூடித்
தேவருல காகட்டும் தினமும் வாழ்வு
திரும்பட்டும் சுகாதாரம் சுவறல் வேண்டும்
ஆவலொடுந் தீபவளி ஆக்கும் நாளில்
அற்புதங்கள் பரவட்டும் அகில மாமே !

பொன்பாவைப் புத்துயிர்கள் பேசுங் காற்றுப்
பொடியெல்லாம் தமிழாக மாறல் வேண்டும்
தென்னாட்டுத் தமிழுலகம் துலங்கும் பாடல்
செந்தமிழும் சங்கமெனச் சேரல் வேண்டும்
நன்குறிஞ்சி அறநூறு நலுங்கும்; தென்றல்
நற்பரணி மனுக்காஞ்சி நற்தாய் மீண்டும்
இன்தமிழின் வலையாறாய் இயற்றல் வேண்டும்;
இளவேனிற் கவிஞருளம் என்றும் வேண்டும் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.