மர்மங்கள் நிறைந்த மானிடத்தில்
      என் உடல் ஆயுதமாகிறதே!
      புரட்சிக்குரல் எழுப்பி
      கறுப்புக் கவசம் அணிந்து  
      கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து
      என் சுய விருப்பத்தை - பெண்
      அரசியல் போராட்டம் போல்      
      பேசுகிறேன்!

      தில்லை சிதம்பரத்தில்
      தசை நரம்புகள்
      நடனமாகின்றது சிலைகளில்
      பெண்களின் சவால்கள்
      கடின உழைப்பாகி
      நிழலாய் மாறுகிறது நடுப்பகலில்
      சுயமரியாதை
      கமழும் மயான வீச்சாகி
      விஸ்வரூபம் காட்டுகிறது!

      ஆண்கள் ஆக்கிரமித்த கல்வியை
      இயற்கையே ஒப்படைத்தது
      பெண்ணிடம் தான்
      மென்மையின் பேராசிரியையை
      அடிமைகளாக்கி
      செய்து வந்த வேலைகளோ – நிர்ப்பந்தமோ
      எந்த மானிடப் பிறவிக்கும் இருக்காது!
      மனித அறிவை
      செயற்கை நுண்ணறிவுக்குள்
      வெற்றி   அக்கிக் கொள்வது
      தவிர்க்கமுடியாதுதான்... ஆனால்
      இயந்திரங்களிடமிருந்து
      இனம் பிரித்துப் பார்க்கமுடியாத
      பின் மனிதர்களாக இப்போ நாம்!  
     
     பூ வென்று புயலாகி சிந்தனை யாக்கிய
     ‘தமிழ்மகள்’  மங்களம்மாள் முதல்
     சர்வதேசம் அடர்ந்த காட்டுக்குள்.. பிரான்ஸ்
     சீமோன் வேய்  வரை அல்ல கமலா ஹரிஸ் வரை
   சிந்தனையால் நெருப்பை மூட்டிய
   ஆயிரம் பெண் மணிகள் உலகில்
   முகத்தில் வெளிச்சத்தைப் பரப்பி - என்
   பார்வையை சிவப்பாக்கிக் கொண்டிருக்கிறது!
   பரவச நிலைக்கும் என்னை அழைத்துச் செல்கிறது - ஆனால்
   இன்றும் குழந்தைத் தொழிலாளர்களா?
   ஐயோ!
   எத்தனை பிஞ்சுக் கைகள்
   கோபத்தில் என் சொற்கள் தொலைகின்றனவே!
   நன்மைகள் எல்லாம்
   தீமையால் வசீகரிக்கப்படுகின்றனவோ!
   உயர்ந்த பண்பான சந்தன மரமாக்கி  - என்னை
   வதைக்காமல் அணைத்துப் பார்க்கிறேன்!
   இறந்த காலம் இல்லாத என்கவிதை
   நிகழ் காலத்தில் நித்தியமாகி உறைகிறது
   வாழ்வு நீண்டு லேசாகும் போது
   இளசுகளின் தற்கொலைகள்
   என்னை நொருக்கிப் போடுகிறது
   கடுமையான நீல நிறம் புகையாகிப் பரவுகிறது
   தோல்விக்கு தற்கொலையா வழி?  
   வாழ்கையின் உயிர்ப்பு என்பது
   போராட்டம் இருக்கும்வரை தான்
   நிந்தனை வார்த்தைகளை
   ஜெயித்து விடு!
   தோற்கும் காரணங்கள் மீது - நீ
   சந்தேகம் கொள்ளாததது ஏன்?
   உடலின் வலிமை உன்னதமானது
   புன்னகையை.யும் தன்னம்பிகையையும்
   உன் தாமரை உடலில் போட்டுத் தாலாட்டு
   காலம் உயிர் போன்றது
   அதற்கு மட்டும் பயந்து கொள்
   பேரன்பை நித்தியமாக்கி
   அந்தச் சொர்க்கத்தில் வாழ்ந்துவிடு
   சட்டைப் பையில் தெரிகிறது
   ஒரு தலை நிமிர்ந்த பேனா - அந்தப்
   பேனாவோ தலைகுனிகிறதே ஒரு
   வெற்றுத்தாளில்
   உலகத்தைப் புரட்டிப்போடும்
   நெம்புகோலும் அதுதான் என்று நம்பு
   சிந்தனையை நெருப்பாக்கி
   சத்தியத்தை சங்க நாதமாக்கி
   சீர்வரிசையில் அதை
   நவீன செங்கோலாக்கு
   சொற்களின் தெறிப்பால்
   வாழ்வையே நீ வென்றிடுவாய்;!.

   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.