பைந்தமிழும் செந்தமிழும்
பாரிலங்கும் என்றபின்னும்
அந்தமிலாத் தென்றலுமே
ஆடிவரும் அம்மானை
அந்தமிலாத் தென்றலொடும்
ஆடிவரும் ஓசையிலே
சொந்தமெனப் பாடிடுவோர்
செப்பிடுமோர் அம்மானை !

வாலைமகள் வாசலுக்கும்
வண்ணமகள் தேசமெங்கும்
ஆலையெனத் தண்தமிழில்
ஆடுவதோ அம்மானை
ஆலையெனத் தண்தமிழில்
ஆடிவரும் காலையிலும்
சோலையெனப் பூக்கவரும்
சுகந்தமதே அம்மானை

கூர்வயலிற் கூத்தெடுத்துக்
கும்மாளம் கொட்டிவரும்
நேர்மலையில் ஊற்றெடுக்கும்
நித்திலமே அம்மானை
நேர்மலையில்; ஊற்றெடுக்கும்
நெடுஞ்சுனையில் அலைபாயும்
கார்மழையில் நிலம்வாழும்
கற்பகத்தேன் அம்மானை

வார்பயிர்கள் வாழ்த்துரைக்கும்
மத்தோடும் தயிர்நுரைக்கும்
ஊர்மனையில் ஒன்றிவரும்
ஒண்மயிலே அம்மானை
ஊர்மனையில் நின்றுலவும்
ஒண்மயிலின் தன்னாடல்
பேர்விளங்கப் பாடிவரும்
பொய்கைதரும் அம்மானை

பேர்விளங்கப் பாடிவரும்
புலவனுக்கும் முத்தொளிரத்
தேர்விளக்கம் ஆர்த்துவரும்
திருச்சதகம் அம்மானை
தேர்விளக்கம் ஆர்த்துவரும்
தென்மழலைத் தாவுமணி
நார்மணக்க மாலையிடும்
நர்த்தனமே அம்மானை

நார்மணக்க மாலையிடும்
நங்கையவள் பொற்கரத்தில்
மார்மணக்க மார்போடும்
மகத்துவமே அம்மானை
மார்மணக்க மார்போடும்
மகத்துவமோர் மத்தளமும்
பூவிளங்கப் பாட்டிசைக்கும்
புலவனுக்கோர் அம்மானை

பூவிளங்கப் பாட்டிசைக்கும்
புலவனுக்கோர் பொங்கரவம்
காவிளங்கும் மலர்க்கூந்தற்
காரிகைக்கும் அம்மானை
காவிளக்;கும் காரிகைக்கும்
காதலிடும் மன்னவனை
மாவிசும்பில் ஊஞ்சலிடும்
மங்கைக்கும் அம்மானை !

மாவிசும்பில்  ஆடிவரும்
மங்கையெழில் ஊஞ்சலிலே
கோவிசும்பில் பாடிவரும்
கூத்தொருகால் அம்மானை
கோவிசும்பிற் பாடிவரும்
குலவிளக்கு வஞ்சியவள்
பாமகளின் பந்தலிலே
பச்சையெழில் அம்மானை !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.