மே 18 முள்ளிவாய்க்கால் நினைவாக..

முள்ளிவாய்க்கால்
ஒரு
நினைவுச்சின்னம்.
மானுட கோரத்தை
மானுடச் சோகத்தை
மானுடருக்குக் காட்டுமொரு
சின்னம்.

முள்ளிவாய்க்காலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

முள்ளிவாய்க்காற்
பேரழிவு:
ஆறறிவின் சிற்றறிவு!
நாகரிகத்தின்
அநாகரிகம்.
சிந்திக்கும் மானுடரின்
சீரழிவு.

சின்னத்தின் சின்னத்தைச்
சீர்குலைத்தது எதற்கு?
புரிந்துணரும் தருணத்தில்
புரிதலற்ற செயல் எதற்கு?
வரலாற்றுத் துயர்தனை
நினைவு கூரலுக்கேன்
அச்சம்?

சின்ன அழிப்புகள்
சிந்தை உணர்வுகளைச்
சிதைப்பதில்லை.
நினைவு கூரலுக்குத் தடை போடாதீர்!
நினைவு கூரல் அனைவர்தம் உரிமை.

வரலாற்றை நினைவு கூரல்
வரலாற்றுத் தவறுகளை உணர்வதற்கு.
வரலாற்றுத் தவறுகளை
நிகழாமல் தவிர்ப்பதற்கு.
வரலாற்றிலிருந்து பாடங்கள் கற்பதற்கு.
சின்ன அழிப்பொரு சின்னத்தனம்.
சின்னத்தனத்தால் விளைவதென்ன?
வெறுப்பு! சினம்! அவநம்பிக்கை!

பேரழிவுக்குப் பொறுப்புக் கூறல்
வரலாற்றுக் கடமை!
பேரழிவுக்குப் பொறுப்பைத் துறத்தல்
வரலாற்றுச் சிறுமை!

வரலாற்றுச் சின்ன அழிப்பால்
வரலாறு மாறுவதில்லை.
யுகத்தின் தொழில்நுட்பம்
செகநிலை காட்டி நிற்கும்.

இனப்புரிந்துணர்வு
இருப்பதற்கு
இழி செயல்கள் உதவா.

இருந்ததை, இருப்பதை,
நிகழ்ந்ததை ஏற்போம்!
நினைவு கூர்வோம்!
நிகழ்ந்தவை  நிகழாமலிருக்க
நினைவு கூர்வோம்!
நினைவுச் சின்னம்
நிர்மாணிப்போம்!

* புகைப்பட உதவி: தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவில்லம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.