- கவிஞர் மின்னல் எழுதிய புகலிடப்பெண்ணொருத்தியின் அனுபவம். இக்கவிதை கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு தளைகளுக்குள் சிக்கி , அவற்றிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் பெண்களை நோக்கி அவற்றிலிருந்து வெளியே வா என அறை கூவல் விடுக்கிறது இக்கவிதை. இக்கவிதைக்கு ஓவியம் வரைந்தவர்: ஓவியர் அருந்ததி. - பதிவுகள் -  
    உனக்குப் பணத்தின் பெறுமதி தெரியாதாம்.
    "சாகும் போது நான் என்ன காசை
    கொண்டா போகப்போகிறேன் - எல்லாம்
    உனக்கும் பிள்ளைகளுக்கும் தானே" என்று
    உணர்ச்சியுடன் சொல்லுவான்.
    அதனால் தான் அவன் உன்னுடைய வங்கி கணக்கையும்
    தானே கட்டுப்படுத்துவானாம்.  

    இப்ப நீ அவனிடம் கை நீட்டி நிற்கின்றாய்.
    உன் சம்பளத்தை கூட செலவழிக்க
    அவனுடைய அனுமதி வேண்டும்.
    நீ கேட்பது எல்லாம் வீண் செலவாம்.
    அவனுடைய குடி பழக்கம் பணத்தை
    விழுங்குகிறது.  யார் இதை கேட்க முடியும்?     
   
    அப்படித்தான் மெல்ல மெல்ல
    உன் வாழ்வு அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது.    

    நீ வேலையால் வந்து அவசர அவசரமாக
    சமையலை தொடங்க அவன் தொலைக்காட்சிக்கு முன்
    காலை  நீட்டிக்கொண்டு உன்னிடம் தேநீர் கேட்பான்.
    "என்னப்பா, நீங்கள் போட்டு
    எனக்கும் ஒரு கோப்பை தாருங்கோ" என்றால் -
    "உங்களுக்கு எல்லாம் கனடா வந்துதான்
    இவ்வளவு  திமிர் பிடித்தது" என்று கத்துவான்.
    பின்னர் தன்னுடைய அம்மா எப்படி
    அப்பா வேலையால் வந்தவுடன் தேநீர் கொடுப்பாள்
    என வருத்தத்துடன் சொல்லுவான்.
    "உனக்கு தேநீர் போட முடியாவிட்டால் கிட"
    என்று திட்டி விட்டு
    சாராயப்போத்தலுடன் வந்து குந்துவான்.      

    அதற்கு பிறகு வாயை இறுக  மூடி வைத்திருப்பது
    தான் புத்திசாலித்தனம் என்று உனக்கு தெரியும்.
    குட்ட குட்ட குனிந்தாய்.
    அவனுடன் வாதிடுவதை நிறுத்தினாய்.
    வாயுக்கும் பூட்டுப் போட்டாய்.
    உன்னுடைய கூக்குரல் சிரிப்பு எங்கு
    போயிற்றோ தெரியாது தோழி!     

    "பிள்ளைகள் வளரும் மட்டும்
    பல்லை கடித்துக்கொண்டு தாங்கு"
    என்று அம்மாவும் அப்பாவும்
    சொன்னார்கள்.
    சிநேகிதிகளிடம் பொய் சொல்ல
    முடியவில்லை.
    அவர்களுடன் பேசுவதையும்
    நல்லாய் குறைத்துக்கொண்டாய்.  

    சாய்பாபா, சிவன் கோவில், விரதம்,  
    தியானம் என்று பலவற்றையும்
    செய்ய முயன்றாய் -
    ஏதாவது நிம்மதியை கொடுத்ததா?     

    குண்டு வீச்சும்,  துப்பாக்கி கலாச்சாரமும்
    போதும் என்று சொல்லி, கப்பல் ஏறி
    கனடா வந்து சேர்ந்தாய்.
    சுதந்திர நாட்டில் உன் சுதந்திரத்தையும்
    சுயாதீனத்தையும்  
    ஏன் அம்மா இப்படி பறி கொடுத்தாய்?     

    பிள்ளைகளுக்காக என்று சொல்லி ஈடு வைத்த
    உன் சுதந்திரம்
    அவர்களுக்கு ஆவேசத்தையும்
    அடக்குமுறையையும்
    அடிமைத்தனத்தையுமே
    கருவில் இருந்து கற்றுக்  கொடுத்தது.      

    விவாதத்தை வெல்வது
    அடியும் உதையும் மூலம்  என்று பார்த்து
    பழகிய உன் குழந்தைகள்
    பிரச்சனை வந்ததும்
    தமக்கு தெரிந்த ஆயுதங்களையும்  
    போத்தலையும் தான் தூக்குவார்கள்.
   
    மகன்மார் அப்பா போலவும்
    மகள்மார் அம்மா போலவும்
    வாழ்க்கை சக்கரத்தை
    தொடர்கிறார்கள் என்று
    ஆச்சரியப்படாதே.
    உன்னுடைய தியாகங்கள் எல்லாம்
    எவரையும் பாதுகாக்கவில்லை.
    குறிப்பாக அவர்களை வன்முறையில்
    இருந்தும் அடக்குமுறையில் இருந்தும்
    காப்பாற்றவில்லை.
    மாறாக மீண்டும் ஒரு தலை முறையால்
    வலுப்படுத்தப்பட்டன.  

    உன்னுடைய நெஞ்ச கனல்கள்
    இப்போது அவர்களுக்குள் நெருப்பாய்
    எரிகிறது!     

    என்ன இந்த கதையை வேறு எங்கோ
    கேட்ட மாதிரி இருக்கிறதா?
    இது உன் கதை மட்டும் அல்ல.
    உன் அக்கா கதை மட்டும் அல்ல.
    ஏன் உன் நண்பி கதை மட்டும் அல்ல.
    சுதந்திரத்தை தேடி ஐரோப்பா, கனடா
    என்று சென்று குடியேறிய நாம்
    அடக்குமுறையையும் அடிமைத்தனத்தையும்
    பவுத்திரமாக வீட்டுக்குள்
    பூட்டி வைத்துள்ள கதைதான் இது.

    போதும் தோழி!
    இனியும் நீ இப்படி
    தவிக்க வேண்டாம்.
    கதவைத் திறந்து வெளியே வா!