சொன்னார் நண்பர்
"சொல்லப்படாதவரிவர்" என்று.
அதற்கு நான் கூறினேன்
"ஆனை பார்த்த குருடர்களிடம்
அதற்கு விளக்கம் கேட்டிருக்கின்றீர்கள்.
அதனால்தானிந்த குழப்பம்"என்று.
"குழப்பமா? என்ன குழப்பம்?"
என்று தலையில் கை வைத்தார் நண்பர்.
"சொல்லப்படாதவர் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்களே"
"சொல்லியிருக்கின்றேன் சொல்லப்படாதவர் பற்றி.
ஆமாம்! நீங்கள் சொல்லுவது  சரியே"
சொன்னார் பதிலுக்கு அவர்.
"அதுதான் கூறினேன் குழப்பமென்று" என்றேன்.
அதற்கும் அவர் "புரியவில்லை" என்று
மீண்டும் தலையில் கை வைத்தார்.

"ஆமாம்! நீங்கள் குழம்பிப் போயிருக்கின்றீர்கள்" என்றேன்.
"ஆமாம். நீங்கள் சொல்லியதால்" என்றார் அவர்.
"சொல்லப்படாதவர் பற்றிச் சொல்லியதால்...."
"சொன்னேன். ஆனால்.."
"சொல்லவந்ததைச் சொல்லி முடிக்கவில்லையே.
சொல்லுவேன் கேளுங்கள். பின் ஏதாவது
சொல்லுங்கள்" என்றேன்.
"சொல்லுங்கள். சொல்லி  முடிக்கும்வரை ஏதும்
சொல்லாமலிருப்பேன்" என்றார்.
"சொல்ல வந்ததென்னவென்றால்..
ஆனை பார்த்த குருடர்கள் பற்றி"
என்றேன்.
"ஆமாம்! ஆனை பார்த்த குருடர்களைப்பற்றி.
அவர்களைப்பற்றிச் சொல்லுங்கள்" என்றார்.
"அவர்களைப்பற்றிச் சொல்ல உண்டு.
அவர்கள் ஆனை பார்த்த அந்தகர்கள்" என்றேன்.
"ஆமாம்! அவர்கள் ஆனை பார்த்த அந்தகர்கள்!
அந்தகர்கள் பார்த்த ஆனையில் இல்லாதவர் அவர்.
அவர் சொல்லப்படாதவர்" என்றார் அவர்.
"சொல்லிவிட்டீர்களே! சொல்லப்படாதவரைப்பற்றி" என்றேன்.
"சொல்லிவிட்டேன் சொல்லப்படாதவரைப்பற்றி. ஆமாம்!
சொல்லிவிட்டேன்" என்றார்.
"ஆனை பார்த்தவர் நீங்கள்" என்றேன்.
"ஆனையைப் பார்த்தவன் நானா"
அவர் மீண்டும் தலையில் கை வைத்தார்.
"ஆமாம்! ஆனை பார்த்தவர்தான்.
அந்தகர்களுக்கு மத்தியில்" என்றேன்.
சொல்லப்படாதவரைப்பற்றிச் சொல்லியவர்
சொன்னார்:
:ஆமாம்! ஆனை பார்த்த அந்தகர்களுக்கு மத்தியில்.
ஆமாம்! ஆனை  பார்த்த அந்தகர்களுக்கு மத்தியில்"
ஆடினார் அவர். பாடினார். அவர் ஆடியே பாடினார்.
ஆடினார் அவர். பாடினார். அவர் ஆடியே பாடினார்.
ஆடினார் அவர். பாடினார். அவர் ஆடியே பாடினார்.
"ஆமாம்! ஆனை பார்த்த அந்தகர்களுக்கு மத்தியில்.
ஆமாம்! ஆனை பார்த்த அந்தகர்களுக்கு மத்தியில்."

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.