வண்ண வண்ண நிறங்களிலே
வகை வகையாய்ச் சட்டை தைத்து
எங்களைத் தான் அலங்கரித்து
சித்திரமாய்ப் பார்த்திருந்த
எம் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

நீராட்டிச் சோறூட்டி
நெற்றியிலே பொட்டிட்டு
சின்ன அடியெடுத்து
சித்திரத் தேர் அசைகையிலே..
உள்ளம் குளிர
உச்சி முகர்ந்தவளே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

சுட்டு விரல்தான் பிடித்து
வட்டம் நிறையப் போட்டு
அழித்து அழித்து
அ னா எழுதுவித்து
மெய் சிலிர்த்த
எம் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

பெருநாள் திருநாள் என
விதம் விதமாய்
பட்சணங்கள் தந்தே
உண்டு மகிழ்வதை
கண்டு குளிர்ந்திருந்த
எம் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

கோவில் குளம்
திருவிழா என்றே
எமை அழைத்துச் சென்று
உலகைக் காட்டி
உவகை ஊட்டி
எங்களை வளர்த்தெடுத்த
அன்புத் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

சிறிதாய் வந்திடும்
இருமல் காய்ச்சலென
சிறுபிணி கண்டாலே
மனம் பதைத்து
விழித்திருந்து
பக்குவமாய்ப் பரிகரித்து
நோய் தீர்த்த
எம் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

வயதாகி வளர்ந்த நாம்
விழிப்புடனே கற்று
தேர்வுகளில் தேறிட
சுடச்சுட தேனீர்
அடிக்கடி தந்து
அக்கணம் நாம்
சோர்வின்றிப் படிக்க
பக்கமாய் விழித்திருந்த
குல விளக்கே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

வாழ்க்கை என்னும் மேடையிலே
அழகழகாய் ஆட்டம்
உத்தியோகப் படிக்கல்லை
எட்டி நாம் பிடித்தவேளை
ஆனந்தக் கண்ணீரில்
எமைத் தாலாட்டிய
அன்புத் தாயே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

காதலித்துக் கைப்பிடித்து
புது உறவில் நனைந்து
புதுவாழ்வில் நாம்
அடியெடுத்து வைக்கையிலே
பிரிவுத் துயரில்
உள்ளம் நோகையிலும்
எமை வாழ்த்தி
கண்களைத் தாழ்த்திய
பண்பின் சிகரமே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

மடியிலே தவழ்ந்திருந்த
பேரச் செல்வங்களின்
மழலை அமுதினை
அள்ளி உண்கையிலே
பறித்தெடுத்தது போல் விலகி
தூர தேசம் செல்கையிலும்
போய்வர விடைதந்து
மௌனமாய் அழுத நின்ற
தீபச் சுடரே..
உனக்காய் நாம்
என்ன செய்தோம்..?

இப்புவியில் பட்ட கடன்
எத்தனையோ..
அத்தனையும் தீர்த்திடலாம்
தாயே உன்னிடம் பெற்ற கடன்
தீருவதும் உண்டோ..
தீர்த்திடவும் முடியுமோ..
அம்மா சொல்..!

கடன் வேண்டாம் என்றே
நீ கடன் தீர்த்து சென்று விட்டாய்..
எம் கடன் தீர்க்க என்ன வழி... ..
இன்று எம் கண்களிலே கண்ணீர்..
எம் கண்கள் துடைக்க
உன் மென் விரல்கள்
மீண்டும் வந்திடுமா...
அம்மா சொல்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.