இன்று பழைய புத்தகங்களைத் தேடியபோது கவிதைப்புத்தகமொன்று அகப்பட்டது. நெடுங்கவிதையது. பெயர் " சாம்பல் வார்த்தைகள்:. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்களின் நெடுங்கவிதை நூல்.  யாளி பதிவு வெளியீடு. வெளியிட்ட ஆண்டு ஜனவரி 1994. அட்டைப்பட வடிவமைப்பு ஏ.கோபாலன்.  நூல் வடிவமைப்பை இந்திரனே செய்திருக்கின்றார்.

வாழ்க்கைக்கடலின் அலைகளால் நம்பிக்கைக்கரைகள்  அரிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை இழந்திருக்கின்ற கவிஞரின் வலியினை மொழி கொண்டு வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர். ஆனால் அதனை அவர் நேரடியாக யதார்த்தரீதியில் தன்னை , தன் நம்பிக்கையின்மையை , தானடைந்த வலியினை உங்களுக்குக்கூறவில்லை. மாறாக கனவுகளையும், கற்பனைகளையும் பற்றிக்கொண்டு அவற்றினூடு அதனை வெளிப்படுத்துகின்றார். இரக்கத்தை யாசிக்கின்றார். ஆனால் அதே சமயம் அவ்விரக்கத்தை யாசிப்பது யாரிடமிருந்து என்பதில் கவிஞர் குழம்பியிருக்கின்றார்.

இக்கவிதையின் மொழி எத்தகையது? கனவுகளையும் கற்பனைகளையும் பற்றிக்கொண்டு ஆழ்மனபடிவுகளை யதார்த்தத்துக்குக் கொண்டு வருவதால் 'மிகையதார்த்த' மொழியாகவே எனக்குப் படுகின்றது. மிகையதார்த்த மொழி மானுடரின்  யதார்த்த இருப்பை, இருப்பின் முரண்களை, அநீதிகளை , இவற்றின் காரணமாகக் கவிஞர் அடைந்த வலியினை உங்களுக்குப்  புரிய வைக்கின்றதா என்பதைக் கவிதையை படிக்கும் நீங்கள்தாம் கூறவேண்டும்.

ஆனால் கவிஞரை வேதனை அடைய வைப்பவை எவை? கவிஞரின் வலிக்குக் காரணமானவை எவை? அவர் வாழும் யதார்த்த உலகின் அவர் மீதான தாக்கம், அத்தாக்கத்தின் விளைவாக அவரைடைந்த வேதனை, வலி , இவற்றையே மிகையதார்த்த மொழியில் நெடுங்கவிதையாக்கியிருக்கின்றார் கவிஞர் இந்திரன். உண்மையில் நவீன இந்தியா , மநு தர்மம்  இவற்றை இந்நெடுங்கவிதை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றது. 

இருந்தாலும் இக்கவிதையை வாசிப்பதோர் அனுபவம். கவிதை கூறும் மொழி , பாவிக்கப்பட்டுள்ள படிமங்கள் வாசகர்தம் இதயங்களில் ஏற்படுத்தும் காட்சிகள், தூண்டுதல்கள், சிந்தனைகள்தாம் இந்நெடுங்கவிதையின் வெற்றி. இக்கவிதையில் எனக்குப்  பிடித்த சில வரிகளைக் கீழே தருகின்றேன்.


1 . என் தோளில்
வயோதிக முகம் கொண்ட
மலைப்பாம்பாய்
வாழ்க்கை
இரண்டாகப் பிரிந்த
கம்பி நாக்கைத் துழாவித்துழாவி
பேச முயலும் என்னிடம்
மெல்ல என்மீதான அதன்
ஊர்தலை உணர்கின்றேன்.
எனினும்
உரையாடும் மொழியறியேன்.

2. மூழ்குதலைத்  தவிர்க்க முடியவில்லை.
உடைந்த பாலத்தின்
இரும்பைத் தின்றதுபோல்
தின்றுவிட்டது என் இதயத்தின் வால்வுகளை
இந்தக் கடல்.
அடிவானுக்கு அப்பால்
எனக்கான நம்பிக்கை
அரூபமாய்க் காத்திருப்பதாய் உணர்கிறேன்.
கணவாய்களின் உள்ளேயோ
அடைஅடையாய் இருள்
உள்ளே தண்டவாளங்களைச் சரிசெய்யும்
தூசி மனிதர்கள்
எதிரொலி செய்து
ரயில் பாய்ந்து வருகையில்
விலகி ஓடி
சுவரோடு சுவராய்
பூர்விகக் குகைச் சித்திரங்களாய்
பதுங்குவர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.