நானோர் தமிழன் நாடெலாம் அலைந்தும்
வானத் தமிழை மறந்திடா மனிதன்

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
பற்றிப் படர்ந்த பழந்தமிழ்; இலக்கியம்

முற்றும் துறந்த முனிவர் மறையெலாம்
சித்தர் இறையைச் சொன்னதிப் பூமி

காலக் கோட்டில் காவுறும் மலையில்
ஞாலம் தோன்றி நயந்தஇப் பாதை

ஆதி மொழியாய் அட்ட திக்கெலாம்
சேதி உரைத்த செந்தமிழ் வழியாய்

நீதியும் போதனை நெறியும் மிக்கோர்
சாதனை கண்டதோர் சரித்திரம் ஆனதே !

மொழியெனில் மனிதன்; முகமது ஆகும்
அழிவுறும் படிக்கே ஆகிடாய் தமிழா !

வள்ளுவன் குறளில் மலர்தலின் உலகம்
விள்ளுவ தெல்லாம் வேரினை அறிவீர் !

கம்பன் வள்ளுவன் காள மேகனும்
அன்பினால் வரைந்த அறமே தமிழலோ !

ஷாவும் சூவும் தமிழ்ப்பெயர் அல்லடா
நாவில் நிற்கும் நற்றமிழ் சொல்லடா !

சீனமும் பானமும் சிதறிய வாகனம்
ஆனவர் தமிழை அழிக்கிறார் காண்மினோ !

பதினெட் டுடனே பரிபா டல்களும்
அதிரும் மொழிதான் அருந்தமிழ் அறிவீர் !

செருவில் வையமும் செம்மொழி என்க
உருவிற் தமிழை உரைக்கிறார் என்க !

ஏடா தமிழா இனித்திடும் தமிழைப்
பாடாய் ஆக்கிப் பகிடி பண்ணாதே !

சாவினை அழைத்தல்போல் ஷாஷா எனவே
மூவினை அழைத்தாய் ! முடிகிறோம் இன்னமும்

மொழியினைப் பெயராய் முத்தமிழ் ஒலிக்கும்
செழுமிய ஒலியே செந்தமிழ் அறிக !

தமிழ்ச்செல் வனுமாய்த் தமிழர சன்என
அமிழ்தாம் பெயர்கள் அன்னையின்; மொழியில்

செல்வியும் செல்வனும் சிந்தெனப் பெயர்கள்
சொல்லிடும் வேறோர் சொல்மொழி இலவே !

உன்தமிழ் மொழியை இலவே ஆக்கிட
வன்மை இழியோர் வரைகிறார் அறிவையோ?

இன்னொரு மொழியே எம்தமிழ் மொழிபோல்
இல்லவே இல்லையாம் ஏற்பாய் தமிழனே !

ஆயிர மாயிரம் ஆங்கிலம் கலந்து
வாயிலே உனக்கு வருவது வார்த்தையோ?

நண்டும் தவளையும் நறுக்கிடும் எழுத்தைக்
கொண்டிடா அழகு கொஞ்சிடும் தமிழே !

அழிப்பார் நெருப்பார் அவிக்கும் கொடியார்
இழியார் எல்லாம் இயக்கிறார் உலகை

பெயரைத் தமிழில் பொறித்து எழுதடா
கயமையை வெல்லும் விழுமியம் நீயடா !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.