1. அடையாளமும் அங்கீகாரமும்

    இத்தனையத்தனை யெனச் சொல்லவியலா
    எத்தனையெத்தனையோ காக்கைகளில்
    தனித்தொரு காக்கையாகத் தன்னை யாரும் பார்க்கவில்லையே
    என்ற ஏக்கம்
    எந்தக் காக்கையையும் தாக்கியிருக்காது
    என்றே தோன்றுகிறது.

    சக பறவைகள் இரைதேடப்
    பறக்கவேண்டும்.
    தூண்டில்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்
    இரையாகாமல் தப்பிக்கவேண்டும்.
    நிழல் தேடி நிறைய தூரம் செல்லவேண்டும்...
    தன் கூடிருக்கும் மரம் தொலையாதிருக்கிறதா
    என்று தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும்...
    தானியமென்று சிறுகல்லை முழுங்கியதில்
    ஏற்பட்ட உபாதைகளை
    யாரிடம் பகிர்ந்துகொள்வது?
    இதில் யாரை யார் புகழ்ந்துபோற்றுவது.....

    அலகுகளின் நீள அகலங்களைத்
    துல்லியமாக அளப்பதாய்
    ஆளுக்கொரு அளவை வைத்திருக்க
    வழியில்லை காக்கைகளுக்கு.

    சினிமாவில் நடிக்கவைப்பதற்கென்று
    ஃபோட்டோஷூட் நடத்தி
    ஒரு காக்காயைத் தேர்ந்தெடுத்து
    அழைத்து வந்து
    நூறு வருடத் தொன்மை வாய்ந்த
    ஆறு நட்சத்திர மரமொன்றின் கிளையில்
    யாரேனும் இதுவரை தங்கவைத்ததாகத்
    தெரியவில்லை.

    அதற்காக அங்கலாய்ப்பதெல்லாம்
    காக்கைகளின் வழக்கமில்லை.

    காக்கையை அழகென்று போற்றிப்
    பாடுவதில்லை யுலகு.
    அதன் கரும்பட்டொளிர் பூமென்மைச்
    சருமம் பற்றி யொரு வரியேனும்
    இதுவரை பேசி யறியோம்.

    இனிமையற்ற அதன் குரலின்
    கரகரப்பை
    எப்படியெல்லாம் பரிகசித்திருக்கிறோம்.

    ஆகாயத்தோட்டி என்று குறிப்பிடுவதிலும்
    ஓர் உட்குறிப்பு இருக்கத்தானே செய்கிறது.

    கிளியின் அழகை
    குயிலின் குரலினிமையை
    மயிலின் எழில்நடனத்தை
    குருவியின் குட்டியுருவை
    யெல்லாம் எடுத்துக்காட்டிக்
    காட்டிக்காட்டி
    காக்காயைப் பழிப்பதுமட்டும்
    ஒருநாளும் வழக்கொழிந்துபோகாததாய்….

    சிறுகல்லைப் போட்டுப்போட்டு
    நீர்மட்டத்தை உயர்த்தி
    தாகம் தீர்த்துக்கொண்டதாய்
    காக்காயின் அறிவுக்கூர்மைக்கு
    கைவசமிருப்பது ஒரேயொரு கதை....

    ஆனால்
    பாட்டி சுட்ட வடையைத் தட்டிப்பறித்த
    வில்லன் காக்காய்க்கு
    பட்டிதொட்டியெல்லாம்
    கரும்புள்ளி செம்புள்ளி
    குத்தப்பட்டவண்ணமே

    காக்கை காக்காய் காகம் – எல்லாமே
    மனிதர்கள் சூட்டிய பெயர்கள்.

    எனில்,
    காக்கை காக்கைக்கு என்ன?

    எண்ண நேரமின்றி
    ஏதொரு அவசியமுமின்றி
    என்றும்போல் காகங்களாகிய
    காக்காய்களாகிய
    காக்கைகள்
    வலம் வந்தபடி வானிலும்
    விளக்குக்கம்பத்தில் அமர்ந்துகொண்டும்…..

    காக்கையின் வாழ்க்கைக்கு
    நோக்கம் கற்பிக்க விரும்பும்
    நம் அறியாமையை அறியாமலும்


2  மோசமான முன்னுதாரணங்கள்!

இலக்கிய மாபெரும்வெளியின் நீள அகலங்களை
அளந்துகூறும் உரிமைபெற்றவர்
தான் மட்டுமே
என்ற நினைப்புள்ளவர்கள்;

துலக்கமான விமர்சனம் என்ற பெயரில்
வழக்கமான வன்மத்தூற்றலையே
கலக்கிக் குழப்பி வாரியிறைப்பவர்கள்;

பலமெல்லாம் தன் எழுத்தென்றும் சுகவீனமே
பிறர் படைப்பெனவும்
பலகாலமாய் நம்பிக்கொண்டிருப்பவர்கள்;

தன்னை முன்னிறுத்தாதவர்களின்
மௌனக்கடலில்
ஆனமட்டும் மீன்பிடித்து விற்பவர்கள்;
அதுவே வணிகவெற்றிச்சூத்திரமாக
அன்றாடம் கடைவிரித்துக்கொண்டிருப்பவர்கள்;

மாற்றுக்கருத்தாளர்களைக் மதிப்பழிப்பதற்கென்றே
மிகுகொச்சை வார்த்தைகளை
முடிந்துவைத்திருப்பவர்கள்;

மதிப்பார்ந்த சொற்களில் சதா கூர்வாளை
மறைத்துவைத்திருக்கும்
புன்மதியாளர்கள்;

பெருங்கடலின் நட்டநடுவில் தன்னால்
வெறுங் காலில் நிற்கமுடியும் என்று
உருவேற்ற முடிந்தவர்க்கெலாம்
உருவேற்ற முனைபவர்கள்;

ஒருமை பன்மை தன்மை முன்னிலை
யெல்லாமும்கூட
தன் காலடியில் தெண்டனிட்டு மண்டியிட்டுக் கொண்டிருப்பதாக
இன்கனா கண்டிருப்பவர்கள்;

ஒரு ரோஜா தன் எழுத்தால் தான்
ரோஜாவாகிறது என்று தன்னைத்தானே
தாஜா செய்துகொள்பவர்கள்;

”ஆஜா…. ஆஜா” என்றும் “வா வா வா” என்றும்
‘வாரே வாஹ்’ என்றும் WOW! HOW WONDERFUL!’ என்றும்
அறிந்த மொழிகளிலெல்லாம் தனக்குத்தானே
ஆரத்தியெடுத்துக்கொண்டிருப்பவர்கள்;

பளபள இலக்கிய பல்லக்கில் பவனி வந்தபடி
பல்லக்குத்தூக்கிகளின் பட்டியலை
கவனமாய் கண்காணித்துக்கொண்டிருப்பவர்கள்:
காலத்திற்குமாய் ஆவணப்படுத்திக்
கொண்டிருப்பவர்கள்;

படைப்பகராதியின் அத்தனை சொற்களையும் அவற்றுக்கான பல்பொருள்களையும்
நடையாய் நடந்துநடந்து தானே கண்டுபிடித்துக்
கொண்டுவந்துசேர்த்ததாய்
தான் நம்புவதுபோல் எல்லோரும்
நம்பவில்லையே
என்று வெம்பிக்கொண்டிருப்பவர்கள்;

நல்ல இசையொன்றை இனங்கண்டு சொல்லி
கூடவே இன்னொரு நல்ல இசையை
நாராசமெனவும் சொல்லி
அதை அழகியல் அறிவியல் அருளியல்
அறவியல் சார் அரசியல் பேசி
அலசித்தள்ளி
அதி எளிதாய் அநியாயத்தை
நியாயமாக்கப் பார்க்கும்
அராஜவாதிகள்;

அடியில் புளி ஒட்டிய துலாக்கோலை
நியாயத்தராசாகப் பிடித்திருக்கும் அவர்தம்
கைகள்
HANDWASHஐ அடிக்கடி பயன்படுத்தி
கொரோனாத்தொற்றிலிருந்து மீள முடியும்….

அடிமுடியெங்கும் ஆழப் பற்றியிருக்கும்
தானான நோய்த்தொற்றிலிருந்து
சற்றும் மீள முடியுமோ…?

3.  கற்றது கையளவு

எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்ற தீரா ஆர்வம்
அவருக்கு.
ஒன்றை அரைகுறைக்கு அதலபாதாளம் கீழே கற்றுக்கொண்டதும்
உடனே அடுத்ததைக் கற்றுக்கொள்ளப்போய்விடுவார்.
அதற்குப்பிறகு முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பித்து
பாதாளத்தில் கைவிட்டதன் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார். ஆனால்,
பாதாளத்தில் கைவிடுமுன்னர் தவறாமல்
அந்த ஒன்றின் அருகில் நெருங்கி நின்றபடியோ
அல்லது அதன் மீது ஒயிலாய் சாய்ந்தபடியோ
அல்லது அதைப் பார்த்துப் பிரியாவிடையளிப்பதாய்
உலகத்துத் துயரையெல்லாம் கண்களில் தாங்கிய பாவங்காட்டி
ஒற்றைக்கண்ணீர்த்துளியை கவித்துவத்தோடு ஒற்றிவிட்ட படியோ
ஒரு செல்ஃபி எடுத்து அல்லது இன்னொருவரை புகைப்படம் அல்ல அல்ல
ஒளிப்படம் எடுக்கச்செய்து
அதைத் தனது அனைத்து இணைய அக்கௌண்டு களிலும் பதிவேற்றிவிடுவார்.
அப்படித்தான் ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர்
முட்டையை வரைந்ததோடு போதும் என்று
கோழியை வரையாமல் அதன் சிறகென்று
ஒரேயொரு கோட்டையிழுத்துத் தன் ஓவிய ஆர்வத்தைக் காணொளியாக்க _
அந்தச் சிறுகோட்டிற்கான அர்த்தத்தைப் பொருள்பெயர்க்க
இந்தத் தொற்றுநோய்க் காலத்திலும்
ஜூம்’ கருத்தரங்கம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
எளிய மாங்காய் ஊறுகாய் போட்டுக்கொள்ளக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து
ஆளுயர ஜாடிமீது சாய்ந்து ஒயிலாய் சாய்ந்து
கையில் ஒரு மாங்காயை ஏந்தி அதை வாயை நோக்கி எடுத்துச்செல்லும் நிலையில்
புகைப்படமெடுத்துப் பதிவேற்றியவர் அதற்குப் பிறகு
‘அம்பிகா’ கடையில்தான் மாங்காய் ஊறுகாய் வாங்கியிருப்பார் என்பது என் கணிப்பு.
போட்டிருந்தால் அது பற்றி குறைந்தபட்சம் நான்கு
அகல்விரிவான கட்டுரைகளாவது வந்திருக்கும். வந்ததாகத் தெரியவில்லை.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காய்
நீளந்தாண்டுதல் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சுற்றிலும் நீலநிறப்பூக்களொடு மையத்தில் நின்றிருந்ததைப் பார்த்தால்
நீலந் தாண்டுதலா நீளந் தாண்டுதலா என்ற நியாயமான சந்தேகமெழுந்தது.
பின்,
‘ஒலிம்பிக் பதக்கத்தைவிட அதன் வளையங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது.
அவை கிடைக்க வழியேயில்லை என்பதால் பயிற்சியில் ஆர்வம் போய்விட்டது
என்று வண்ண வண்ண வளையங்களின் மத்தியில் நளினமாய்ப் படுத்தவாறு அண்ணாந்து

வானத்தைப் பார்த்தபடி அழகாய்ச் சிரித்தபடி
அவர் சொல்லியிருந்த பேட்டி சமீபத்தில்தான் வெளியாகியது.

பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தவர்
பியானோக் கட்டைகளைத் தன் கட்டைவிரல்களால் மட்டும் தொட்டுத்தொட்டு மீட்டுவதாய்
ஒரு குறும்படம் யூ-ட்யூபில் வெளியாகி அது வைரலாகியிருப்பதாய் மெகா தொலைக்காட்சி

காப்டன் தொலைக்காட்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் மட்டும்
அவரவர் தலைவர் பற்றிய செய்திகள் வெளியாவதே போல்
சில நாட்கள் இவருடைய முகநூல் டைம்லைனில் மட்டும்
ஒரு ’ப்ளாஷ் நியூஸ்’ திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது.

’அருமையான அந்தக்கால மீனாகுமாரி பாடல்களின் அர்த்தம் புரிவதற்காய்
இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்’ என்று
சுற்றிலும் பல்வேறு இந்தி நாவல்களும் கவிதைத்தொகுப்புகளும் கேஸட்டுகளுமாக
இந்தி கற்றுக் கொள்ளும் குழந்தையாய்

தன்னை பாவித்து ‘ஹம் ஆப்கே ஹே கோன்?” என்று கேட்டு
கலகலவென்று கைகொட்டிச் சிரித்து மகிழும் தன் ஸெல்ஃபியை வெளியிட்டவர்
அதற்குப் பின் சில நாட்களிலேயே
‘வட இந்தியர்களின் அடிவருடிகளல்லர் தென்னிந்தியர்கள் என்று

கோபாவேசமாக முழங்கிய கையோடு
மீனாகுமாரி கருப்பு-வெள்ளைப் படம் இருந்த கேஸட் மேலட்டைகளுக்கு
தீவைக்கும் காட்சியை
இன்னொரு திறமையான புகைப்படக்கலைஞரைக்கொண்டு
எடுக்கச் செய்து அதை தன் ப்ரொஃபைல் படமாகப்

பதிவேற்றினார்.

சில நாட்களுக்கு முன்புதான் அம்பு-வில் பழகத்தொடங்கியிருக்கிறார்.
உச்சந்தலையில் இல்லாத ஆப்பிளைக் குறிபார்க்கிறது
என்னிரு விழிகள் என்று கவிதைபோல் ஒன்றை எழுதத் தொடங்கியவர்
நெஞ்சில் என்றும்போல் அந்த வருத்தம் பொங்கியது _

’சே, கவிதையை அரவணைத்துக்கொண்டு நிற்பதாய் ஒரு படம்
வெளியிட வேண்டுமென்ற விருப்பம் நிறைவேற
வழியில்லாதபடி கவிதை பிடிபடாது அருவமாய் நிற்கிறதே….’


4 . கத்திமுனைப் பயணம்

நிரந்தரம் என்பதும் தாற்காலிகம் என்பதும்
காலக்கணக்கு மட்டுமல்ல…..
காலின்கீழ் கத்திமுனை உறுத்திக்கொண்டே
யிருக்கிறது.
கணநேர சந்தோஷம் பாதங்களின் கீழ் பஞ்சை
அடர்த்தியாக நீட்டிப் பரப்பிவைக்கும் நேரங்களில்
கத்திமுனை காணாமல் போய்விடுகிறது.
சமயங்களில் கால்பதியும் குளிர்நீர்ப்பரப்பின் இதம்
முனை மழுங்கச் செய்கிறது.
இறங்கித் தான் ஆகவேண்டுமென்றாலும்
பறக்கும் பொழுதுகள் உண்டு.
தம்மைக் கிழித்துக்கொண்டு நமக்கு
மலர்க்கம்பளம் விரிக்கும் தருணங்கள்
ஆகப்பெரும் வரம்.
என்றாலும் _
எப்போதுவேண்டுமானாலும் அது சிந்தச்
செய்யலாகும் சில ரத்தத்துளிகள்
பிரக்ஞையில் ஒரு மூலையில்
சேகரமாகிக்கொண்டு.
போகப்போக பழகிப்போய்விடுமாயினும்
கத்திமுனையின் கூர்மை ஓர்மையில்
ஆழமாகக் குத்திக் கிழித்தபடியே……


5. தேடித்தேடி இளைத்தேனே……

மூக்குத்தியம்மனோ நெத்திச்சுட்டி அம்மனோ
இக்கணம் என் முன் வந்து
வரமருள்வேன் கேள் என்றால்
தரச்சொல்லிக் கேட்பேன் _
தன் மனதிற்குள் தினந்தினம் பல்கிப்பெருகி
விரிந்துகொண்டேபோகும்
திக்குத்தெரியாத காட்டில் ஒரு
ஏழைக் கவியென்றாலும்
உண்மைக் கவி
தன்னந்தனியாய் அலைந்தபடி
இல்லாத கடற்கரையில் இறைந்துகிடக்கும்
கிளிஞ்சல்களை
குனிந்து எடுத்து வானம் நோக்கி உயர்த்தி
அழகுபார்க்கும் நேரம்
அவர் கண்களில் மினுங்கும் மகிழ்ச்சித்துணுக்குகள்
ஒவ்வொன்றும்
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த
புராதனப் பொருட்களாய்
மிகப்பெரிய பொருளீட்டித்தரவேண்டும்
அவர்க்கு.

6. மாய யதார்த்தம்

அன்பை கவிதையில் பயன்படுத்தும்போதெல்லாம்
அவர் யாரையோ கொலைசெய்துகொண்டிருக்கிறார்.
கொலையும் செய்வாள் பத்தினி என்கிறார்.
கூடவே
பத்தினித்தன்மையை அளக்க எத்தனை பேர் இப்படி
கிளம்பியிருக்கிறீர்கள் என்றும் கோபிக்கிறார்.
கணத்துக்கு கணம் மாறுவதுதான் கவியின் குணம் என்கிறார்.
கவிஞர் ஒரு குழந்தையைப் போல் எனவும் சுட்டுகிறார்.
அன்பென்ற பெயரில் நெருப்பு கக்கத் தெரியாது குழந்தைக்கு
என்று சொன்னால்
கனல் குழந்தைகள் என் கவிதைகள்
உங்கள் நோஞ்சான் குழந்தைகள் நெருப்பிலிடத்தான் லாயக்கு
என்று சொன்ன கையோடு _
‘காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டு வா –
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா” என்று
சற்றே கரகரப்பான என்றாலும்
கொஞ்சம்போல் இனிமை ததும்பும்
குரலால்
அன்பொழுகப் பாடுகிறார்.
தாய்ப்பால் கசக்க முகஞ்சுளிக்கும் குழந்தையை
சகிக்க முடியாது
மேலும் மேலும் மார்போடு அழுத்தி
மூச்சுத்திணறவைக்கும் மூர்க்க அன்பை
முழுமுனைப்பாய் எதிர்க்கும் மழலையின்
கழுத்துக்காய் நீளும் அந்தக் கைகள்
அழுத்த அழுத்த குழந்தையின் அழுகை
மௌனிக்கிறது.
பாட்டைக் கேட்கக் குழந்தை இல்லாத குறையை
நிறைசெய்யும் பொருட்டு
தன் பாடலை யொரு செல்ஃபி எடுத்து
முகநூல் ட்விட்டர் வாட்ஸப் இன்ஸ்ட்டாக்ராம்
இன்னும் என்னென்ன உண்டோ
எல்லாவற்றிலும் பதிவேற்றிவிட
குழந்தைகளின் கையெட்டா உயரத்தில்
ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாடலுக்கு
குறைந்தது ஆறாயிரம் லைக்குகளாவது
இதுவரை வந்திருக்கும்.
கிடைத்த தெம்பில்
எளியவர் எவருடைய குழந்தையின் கைகளையும்
தன் அன்புக்கவிதையில்
ஆங்காரமாக உடைத்துவிடும் அவரை
நமக்குக் கிடைத்த அதி உண்மையான அகிம்சைவாதியாக
வரிக்கு வரி அடையாளங்காட்டி எழுதப்பட்டிருக்கும்
இரண்டு திறனாய்வுக் கட்டுரைகள்
மிக முக்கியமான இடத்தைப் பெற்று
இலக்கிய உலகையே
கலக்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


7. கணிதம்

ஐந்துவயதுக் குழந்தை கணக்கில் புலி என்றால்
கடகடவென்று போய்ப்பார்க்கத்தானே தோன்றும்…
கண்காட்சிப்பிரியர்கள்தானே நாமெல்லோரும்!
“எப்பேற்பட்ட பெருந்தொகையையும் சரியாகப் பெருக்கி
விடை தருவாள் _
பாவம் வாய் பேசமுடியாத சிறுமி” என்றார்கள்
இருகால் விளம்பரத்தட்டிகளாய்நின்றிருந்தவர்கள்.
பரிதாபமும் வியப்புமாய் பெருந்திரள் கூடிவிட்டது.
10X10 = என்று கேட்கத்தொடங்கியவர்கள் முடிக்குமுன்பே
பட்டென்று 100 என்று எம்பி நின்று
எதிரிலிருந்த கரும்பலகையில் எழுதிக் காண்பித்தாள் சிறுமி.
பிரமித்துப்போய்ப் பார்த்தது கூட்டம்.
அதில் அறிவுசாலிகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

100X10 = 1000
1000X10= 10000
10000X10 = 100000
100000X10 = 1000000
1000000X10 = 10000000

ஒன்று பத்தாக பத்து நூறாக நூறு ஆயிரமாக
ஆயிரம் பத்தாயிரமாக பத்தாயிரம் ஒரு லட்சமாக
ஒரு லட்சம் பத்து லட்சமாக
பத்து லட்சம் ஒரு கோடியான பின்
வேறென்ன வேண்டும் ஒரு கணிதமேதையை
அடையாளங்காணவும் அங்கீகரிக்கவும்?
நூறு ஆயிரம் லட்சம் என்ற சொற்களை
உச்சரிக்கத் தெரியாமலும்
மனனம் செய்ய முடியாமலும் தவித்த சிறுமிக்கு
சொல்லித்தரப்பட்டதொரு மிக மிக எளிய சூத்திரம்.
“ஒவ்வொன்றின் இறுதியிலும் ஒரு ’சைபர்’ சேர்த்துப்
போடவேண்டும்;
ஒரு கேள்விக்கும் பதிலளிக்கவேண்டாம்.”

8. வளர்ந்த குழந்தைகளின் வாழ்விடம்

மாயாஜால உலகம் குழந்தைகளைவிட
வளர்ந்த மனிதர்களே அதிகம் வேண்டுவது.
இருள் பரவிய தெருக்களில்
துக்கிணியூண்டு மின்மினி அலையக்கண்டு
இரவுக்கென்றொரு கதிரோன் வந்துவிட்டதாக
பரவசமடைகிறார்கள்.
சப்பாத்தியை சந்திரன் என்று சாதிக்கிறார்கள்.
துப்பாக்கியை அன்பின் சின்னமென போதிக்கிறார்கள்.
சிறுமேகத்துண்டை வானளாவிய அரங்கமாக
பெருமைப்படுத்துகிறார்கள்.
குட்டிக்கொசு விசுவரூபமெடுத்திருப்பதாய்
இட்டுக்கட்டிப் பாடுகிறார்கள்.
எட்டுந்தொலைவிலுள்ள பேருந்துநிலையத்திற்கு
எப்போதுமே பறந்துபோவதாய்ச் சொல்கிறார்கள்.
குட்டும் கையின் விரலில் இல்லாத மோதிரத்தைத்
தொட்டுப் பார்த்து இறும்பூதடைகிறார்கள்.
பெருமலையின் அடிவாரத்தில் நின்றபடி
தன் தலை யதன் உச்சியைத் தாண்டி யிருப்பதாய்
உருவேற்றியவாறிருக்கிறார்கள் உள்ளும் வெளியும்
கடந்தகாலங்களை ஒரு விரல்சொடுக்கில்
தோண்டிப் புதைத்து
விடியும் இந்தத் தேர்தல் முடிவில் என
துண்டுபோட்டுத் தாண்டித்தாண்டிக்
கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
விதவிதமாய் இந்த வளர்ந்த குழந்தைகள்
கட்டமைக்கும் கனவுலகங்களில் நடந்தபடியிருக்கும்
நனவாகியும் ஆகாமலும்
சொப்புவிளையாட்டும்
சூளுரைப்பும்
சொக்கட்டானாட்டமும்
சமயங்களில்
சரேலென்றிறங்கும் பிச்சுவா சொருகலும்
சிரச்சேதமும்.


9. அறியாக் கால்களும் அறிந்த நூல்களும்

அடையாளமற்ற கால்களின்
புரையோடிய அபத்தவுணர்வுக் கிரையாகிக்
கிடப்பது
குறை மணல் புத்தகமல்ல, ஒரு
நிறை மனித மனம்;
மூளை;
மங்கிவரும் பார்க்குந்திறன்;
முடிவிலி மார்க்கங்கள்;
மூர்க்கப்பித்துடலுழைப்பு;
மாயாஜால மந்திரக்கோல்;
அந்தரத்தில் மிதக்கும் கம்பளம்;
திருத்தமாகச் சொல்வதென்றால்
இரு மனிதர்களின் மனங்கள்;
மூளைகள்;
மங்கிவரலாகும் பார்க்குந்திறன்;
முடிவிலி மார்க்கங்கள்;
மாயாஜால மந்திரக்கோல்களும்;
அந்தரத்தில் மிதக்கும் கம்பளங்களும்.
இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால்
முன்பு படித்தவர்களும்
பின்பு படிக்கப்போகிறவர்களுமாய்
எண்ணலாகா நட்சத்திரக்கூட்டத்தின்
நிலவறைக்கிடங்கு
அதன் மடங்கிய ஒரு பக்கத்திற்குள்
அடங்கியிருப்பதை
அதன்மீது நீண்டுபதிந்து கர்வத்தோடு சிரித்துக்கொண்டிருக்கும்
அந்த அடையாளமற்ற கால்களின் உடலுக்குரியதாகும் மூளை
ஒருவேளை உணர்த்தக்கூடும்
நாளை.


10. பைத்தியம்

சிலருக்கு காதுகூசும் வசைச்சொல்.
சிலருக்கு அதுவொரு கூர் ஆயுதம்
சிலருக்கு அது எதிராளியை விழச்செய்ய
எறியும் வாழைப்பழத்தோல்.
சிலருக்கு அது தம்மை சரியென்பதாகவும் பிறரை தவறென்பதாகவும் ஸ்தாபிக்கக் கிடைத்த strategy
சிலருக்கு தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள
பிறருக்கு எளிதாகத் தரக்கிடைத்த ஆயத்த அடைமொழி.
சிலருக்கு எதிராளியின் மூளைக்குள் காட்டுத்தீயைப் பற்றவைத்துப்
பெரும் நாசம் விளைவிக்கக் கிடைத்த அப்பிராணி வார்த்தை.
ஒருவருக்கொருவர் இந்த வார்த்தையை எறிந்துவிளையாடி
உறவுகொண்டாடிக்கொண்டிருப்பவர் பெருந்திரளாய்.
வைத்தியம் என்ற சொல்லுக்காகவே
பைத்தியத்தைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களும் நிறையவே.
அவசரத்திற்கு ’த் தி ய ம் இடம்பெறும் மூன்றாவது வார்த்தை ஏதும் கிடைக்கவில்லை.
மூளையைக் கசக்கி யோசித்துப் பார்க்கையில்
நினைவுக்கு வருகிறது.
கோபிகிருஷ்ணனின் ஒரு கதாபாத்திரம்
அவ்வப்போது தன் பேச்சுக்கிடையில்
அனர்த்தமாய் உதிர்த்தவாறிருக்கும்
‘RELAXATION’


11.இரண்டே வார்த்தைகளில் ஒரு கவிதை

'இரண்டே வார்த்தைகளில் ஒரு கவிதை தரவேண்டும்
அப்பொழுதுதான் உன்னை கவியென்று அங்கீகரிப்பேன்'
என்றவரிடம்
'குறுந்திருவள்ளுவர்' என்றோ 'குக்குறளாளர்' என்றோ
விருதுப்பட்டம் கொடுத்தால் போதும் என்றபின்
’இரண்டே வார்த்தைகளில்’ என்று எழுதிக்கொடுத்ததைப்
படித்துப்பார்த்து பல்லைக் கடித்தவாறு
எரிதழலைக் கண்ணில் பிடித்தபடி
ஒரு வார்த்தையும் சொல்லாமல்
திரும்பிப்பாராமல்
நடையும் ஓட்டமுமாய் வேர்த்து விறுவிறுத்து
விரைந்து
மறைந்தார்
அருங்கவி ஆகாசநாயக திருவாளர் படைப்புப்பித்தர்.

12. அவா

அவாவை நானாகிய இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
புறந்தள்ளும் அவாவிலேயே
அவாவை அறம்பாடுகிறேன் என்றார்.
அவாவைப் புறந்தள்ளியாகிவிட்டதா
தள்ளிக்கொண்டிருக்கிறீர்களா,
தள்ளப்போகிறீர்களா என்று கேட்டதற்கு
அவா இருந்தால்தானே அவாவைத் தள்ளவோ
கொல்லவோ முடியும் என்றார்.
அவா மட்டும்தான் புறந்தள்ளப்படவேண்டியதா
என்று வினவியதற்கு
அவாவே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படை
என்றார்.
அப்படியுரைப்பதொரு குத்துமதிப்பான கருத்தல்லவா,
ஒட்டுமொத்தமான பொறுப்புத்துறப்பல்லவா என்றதற்கு
அப்படியிப்படி எக்குத்தப்பாய் ஏதேனும்கேட்டாலோ
கரும்புள்ளி செம்புள்ளி அப்பிவிடுவேன் அப்பி என்று
காறித்துப்பாத குறையாய். காதில் அறைந்தார்.
தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடாமல்
அப்படியேே நின்று
அவாவுக்குத் தனித்தனி உருவமுண்டா
அல்லது அதுவொரு மொந்தையா என்று கேட்டதற்கு
வேண்டும்போது அதை மொந்தையாக்கிக்கொள்ளலாம்;
தனித்தனி உருவமாக்கிக்கொள்ளலாம்.
அவாவைப் புறந்தள்ள என்ன தேவையோ
அதை செயல்படுத்துவதே நமக்கான சவாலாகட்டும்
என்றார்.
அவா புறந்தள்ளப்படவேண்டியது என்றால்
பின் ஏன் நீங்கள் அவ்வப்போது
ஓர் அவாவுடனிருக்கும் படத்தைப் பதிவேற்றுகிறீர்கள்
என்று கேட்டதற்கு
அவாவில் சின்ன அவா பெரிய அவா உண்டல்லவா
எளியதை உதறித்தள்ளி வலியதைக்
கைக்கொள்ளுவதே
அவா தொடர்பான ஆகப்பெரும் சூத்திரம்
என்றார்.
உங்கள் வாழ்வில் அவாவின் பாத்திரம்தான் என்ன
என்று கேட்டதற்கு
அவா எனக்குக் கிடைத்திருக்கும் ஜோக்கர் சீட்டு,
என்றார்.
குவா தவா சிவா ரவா போல்
அவாவும் வேண்டும்
அன்றாட வாழ்க்கைக்கு சுவாரசியம் சேர்க்க
என்று பாடிக்கொண்டே வேகமாய்ச் சென்றவரின் முதுகில்
பளிச்சிட்ட கண்களில்
கண்ட
அவா மீதான வெறுப்பு
அவரை மெகா துறவியாக்க
அவாவை சபிக்கும் அவாவில் அவர்
அவாஞானியென்ற அடைமொழிக்குரியவராக…..


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.