எனக்கு நீ எழுதிக்கொடுத்த
நம்மைப் பற்றிய நாட்குறிப்பை
நேற்றுதான் எடுத்து வாசித்தேன்.

உனது எழுத்துகள் அழகாக இருந்தன.
உனது எண்ணங்கள் மிக அழகாக இருந்தன.
என்னைப்பற்றிய உனதுக்கவிதை
எனதான கர்வத்தினை விசாரிக்கும்படியும் இருந்தது.

எப்போதும் அதைப் படித்துப் படித்து
பூரித்துப்போக நான் உற்சாகம் கொள்வேன்
ஒவ்வொருமுறையும்.

ஆனால்,
உனதான பகட்டுமேனியை உடுத்திக்கொள்ளும்
எண்ணம் இப்போது இல்லை.
அது எப்போதும் என்னிடமிருந்ததாக
எனக்கு நினைவுமில்லை.

ஆகவே,
தயவுசெய்து உன்னைப்பற்றி
என்னிடம் பேசிவிடாதே.

எட்டாண்டுகள் ஏட்டில் இல்லாதது
உன்னிடமிருப்பதாக
எனக்குப் பாவனை செய்தது
எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
இருந்தும் ஒட்டிக்கொள்கிறேன் உன்னிடம்
எதனாலென்றுத் தெரியவில்லை.

நாம் மூவரும்
அவரவர்க்கேயான மனஇயல்பிலும் நடத்தையிலும்
இருந்திருக்கின்றோம்; இருந்தும் வருகின்றோம்.

அதிகம் பேசாதே என்றுச்சொல்லி,
என்னை அதிகமாகக் கேட்கும்படி நடப்பாய் நீ.
எல்லாம் ஆய்வு குறித்ததுவென வாதிடுபவன் இன்னொருத்தன்.
உங்களிருவரின் இடையில் குழப்பத்தினுடனே வாழ்பவன் நான்.

ஆண்டுகள் ஓடின.
ஓடிக்கொண்டுமிருக்கின்றன.
நீ மாறுவது,
அவன் மாறுவது
புலப்படுகிறது.
நான்
இன்னும் ஓர் படியிலேறியதும்
உள்வாங்குகிறேன் உங்களை.

அதிலும் நீ!
எனக்கு இறகு முளைத்தபோது
உனக்கு இறகு ஒடிவதாய் நினைக்கின்றாய்.
ஆனால்,
என்னிலிருந்தே முழுவதுமாகக் கற்றறிந்து
கொள்கிறாய் நீ.
அதுவும் உன்னையறிந்தே.
நான் கற்பவையெல்லாம்
பாலைவார்த்து கொடுக்கிறேன்
உன்னிடம் என்னையறியாமல்.
 
என்னுடனான பயணத்தில்
பின்தொடருங்களென்று
நான் எதிர்ப்பார்த்தது தவறென்று
எனக்கு ஒருநாளும் தோன்றியதில்லை.
நீதான்!
என்னை உன்னிடமிருந்து
பிரித்துப் பார்க்கின்றாய்.
தனக்கானவன் நான் இல்லையென்று
ஒதுங்கிப் போகின்றாய்
அல்லது
ஒதுக்கி வைக்கின்றாய்.

‘பிரிவு’
எனது சொத்துக்களில் முதலாவது.
எனதுலகத்தின் ஆணிவேரது.

ஆகவே,
என்னைத்தேடி
உங்களது நேரத்தை,
உங்களது நட்புறவை,
வீண்விரயம் செய்யாதீர்கள்.
 
உங்களுக்கு நான் அகப்படமாட்டேன்.
உங்களைப் போன்றவர்களுக்காக
எனதான அசரீரிக்கூட செவிமடுக்காது
இனி எப்போதும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.