மரியாதை வேட்டுகளின்போது
எழும் நச்சுப் புகையில்
பால்மா இல்லாத தேசத்தின்
கொடி சுமந்த
என் குழந்தைகள்
சோர்ந்து விழுந்தார்கள்... 

தேசப் புராதனம் பற்றிய மன்னர் உரையில்,
குழந்தைகளின்
புரதச் சத்து தவிர்க்கப்பட்டிருந்தது.

வீர அணிவகுப்புகளில்
எலும்பு வெளித் தெரியும் குழந்தைகளும்,
வான வேடிக்கையில்...
காய்ந்து போன உணவுத் தட்டு
ஏந்திய குழந்தைகளும்,
நகரும் நடனங்களில்...
ஊனமுற்றுத் தெருவில் கையேந்தும்
குழந்தைகளும்
மயக்கமுற்றார்கள்.

விரிந்து வீழ்ந்த அவர்களது கைகளோ
வறுமையை, பிணியை
தனிமையை, துக்கத்தை
இன்னும்...
வாழ்வின் வெறுமையை
ஏந்தியிருந்தன.

மன்னருக்குப்
பூங்கொத்து அளித்து
வணங்கும் குழந்தைகளோ..
புத்தாடை குலுங்கச் சிரிக்கின்றன.
எனில்...
சிம்மாசனத்தின்
வேர் விடலுக்கும்
மினுக்கும் விளம்பரத்துக்கும்
குழந்தைகளை
அவர் எவ்வாறு வளர்த்திருக்கிறார்...!

அப்படியெனில் மன்னா...!
தேச வணக்கத்தைப்
பாழாக்குகிறீரா?
பழக்குகிறீரா?

பாழாக்குகிறீர் எனில்,
பழக்குவது நல்லது!
பழக்குகிறீர் எனில்,
அதைப் பாழாக்குவது நல்லது.

கீதங்களால் அசையும் கொடிகளை
ஒரு ஏழைக் குழந்தையின்
கரத்தில் எழுந்த
பிச்சைப் பாத்திரம் விழுங்கிற்று.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.