1. உலகின் பெரிய ஆயுதம்

காலையில் கண்விழிக்கிறேன்
வெற்றிடம் தான் என் வீடாகத் தெரிகிறது
பானைக்குள் இருக்கும் வெற்றிடம்போல்...
குளிப்போடு தண்ணீரை ரசிக்கிறேன்
குளியலறையில் தனிமையில் தினசரி
மர்மமான தண்ணீர்
மூடித் திறக்கிறது பிரபஞ்சம்
விபரிக்க முடியாத விந்தை அது!
குளியலறையில் காமங்களும்
கண்ணீர்ப்பாடல்களின் முணுமுணுப்பும் தான்!
நீருக்குள் என் பாடல்களை ஓசையாக்குகின்றேன்!
சாதாரணம் அது அசாதாரணம் போல் தெரிகிறது!
நீரின் ஓசையுள் என் கோபத்தையும் இசைக்கிறேன்
நிகழ்வுகள் சுருதியாகி கவிதைக்குள் இனிக்கிறது
தனிமை காணும் கனவு வெறும் வனப்பூச்சி அல்ல
தண்ணீரைத் தொடும் அழகிய என் அனுபவம்
அந்த ரசனை! ஆ...அற்புதம்!
தண்ணீர்தான் உலகின் மிகப் பெரிய ஆயுதம்
திறக்க முடியாத யன்னல்களை
மூடிவிரிக்கும் உலகின் கண்ணாடி அந்தத் தண்ணீர்தான்!

30.1.2022.

2. இதுவும் கடந்து போகும்

பார்க்காத ஒருவரைப் பார்ப்பது போலப்பாவனை படர்கிறது
பறவைகளின் கூடுகளைப்போல் அடங்கியது குடும்பங்கள்
மனிதனை மனிதன் பார்க்க முடியாது
மரணச் சடங்குகள் மறைந்ததோ கொடுமை
முகத்தை முகவரியாக்கிய தொட்டில்கள்
முலையைச் சப்பிய கசிவில் குஞ்சுகள்
தொலைந்த அம்மாவைத்தேடிப் பிசிறிய பிஞ்சுகள்
பெயரற்ற உடம்புகளின் வரிசைகள்
நிரந்தர போராளிக் கடமைகளில்; சமையலறை
கடுகு வெடிக்கும் சத்தம்
சண்டை மண்டைஉடையும்
இணையவழியோடு இணைந்திருக்கும் சபைப்பெருக்கம்
பாலைவனத்தில் படைக்கப்பட்ட ஒட்டகம்
தன்னை விடச் சிறப்பானவர் உருவாவதோ? என்று பதறும்
தடைப்பட்டுத்; தவண்டுகொண்டு; பின்நவீனத்துவக் கவிதைகள்
காணாமல் போன காசு நோட்டுகள்
காசு கொடுக்காமலே
விமானம் வீட்டில் இருக்கும் என் கனவு
வாழ வழியில்லாதவர்கள் வழியில்வாழும் அவலம்
கைகள் தொடும் அந்த ஆழமான அன்பு
நிஜம் தராத ஒன்றை நினைவுவந்து விசிறியாக்கும்
இருள் என்பது குறைந்த ஒளி
உறவு இல்லாதவரில் உருவாகும் உறவு
முடிவில்லாத கதைகளைப் பரிமாற
சுமந்து கொண்டே உலகெங்கும் உயிர்கள்;
எட்வேட் சொன்னான்
இதுவும் கடந்து போகும்

1.2.2022


3. காற்றோடு கலந்த குரல்கள்

மகிழ்ச்சி என்பதை உலகம் பகிர்ந்தது
மழையின் பரவசம் உடலில் படர்ந்தது
மக்களின் வாழ்வியலோ நளினங்களில் ஒலித்தது
மங்கேஷ்கர்;; இசையோ இனிமையில் நெளிந்தது
வளையோசை படிந்து கலகலத்துச்; சிலிர்த்தது
மந்திரக் குரலோ அது லதா மங்கேஷ்கர்; குரலோ
ஜீவ காவியம் இன்று வரலாற்றில் கலந்ததோ?
இனிக்கும் இசையும் இம்மை தரும் உலகும்
தேனிலே ஊறிய பலாச்சுளைபோல் இனிக்குமே!
ரசிகத ஜீவன் ஆகியதோ! இல்லை ரகசியமாய் என்னுள் கேட்கிறதே!
லதா உந்தன் புரியாத குரல்;மொழிதான் உலகின் எழில் இசையாகியதே!
ராத்திரியோ நீளமாகி உன்குரல்;; ஒளிவட்டம்; ஆகிறதே!

நிலாவில் ஒரு கூடு கட்டிய இனிக்கின்ற ஜீவன் அவன்
நினைவில் வந்து தட்டுகிறான் பாலா என்ற கலைஞனும்தான்
தொலைந்து போன நட்சத்திரமா? உயிரைத் தடவும் குரலன்றோ
காற்றில் கசிந்து கானமாகி; வானில் கரைந்து கரைந்து கேட்கிறதே!
சொல்ல முடியாத வார்த்தைகளால்;
வானத்தில் நிலாவை உடைக்கிறதே!
மொழியில் நீயாசித்த கொஞ்சும் குடைவோ
பூமிப் பூக்களையும் குவித்ததன்றோ! – உன் சோகத்தில்
புல்லாங்குழலோ பல கண்களால் இன்று அழுகின்றதே - பாலா
என்னிரு கண்களும் உன்னுணர்வில் ஏதோ படிந்து கசிகிறதே!

9.2.2022

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.