- யாழ் நூலக எரிப்பு பற்றிப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய கவிதை. இலங்கைத் தமிழ்க் கவிதைப்பரப்பில் முக்கியமானதொரு கவிதை. -
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?’
என்று சினந்தனர்.
‘இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று
ஆகையினால்…
என்றனர் அவர்கள்.
‘சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை‘
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.ச்
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பலானது.