01.

ஆயிரம் பகீரதர்கள் அழைத்தும்
ஆகாய கங்கை
நிலத்துக்கு வராத காலத்தில்
அவர்களுக்கு
மறுக்கப்பட்டிருந்தது நீர்.

அவர்களின் 'கலக்கல் வைரவன்'
கலக்கி இறைத்த
அதே கிணற்று நீர்
மறுக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு.

உப்புத் தரைப் பாத்திகளில்
கால் புதையச் சென்ற அவர்களோ
அள்ளி ஊற்றுபவன் இன்றி
வெற்றுக் குடங்களுடன் திரும்பியபோது,
எங்கள் மண் சிறப்பின் மகாத்மியம்
குடி நீர் மறுப்புச் சருக்கத்தோடு ஆரம்பமாகியது.

அவர்கள் நீரைக் கேட்டதால்
செத்த பாம்பும் நாயும்
கிணற்றுள் தோன்றின.

குடிநீர்க் கிணறுகளை
அள்ளிச் சுருட்டி
சாதியக் கமண்டலத்துள் அடக்கிய
அகத் தீயனே!

நீ அறிவாயா?

சமையற் பானைகளில்
காற்று நிறைந்து கிடக்கிறது
ஒரு புயலுக்கான அடைகாப்போடு...

02.

வான் சிறப்பு
பொதுவெனினும்
அதன் மண் சிறப்போ
மிகவும் மேலானது.

காலையிலும் மதியத்திலும் மாலையிலுமான
நீர் அள்ளி ஊற்றும்
திருமண் சிறப்புப் படலப் பாடல்கள்
சுவாரஸ்யமானவை.

நீ மலம் கழித்து
வயிறு நிரப்பி வந்து
காலை நீரை மதியத்தில் ஊற்றுவாய்!
மாடு பார்த்து
ஊரை மேய்ந்து வந்து
மதிய நீரை மாலையில் ஊற்றுவாய்!
கள் குடித்து
காமம் தீர்த்து வந்து
மாலை நீரை
மறுநாள் காலையில் ஊற்றுவாய்!

கிணற்றடியில்
காத்திருக்கும் பானைகளுக்குப் பின்னால்
வரண்ட நாவுகளும்
காய்ந்த தொண்டைகளும்
வற்றிய வயிறுகளும்
பல நூறு இருப்பதை
அறிந்துதான் செய்கிறாய் என்பதை
அவர்களும் அறிவார்கள்.

உனக்குத் தெரியுமா?

பசியால் நிரம்பிய அவர்களது குடில்களில்
எல்லைகளைத் தூக்கி வீசவென
கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது
பெரும் கடல்!

03.

எரிபொருள் கிணறுகளால்
மகிமை பெற்றது,
எங்கள் மண்.

அவர்களின் திருமண நாளுக்கு
முந்திய இரவில்தான்,
கழிவு ஓயில் ஊற்றிய
கிணறுகள் முளைத்தன.

கழிவு ஓயில் கிணறுகளைக்
கண்டு பிடித்தாய்.
விஞ்ஞானி நீ!
தரையில் ஊற்றும் தாரை
தண்ணீரில் ஊற்றினாய்.
புத்திசாலி நீ!
கிணற்றுள் நீர் நிரம்ப
சிறுநீர் கழித்தாய்.
பெருங்கருணையாளன் நீ!

கழிவு ஓயிலின் மீது
ஒரு கடவுள் வாழ்த்தும்
தாரின் மீது
ஒரு சிறப்புப் பாயிரமும்
சிறு நீரின் மீது
ஒரு மங்கலமும்
அவர்கள் தமக்குள்ளே பாடியபோது
நீ பாட்டு உடைத்த தலைவனாய்!

முட்டாளே...

உனது அதிகாரமோ
ஒரு வயல் கிணற்றிலும்
ஒரு கோயில் கிணற்றிலும்
ஒரு பள்ளிக் கிணற்றிலும்.

அவர்களோ
ஏழுகடல்களை மேவிக் கோலோச்சும்
குழந்தைகளைப் பெற்றவர்கள்.

04.

'பொதுக் குளம்' என்றாய்.
அதன் பொருளோ
உன்னவர்களுக்கான
பகிரங்கக் குளிப்பிடம்.

அவன் குளித்தான்,
அதே குளத்தில்!
அப்போதுதான்
அதன் பொருள் உண்மையாகியது.

அவனைத் துரத்தினாய்.
ஏறிப் பழகிய கால்களால்
பனையில் ஏறி உச்சியைத் தொட்டான்.
மரத்தைத் தறித்தாய்.
அவனோ
மரம் விழும்போதில்
நிலத்தில் குதித்தான்.

கோடரி கொண்டே
தலையைப் பிழந்தாய்.
துண்டு துண்டாக்கினாய்.
ஆடையைக் கிழித்தாய்.
அவனது ஆண்குறி வெளியே தெரிந்தது.

உனது பெண்களோ
'ஆஹா' என்றனர்
வியந்து போற்றினர்.

05.

அது பழைய கதை'
என்கிறாய்.
'இப்போது எல்லாம் மாறிவிட்டது' என்கிறாய்.
'மறக்கவும்' சொல்கிறாய்.

ஆம்... மாறிவிட்டதுதான்.
பழைய கதை மாறி
புதிய கதையாகிவிட்டதே!
அதைத்தான் நீ சொல்கிறாயா?
அதையேதான் நானும் சொல்கிறேன்.

நீராலான வாழ்வில்
நீரை மறுத்த நீயோ
புத்தகப் பையை
பதவிக் கதிரையை
இன்னும்
அவர்களின் விடியல் நோக்கிய சுவடுகளை
நீராகவே காண்கிறாய்!
நீராகவே மறுக்கிறாய்!

வெற்றுப் பானைகளில்
நீ நீர் இறைப்பதற்காக
இப்போது அவர்கள் காத்திருக்கவில்லை

அதை நீ அறிவாயா?

தமது குழந்தைகள்
நாயகர் ஆகும் காலத்துக்காக
அவர்கள் காத்திருக்கிறார்கள்.

* நன்றி தலித்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.