முன்பனி பின்பனி மாறிய பின்னே
இளவேனில் துளிர்க்க சித்திரை மலரும்.
தைப் பொங்கலுண்டு  தளர்வகலும் வேளை
புத்துணர் வூட்டச் சித்திரை  கைகோர்க்கும்.

பெற்றோரும் மகிழ்வர் பிள்ளைகளும் மகிழ்வர்.
உற்றவரும் மகிழ்வர் உறவுகளும் மகிழ்வர்.
மணமேடை அமர மங்கலநாள் அமைய
சிறப்பான நாளை சித்திரையே திறக்கும்.

வருடத்தின் தொடக்கம் சித்திரையே என்போம்.
சித்திரையே தொடக்கமாய் பஞ்சாங்கம் காட்டும்.
பஞ்சாங்கம் பார்ப்போம்  பலன்களையும் அறிவோம்.
நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்.

மருத்துநீர் வைப்போம் மகிழ்வாய் நீராடுவோம்.
புத்தாடை உடுத்தி புத்துணர்வு பெறுவோம்.
பெற்றவர்கள் பெரியவர்கள் ஆசியினைப் பெறுவோம்.
கற்றுத்தந்த ஆசானை கண்டாசி வாங்கிடுவோம்.

கோவிலுக்குச் செல்வோம் குறையகலப் பிரார்த்திப்போம்.
வாழ்வெல்லாம் வளங்கொழிக்க மனமார வேண்டிடுவோம்.
நாடெங்கும் நலஞ்சிறக்க நாம்வேண்டி வணங்கிடுவோம்.
நல்லமனம் தருகவென நாமிறையைத் தொழுதிடுவோம்.

உறவுகளைக் கண்டிடுவோம் உளமகிழச் சேர்ந்திடுவோம்.
சுவையான பட்சணங்கள் பரிமாறி மகிந்திடுவோம்.
இனிப்பான சுவையோடு எல்லாமே ஈந்திடுவோம்.
எல்லோரும் சித்திரையைக் கொண்டாடி இன்புறுவோம்.

செந்தமிழர் சிங்களவர் சித்திரையை வரவேற்பார்.
சொந்தமெனச் சித்திரையைக் கொண்டாடி குதூகலிப்பார்.
பாற்சோறு பலகாரம் பக்குவமாய் செய்திடுவார்.
பட்டாசு மத்தாப்பு வெடித்துமே மகிழ்ந்திடுவார்.

உவப்புடனே ஊஞ்லேறி உளமகிழ ஆடிடுவார்.
உல்லாசம் பொங்கிவர ஊஞ்சலாடிப் பாடிடுவார்.
இளையவரும் முதியவரும் இணைந்துமே இருந்திடுவார்.
எல்லோரும் ஊஞ்சலாடி சித்திரையை இருத்திடுவார்.

கொடியேற்றம் ஒருபக்கம் கோவில்களில் நடக்கும்.
தேரோடும் திருவிழாவும் சிறப்பாக நடக்கும்.
மதுரையில் கள்ளழகர் கால்வைப்பார் வைகையிலே
மீனாட்சி திருக்கோவில் திருவிழாவாய் ஜொலிக்கும்.

இசையோடு இயலும் இங்கிதமாய் ஒலிக்கும்.
இளைஞரொடு முதியவரும் இணைந்துமே ரசிப்பார்.
களைகட்டும் கலைவிழா களிப்பளித்து நிற்கும்.
காதலுடன் சித்திரையும் கைகோர்த்து சிரிக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>