மன்னவர் குலத்தே தோன்றி;
மனங்களை ஆட்சி செய்யும்;
பன்னரும் ஞான வானே!
பரமனே! புத்தா! போற்றி!
உன்னரும் உருவை எண்ணி;
ஊறிடும் கவிதை மாலை,
என்னரும் சொல்லால் கோர்த்து;
எடுத்தொரு தூது விட்டேன்...!

பூரணை தன்னில் பூத்து;
புவனியை உய்க்க வந்த
ஆரணப் பொருளே! எங்கள்
அருந்தவ முனியே! கேளும்..!
காரணம் இன்றி எங்கள்
காணிகள் பறித்தார்; உம் பேர்
பாராயணங்கள் பண்ணி;
பலப்பல சிலைகள் வைத்தார்!

கௌதமி வளர்க்க உய்ந்த
கருணையின் வடிவே! அன்பே!
ஔடதம் ஆனாய்! கேள்... கேள்..!
அரசு உம்பேரைச் சொல்லி
கௌவிய நிலங்கள் நீங்கு..!
கைதடி மண்ணில் நீரும்
பௌவியமாகக் குந்தும்
பரிசிகேடேதுக்கையா...?

சாக்கிய முனியாய் உம்மைச்
சார்ந்தவர் போற்ற; நேபோள்
ஆக்கினாய் புத்த தேசம்!
ஆயினும் கேளாய்! முன்னோர்
ஆக்கமும், அழிவும், இன்னும்
போக்கிலாச் சாம்பல்கூட
ஊக்கியாய் நிற்கும் மண்ணில்;
உம் மதம் நாட்டல் ஏனோ?

பஞ்சமா சீலம் சொல்லிப்
பாரினைத் தூசி தட்டி
அஞ்சுமவ் வழிகள் சொன்னாய்!
ஆருயிர் உடைமை வெந்து
மிஞ்சியே போன மண்ணை
மீதி உன் சிலையும் உண்டால்;
நஞ்சென நாளும் உன் பேர்
நலுவுறல் கண்டாய் நல்லோய்..!

தன்னிகர் இல்லாள் அந்த
யசோதரை நீக்கி; நல்ல
தன்மகன் நீக்கி; அன்று
தனியனாய்த் தவமே கொண்டீர்!
பின்னுமேன் "கன்னி"யாயின்
மேலொரு கண்ணை வைத்தீர்?
இன்னலாம் கள்ளக் காதல்
இதைவிடும் உமக்கு நன்று!

கூடுகள் கட்டி; குதூகலக்
குமிழ்கள் பூட்டி; அங்கு
நாடுவோர் தன்ஸல் பெற்றால்
நல்லது தானோ சொல்லும்?
வீடதைப் பறித்தார்; போக
விளைநிலம் பறித்தார்; இந்தப்
பாடுகள் பார்த்துக் கொண்டும்
படுத்து நீர் இருக்கலாமோ?

"சிலையிடல் வேண்டாம்! உள்ளே
சிந்தனை வேண்டும்!" என்றாய்;
சிலையிலே வைத்து, உன்னைச்
சிங்களச் சூரனாக்கி;
நிலையிலாப் புகழைச் சூட்டி;
நின்னையே நிந்தை செய்தார்!
அலையெழு ஐம்புகோளம்
அடிமுதல் வைத்ததெண்ணு!

தங்கமாம் ஈழ நாட்டில்;
தமிழ் நிலம் மீதில் சைவர்
அங்கமாய்ப் பதியம் வைத்து
அருந்தமிழ்ப் பௌத்தம் கண்டார்..!
பங்கமாய் அதற்கும் கேடு
பண்ணவும் கிளம்பிவிட்டார்
மங்கலாய் உன்னைக் கற்ற
மாமிசக் காவிமார்கள்...!

புத்தமா முனியே நீ செய்
புண்ணியம் உளது ஐயா!
இத்தரை மீதில் இப்போ
இன்னலே விளைத்து நாளும்
புத்தராய்ச் சிலைகள் குட்டி
போடுதல் தவிர்க்க வேண்டும்!
இத்தரை எந்தன் காணி
இதனையும் விட்டுப் போவீர்!

கவிதையில் காணி செய்து;
கவின்பெறு தூபி கட்டி;
பவித்திரமாக மக்கள்
பார்க்கவே கார்ணிவெல்லும்;
செவிக்கினி பிரீத்தும் ஓதி;
செப்பிய பலவும் செய்வேன்!
தவிப்புறு தமிழர் வாழத்
தக்கதோர் தீர்வு சொல்லும்...!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.