என்ன இது
ரொம்ப நீளமாவே
போய்க்கொண்டு இருக்கு.

என்ன ஏதும் தெரியலயே
அட நல்லா
கண்ணதிறந்து பாருப்பா
அது ரோடு.

என்னப்பா சொல்லுற
ரோடா அப்படினா
என்ன..?

பஸ்சு காருலாம் போகுமே
அந்த ரோடா.
ய்யோவ்  ஒன்னுமே
தெரியாத மாதிரி நடிக்காதய்யா
ரோட்டு நடுவுல நின்னுகிட்டு
என்ன குறும்பு தனத்த பாரு.

எவனவது உன்மேல
ஏத்திட்டு போய்யிட போறான்
அப்புறம் அவ்வளவுதான்
என்மேலயாவது
ஏத்திட்டு போய்டுவானுங்க.
நான் அவன்மேலே
ஏறிவிட்டு போய்டுவேன்.

நல்லா மொட்டை
மண்டைய பிளக்குற
மாதிரியே வெயில் அடிக்குதே
அப்புறம் எப்புடி
நடுரோட்டுல தூரம் தூரமா
தண்ணியா ஓடுது – ஆனா
பக்கம் பக்கம் போனா
காணாமலே போகுதே
அதெப்புடியா …!

இந்த காலத்திலேயும்
இப்படியொரு
புத்திக்கெட்ட மனுசனா
யோவ் யோவ்
அது கானல் நீருயா
அப்படித்தான தெரியும்
அதுக்குனு நடுரோட்டலேயே
நடப்பியோ…!

இது ஒன்னும்
ஒங்கப்பன் போட்ட
ரோடு அல்ல…!
சர்க்காரு போட்ட ரோடு
என்ன சர்க்காரு போட்ட ரோடோ
என்ன சரு…..ருக்காரு.
 
குண்டும் குழியுமா இருக்கே
இந்த கானல் நீரத்தான்
குழிக்குள்ள நிரப்பமுடியுதா
ஒன்னுக்கும் ஆகாத
இந்த ரோட்டபோட்ட
அந்த ஆசாமி யாரோ…!

எல்லாம் அவன சொல்லி
குத்தமில்ல - நான்
கோட்டர் பிரியாணிக்கும்
பணத்துக்கும் ஆசைப்பட்டு
புத்தியை இழந்து உரிமையை
மறந்து போட்ட ஓட்டுனால
ரோடெல்லாம்
குண்டும் குழியுமா பெருத்தே
போயிருச்சே – ஆனா
என்ன புரோசனம்
ஒன்னுக்கும் ஆகமாட்டுகிறது.

ஒரு கானல் நீர
குழி நிறைய ரொப்பவே
முடியல யாருக்கிட்டத்தான்
என் தலைவிதியை சொல்லி
அழமுடியுமோ…!
எல்லாமோ நான் செய்த தவறோ…?
ய்யோவ் என்னய்யா
இன்னும் தனியா
புலம்பிக்கிட்டே இருக்க
ஒன்னும் இல்லயா  - ஏதோ
நான் செய்த தவறா அல்ல
நாம் செய்த தவறா
ஒன்னுமே புரியலயா.

என்ன புரிஞ்சு
என்னத்தான் செய்ய போறீரியோ…!
போயா போ போ அட போயா
சும்மா தொன தொன வெனனு
இருக்காதே …!

கையில இருக்குற அந்த
பாத்திரத்த கொடு
நான் போய் – அந்த
கானல் நீர பாத்திரத்தில
புடிச்சுட்டு வரேன்.

அந்த நீர வைச்சுதான்
நம்ம தோட்டம் தொறவுல
விவசாயத்தெல்லாம்
பண்ணனும்.

கரண்ட் செலவு இல்ல
ஆத்துல தண்ணி வராத
இந்த நேரத்துல – இந்த
கானல் நீர வச்சு
என் பொழப்ப நான்
பாத்துக்குவேன் தானய்யா…!

நல்லா சொன்னய்யா
மொதல்ல அந்த நீர
உன்னால தொட முடியுமா
இல்ல அந்த நீருக்கிட்ட
உன்னால நெருங்கதான் முடியுமா
போய்யா போய்
ஆகுற வேலைய பாருய்யா …!

என்னய்யா சொல்லுற நானும்
போய் கையில் புடிக்கலாம்னு
நினைக்கிறேன்
புடிக்கவே புடிக்க முடியலையா
பக்கத்துல போன அது
இன்னும் தூரமாகவே
போய்யிடுதய்யா  - அதானய்யா
முன்னாடியே சொன்னேன்ல.

என்னத்த சொன்னியோ
இப்ப பாரு அந்த பாத்திரம்
முழுசா நிரம்பி வழியுதே…!
தாகம் தணிக்க ஒரு டம்ளர்
தண்ணி கொடுய்யா…!

அந்த பாத்திரத்த எடுத்து
அதோ அந்த ரோட்டு நடுவுல
தூரமா தண்ணி தெரியுதுல
அந்த தண்ணிய போய்
மோந்துகிட்டு குடிய்யா
வாழ்நாள் முழுவதுமே
தாகமே வராதய்யா…!

தாகத்தின் பிடியில்
ஆசை ஆசையாய்
தண்ணிய பாத்துகிட்டே
செல்லுறேன் ஆனா
என் கையிலே சிக்கலேயே…!

ய்யோவ் எத்தன
குட்டிக்கரணம் போட்டாலும்
அதெல்லாம் சிக்காதுய்யா…!

அதுதென்ன உன்கையில
சிக்குற உன் பொண்டாட்டி
குடுமியுனு நினைச்சியோ
நினைச்சவுடனே சிக்குறத்துக்கு
நீ நினைச்சாலும் உன்னால
அந்த கானல் நீர
பிடிக்கவே முடியாதுய்யா…!
ஏன்னா அது ஒரு மாயை.

என்ன மாயையா
அதென்ன ஒன்னு புதுசா
என்பொண்டாட்டி பேர
எப்பய்யா மாத்தினீங்க
எனக்குத் தெரியாமா…?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.