1. மிச்சப்பட்ட இரவுகள்

நிலவின் கிரணத்தினூடே
இருள் கசிந்தது
பேச்சரவம் கேட்டு
மரத்தின் நிழல்
திரும்பிப் பார்த்தது
கன்னக்கோல் வைத்து
களவாடும் கூட்டம்
ஊரைச் சுற்றி வந்தது
கறுப்புப் பூனை
உதிர சுவைக்காக
அலைந்தது
மயானத்தில் ஒரு
பிணம் எரிந்தது
துஷ்டி நிகழப்போகும்
வீட்டை
ஆந்தைகள் உணர்ந்தது
பொம்மை கேட்டு
அழுத குழந்தை
இரவுகளை மிச்சப்படுத்தாமல்
உறங்கிக் கொண்டிருந்தது.

2. தொட்டாற்சிணுங்கி

சிதிலமடைந்த வீடுகள்
கூவி அழைக்கும்
மனிதர்களை
வியர்வையில்
நனையும் உடல்
தொட்டாற்சிணுங்கியாய்
உள்ளம்
பிரிவுக்கும் சந்திப்புக்கும்
இடைப்பட்ட காலத்தில்
எனக்கு மட்டுமாய்
இதழ் விரிக்கிறது
ரோஜா
கருநிறக் குயிலொன்று
எனது குரலை
கடன் வாங்கிச் செல்லும்
இரு கரைகளுக்கிடையே
நிம்மதியை கண்டுவிடுகிறது
நதி
ஒவ்வொரு அலைகளுக்குள்ளும்
வேட்டையாடும் வெறி
ஒளிந்திருக்கின்றது
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
சந்திரனும் வந்து
சேர்ந்து கொள்ளும்.

3. மரணம் நிகழ்ந்த வீடு

கோப்பையில் தேநீர்
ஆறிப்போயிருந்தது
பார்வை ஜன்னலில்
நிலைகுத்தியிருந்தது
கண்களில் கண்ணீர்
தாரை தாரையாக
வழிந்தது
துர்சொப்பனங்கள்
உறக்கத்தைக் கெடுத்தது
பிரிவு
ஆற்றாமையைக் கொடுத்தது
உறவு
ஆறுதல் அளித்தது
புகைப்படங்கள்
நினைவு நாடாக்களைச்
சுழலச் செய்தது
ராட்சச சக்கரத்தின் அடியில்
சிக்கிக் கொண்டது
போலிருந்தது
மரணம் நிகழ்ந்த வீடு
மனிதனை பறிகொடுத்த
இக்கடடுலிருந்து
மீண்டு கொண்டிருந்தது.

4. உங்களருகில்

இரயில்கள்
கையசைப்பைக் கவனித்தபடி
விடை பெறுகின்றன
பயணத்திற்கு இடையேயான
இடைவெளியை
பறவைகள் சுமந்து
செல்கின்றன
காட்டுவழிப்பாதையில்
அரிய விலங்கொன்றைக்
காண நேரலாம்
ஒலிப்பான்களை அழுத்தி
அதன் தனிமையை
சிதைத்து விடாதீர்கள்
தேன் கூட்டினைக்
கலைக்காதீர்கள்
உங்களுக்குத் தேவை
தேன் மட்டுமானால்
பிராணிகளுக்காக
சில நிமிடங்களை
மிச்சம் வைத்திருங்கள்
சூல் கொண்ட மேகத்தைப்
பாருங்கள்
ஜீவன்களுக்குத் தாகம் தீர்க்க
எங்கிருந்து புறப்பட்டு வந்ததென்று
கேளுங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.