1. என் பலஸ்தீனியப் பாலகனே!

ஒற்றைப் பாலகன்...
அர்த்தமில்லாத ரவைகள் துளைத்து,
அரவணைப்பே இல்லாது சரிந்த,
தன் தாயின் உடலைக் காண்கையில்...
உத்தம போராளியாகிறான்!
அவனை உலகம்
'தீவிரவாதி' என்றே தீர்த்துக்கட்டுகிறது!

அந்தப் பாலகனுக்கு...
"நீ தீவிரவாதி ஆகுக!" என்றே
என் ஆசியைப் பொழிவேன்!
ஆதிப் போர்க் கடவுளின் வடிவாய்
அவன் உருக்கொள்ளட்டும்!
ஆயிரம் காளியாய் அவன் உரு
அணி வகுக்கட்டும்!

பலஸ்தீனியப் பாலகனின்....
எதிர்முகம் வெற்றிகொள்ள
எனது நேர்த்திகள் இன்னும் அதிகமாகட்டும்!
அது அவனது மனதை
உக்கிரமாக்கி எழவைக்கும்!
அவனைச்
சமர்க்கள நாயகன் ஆக்கும்!

அன்பனே...!
"தீவிரவாதி ஆவேன்" என்று
சூளுரைப்பது ஒன்றும் தவறல்ல!
'அது வேதநெறி!' என்பதை
நீ உணர்வது போலவே
நானும் உணர்வேன்!
நீ அவ்வாறு உரைத்தால்
நீ பாலகனே அல்ல...!
நீ என்றும் பெரியவனே!
அதை உணர்க....!

உரிமையின் குரலை
துப்பாக்கியால் நசுக்கும்...
உண்மையின் கனிவை
எறிகணையால் எரிக்கும்...
கபடக் கழுகொன்றின் கர்வத்தை
பலஸ்தீனியப் பாலகன் நீயோ
என்றோ ஓர் நாளில்....
பதறச் செய்வாய்...!

கழுகின் இறக்கை தீயாய் எரிந்து,
சாம்பலாய்க் கருகி,
காற்றில் துகளாய்ப் பறந்து,
காணாமல் போய்...
உனது வானத்தில் காற்று வீசும்வரை
உன் பாயைச் சுருட்டாதே!

என் அருமைப்
பலஸ்தீனியப் பாலகனே...!
இன்று தாயை இழந்தாய்....
நாளை என்ற காலத்தில்
நீ எதையும் இழக்க நேரலாம்!
நான் அறிவதுபோல
அதை நீயும் அறிவாயல்லவா...?

ஆனால்...
உத்தம போராளி
எதையும் வைத்துக்கொள்வதில்லை
என்பதால்
நீயும்... எதையும் இழக்கவில்லை
என்பதையும் உணர்வாய் அல்லவா?

என்றும்...
உனக்காக நான் பாடுவேன்!
உன் புகழ்மேவும்
பரணிப் பாடல்களை...!
அந்தப் பாடல்கள்
கழுகின் கழுத்தொன்றை
அறுக்கும் போதில்....
பெரும் காவியமாக மலரும்!

அப்போது...
நீ காவிய நாயகன் ஆவாய்!
உன் அன்னை
உன்னை
"மகனே..."  என்று
ஆரத் தழுவுவாள்!
அந்தத் தழுவலே
என் காவியத்தின் கருவாய் இருக்கும்!

2. "கொடியது அரசு" என்றால் கோலையே (Call) எடுக்க மாட்டார்!

01

எண்ணமே பெரிதாய்க் கொண்டு,
ஏளனக் கதைகள் சொல்வார்;
விண்ணையே வியக்க வைக்கும்
வீசுவாய் வீச்சில் வில்லார்;
மண்ணையும் சிறிதாய் ஆக்கும்
மாபெரும் மழுப்புச் செய்வார்;
கண்ணையும் இழந்தார்; கல்விக்
கயவரே போல ஆவார்...!

02.

வாழ்ந்தவர் நிலத்தைப் பேய்கள்;
வதைத்ததோர் கதையைச் சொன்னால்..!
வாழ்விடம் அழிந்ததென்றே
வலிகளின் வாழ்க்கை சொன்னால்...!
தாழ்ந்திடச் செய்தார் என்றே,
தரவுகள் பலவும் தந்தால்..!
வீழ்ந்ததாய் விரையார்...! அரசை
விந்தையாய்க் காதலிப்பார்...!

03.

பகைவரின் கால்கள் நக்கி;
பணத்தினைத் தேடி; இன்னோர்
தகைமையை வீழ்த்த என்றும்
சவக்குழி தேடி நிற்பார்...!
வகையதாய் வதைகள் செய்யும்
அரசதைக் கேள்வி கேளார்..!
நகைப்பதற்குரியார்..! நாளும்
நலங்களை நக்கித் தின்பார்..!

04.

அடியதை வருடி; தங்கள்
ஆண்மையை அடைவு வைத்து;
படியது ஏறிப் பல்லைப்
பாயென விரித்து நன்றாய்,
பொடியெனப் பொய்யை என்றும்
பொத்தென விடுவார்; "இன்று
கொடியது அரசு" என்றால்
கோலையே (Call) எடுக்க மாட்டார்...!

05.

"அரசினை எதிர்த்தால் இன்று
அச்சமே பரிசு" என்பார்...
நரமென வீழ்வதெண்ணார்;
நஞ்சினை அமுதம் என்பார்;
"பரசிவன் பயமே இல்லான்!
பதியென உள்ளான்!" என்றே
பரவயோர் பதிவை இட்டால்
பயமது காட்டிக் கொல்வார்..!

06.

ராமனாய்க் காடு சென்றால்,
"ரம்மியம் ஆஹா" என்பார்..!
ஆமிதான் விரட்டி எங்கள்
அருமனை அழித்து விட்டால்;
"சாமி நீ கும்பிட்டாயா...?"
"சாத்திரம் நீ கேட்டாயா...?"
"போம் இனிப் போரே..." என்று
போக்கிரிப் பொய்கள் சொல்வார்!

07.

ஊடகக் கதைகள் சொல்லும்...!
உப்பிலாப் பேச்சும் சொல்லும்...!
பூடகப் பேயும் சொல்லும்....!
புழுத்த நீ புழுதான் என்றே?
வீடகம் தேடி நாமும்...
விளைநிலம் விட்டு நாமும்...
மூடகம் ஆன செய்தி
மூடனே! முட்டாள்! சொல்லேன்...?

08.

தேனெனச் செய்தி "மானம்
செப்பிடும் செட்டை" என்றார்!
போனிலே (Phone) செய்தியிட்டால்
"பொசுக்குவர் அரசு" என்றார்!
மீனது மீட்சி என்றே;
மின்கவர் விழிகள் கொண்டான்..!
கோனவன் திருமால் கொண்ட
கொற்றமும் அறியா மூடர்..!

09.

மாம்பழ நாட்டை வெட்டும்
மனசுதான் யாருக்குண்டு?
தாம்பலர் வெட்டி நின்றே
தலைமையே தகுதி கொண்டார்!
"ஆம்பலும் அரனே" என்போம்
"ஆரதை வேண்டாம்" என்றோம்
காம்பையும் கடவுள் காக்கும்!
கடமையும் கடமை தானோ...!

10.

கொடுமைசெய் ஆட்சி உண்டு,
கொழுப்பிலே வளர்ந்து மாடாய்...
திடுமென வளர்ந்ததெண்ணார்..!
தினமுமே தீமை தின்பார்!
கடுமனக் கயமை கண்ணில்;
காட்டியே கனிவைச் சொல்லில்...
விடுமவர் குலங்கள் வீழும்...!
வீறுடன் நாடே மீளும்...!

19/10/2023

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.