நிலப் பாத்தியில் முளைத்த
வெங்காயங்கள் அணிவகுக்கும்
அதிகாலைக் கனவு...

ஒரு பீரங்கி போலவும்
ஒரு சப்பாத்துக்கால் போலவும்
ஒரு விமான வேடிக்கை போலவும்
என்னை மேலும் மேலும்
அச்சுறுத்துகிறது...

ஒரு சோற்றுப் பருக்கைதானும் வீழாத
சுருங்கி ஒட்டிய
என் பசி வயிற்றை
பீரங்கி வெங்காய முழக்கம்
எரித்துச் சாம்பலாக்குகிறது..!

வாழலாம் எனும்
ஒற்றைச் சொல்லேனும் உதிர்க்காத
வெற்று வாயை
சப்பாத்துக் கால் வெங்காயம்
ஏறி மிதித்து
நசித்துப் போகிறது....

காற்றைக் குடித்தாவது தப்பலாம்
என எண்ணும் நாசியை
பெருங் கொடி வெங்காய ஆட்டம்
அமுக்கி
மூச்சுத் திணறச் செய்கிறது...

'இன்றாவது உண்!' எனும்
சேதி கேளாச் செவியில்
கீத வெங்காய இரைச்சல் புகுந்து
அலறி ஆர்ப்பரித்து
துளைகள் போடுகிறது...

சமையல் பாத்திரங்களும்
சாப்பாட்டுக் கோப்பைகளும்
ஒரு நெல்மணிதானும் இல்லாத
ஆயிரம் பிச்சைப் பாத்திரங்களாக
என்னிடம் நிறையும்போது
வாழ்வுத் தலை
தூக்கமற்றுத் தொங்குகிறது...!

நண்ப...!
என்னிடம் கேட்காதே
'வெங்காயமே இல்லையா...?' என

நான்
வாழ்ந்துகொண்டும்
தேய்ந்துகொண்டும்
மரித்துக்கொண்டும் இருப்பது
வேறு எதனோடு?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.