பிப்ரவரி 21, 2024 தாய்மொழித் திருநாள் 

தாய்மொழித் திருநாள் விழா!  
உலகில் விழாக்கள் பலவுண்டு
அவற்றுள் உள்ளம் மகிழும் நிலையுண்டு!

‘தான்’ என்று காட்ட எடுக்கும் விழா!
தரணி புகழ நடத்தும் விழா!
தன் இருப்பைக் காட்ட இயக்கும் விழா!
இமையோர் விரும்ப நடத்தும் விழா!
பசி தீர படைக்கும் விழா!
பசித்தும் உண்ணா நோன்புவிழா!
தன் நலம் காக்கச் செய்யும் விழா!
‘சமயத்திற்கு’ ஏற்ப பற்பல விழா!
எத்தனை விழாக்கள் இங்குண்டு
அத்தனையும் இதற்குச் சமமென்று
சொல்லத்தான் நினைக்குமோ மனமின்று!

இங்கு சாதிசமய பேதமில்லை!
சண்டை சச்சரவு ஏதுமில்லை!
விருப்பு வெறுப்பு என்பதில்லை! - இதை
வேண்டாம் என்போர் யாருமில்லை!

ஓதிக் கற்ற உணர்வொன்றே
உயிரோட்டமாய் வெளிப்படுமே!
உயிரின் இயக்கம் உடல் என்றால்
உணர்வின் இயக்கம் மொழியன்றோ!

தாயை நேசிப்போர் யாவருமே
தாய்மொழியை நேசிப்போர் ஆவாரே!
தாயும் மொழியும் சமமென்று
தரணி போற்றும் தினமின்று!

தாயின் அன்பு பார்வையிலே
தாய்மொழியின் அன்பு பேச்சினிலே!
உதட்டில் வெளிப்படும் பேச்செல்லாம்
உன் தாய்மொழி என்று ஆகிடுமோ?

நீ பேசும் மொழியெல்லாம்
உன் தாய்மொழி ஆகாதே!
நீ படிக்கும் மொழியெல்லாம்
உன்னைப் படைத்த மொழியன்றே!

கேட்கும் மொழி பலவாகும்
பேசும் மொழி சிலவாகும்
அத்தனைக்கும் அடிப்படையாய்ச்
சிந்திக்கும் மொழி எதுவென்று
எண்ணித் துணிந்திட்டால் அது நன்று!
உன் சிந்தை மொழியே தாய்மொழியாம் - இதை
நிந்தனையின்றி வந்தனை செய்!
தாய்மொழி யன்றோ தன்புகழ் காக்கும்
இதன் மாண்பு உணர்ந்தால் உன் புகழ் நிலைக்கும்!

கருவிலிருந்து கேட்டமொழி
கண் விழித்த நாள்முதல் பேச்சுமொழி
உள்ளம் மகிழ உணா்ந்தமொழி
அறியாமை அறுக்கும் அன்னை மொழி
எண்ணத்தை அளக்கும் இனிய மொழி
ஏற்றம் காண உகந்த மொழி
உணர்ச்சிக்கு ஊற்றுமொழி
எண்ணத்திற்கு ஏற்றமொழி
வெற்றிக்கு விதையாகும் மொழி
வீரத்திற்கு உரமாகும் மொழி
மூத்தோர் சொன்ன வார்த்தையையெல்லாம்
மூளையில் நன்றாய்ப் பதிக்கும் மொழி

எப்படி எண்ணிப் பார்த்தாலும்
எங்கு ஆய்வு செய்தாலும்
தாய்மொழி யன்றோ தன்புகழ் காக்கும்!
இதன் மாண்பு உணர்ந்தால் உன் புகழ் நிலைக்கும்!

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.