ஜோதிடக்காரனுக்கு
நல்ல காலம் பிறக்கட்டும்
கைரேகை பாருங்கள்

பெண் பார்க்கும் படலம்
குனிந்த தலை நிமிரவில்லை
பெண்ணின் பாட்டி

மேசையில் பிடித்த உணவு
குதுகலமாய்த் துவங்குகிறது
பிரார்த்தனை நேரம்

தலைவர் சிலைகள்
பேதம் பார்ப்பதில்லை
காக்கைகள்

சாலை யோரத்தில்
குபேரன் படம் வரைந்தவன்
தட்டை எடுத்து வைத்தான்

முற்றும் துறந்த துறவி
நடிகையுடன் சிக்கிய தருணம்...
முற்றும் துறந்தே இருந்தார்

புத்தகத் திருவிழா
அதிக அளவில் விற்பனையானது
தின்பண்டங்கள்
நடிகையுடன் ஆனந்தக்கூத்து
நித்தம் ஆடி முடித்தவருக்கு
இந்தியாவில் சாமியார் என்று பெயர்

அழகு நிலையம்
அப்படி ஒன்றும் அழகாய் இல்லை...
பணிப்பெண்கள்

தனிமையில் படுத்தவனுக்கு
உறக்கம் வரவில்லை
விவாகரத்தான இரவு

மீனவ நண்பன்
சோதிடம் பார்த்தான்...
தண்ணீரில் கண்டமாம்

வாய்மையும் நேர்மையும்
யாரிடம் எதிர்பார்க்கின்றீர்
அவர் தலைவரின் மகன்

போதைப்பொருள் போல
உடனடியாகக் கிடைப்பதில்லை
போதனைப் புத்தகங்கள்

பூவேலைப்பாடுகள் இருந்தும்
வெறுமையாகவே இருந்தது
உணவில்லாத தட்டு

தக்காளி விலைச்சரிவு
தகவல் அறிந்த தலைவர்
மாநாட்டைத் தள்ளிவைத்தார்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.