* ஓவியம் - AI

இடைவெளி தரிசனம்.

எனக்குள்
நிறைந்து கிடந்த
சொற்களை
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அடுக்கினேன்.
குவிக்கப்பட்ட
கூலாங்கற்கலாகச்
சிலரை
முகம் திரும்ப வைத்தது.
பிறகொரு நாள்
பெய்த மழையில்
காணாமல்
போனதைக் கண்டெடுத்து
நிதானமாக
செதுக்கிச் செதுக்கிச்
செருகினேன்
சொற்களாலான
கூடாரத்தை.
யாவரும்
சூழ்ந்து
வியந்த வேலையில்
நான்
செதுக்கியதெல்லாம்
சொற்களின்
இடைவெளிக்காகத்தானென்று
எச்சொல்லை
வைத்து
சொல்வது
இப்பொழுது.

இளைப்பாருதலைத் தரும் இன்னொன்றுகள்.

தூக்கம் தந்த
இரவுக்குள்
கனவென
பல காட்சிகள்
இருந்தது.
அட்ச ஆச்சரியங்கள்
யாவையும்
மீளுருவாக்க முடியாமல்
அழைந்த
கைபேசி
அழைப்பு.
இத்தனை
மகிழ்வுகளைக் கொண்டதானதா
இத்தருணமென
நினைக்கும்பொழுது
மேவிய ஆதுர மகிழ்வில்
ஊடாடி உட்புகுந்துவிட்ட
பிரயாசம்.
நட்பெனக் கொள்வது
தகுமெனத்தான்
தோன்ற
வைக்கிறது
இப்பார தூரப்
பயணத்தில்.

எதார்த்தவியலின் அறியாமை.

நற்கூற்றில்
வேலியிட்டதில்
வாய்த்தது
மகிழும்
வாழ்க்கை
யாவரும்
சிறக்க.

பாதை
திறந்த காற்றில்
அசைந்தாடுகிறது
சபலம்

வேலி தாண்டும்
தருணத்திற்கு
பிடி கயிறு
தளர்ந்து.

வாய்க்காத
சந்தர்ப்பத்தில்
ஒளிந்த மனம்
காணவியலாத ரூபத்தில்
படுத்தியது
வெளிச்சொல்லவியலாத
வாடையின்
கூவமாக.

காப்பாளன்
எச்சரிக்கையால்
போர்த்திய அறத்தில்
கடந்துவிட்டவரைத்தான்
போற்றிப்
புகழ்கிறீர்கள்
வானலாவிய
வார்த்தைகளைக் கொண்டு
உள் கூச்சில்
அச்சமெய்க
உயர் நவிர்ச்சியில்
உங்களைப் போன்றவறன்தான்
நானுமென்பதை
அறிய மறந்து.


சுவையறிந்தால்...

கவனமற்று
சிதறிய
பிசகின்
இனிப்புத் துணுக்கு
இத்தனை
ஊர்தல்களை
எனக்குள்
இச்சிற்றெறும்புகளால்
வாஞ்சைகள் கூட்டப்படுகிறதென்றால்
அன்ன சத்திரம்
ஆயிரம்
அமைக்கலாம் தான்
எச் சிரமங்களுக்கு
இடையிலும்
பிறப்பின் பயனாக
பேருவகை கொள்ள.


வெந்த நீரில் துளிர்த்து.

கொத்துக் கொத்தாக
விழும்
கொப்புகளை
வெட்டிச் சாய்ப்பவன்
எவனோ.
அவனே
உங்களின் பாதுகாவலன்.
அவனே
உங்களை இரட்சிப்பவன்.
அவன்
சொல்வதே.
உங்களின்
வேத வாக்கு.
அதுவே
புனிதக் கிரந்தம்.
பிறகேன்
எங்களை
நடவும்
நன்னீர்ப் பாய்ச்சவும் சொல்கிறீர்கள்.
இந்த
வாஞ்சையின்
வளர்ப்பதானக்
கூத்தில்.


இருத்தலின் வாழ்வியலிலொரு இடைஞ்சல்.

இப்படியாக
மழை
வெயில்
கடந்து
வாழ்ந்து வந்தவனை
வயோதிகனெனச்
சொன்னாலும்
பரவாயில்லை.
தாடியும்
தடித்த தேகமுமாக
இந்தப் பேமானி
சொல்கிறான்
வாழ்வதைப்பற்றி
கிளிப்பிள்ளையாக
சாரமற்ற வார்த்தைகளால்
சந்நியாசக் கோலத்தையேக்
கெடுத்து.


மூஞ்சுக்கூடு மனிதர்கள்.

பிடித்து
வைக்க முடியாத
வாசனை
நிகழ்தப்பார்க்கிறது
உறவின் இணைப்பை
வெகு நாளாக.
மேய்ந்துவிட்ட
மாட்டிற்காக
மல்லுக்கட்டுகிறார்கள்
ஐந்தறிவும்
அறியவேண்டும்
நெடும்பகையையென.


Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.