1. நேரிசை வெண்பா (சிலேடை)
(இருபொருள் - பதினாறு வகைச் செல்வங்களும், ஈரும் பேனும்)

ஈரெட்டில் உண்டாம் அதுவது ஏதென
ஈரெட்டைத் தேர்ந்து தெளிவித்து – ஈரெட்டைப்
பாரெனச் சொன்ன பெரியோர்இல் இல்லெனின்
காரென வாழக்காண் பேன்.

2.  இன்னிசை வெண்பா

வாழ்வியல் தத்துவம்

காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிட
நட்டாற்றில் சிக்குண்ட நல்யானை போலவே
சட்டென்று மாறும் உலகத்து மாந்தரிடை
கட்டுண்டு வாழ்வோர் பலர் 

வெண்பாவின் பாவினமான துறை, தாழிசை, விருத்த இலக்கணம் எளிய மரபுக் கவிதை வடிவில்

குறட்டாழிசை

குறளினை எழுதுங்கால் கூடுதல் சீரொடு முதலடி அமையின்
குறட்டாழிசை என்றே கொள்நீயே.

குறள்வெண் செந்துறை

விரும்பிப் புனைந்த விழுமிய குறளில் சீர்தளை பிறழின்
செருக்குடன் சொல்லிடு சீர்மிகு குறள்வெண் செந்துறை என்றே

வெண்டாழிசை

சிந்தையில் சொற்கள் சீர்படத் தோன்றாக்கால்
சிந்தைஇல் சிந்தியல் வெண்டாழிசை யாகிடும்
சிந்தையில் வைத்தெழுதத் தொடங்கு.          

வெண்டுறை

எந்தையும் தாயுமான எம்மருந் தமிழில் கவிபுனைக் கவிஞர்
முந்தை அடியை முழுமையாய் முடித்தபின்
சிந்தனையில் சோர்வுற்று சிந்திக்கும் மதியிழந்து
பிந்தையில் சீர்குறைத்துப் படைத்தாலும் ஏற்பாள்
எம்தாய்த் தமிழதை வெண்டுறை யென்றிட்டே.

வெளிவிருத்தம்

விருத்தம் என்றும் விரும்பும் அளவடி - வெண்பாவில்
கருத்தாய்த் தனிச்சொல் கடைசியில் இட்டிடு - வெண்பாவில்
நிருத்தித் தனிப்பொருள் கொண்டே அடிதொறும் - வெண்பாவில்
இருத்தி மனதுள் இன்றே கவிபுனை - வெண்பாவில் 


நேரிசை வெண்பா – சிலேடை

என்னருகே வந்தபின் தாமருகக் கண்டுறழ்ந்து
என்செய வென்மனம் சிந்திக்க – என்னிதழில்
புன்னகை பொங்கிடப் பாய்ந்து எடுத்திட்டேன்
தன்னுயிர் தாம்தர நான்.

இருபொருள் – குப்பாயம் (அ) காதலி

சிலேடையாக்கும் சொல்: அருகல் – சுருங்குதல், காதல்

வஞ்சித் துறை

தொலைக்காட்சி

நடமாடும் மங்கையரின்
படமாடும் பெட்டியினை
கணமேனும் பிரிந்தவரோ
உணர்வாரே துயரதுவை

பஃறொடை இன்னிசை வெண்பா

தத்துவக் குவியல்
பொய்யும் மெய்யும்

மெய்யாம் அதுவெது பொய்யில் உளதது
பொய்யில் உளதெது மெய்யின் உருவது
மெய்யின் உருவெது பொய்யின் அறிவது
பொய்யின் அறிவெது மெய்யின் அருளது
மெய்யின் அருளெது பொய்பெறு வாழ்வது
பொய்யின் வாழ்வெது மெய்யாய்க் களிப்பது
செய்யும் செயலும் செயலின் விளைவதும்
மெய்யாம் உலகினில் மெய்யால் என்பவர்க்கு
மெய்யாய்க் கிட்டும் களிப்பு.

(பஃறொடை இன்னிசை வெண்பா)

இலவச அறிவுரை

புரிந்தவர் எல்லாம் புரிந்ததைச் சொல்லார்
புரிந்தது போலே புரிந்ததைச் சொல்லி
புரிந்ததை நீக்கி புரியாது ஆக்கி
புரிந்திடும் செய்கை புரிந்திட்டே செய்வர்
புரிந்தவர் அல்லர் புரிந்திடு நீயும்
புரிந்தால் பெறுவாய் நலம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.