1. பாட்டும் நானே பாவமும் நானே

கண்கள் தொலைதூரம் வெறித்திருக்க
ஒரு புருவம் மட்டும்ஏறியிறங்கியவாறிருக்க
அவ்வப்போது தலை யொரு ‘லெஃப்ட் ரைட் – லெஃப்ட் ரைட்
தாளகதிக்கதிக்கேற்ப இப்புறமும் அப்புறமும் திரும்பி
அரங்குளோரை விழிகள் துருவியவாறிருக்க
அழுந்த மூடிய உள்ளங்கைகள் இறுகிப் புடைத்திருக்க
அதியாபத்து அருகேகிக்கொண்டிருப்பதான பாவந்தாங்கிய
குரல் விட்டுவிட்டு சுதி உயர்ந்தும் தாழ்ந்துமோர் அபூர்வ தொனியில்
அதிரூபசுந்தரமென்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம்
அபத்தமென்று சொல்ல 
அவருக்குத்தான் வாய் வருமா இவருக்குத்தான் மனசு வருமா
அல்லது எவருக்கும்தான் தைரியம் வருமா?
அட அப்படியே துணிச்சலாகச் சொல்பவரைப் பாராட்டலாமென்றால்
அவரோ முன்னவர் செய்ததையே வேறொரு வழியில்
ஆலாபித்துக்கொண்டிருக்கிறார்.
முடிவுறாக் கச்சேரி நடக்கும் அரங்கம் சில நேரம் நிரம்பியும்
சில நேரம் வெறுமையாகவும்.
அவ்வப்போது பாடகர்களும் பக்கவாத்தியக்காரர்களும் 
ரசிகர்களும் மாறியவாறு.

2. படைப்பாளியும் படைப்பும்

எழுத்தாளர் சாதாரணமாகவே இருந்தார்.
சாதா உடை
சாதா நடை
சாதா பாவனை
சாதா பேச்சு
சாதா சிரிப்பு
சாதா குரல்
சாதா விரல்கள்
சாதா தொண்டைக்கமறல்
சாதா புருவஞ்சுளுங்கல்....
சாதாரணங்களின் பூரண உருவமாய் அவரைக் கண்டதில்
ஏமாற்றமடைந்தவர்
என்ன நினைத்து அவரிடம் வந்தாரோ....?
ஒருவேளை படைப்பாளியாகிய மனிதப்பிறவி
ஒரு ’ஏலியன்’போல் உடை உடுத்தி நடை நடந்து
நான்கு கை நான்கு வால் நாலரைக் கால்
ஊதாமயிர்த்தலை
காதால் பார்க்கும் கலை
திருவுருவில் எதிர்வந்து அருள்வாக்களிக்கும் என்று
எதிர்பார்த்திருக்கலாம்....
கறுத்துச்சிறுத்துவிட்ட அந்த வாசக முகத்தைப் பார்த்துப்
புன்சிரித்த படைப்பாளி மெல்லச் சொன்னார்:
"வேதாளம் முருங்கை மரத்தில் இருப்பதில்லை
பாதாளம் அடியாழத்தில்தான் இருக்கவேண்டுமென்பதில்லை
சாதா கடல் சூறாவளி சமயம் என்னவாகும் என்பதற்கு
நாமெல்லோரும் சாஷிபூதங்கள்
படைப்பாளியின் வானவிற்கள் பார்த்தவுடன் புலப்படுமளவு
மேலோட்டமானவையல்ல
கலைடோஸ்கோப் ஒரு சாதா
கூம்பு வடிவப் பண்டம்.
பார்த்ததுமே அதனுள்ளேயிருக்கும் கணக்கற்ற
வண்ண, வடிவ Permutations and Combinations
புலப்படுமென்று நீங்கள் நம்பிவந்திருப்பதைப் பார்க்க
புலப்படவேண்டுமென்று விரும்பிவந்திருப்பதைப் பார்க்க
வருத்தமாயிருக்கிறது.
உங்களுக்கு ஏமாற்றமளிப்பது என் நோக்கமல்ல
ஒருவகையில் இது வாசகரின், குறியீடாகாத, மரணம்.
வேறென்ன சொல்ல..."

3. சமத்துவம்

மந்திரமாவது சொல் என்றார்.
தந்திரங்களுக்கும் மந்திரங்கள் உண்டு.
சிலவற்றை மனதுக்குள் சொல்லவேண்டும்.
சிலவற்றை உரக்க உச்சாடனம் செய்யவேண்டும்.
சொல்லும் விதத்தில் (ஆ)சாமி வந்திறங்கி
அவையோரெல்லோருமே சந்நதம் வந்தாடவேண்டும்.
ஆடினார்கள்.
பாடினார்கள்
ஆடிப்பாடிப் பரவினார்கள்
அவரை அவர் சுற்றத்தை அவர் வம்சத்தை
அவர் அம்சத்தை -
செய்த குற்றத்தையெல்லாம் மறந்து.
விசுவாசமும் நன்றியுணர்வும் கோடிகளுக்கு மேல்
என்று
நாத்தழுதழுப்பதாய்க் கூறிய கட்சித்தலைவர்
பூத்த புதுமலராய் நேற்று வந்திறங்கியிருந்த
மேலைநாட்டுக் காரில் ஏறிக்கொண்டார்.
தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு
காரின் பின்பக்கக் கண்ணாடிக்கும்
பக்கவாட்டுக் கண்ணாடிக்கும் வேகவேகமாய்க்
கையசைத்த பிறகு
இருபக்க நெரிசலுக்கிடையேகி
மூச்சுவாங்க பொடிநடையாய் நடக்கத்தொடங்கினார்கள்.

 4. அதிபுத்திசாலிகள் அம்பலம்

‘என் கையில் பந்து இருக்கிறது'.
'எனில் வட்டவடிவமாக இருப்பதெல்லாம்
பந்து என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட இயலாதல்லவா?’
‘இயலுமென்று யார் சொன்னது?’
‘யாருமே சொல்லிவிட இயலாதென்று சொல்லிவிட இயலாதல்லவா’
‘அப்படி யார் கூறியது?’
‘கூறியதற்கும் கூரியதற்கும் உள்ள ஆறு வித்தியாசங்களோ
அதற்கு அதிகமாகவோ உமக்கும் தெரியலாம் எனக்கும் தெரியலாம்’
‘ஆம் – அதற்கென்ன இப்பொழுது?’
‘அப்படியென்றால் வேறொரு பொழுதில்?’
‘ஒரு வேறொரு என்றாலும் ஒரு ஒன்றே’
‘என்றே நீர் சொன்னால் இல்லையென நான் சொல்வேன்’
‘ஏன்? ஏன்? ஏன்?’
‘தான் என்றோ பேன் என்றோ முடிவதல்ல எதுகை மோனை’
‘எது கை யெனத் தெரியும். மோனை?’
‘பானை யானை மானை தேனை’
‘மானை தேனை யல்ல மானே தேனே’
‘குணா வினா கனா தெனா_’
‘வெட்டொன்று துண்டிரண்டு’
‘என்று எப்படி திட்டவட்டமாகச் சொல்ல முடியும்’
‘விடியும் காலையும் இருள் சூழ்ந்திருக்கும்’
‘முடியவில்லை மேலும் கேட்டுக்கொண்டிருக்க _
விடைபெறுகிறேன்’
‘கடைதிறக்கப்படும் நாளைக் காலை
அதுவரைக்கும்......’

5. ஜீவகாருண்யம்

இறந்துபோய்விட்டவரைத் தற்புராணப் படைப்பில்
அத்தியாயத்துக்கு அத்தியாயம்
சாகடித்துக்கொண்டிருப்பவர்
இன்று இன்னொருவரை மானபங்கப்படுத்தி
மகிழும் முனைப்பில்
தனது வாதத்திற்கு சாட்சியாக
முன்னவரின் படைப்பை
சாட்சிக்கூண்டில்
காட்சிப்படுத்துகிறார்.

6. வாசகர்(கள்)

ஊரிலுள்ள வாசகர்கள் அத்தனைபேரின்
அறிவார்வரசனையாற்றலுக்கெல்லாம்
தன்னைத்தான் self-appointed sole representative
ஆக்கிக்கொண்டவர்
”ஒன்றுமே புரியவில்லை
மிகவும் ஏமாற்றமளிக்கிறது நூல்” என்றார்.
’அடடா அப்படியா’ என்று உச்சுக்கொட்டினர் சிலர்
’அதே யதே’ என்று கொக்கரித்தனர் சிலர்
’ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்’ என்று குதூகலித்தனர் சிலர்
‘அட்ரா சக்கை’ என்று அதையே மேற்கோள் காட்டினர்
எதிர்மறை விமர்சன மென்ற பெயரில்
மதிப்பழித்து மிதிக்கப் பழகிய சிலர்.
இலக்கியவானில் முழுநிலவாக ஒளிர ஆரம்பித்துவிட்ட நினைப்பில்
தலைநிமிர்த்திக்கொண்டா ரந்த வாசிப்பாளர்.
"எத்தனை யருமையான எழுத்து!"
என்று ஒவ்வொன்றாய் எடுத்துச்சொல்ல ஆரம்பித்தா ரொரு 
தேர்ந்த வாசிப்பாளர்
”ஆம்! ஆம்!” என்ற வழிமொழியல்கள் அங்கங்கே யெழுந்தன.
வரியிடை வரிகளை இன்னொரு வாசகர் இழைபிரித்துக்காட்ட
கரவொலி சன்னமாய்த் தொடங்கி விண்ணைப் பிளந்தது.
பிரதியில் நிலவும் மௌனங்களைப்
வேறொருவர் பொருள்பெயர்த்துச்சொன்னபோது
பிரமிப்பின் நிசப்தம் எதிரொலிக்கத் தொடங்கியது அங்கே.
வழக்கம்போல் தனது வாசகர்களை
வாத்ஸல்யத்தோடு தரம்பிரித்துப்பார்த்துக்கொண்டிருந்தது
படைப்பு.

7. நதிமூலம்

மிக நீண்ட நதி யது
மிக மிக ஆழமானது
அதன் மிகவாரம்ப மலையுச்சி
மேகங்களுக்கு அப்பாலானது
வயதென்ப பல்லாயிர வருடமெனல் தப்பாகாது.
நதிக்கரைக் கூழாங்கற்களின்
நட்சத்திர விகசிப்பில்
அவற்றின் மேற்படியுங் கைகளிலெல்லாம்
முத்துக்கள் சேகரமாகும்
ஈரமணலூறும் சின்னச்சின்ன நண்டுகள்
தோராயமாய் ஆயிரங் காலுடைத்து
நதிநீரில் நிதமும் நீந்திக் குளித்தவர்கள்
முங்கிக் குளித்தவர்கள்
கரைமீதமர்ந்து நீரின் சலசலப்பை பளபளப்பை
கண்ணாரக் கண்டவர்கள்
இன்பண்ணிசைத்தவர்கள்
இத்தனையத்தனையில்லை
எத்தனையெத்தனையோ என்ப.
அசைந்து செல்லும் தோணிகள் படகுகள்
கப்பலுக்கு அப்பன் என்று எப்பொழுதும்
சொல்லாமலிருந்ததில்லை தாத்தா
வேத்தாள் என்றெல்லாம் நதிக்கு உண்டா என்ன?
யார் கால்வைத்தாலும் தண்ணென்றிருக்கும்
கைகுவித்து அள்ளிப் பருகினாலும் தாகம் தணியும்.
அது நதியல்ல சாக்கடை என்று
நாக்கூசாமல் பொய்யுரைப்பாருக்கு
நீருள்ளிருந்து மேலெழும்பும் சிறுமீன்கள் பதிலளிக்க
தன்போக்கில் தொடர்ந்தேகுமாறு
ஊருக்கு உயிரூட்டியவாறு

:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.