யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்-பாரதி.

அமிழ்தினும் இனிய தமிழ்மொழி கணினியிலும், இணையப் பயன்பாட்டிலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படினும், தமிழ்மொழி தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படாதநிலை காணப்படுகிறது. இந்நிலை மாற்றம் பெறுவதற்கு தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களைத் தமிழ்க்கணினி இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றம்பெற வைக்கவேண்டும். தொழில்வசதிகள் பெருகிட தாய்மொழிக்கல்வி மிகவும் இன்றியமையாததாகும். இதற்குப் பள்ளிக்கல்வியில் கணினிவழி தமிழ் கற்பித்தல் அவசியம் என்பதை இவ்வாய்வுக்கட்டுரை விளக்குகிறது.

முக்கியக் குறிப்புகள் – ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம், தமிழ்வழிக் கல்வி, தமிழ்க்கணினி, குறுஞ்செயலிகள், அறிவியல்கருவிகளில் தமிழ்மொழி

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி பணிவாய்ப்பினை முழுமையாகப் பெற்றுத் தருவதால் மக்கள் ஆங்கிலவழிக் கல்வி முறையினைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களிடம் முழுமையான  ஆங்கிலவழிக்கல்வி இருப்பினும் அவர்களால் தாய்மொழியில் புரிந்து படிக்கும் அளவு  படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர முடிவதில்லை. இதனால், மனப்பாடம் செய்து பயிலும் முறை பெரும்பான்மையான மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை காணப்படுவதால் படைப்பாற்றல்திறன் குறைவாக அவர்களிடம் காணப்படுகிறது. தாய்மொழியில் கல்வி பெறும் மாணவர்களிடம் தமிழ்வழிக் கணினிக் கல்வியை முழுமையாக அளித்திடும்போது படைப்பாற்றல் திறனுடன் பல மென்பொருட்களையும், சமுதாயத்திற்குப் பல சாதனைகளையும் அளிக்க இயலும். தமிழ்க்கணினி என்பது வெறும்இலக்கியம், உரைநடை, கட்டுரை, கடிதங்கள், பண்பாடு போன்றவற்றை மட்டும் கற்றுத் தருவதன்று.

மொழி என்பது பல துறைகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடி. தமிழ்மொழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்க்கணினி இயக்கும் முறையினை ஆசிரியர்கள் பயிற்றுவித்தல் அவசியமாகிறது. எல்லாத்துறை ஆசிரியர்களும் தமிழ்க்கணினி கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். ஆசிரியர்கள் பணிச்சுமை கருதி கணினி கற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். மேலும், தட்டச்சு கற்றுக்கொள்வதிலும் தயக்கம் காட்டுகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பாடத்திட்டத்தில் தமிழ்க் கணினி பாடங்களைக் கொணர்ந்துள்ளது. கணினி வழி கற்பித்தல் என்பது இன்றளவில் தமிழ்நாட்டுப் பள்ளி வகுப்பறைகளில் மேசைக்கணினி, தொடுதிரைபேசி, அட்டைக்கணினி போன்றவற்றின்வழி நடைபெற்று வருகிறது. செல்லிடபேசி வருகையினால் மேசைக்கணினி, மடிகணினி போன்றவை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும்நிலை காணப்படுகிறது.

தொடர்ந்து 5 அங்குலம் அளவுள்ள செல்லிடபேசியில் பார்த்துவருவதால் முழுமையாகக் கற்பித்தல்,கற்றல் பணியினைத் தொடரஇயலாது. நாளடைவில் கண்பார்வை பாதிக்கப்படும். 7 அங்குலம், 10.1 அங்குலஅளவுள்ள சாதனங்களைப் பயன்படுத்திக் கற்றல்திறனை மாணவர்கள் மேற்கொள்ளவேண்டும். 50 சதவிகித ஆசிரியர்கள் தகுந்த மென்பொருட்களைப் பயன்படுத்தி தமிழ் கற்றலை ஊக்கப்படுத்தி வருகின்றனர். விரலினால் எழுதினாலே போதுமானது எனக் குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் 20 சதவிகித ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இன்னமும் ஒருங்குறியீடு என்றால் என்ன என்பது தெரியாத நிலை காணப்படுகிறது.

சங்க இலக்கிய அகராதிகள் மின்நூலாக்கம் செய்யப்படவேண்டும். ஏனெனில், பல அறிவியல் செய்திகள் காணப்படுவதால் மாணவர்கள் அதனைப் புரிந்துகொண்டு எளிமையாக அறிவியல் கருவிகளை உருவாக்குவர். தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் கலைச்சொல்லாக்கம் குறித்த செய்திகள் இன்னமும் அளிக்கப்படவேண்டும். மொழிபெயர்ப்பு  மென்பொருட்கள்  முழுமையாக அளிக்கப்படவேண்டும். பேசுவதிலிருந்து எழுதும் உரை மாற்றி மென்பொருட்களும் இன்றளவில் பெரும்பான்மையாகத் தேவைப்படுகிறது. ஆனால் 90சதவிகிதம் மட்டும் சரியானபடி மாற்றித்தருவனவாக மென்பொருட்கள் அமைந்துள்ளன.

தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளைப் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொள்வதால் படிக்கும் திறன் மாணவர் மத்தியில்(ஆரம்பநிலைக்கல்வி) குறைந்து காணப்படுகிறது. மாணவர்களிடையே காலையில் விரைவாக எழுந்து செய்தித்தாள் படிக்கும்நிலை குறைவாகக் காணப்படுகிறது. எழுத்துகளை அறியும் திறன் பெற்றிருந்தும் வாக்கியங்களை இணைத்துப் பேசும் திறன் இதனால் குறைகிறது என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் செய்தித்தாள்கள், இதர கதை, கட்டுரை புத்தகங்கள் படிக்க மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும். (ஆய்வு செய்த இடம்-தனியார் மேல்நிலைப்பள்ளி-சென்னை)

செய்தித்தாள் படிக்கக் குறுஞ்செயலிகளைப் பயன்படுத்தலாம். குறுஞ்செயலிகள் யாவும் தமிழில் அமையவேண்டும். ஏனெனில், செல்லிடபேசி தமிழில் மாற்றம் செய்யப்பட்டாலும் சில குறுஞ்செயலிகள் ஆங்கிலமொழியிலேயே காணப்படுவதால் மாணவர்களுக்குப் புரிவதில்லை. பிற நாடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதால் அவரகளால் குறுஞ்செயலிகளைப் புரிந்துகொண்டு தமிழ்ப் பாடங்களை எளிமையான முறையில் புரிந்து கொள்கின்றனர். தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கிராமங்களில் ஆங்கிலம் கற்பது இன்றளவில் சிக்கலானதாகக் காணப்படுகிறது. இதற்கான குறுஞ்செயலிகள் காணப்படினும் அவை முழுமையாகத் தமிழில் காணப்படவில்லை.

பாடத்திட்டங்கள் அறிவியல் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு கிராமத்து மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும் எளிமையாகக் கற்க அறிவியல்கருவிகள் துணையாகின்றன. அவற்றை முறைப்படி  மக்கள் பயன்படுத்த விழிப்புணர்வு அளித்தலும் இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது.

இந்நிலையில் ஆரம்பநிலைக் கற்றல்,கற்பித்தலுக்கென அறிவியல்கருவிகள் பல (மேசைக்கணினி, செல்லிடபேசி, அட்டைக்கணினி) இருப்பினும் அளவுடன் ஒன்று அல்லது இரண்டு மணி நேரமாகக்  பயன்படுத்தும்நேரம் கட்டுப்படுத்தவேண்டும் என அறிஞர் லினன்INDEPENDENT SCHOOL COUNCIL CHAIRMAN-LONDON) (இன்டிபெண்டன்னட் ஸ்கூல் கவுன்சில்  சேர்மன்-இலண்டன்) குறிப்பிடுகிறார். மேலும், தமிழ்நாட்டில் செல்லிடபேசிக்கென அமைக்கப்படும் கோபுரங்களினால் பறவைகளில் ஒன்றான சிட்டுக்குருவிகள் அழியும், நீர்நிலைகளில் மாற்றம் ஏற்படும், உடல்நிலை பாதிப்படையும் என ஆய்வாளர்கள்  சில வருடங்களுக்கு முன் கூறியபின்னரும் இன்றளவில் கட்டிடடங்களில் கோபுரம் அமைக்கும் தவறானநிலை காணப்படுகிறது. இதனால், செல்லிடபேசியில் கற்றல் பணியைச் செய்ய பெற்றோர் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். நீரின்றி அமையாது இவ்வுலகு என்பது சான்றோர் வாக்கு. தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ள நிலை காணப்படுவதால் செல்லிடபேசி கற்றல்- கற்பித்தல் பணியில் தற்போது சி்க்கல் ஏற்பட்டுள்ளது.

இயந்திரங்கள் வடிவில் கற்பித்தல் பணிக்கென எலிசா ஃபின்லாந்தில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்மொழியில் இயந்திரமனிதன் இன்னமும் அமைக்கப்பெறவில்லை.  மனிதனுக்குப் பதிலியாகத் துணைக்கருவிகளாக இயந்திரங்களைப் பயன்படுத்தலாமே தவிர ஆசிரியர் பணிக்கு முழுமையாக இயந்திரங்களைப் பயன்படுத்த இயலாது.  அதிக அளவு செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் படைக்கப்படும் இயந்திரங்கள் மனித இனத்திற்கு அழிவைத் தருவதாகும்.

தமிழ்நாடு விவசாயிகள் நிறைந்த மாநிலம். எனவே, மண்வளம் காக்கவும், நீர்வளம் காக்கவும் பல குறுஞ்செயலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல மாணவர்கள் கல்லூரிப் படிப்பினை நிறைவு செய்து விவசாயத்தொழிலினை மேற்கொண்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு இக்குறுஞ்செயலிகள் உதவி புரியும். மண்வளம் என்பது உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது, நமது நாட்டில் காணப்படும், நீர்வளம், மண்வளம், கனிமவளம், மூலிகைவளம் போன்றவை தொழில்வளத்தை மேம்படுத்தக்கூடியவை. அவற்றை நாம் அழியாமல் பாதுகாக்க நிலங்கள் தரிசாக இருத்தல் கூடாது. மண்வளம் காக்க விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும். இதற்குத் தமிழ்மொழியில் அமைக்கப்பட்ட இணையத்தளங்கள் பெருமளவு உதவி புரிகின்றன.

 


மேசைக்கணினி, மடிகணினி ஏற்படுத்த இயலாத மாற்றங்களைத் திறன்பேசி தமிழ்மொழியில் அளித்துவருகிறது.  எழுதப்     படிக்கத் தெரியாத விவசாயிகள் இத் திறன்பேசிகளைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுகின்றனர். அட்டைக் கணினிகளின் விலை அதிகமாக இருப்பதால் கிராமப்புறங்களில் இதனைப் பயன்படுத்தாத நிலை காணப்படுகிறது. பாடங்கள் பெரும்பாலும் படங்களுடனும், பிடிஃஎப் புத்தகவடிவிலும் இருப்பதால் மாணவர்கள் வகுப்பறையிலும், வீட்டிலும் பாடங்களை விரும்பிக் கற்றுவருவதைக் காண முடிகிறது.

பேச்சுமொழி தேடுதலின் வழியினாலும் விவசாயிகளுக்குப் பயன் ஏற்பட காதால் கேட்டுப் பயன்பெறும் குறுஞ்செயலிகள் அமைக்கப்படவேண்டும்.(ஆடியோ புத்தகம்) மின்நூலாக்கப் புத்தகங்கள் அனைத்தும் கேட்டுப்பயன்பெறும் குறுஞ்செயலிகள் வடிவிலும் அமைக்கப்பெறுதல் வேண்டும். கிராமங்களில் இன்னமும் மாணவர்கள் விவசாயம் பார்த்துக்கொண்டு கல்வி மேற்கொள்ளும்நிலை காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் சாணங்களை அள்ள மாணவன் யோசிக்கும்போது அச்சாண எருவை விவசாயத்திற்குப் பயன்படுத்தி   பணிக்காகக் கணினியையும் மாணவன் பயன்படுத்தி வருகிறான். பணிவாய்ப்புகள் என்பது வெறும் நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் நிகழவேண்டும். இதற்குத் தாய்மொழியில் தமிழ்க் கணினி வகுப்புகள் நடைபெற்றால் 100சதவிகிதம் தொழில்வளர்ச்சி உயர்வடையும்.

எளிமையிலிருந்து கடினம் என்ற அளவில் தமிழ்ப்பாடத் திட்டத்திற்கான பயிற்சித்தாள்கள், நழுவம் அமைத்து வெளியிடப்படவேண்டும். பயிற்சித்தாள்கள் கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல் என்ற அளவில் அமைத்தால் மாணவர்கள் தமிழை விரும்பிக் கற்பர். பல வலைத்தளங்கள், வலைப்பூக்கள் இருப்பினும்   இலவசமாகத் தமிழ் கற்பித்தலுக்கான முழுமையான சிறந்த தளம் இன்னமும் அமைக்கப்பெறவில்லை.

தமிழ்நாட்டில் தமிழ் விரைந்து கற்பிக்கத் தமிழாசிரியர்கள் இருப்பதால் தமிழ் கற்றல் எளிமையாக நடைபெறுகிறது. வெளிநாடுகளில் இன்றளவில் தமிழ்க்கல்விச்சாலைகளில் தமிழ் கற்பித்தல் என்பது   வாரம் ஒருமுறை நடைபெறுகிறது. பணிவாய்ப்பு குறைவாக இருப்பதால் ஏன் தமிழ்பயிலவேண்டும் என்ற வினா மாணவர்களால் கேட்கப்படும் நிலை மாற வெளிநாடுகளிலும் இணையங்கள்வாயிலாக தமிழ்ப் பணிகள் அதிக அளவில் உருவாக்கப்படவேண்டும்.
மெல்லத் தமிழ் இனி சாகும் என்ற பொய்மொழி மாற்றம் பெற தாய்மொழியாம் தமிழ்க்கணினிக் கல்வி  உதவும் என்பது இவ்வாய்வுக் கட்டுரையின் முடிவாகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்:     - முனைவர் பி.ஆர்.இலட்சுமி, புலவர், பி.லிட்., எம்.ஏ., எம்.ஏ., எம்.ஏ., எம்ஃபில்.,பிஎச்.டி., டிசிஎஃஇ.,பிஜிடிசிஏ., சென்னை. -