அறிவியல் அறிஞரும் , உடலியற் துறையில் இளமானிப்பட்டதாரியும், இளந்தொழிலதிபருமான நிவேதா பாலேந்திரா மொன்ரியலிலுள்ள மரினாபொலிஸ் கல்லூரியில் (Marianopolis College) தனது கல்வியைத் தொடரும் காலத்திலேயே ஊடகங்கள் பலவற்றின் , அறிவியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதற்குக் காரணம் நீரில் கலந்துள்ள எண்ணெய்க் கசிவுகளைச் சுத்திகரிப்பதற்கான இவரது ஆய்வுகள்தாம். Pseudomonas fluorescens என்னும் நுண்ணுயிரின் ஒரு வகையினைப்  பாவித்துப் பெறப்படும் இரசாயனப் பொருள் மூலம் இக்கசிவுகள் சுத்திகரிக்கப்படுகின்றன. பொதுவாக இவ்வகையான எண்ணெய்ச்சுத்திகரிப்புப் பொருட்கள் பெற்றோலியம் பொருட்களிலிருந்து பெறப்படுகின்றன. ஆனால் இவரது கண்டுபிடிப்போ நுண்ணுயிரியிலிருந்து பெறப்படுகின்றது. அத்துட ன் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் 2019இல் லவால்,மொன்ரியாலில் 'டிஸ்பேர்சா' (Dispersa) என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். வளர்ந்து வரும் இந்நிறுவனம் நுண்ணுயிரியிலிருந்து சவர்க்காரம் போன்ற வீடுகளில் சுத்திகரிக்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. உலகளாவியரீதியில், ஆரம்பிக்கப்பட்ட இவ்வகையான இரசாயன நிறுவனங்களில் 2022இல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் Global Startup Heat Map என்னும் தரவுகளைத் தேர்ந்தெடுக்கும் பொறிமுறையினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது ஆய்வுகளுக்காகப் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

நிவேதா பாலேந்திரா மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியும் , தற்போது மொன்ரியாலில் வசிப்பவருமான பெரியசாமி பாலேந்திரா , அமரர் ரமணி பாலேந்திரா (இவர் அமரர் 'தமிழர் மத்தியில்' நந்தகுமார் அவர்களின் சகோதரி.) இளம் வயதில் சாதனைகள் படைத்துவரும் நிவேதா பாலேந்திராவின் சாதனைகள் தொடர்ந்திட வாழ்த்துகள்.