அண்மையில் 'வாட்ஸ்அப்' (WhatsApp) மூலம் நண்பர் ஒருவரிடமிருந்து செய்தி வந்திருந்தது. Please do me a favour என்ற தகவலைப் பார்த்ததும் விளங்கியது நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்கு கணனித் திருடன் ஒருவனால் அபகரிக்கப்பட்டு விட்டதென. அச்சமயம் நண்பரும் அலைபேசியில் அழைத்தார். தன் 'வாட்ஸ்அப்' கணக்கு இவ்விதம் கணனித் திருடன் ஒருவனால் திருடப்பட்ட விடயத்தைக் கூறினார். ஒருவர் இலங்கையிலிருந்து பணம் அனுப்பும்படி தகவலைத் தன் நண்பர்களுக்கு அனுப்புவதாகக் கூறினார். அவர் தன் 'வாட்ஸ்அப்' கணக்கை மீண்டும் இயுங்கும் நிலையில் பெறுவதற்கிடையில் அவரது நண்பர்களில் ஒருவர் பணம் அனுப்பி விட்டிருந்தார்.
இவ்விதம் அவரது 'வாட்ஸ்அப்' கணக்குத் திருடப்பட்டதை அவர் தவிர்த்திருக்க முடியாதா? இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் அவர் தடுத்திருக்கலாம். அவரது 'வாட்ஸ்அப்' கணக்கின் பாவனையாளர் பெயர், கடவுச்சொள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட கணனித்திருடர் பெற்று விட்டிருக்கின்றார். அவர் அவற்றைப் பாவித்து நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்குக்குள் செல்ல முயற்சி செய்திருக்கின்றார். புதியதொரு அலைபேசியில் யாரோ ஒருவர் புக முயற்சி செய்வதைப்பார்த்த 'வாட்ஸ்அப்' நண்பரின் அலைபேசிக்குத் தகவலை அனுப்பி யாரோ ஒருவர் அவரது கணக்குக்குள் புக முயற்சி செய்கிறார். அவர் என்றால் அனுப்பும் இலக்கத்தைப்பாவித்து உட் செல்லவும். அத்துடன் அவ்விலக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமென்றும் கூறியுள்ளது.
அச்சமயம் நண்பர் நன்கு அறியப்பட்ட புகலிடத் தமிழ் அமைப்பொன்றிலிருந்து அழைத்த ஒருவருடனும் உரையாடிக்கொண்டிருநதார். அவர் ஏதோ அமைப்பின் சார்பில் கேட்டு, அதை நண்பரும் ஏற்றுக்கொள்ள, அதை நிறைவேற்ற அப்பொழுது 'வாட்ஸ்அப்' அனுப்பும் இலக்கத்தை அறியத்தரும்படி கேட்டிருக்கின்றார். நண்பரும் கொடுத்திருக்கின்றார். அவ்வளவுதான். அதுவரை அமைப்பொன்றின் பெயரைப்பாவித்து நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்த கணனித்திருடன் அவ்விலக்கத்தைப்பாவித்து நண்பரின் 'வாட்ஸ்அப்' கணக்குக்குள் நுழைந்து விட்டார். இங்கு நண்பர் முட்டாள்தனமாக ஏமாந்து விட்டார். நல்லவேளை , தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதைப்போல் நண்பரின் இழப்பு 'வாட்ஸ்அப்' கணக்குடன் போயிற்று. அது மட்டும் அவரது வங்கிக்கணக்காக இருந்திருக்கும் பட்சத்தில் கணனித் திருடன் நண்பரின் வங்கிக் கணக்கிலுள்ள பணம் முழுவதையும் சுருட்டிக்கொண்டு போயிருப்பான்.
நண்பர்களே ! அவதானமாக இருங்கள். உங்கள் கணக்குகளுக்கு 'ஈர் அடுக்கு அங்கீகாரம்' (Two way authentication) ஏற்படுத்தி கணக்குகளை உறுதியாக்குங்கள். உங்கள் கணக்குகளுக்குள் நுழையும்போது அவற்றுக்குரிய ஈரடுக்கு அங்கீகாரத்துக்காக அனுப்பும் Code இலக்கத்தை எவருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
(*ஓவியம் - AI)