பண்டைத் தமிழ்க் காதல்  - பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – இயற்கை சமூகம் உள்ளடக்கிய இந்நிலவுலகில் உயிரினங்களின் செயல்கள் யாவும் ஒன்றோடொன்று இணைந்தது! இது இயற்கையானது! இவ்வேட்கை இயல்பானது! எதார்த்தமானது! இதனை அறிந்தே தமிழ் ஆசான் தொல்காப்பியர்,

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்காப்பியம். நூ.)

என்றார். மனித குலத்தின் இயற்கை இயல்பான இன்ப நுகர்வாம் காதல்; அது அனைத்துக்குமான பிணைப்பு நிலை: அது இயற்கையோடு பொருந்திய ஒழுக்க நிலை; அவற்றை மானுட உடலுயிரினின்று பிரித்து அறிய முடியாது! அத்தகு காதலைப் பழந்தமிழகம் போற்றிற்று; நூல்களின் வழியாக உணர்த்திற்று:

இதனை அறிந்து காதலின் செயல்களில் ஒன்றாக,
யான் நோக்கும்காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்” (குறள்
)

என ஆண்மகன் பெண்ணை நோக்குகின்ற போது, பெண்ணோ நிலத்தினைப் பார்ப்பாள். ஆண் அவளை நோக்காதபோது அவனை பார்த்து புன்னகைத்து மகிழ்வாள் என்பார் வள்ளுவர். அத்தகு இனிமை மிகுந்த ‘காதல்’ இன்று கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதே திண்ணம்.

 பண்டைய வாழ்வியலை காதல் கொண்ட இரு மாத்திரை, அவர்களின் சிந்தயை, உளம் சார்ந்த அவர்களின் செயல்பாடுகளை, அக்காதலுக்குரிய துணையோரை, அக்காதல் நிகழுமிடங்களை, அக்காதல் கொண்ட மனத்தின் திண்மையை, உண்மையை தொல்காப்பியர் தெளிவுபட விளக்குகின்றார். காதல் சித்திரம் போல காதலர்களின் ஒவ்வொரு அசைவையும் தொல்காப்பியத்தில் நாம் படித்து இன்புற முடியும்.

பண்டைக் காதல் முறைமையை,

“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலதானையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினும் கடிவரை யின்றே”  (தொல்காப்பியம். நூ. 90)

 ஒத்த தன்மையுடைய ஆணும், பெண்ணும் எதிர்ப்படுவர். அவர்கள் உள்ளக் கிளர்ச்சியும், தேடல் வயப்பட்ட எண்ணமும் ஒன்று கூடுகிறது. அந்நிகழ்வு புதிய ஆக்கத்தை உருவாக்கும். ஐயுறுவர் குறிப்பாக ஆண் பெண்ணை கண்டு மயங்குகின்றான். அவள் பெண் தானோ? என ஐயுறுகின்றான். பின்னர் அவள் மானுட மகளே! எனத் தெளிகின்றான். (இருவருக்கும் இயற்கையாய் புணர்ச்சி ஏற்படுகின்றது)

“கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல” (குறள். 1100)

காதலுக்குரிய இருவரும் ஒருவர் கண்ணோடு மற்றொருவரின் கண்கள் பார்வையால் ஒத்துபோக வாயால் பேசும் சொற்களுக்கு பயனில்லாமல் போகும் என்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனர்.

“யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறுந்தொகை. 40)

ஆண் பெண் அன்புடை நெஞ்சமாகி செம்புலத்தினில் விழும் நீராய் ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்க இயற்கையான புணர்ச்சி நிலை தோன்றுகின்றது. ஆணின் குறிப்பை பெண் ஏற்கின்றாள். ஆண்மகன் அவளை தன்வயப்படுத்த முயலுகின்றான்.

 கண்ணால் கண்ட பின்னர் எல்லையில்லாத ஈர்ப்பு உருவாகுகின்றது. இருவரும் ஒருவர் நினைத்து உணவு உண்ணாமலும், மனம் கலங்கியும் நிற்க உடல் மெலிவு ஏற்படுகின்றது. உடல் மெலிவு கடந்து வெட்க நிலை உண்டாகின்றது. புற உலகில் பார்ப்பது எல்லாம் தம் காதலரே என எண்ணுகின்றனர். மோகத்தால் மயங்கி இனி வாழ்தல் அரிது என்ற முடிவுக்கு வருகின்றனர்.

 ஆண்மகன், பெண்மகளை காணுகின்றான் தன்னை முன்னிலைப்படுத்தி தம் சொல்லை அவள் கேட்குமாறும், அவளின் அழகு, பண்பு முதலியவற்றை புகழ்ந்து கூறியும் மகிழ்விக்கிறான். தம் காதல் உணர்வால் ஏற்பட்ட மெலிவை இரங்கி கூறி தலைவி மீதான காதலை உறுதியுடன் எடுத்துரைக்கின்றான்.

 இவற்றை இயற்கை புணர்ச்சி என தொல்காப்பியர் சுட்டுகின்றார். மேலும், தலைவியை அடிக்கடி கண்டு மகிழ்கின்றான், பிரிகின்ற போது கலங்குகிறான், நிலையான இல்லற வாழ்வை நினைத்து அடுத்து நிகழ வேண்டியதையும் உணர்ந்து பெண்ணிடம் உரைக்கின்றான். அவன் நண்பன் (பாங்கன்) அவனிடம் அவன் செயலை குற்றமாக எண்ண, அதனை கலைந்து தம் காதலை விளக்குகின்றான்.

 காதலியோடு நெருக்கமுடைய அவள் தோழியைக் கண்டு தலைவியை அடைய உதவுமாறு இரங்கி வலியுறுத்துகின்றான். தினைப்புனத்திலோ? வேற்றிடத்திலோ தம் காதலியை காணும் போத உன் ஊர் எது? உன் பேர் என்ன? என தண்மை பொருந்திய வினாக்களைத் தொடுக்கின்றான். தலைவி மீதுள்ள குறையை கூறி தோழி உண்மையை அறியும்படி கூறுகின்றான். திரும்ப திரும்ப கைஞ்சியே நிற்கின்றான். தோழி அலைக்கழிக்கின்ற போதெல்லாம் இரங்கி நிற்கின்றான்.

 தோழியை கெஞ்சுதலை விட்டு தலைவியின் காதல் வேட்கையை புரிந்து கொண்டு தலைவியை தழுவிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட தழுவிக் கொள்கின்றான். எல்லாம் அறிந்த தோழி ஐயப்பட்டு தலைவியை சந்திப்பதை மறுக்கும் போதெல்லாம் தன் பெருமையை கூறி வேண்டுகின்றான். காதல் நிகழாவிடன் ‘மடலேறுவேன்’ என எச்சரிக்கின்றான். இவை யாவும் காதலில் ஆண்மகனுக்கு நிகழும் செயல்களாம். முன்னோர் காட்டிய நெறிப்படி,

“காமத்திணையில் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆதலின்
குறிப்பினும் இடத்தினம் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான”
                       (தொல்காப்பியம். நூ. 106)

நாணும், மடனும் பெண்மைக்குரியதால் குறிப்பினாலும் தம் வேட்கையை வெளிப்படுத்வாள் இது பெவண்ணின் பண்பாக அமையும்.

 பெண்மகள் காதலனை மறைந்து நின்று பார்க்கின்றாள். குறிப்பாய் தலைவன், தன்னைக் காணுமாறு நிற்கின்றாள். நிரம்பிய காதல் வேட்கை மிகுதியால் காதலன் கூறிய சொல் கேட்டு எதிர்மொழி கூறாமல் நிற்கின்றாள். காதலன் காதல் வேட்கையை அறிந்து தாதலியை கெஞ்ச உடன்படாமல் மறுத்து நிற்கின்றாள். பின்னர் தலைவன் சொல்லை ஏற்கின்றாள். குற்றமில்லாமல் குறுநகைப்பை வெளிப்படுத்துகின்றாள். பின்னர் இணைத்ற்கு உடன்பட்டு நிற்கின்றாள். தலைவன் கையகப்பட்டதும் ‘எண்ண செய்தோம்’ என கலங்கியும், நாணப்பட்டும் நிற்கின்றாள். காதலன் பிரிய வருந்துகிற்ள். அவள் பாதுகாப்பின் அருமையைக் கூறி காதலனை வர வேண்டாம் என்று மறுக்கின்றாள். தம் நெஞ்சத்து வருத்தத்தைக் கூறுகின்றாள். காதலன் மனம் நொந்து உறுதி கூற மறுத்து பேசுகின்றாள். காதலன் வருகையின் போது ஏற்படும் இடையூறு நினைத்து தோழி கூற தலைவி மறுத்து பேசுகின்றாள்.

 காதல் ஊராருக்கும், சுற்றத்தாருக்கும் வெளிப்படுகின்றது. அலர் உருவாகுகின்றது. பெண்ணின் காதலை அறிந்து வீட்டுக் காவலில் குடும்பத்தினர் வைக்கின்றனர். எல்லாச் சூழலிலும் பெண்மகள் தோழியிடம் தம் காதலைப் பற்றியே எடுத்துரைக்கின்றாள். வேறு சுற்றத்தார்கள் பெண்மகளை பெண் பார்த்து திருமணம் பொருட்டு வர, அதனை தலைவி தடுக்க முயலுகின்றாள். பெற்றோர் அவளை நோக்கும் பொழுது அவள் தன் காதலை மறைத்து நிற்கின்றாள்.

காதலின் போது பெண்மகளுக்கு நிகழும் உள்ளத்து செயல்கள்

 ஓர் ஆண்மகனை கண்டு தீராத வேட்கைக் கொண்ட பின்னர் நிகழும் உடலியல் செயல்களை, உள்ளத்தில் நிகழும் ஈர்ப்பின் வெளிப்பாடுகளை தொல்காப்பியர் ‘மெய்ப்பாட்டியல்’ இயலில் அழகுற வெளிப்படுத்துகின்றார். முதல் அவத்தையாக,

“புகுமுகம் புரிதல் பொறிறுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைபு பிறர்க்கு இன்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப” (தொல்காப்பியம். நூ. 1207)

என்கிறார். அதாவது, ஆண்மகளின் புதிய முகத்தினை காணுதலால் புதிய நாட்டம் ஏற்படுகிறது. அதனால் சற்று நாணத்தால் நடுக்கமுற பெண்ணின் நெற்றியில் வியர்வை வெளிவருகிறது, அவன் மீது கொண்ட விருப்பத்தின் விளைவால் முகத்தின் புன்முறுவல் ஏற்பட அதை மறைத்து முகத்தில் சிரிப்பு தோன்றாதவாறு இருக்கின்றாள். அவனால் அவள் உள்ளம் சிதைவுபடுகிறது அது பிறருக்கு தெரியாதவாறும் மறைக்கின்றாள் (அவன் மீது கொண்ட ஈர்ப்பால்) உடலில் ஏற்படும் மாற்றத்தை பிறர் அறியாவண்ணம் மறைக்கின்றாள். இவையே காதல் நிகழ்வில் தோன்றும் முதல் நிலை மெய்ப்பாடுகளாம்.

 பின்னர் தன் கூந்தலை விரிக்கிறாள், தன் காதில் அணிந்த அணிகலனை களைகிறாள், முறையாக அணிந்து பிற அணிகலன்களையும் சீர் செய்கிறாள், ஆடை நெகிழ்கிறதோ என ஐயமுற்று ஆடையை கலைந்து பின்னர் அவிழ்த்து உடுத்துவாள். இவ இரண்டாம் நிலையில் நிகழும் மெய்ப்பாடுகளென 1208 ஆம் நூற்பாவில் விளக்குகின்றார்.

 மன்றாவதாக, காதலின் தீரா வேட்கையால் தன் அல்குல் பகுதியான அடிவயிற்றுப் பகுதி ஆடையினை தடவிச் சீர் செய்வாள். அணிந்த அணிகலன்கைள மீண்டும் சீர் செய்வாள், காதலால் வலிமையற்று இருக்கும் பெண்மகள் தான் வலிமை மிகுந்தவளாக காட்டத் துணிவாள். காதலின் ஈர்ப்பு மிகுதியாக நாணமடைந்து தனது இரு கைகளையும் மேலெடுத்து நிற்பாள் இவை மன்றாம் நிலை அவத்தையாகும் என்கிறார் தொல்காப்பியர். நான்காம் அவத்தையாக,

“பாராட் டெடுத்தல், மடந்தப உரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றுஅலர் நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
எடுத்த நான்கே நான்கென மொழிப” (தொல்காப்பியம். நூ. 1210)

என்று ஆண்மகன் பெண்களைக் கண்டு பாராட்டுகிறான். அப்போது ‘மடம்’ நீங்கி பெண்மகள் சில கருத்துக்களைக் கூறுவாள். பின்னர் காதலை மறுக்கும் சுற்றத்தாரை எண்ணி நாணுகிறாள். ஆண்மகன் கொடுக்கும் பொருளை ஏற்றுக் கொள்கிறாள். இவை நான்காம் நிலை மெய்ப்பாடுகளாக அமைகிறது, ஐந்தாவதாக, மது காதல் விருப்பத்தால் ஆண்மகளோடு விருப்பம் கொண்டு தெரிந்து அவன் எண்ணங்களுக்கு உடன்படுகிறாள். கூடி நிற்கும் செயல் தவிர்த்து மறுக்கிறாள். மறைந்து நின்று அவன் காணாத நிலையில் நிற்கிறாள். அவன் கண்ட பின்பு மகிழ்வாள் என்று (நூ. 1211) கூறுகிறார்.

“யான் நோக்குங்கால் நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (குறள்.)

என்பது போல ஆண்மகனை பெண்மகள் அவன் அறியாதவாறு மறைந்து நோக்கி மகிழ்கிறாள்.

ஆறாவது அவத்தையாக,
“புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையளவு உரைத்தலொடு
புலம்பிய நான்கே ஆறென மொழிப” (தொல்காபிபியம், நூ. 1212)

 தன் உடலின் புறத்தே ஒப்பனைகள் செய்தும் சிதைவுற்று காணப்படுவாள். தனிமையினால் புலம்புதல், மனம் கலங்கி நிற்பாள், அவளின் செயலற்ற நிலையை பிறரிடம் உரைப்பாள். இவை யாவும் ஆறாவது அவத்தையாக ஆறாம் நிலை மெய்ப்பாடுகளாய் பெண்மகளுக்கு நிகழும் என்பார் தொல்காப்பியர். அது மட்டுமன்று, காதலில் உணர்வுநிலை குறைந்த நிலையில் மேற்வறிய மெய்ப்பாடுகள் இல்லாமலும் போகலாம் என்று,

“வினையுயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே” (தொல்காப்பியம், நூ. 1213) என்றுரைக்கின்றார். இதற்கு மாறுபட்டு கைக்கிளை, பெருந்திணையென ஒருதலைக் காதல், பொருந்தா காதல் நிகழ்வுகளையும் தொல்காப்பியர் குறிப்பிட்டு செல்கிறார்.

 பெண்மகளின் பிரிவால் இன்பத்திற்குரிய அனைத்து பொருட்களை வெறுப்பது, துன்பகாலத்துப் புலம்புதல், உருவெளிப்பாடு கண்டு இரங்குதல், இடையூறுகளை ஆராய்ந்து கொண்டே இருத்தல், பசி ஏற்பட்டாலும் உண்ணாமலேயே கிடப்பது, உடலில் பசலை எனும் நோய் பரவி நிற்றல், குறைவாக உண்ணுவது, உடல் மெலிதல், தூங்காமலே கிடத்தல், கனவால் கலங்குதல், பெண்ணோ ஐயமுற்று ஆணின் காதலை பொய்யாகக் கருதுதல், பின்னர் மெய்தான் என்று நினைத்தல் (குழப்பமுறுதல்) ஐயுற்றே நிற்றல், அவனை சார்ந்தோர் பேசுவதை கேட்டு மகிழ்தல் காதல் அறமில்லை என கருதுதல், மனம் அழிந்து நிற்றல், பிறரோடு ஒப்பாக ஆணும், பெண்ணும் நினைத்து எண்ணுதல், (நம்ம ஆளப் போளவே அவள் இருக்கிறாள் என எண்ணும் போக்கு) ஒத்தது போல இருப்பதை எண்ணி மகிழுதல், ஆணின் பெயரை விரும்பி கேட்டல், மனக்கலக்கமுற்றே பேசுதல் ஆகிய யாவும் பொருந்தாத காதல் நிலையால் ஏற்படும் செயல்களாகும் என்கிறார் தொல்காப்பியர். (தொல்காப்பியம், நூ. 1216)

மேலும்,
 காதல் நிகழ்வில் ஏற்படும் இடையூறை எண்ணியே பேசுதல், கோபத்தை காட்டுதல், இருவரும் சந்திக்கும் போது அச்சம் காரணமாக அகலுதல், அவனோடு சேர்வதற்கு மறுத்தல், தூது செய்தலையே விரும்புதல், உள்ளம் கலக்கமுற்று இல்லத்திலேயே இருத்தல், நெஞ்சல் கலங்கியே நிற்றல், பேசுவதை மறுத்து நிற்றல் என இவை எட்டும் அழிவில் கூட்டம் (நூ. 1217) என்றும் இக்காதல் நிகழ்வு முறைகள் வெள்ளி பெறாது என்பதாகவும், இது பொருந்தாத காதலாகவே மாறுமென்பதும் தொல்காப்பியர் கூற்றாகும்.

 காதலில் வேண்டாதன எவைஎவை யென்றும் விளக்குகிறார்.
“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்” (தொல்காப்பியம், நூ. 1220)

 பொறாமை, இரக்கமற்று இருத்தல், வியந்து புறமொழி பேசுதல், வன்மையான சொற்கள், சோர்வு, தம் குடியை உயர்வாக எண்ணுதல் பணிவுடைமை மறத்தல், ஒப்பிட்டு நோக்கல் போன்றவை இல்லாமல் இருத்தலே காதல் மெய்ப்பாட்டிற்குரிய சிறப்பாக அமையும் என்கிறார்.

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல்காப்பியம், நூ.1219)

 1.குல பிறப்பு. 2. குடிமை சிறப்பு (ஒழுக்கம்). 3. வினை சிறப்பு. 4. வயது. 5. வடிவம். 6. காம நிகழ்விற்குரிய உள்ளத்துக் கிளர்ச்சி. 7. சால்வு. 8. அருளுடைமை. 9. உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் அறிவு. 10. உயர்தன்மை ஆகிய பத்து பொருத்தங்கள் இருபாலருக்கும் ஒத்து இருக்கும் போது தான் மேற்கூறிய காதல் ஒழுக்கத்தின் இயல்புநிலை சிறப்புறும் என்கிறார் தொல்காப்பியர்.

 இது மட்டுமல்லாது களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய இயல்களில் காதல் நிகழ்வுகள், திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கை முறை யென பண்டைய கால காதல் நிகழ்வுகளை பெரும்பகுதி சுட்டியுள்ளார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.