ஆய்வுச்சாரம்- இவ்வாய்வின் முதன்மை நோக்கம் சமூகத்தில் ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வுச் சிந்தனையைப் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் காணப்படுவதை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அடிப்படையில் விளக்கமுறை அணுகுமுறை கையளாப்பட்டுள்ளது. இவ்வாய்வில், திருக்குறள் போன்ற அற இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிகள் திணைச் சமூகத்திற்கு பின் தோன்றியதாகும். திருக்குறள் கட்டமைக்கும் ஒழுக்க நெறிகள் மக்கள் மத்தியில் மரபியல் சார்ந்த விழுமியங்களை ஏற்படுத்தியுள்ளன. திணை இலக்கிய சமூகத்தில் காணப்பட்ட ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வும் திருக்குறள் கட்டமைக்கும் ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வும் முரணானவை. வள்ளுவர் காலத்தில் தோன்றிய ஒழுகலாறுகள்  மக்களின் வாழ்வியல் முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. உதாரணமாக பெண்கள் குறித்த மதிப்பீடு, கல்வி, இல்லறம், நட்பு, பகை, மானம், சினம், போன்ற கருத்தியல்களைக் கட்டமைப்பதில் திணைச் சமூகமும் அற இலக்கியச் சமூகமும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. செவ்வியல் இலக்கியமான திருக்குறள் ஒழுக்க மரபுகளைச் சமூகத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கருத்தியல் வேட்கைக் கொண்டுள்ளது. உலகப் பொதுமுறை என்று போற்றப்படும் திருக்குறள் கல்வி குறித்தும் ஒழுக்கம் குறித்தும் அதீத அக்கரையுடன் விழுப்புணவைச் சமூகத்திற்கு ஏற்படுத்தியது. சமூக உற்பத்தி முறையில் திருக்குறள் கல்வி, ஒழுக்கம் குறித்த விழுப்புணர்வு கருத்தியலைக் கட்டமைப்பதில் வள்ளுவர் ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளார் என்பதினை ஆய்வாளர் உறுதிசெய்கின்றார்.

கருச்சொற்கள்: திருக்குறள், ஒழுக்கம், கல்வி, திணைச் சமூகம், நட்பு, பகை, இல்லறம், சமூக உற்பத்தி.

முன்னுரை

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைக்கின்றன. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுக்கு ஏற்ப மக்களின் வாழ்வியல் விழுமியங்கள் பெற்றிருக்க வேண்டும். “ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் மிக்கயிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி நலம் பெற மக்களிடம் விழிப்புணர்வு என்ற கருத்துநிலைத் தேவைப்படுகிறது” (ம.திருமலை, ஒப்பிலக்கிய கொள்கைகளும் பயில் முறையும் பக்கம் - 212). இவ்விதக் கருத்தானது மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையில் இன்றியமையாதக் கூறாகக் கருதப்படுகின்றது. மனிதன் தன்னிடமுள்ள ஆற்றலை எவ்வாறு வளர்ப்பது? எவ்வாறு தனது ஆற்றலைப் பயன்படுத்துவது? எவ்வாறு தடைகளைக் கடந்து செயல்பட்டு பிறருக்குப் பயன்படும் முறையில் தன் ஆற்றலை வழிமுறைப்படுத்துவது? என்பனப் போன்ற வினாக்களை எழுப்பி, அவற்றுக்கு விடை காண்பது நடப்புலகில் தேவையானதாக உள்ளது. இவ்வித விழிப்புணர்வு தனிமனிதனிடம் ஏற்படும் போது சமூக மனிதனாக அவன் மாறுகிறான். அதாவது தனது அறிவாற்றலை, நுட்ப அறிவை, ஒரு மனிதன் தனக்கு மட்டுமல்லாமல் தான் சார்ந்து வாழும் இனத்திற்கே பயன்படுத்துவதாக அமைகின்றது. ஆகையால், மனிதனின் வாழ்க்கை என்பது சமுதாயத்துடன் இணைந்த அமைப்பாக விளங்குகின்றது. இவ்வித வாழ்க்கையை உணர்த்தும் வள்ளுவர்,

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள்-435)

எனச் சுட்டிச் செல்கிறார். இதன்வழி வாழ்க்கை என்பது சமுதாய நிகழ்வுகளைச் சார்ந்தும் எதிர்நோக்கியும் செயல்படும் வினையாகும். இவ்வித வினையறிந்து செயல்படும் ஆற்றல் படைத்தவர் வாழ்க்கையில் மேம்பாடு அடைகிறார். இதனை மறந்தவர் தீ முன்வைத்த வைக்கப்போர் போல அழிந்து விடுகிறார் என்பதன் வழியாக வாழ்க்கையில் அச்சம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

சமூகம் மேம்பாடு அடைய வேண்டுமானால் இரண்டு அடிப்படைச் சிந்தனை வளரவேண்டும். மக்களின் அறியாமையைப் போக்குகின்ற கல்வி, மனித சமூகத்தை நெறிப்படுத்துகின்ற ஒழுக்கம் இவையிரண்டும் மக்களிடம் புரிதல் தன்மையோடு இருக்க வேண்டும். கல்வி குறித்த விழிப்புணர்வும் ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வும் சமூக மாற்றத்தின் கரணிகளாகும். எனவே இவ்வாய்வு, விழுப்புணர்வின் தேவை, கல்வியின் பயன், ஒழுக்கம் குறித்த விழுமியம், ஒழுக்கக் கட்டமைப்பில் முதன்மைக் காரணிகளாக இருக்கக் கூடிய, பிறன்மனை நயவாமை, சினம் கொள்ளாமை, உயிர்கொல்லாமை போன்ற கருத்தியல்கள் சமூகத் தேவையாக உள்ளன என்பதை எடுத்துரைகின்றன.

ஆய்வு முன்னோடிகள்
ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியங்களில் அறக்கோட்பாடு என்று பல்வேறு அறிஞர்களால் ஆராய்ந்து கட்டுரைகளும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒழுக்கக்கோட்பாடு என்பதைத் திருக்குறளை  வைத்து மட்டும் பல்வேறு ஆய்வாளர்களால் எழுதப்பட்டுள்ளன. வ.சுப. மாணிக்கம் எழுதிய வள்ளுவம், தமிழ்க்காதல் போன்ற நூல்கள் முக்கியமானவையாகும். மு.வரதராசனாரின் கயமை, அகல்விளக்கு, நெஞ்சிள் ஒருமுள் போன்ற நாவல்கள் தமிழ்ச்சமூகத்தின் ஒழுக்கவியல் மரபு குறித்து வந்த படைப்புகளாகும். ஆனால் அற இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் நூலில் ஒழுக்கம், கல்வி குறித்துப் பேசப்படுகின்றன. இவ்விரண்டு கருத்தியல்களும் வள்ளுவரால் முவைக்க வேண்டியத் தேவை என்ன என்பதை இதுவரை ஆராய்ந்து பார்க்கவில்லை.

வ.சுப. மாணிக்கம் எழுதிய வள்ளுவம் (1993), என்ற நூலில் பலநிலை அறம் என்ற கட்டுரை திருக்குறளில் காணப்படும் அற நெறிகள் மக்கள் வாழ்வியலோடு இணைந்து உள்ளன என்பதை விரிவாக ஆராய்கிறது.

சீ.சரவணஜோதி (2020), அற இலக்கியமும் திணைக் கோட்பாடும் என்ற கட்டுரை  அற இலக்கியங்கல் ஒழுக்க மரபுப் பின்புலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துறைக்கின்றது. வள்ளுவர் கட்டமைக்கும் வாழ்வியல் முறை, சமணர்கள் கட்டமைக்கும் வாழ்வியல் முறை, வைதீகம் கட்டமைக்கும் வாழ்வியல் முறை என்ற கருத்தியல் பின்புலத்தில் இவ்வாய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கை முறை சிறப்புடன் அமைய ஒழுக்கம் இன்றியமையாது என்ற கருத்தினை முன்னோடி ஆய்வுகள் முன்வைக்கின்றன. ஒழுக்கவியல் கட்டமைப்பை அற இலக்கியங்கள் முன்னெடுக்கின்றன என்பதை உணரமுடிகின்றது. இவ்வகையில் திருக்குறள் முன்வைக்கும் ஒழுக்கம் கல்வி குறித்தச் சிந்தனை தற்காலம் வரை பின்பற்றப்படுகிறது.

விழிப்புணர்வும் அவற்றின் தேவையும்
விழிப்புணர்வு என்பது காலந்தோறும் மனிதனுக்கு உணர்த்தப்பட வேண்டிய அறம். ஒவ்வொரு காலத்திலும் இதன் தேவைத் தொடரவும் செய்யும். இதனை, இலக்கியங்களின் ஊடாக அறிய முற்படுகையில் சங்க அகப்பாடல்,

“நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினாள் புன்னையது சிறப்பே” (நற்றினைப், பாடல். 172)

என்று கூறியுள்ளமையை நினைவிலிருத்தவேண்டியுள்ளது. இப் பாடலில் தலைவன், தலைவி இருவரும் தனியாகச் சந்திக்கும் பொழுது, தலைவி தலைவனிடம், இவ்விடத்தில் இருக்கும் புன்னை மரம் என் தங்கையென்று, அன்னை முன்னமே கூறியுள்ளாள். இவ்விதக் கருத்து, மனிதன் இயற்கையை உடன் பிறப்பாக நினைத்தான் என்று காண்பதைவிடத் தலைவியின் மதிநுட்பத்தைப் புலவர் வழி அறிவதே இவ்விடத்தில் பொருத்தப்பாலாகும். ஏனெனில், காதலர் இருவரின் தனியான நெருக்கம் தவறு புரிதற்கு ஏதுவாகும் என்பதனை அறிந்த புலவர் இவ்விடத்தில் இருக்கும் மரம் எனது தங்கை. ஆகையால், இதனிலிருந்து விரைவில் நீங்குவோமாக என்ற கருத்தைத் தலைவி முன்வைக்கிறாள். காதல் வாழ்க்கையில் ஏற்படும் தலைவியின் ஒழுக்கத்தின் சிறப்பையும் விழிப்புணர்வையும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வித விழிப்புணர்வு நடப்புக் காலத்தில் தேவையானதாகு. மனிதன் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் தன்னிடமிருந்தும், சமுதாயத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்வதாகிய செயல்பாடு விழிப்புணர்வாகும். இதனை, உடன்பாடு, எதிர்மறை என்ற இரு எதிர்வுகளின் அடிப்படையிலும்; உணர்வு, செயல்பாடு என்ற புலப்பாட்டு நெறியின் வாயிலாகவும் அறியவேண்டும்.

கல்வியின் பயன்

மனித வரலாற்றில் கல்வி பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று வருகின்றது. மனிதனின் முழுமையான வளர்ச்சிக்குக் கல்வி வேண்டும். “கல்வி எனும் ஊடகமானது, மனிதன் தம்முடைய சமுதாயப் பண்பாடுகளை வெளிப்படுத்தவும்; அதனை வளர்க்கவும், பல்வேறு அறைகூவல்களை ஏற்கவும், மற்ற பண்பாடுகளைத் தனதாக்கிக் கொள்ளவும் கல்வி பயன்படுகிறது. இவ்விதக் கல்வி தேசிய ஒருமைப்பாட்டிற்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் உருக்கொடுப்பதாக அமைகின்றது” (தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-13, ப.706). இக்கல்வியானது மனித ஆற்றல் வளம் மேம்படவும், ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்குத் தடத்தினை அமைப்பதாகவும் உள்ளது. திருவள்ளுவர் கல்வி என்னும் அதிகாரத்தில் கல்வியின் பயன்பாடு, அவற்றின் தேவை ஆகிய இரு கூறுகளில் இக்கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். நடப்புக் காலக்கட்டத்தில் இப்பணியினை அறிவொளி இயக்கம் மற்றும் அனைவருக்கும் கல்வி ஆகிய திட்டங்களின் வாயிலாக அரசு செயல்படுத்துகிறது.

சமய நெறிகளும், சித்தர்களும் மனித உடலின் உபாயம் அறிந்தவர்கள். உடற் கூறுகளின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களுள் திருவள்ளுவரும் ஒருவர். மனித உடல் கூறுகளின் பயன்களையும் கல்வியின் பயனையும் ஒற்றுமைப்படுத்துகிறார். இதனை திருவள்ளுவர்,

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள்-392)

என்ற குறளின் வழியும்,

கண்ணுடையோர் கற்றோர் (குறள்-303)

என்ற குறளின் வாயிலாக, உலகில் வாழுகின்ற உயிர்களுக்குக் கண்கள் எவ்வளவு பயனுடையதோ அந்த அளவிற்கு மனிதனுக்குக் கல்வி பயனுடையதாகும் என்ற கருத்தியல் முன்வைக்கப் படுகிறது. கல்வி இல்லாதவன் முகத்தில் இரண்டு புண்ணுடையவன் என்கிறார். இத்துடன் வாழும் உயிர்க்கு என்று அவர் பொதுவாகக் கூறியதன் நோக்கம், உலகில் வாழுகின்ற உயிர்கள் ஓரறிவு முதல் ஆறு அறிவு வரை கொண்டிலங்குவன. இவற்றில் கல்வியறிவைப் பெறக்கூடிய தன்மை மனிதனிடம் மட்டுமே உள்ளது என்பதனை மிகவும் நுட்பமாகக் கூறுகின்றார். இதனையடுத்து,

கேடில் விழுச்செல்வம் கல்வி (குறள்-400)

என்ற குறள் வழி, கல்வியானது உலகில் வாழுகின்ற உயிர்களின் அடிப்படைச் செயல்பாடு ஆகும். தம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கல்வி, நிறைவுடையதாகவும், பயன் உடையதாகவும் இருக்க வேண்டும். இப்பயனைத் தரும் செல்வம் கல்வியே என வள்ளுவர் சுட்டிக் காட்டினார்.

வினைக்கோட்பாடு
மனிதன் பிறப்புக் கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவன். இதனைத், தத்துவ மரபுகளும் சமய நெறிகளும் மையப்படுத்தி இயக்குகின்றன. இவ்விதப் பிறப்பைப் பற்றிய நம்பிக்கையானது வேதகாலம் முதல் நடப்புக் காலம் வரை தொன்று தொட்டு வருகின்றது. வினைக் கோட்பாட்டின் நம்பிக்கையால் மனித ஆற்றல் மேம்படுத்தப் படுகின்றது. வள்ளுவர் இதனை,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து    (குறள்-398)

என்ற குறள் மூலம் விளக்குகிறார், வேதம், தத்துவம், சமயம் இவற்றின் மையத்தை வள்ளுவர் அன்றே அறிந்திருக்கிறார். இதன் அடிப்படையில் கல்வியானது ஏழு பிறப்புக்கும் பயனைத் தரும் என்ற விழிப்புணர்வுச் சிந்தனையைச் சமூகத்திற்கு உணர்த்த விழைந்துள்ளார். எனவே, கல்வியைக் கற்றால் பிற்கால சந்ததி செழிப்புடன் வளரும் என்ற விழுப்புணர்வை ஏற்படுத்துகிறார் வள்ளுவர்.

ஒழுக்கம்
மனிதனின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக ஒழுக்கம் கட்டமைக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றது. இவ்வித ஒழுக்கம் இயங்கியல் தன்மை கொண்டதாக இருப்பதால், இவை மரபுரீதியானக் கருத்தாக்கமாக மாறுகின்றன. இவ்விதக் கருத்தானது கால சுழற்சியில் மனிதனை எடைபோடும் தளமாக உருவெடுக்கிறது. இவ்விதத் தளத்தில் இயங்குவதற்கு மனிதன் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்நிலையில் இயங்கும் மனிதனின் செயல்பாடுகளைக் கொண்டு, சமூகம் அவனை ஒழுக்கம் சார்ந்தவன் சாராதவன் என்று மதிப்பிடுகின்றது. இதனை “லீய்ட்டன், ஒரு பொது நோக்கை நோக்கி நிலையாகவும் உறுதியாகவும் ஒரு சேர ஈர்க்கும் மனிதக் குழுவின் ஆற்றலே ஒழுக்கம் எனப்படும் என்கிறார்”.இவ்வித ஒழுக்கத்தை வள்ளுவர்,

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் (குறள்-131)

என்று சிறப்பிக்கிறார். இதன் மூலம் உயிரினும் மேலாக ஒழுக்கம் மதிக்கப் பெறுகிறது, என்ற கருத்தானது மனிதனிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மனித வாழ்க்கையானது கூடி வாழும் வாழ்க்கை அமைப்புடையதால் உறவுகள் விரிந்து காணப்படுகின்றன். இவ்வித உறவுகள் எப்போதும் சமநிலையில் இருப்பதில்லை. ஏற்றம், தாழ்வு என்று எதிர்நிலையில் இயங்குவதால் மனித வாழ்க்கை நன்மை, தீமை என்ற கருத்து நிலையில் இயங்குகின்றன. உறவுகளின் வாயிலாக நன்மையைப் பெறும் மனித வாழ்க்கை மேல்நிலை அடைகின்றன. தீமையைப் பெறும் மனிதன் சினம், குற்றம் செய்தல், நடத்தை வேறுபாடு என்று சமூகம் விரும்பாத வழிகளில் சென்று வாழ்க்கையை அழித்துக் கொள்கிறான். திருவள்ளுவர் இதனை,

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம் (குறள்-305)

எனச் சுட்டிக் காட்டினார். இதன் வழி சினம் என்பது தன்னையே கொல்லும் கருவி என்ற கருத்து வலுப்பெறுகிறது. எனவே, சமூகத்தில் கோபம் இன்றி வாழவேண்டும் என்ற கருத்தியலைப் வெகுளாமை, பகைமாட்சி, பகைத்திறம் தெரிதல், உட்பகை, படைமாட்சி, படை செருக்கு, என்ற அதிகாரங்கள் வழி எடுத்துறைக்கிரார்.

கொல்லாமை
கொல்லாமை என்ற கருத்தியல் திணைச் சமூகத்திற்கு பிந்தியதாகும். இக்கருத்தியல் சமண மதங்களின் தாக்கத்தால் சமூகத்தில் வலுவடைந்தது. எனவே,

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று (குறள்-326)

என்ற குறளில் கொல்லாமை என்ற சொல்லை உரையாசிரியர்கள் ஒன்று முதல் ஐந்து அறிவு வரை உள்ள உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இதைச் சரியென்று ஏற்றுக் கொண்டாலும், “இவ்விலக்கியம் தோன்றிய காலப் பின்னணி என்பது வீரயுகக்காலம் சிறப்புப் பெற்ற காலம். இக்காலத்தில் கொல்லுந் தொழிலினாலே நிறுவப்பட்ட அரசுகள் செழித்து வளர்வதற்கு கொல்லாமை என்ற கருத்து தேவைப்பட்டது”. கைலாசபதி பண்டைத்தமிழ்ச் சமூகம் வாழ்வும் வழிபாடும் என்ற நூலில் கூறுகிறார் (பக்கம்-120). ஆகையால், கொல்லாமை என்பது மனிதனையும் சார்ந்த கருத்தாகத்தான் இருந்திருக்க முடியும். கொல்லாமையைக் கடைப்பிடிப்பவன் உயிரை எமன் கூடக் கொண்டு செல்ல முடியாது என்று வள்ளுவர் திண்மையாகக் கூறுகிறார். முன்பே கூறியது போல் மனித வாழ்வு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. ஓரே காலத்தில் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து, மனதளவில் வெறுப்பை ஏற்படுத்தவும் செய்கின்றது. இவ்விதக் கருத்து நடப்புக்காலத்தில் கள்ளுண்டல் என்ற செயல்பாட்டோடு பொருந்தி வருகின்றது. வள்ளுவர்

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு    (குறள்-924)

என்ற குறளில், கள்ளுண்ணும் பெருங்குற்றத்தின் வழி ஒருவனிடம் உள்ள நல்ல பண்பு அவனைவிட்டு நீங்கிவிடும் என்கிறார். ஆகையால், உலகியல் வாழ்வு என்பது நன்மையை நோக்கிய நகர்வு ஆகும். மேற்கூறிய குற்றம் நீங்கிய வாழ்க்கை மனித ஆற்றலை மேம்படுத்துவதாக அமையும்.

இல்வாழ்க்கை
இல்வாழ்க்கை மனிதனை அடையாளப்படுத்தும் கூறுகளில் என்பது ஒன்றாகும். இல்லற வாழ்க்கையில் முதன்மைப் படுத்தப்படுபவள் பெண். ஆகையால் பெண்ணை மனைத்தக்க மாண்புடையவள் என்கிறார் வள்ளுவர். இவர் இல்லறத்தில் உடைமைப் பொருளாக்கப்படுவதுடன் கணவனின் தனிச் சொத்தாகக் கட்டமைக்கப்படுகிறாள். இக்கருத்தானது நடப்புக்காலத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்வாகும். காலந்தோறும் பெண் நுகர்வுப் பொருளாகப் கட்டமைக்கப் பட்டிருப்பதன் வழி திருவள்ளுவர் தம் நூலில் பெண்களுக்கான ஒழுக்க நெறிகளை வரையறை செய்வதற்கு முற்பட்டிருக்கிறார் என்பதைத் திருக்குறள் அதிகாரங்களின் அமைப்பின் வழி அறியலாம். இவ்வித ஒழுக்க நெறிகள் பெண்களிடம் நிறை காக்கும் காப்பே காப்பு என்று காக்கப்பட்டு போற்றப்பட்டன. இவ்விதச் செயல்பாடுகளுக்குக் காரணம் யாதெனில், பெண் இனத்தின் மீதான ஆண் இனத்தின் நுகர்வுச் செயல்பாடு எல்லை மீறிய நிலையில் உள்ளதாகும். பெண்கள் தொடர்பான ஒழுக்க நெறிகள் குறித்த விழிப்புணர்வு நடப்புக் காலத்திலும் தேவைப்படுகின்றன. வள்ளுவர் இதனை,

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண் (குறள்-146)

என்ற குறளில் பிறன் மனைவியிடம் நெறிகடந்து செல்பவன் பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு வகையான குற்றத்திற்கும் ஆட்படுவான் என்ற கருத்தை முன்வைக்கிறார். ஒழுக்கம் சார்ந்த கருத்தியல் கொண்டு இதனை அணுகும்போது, குற்றம் நீங்கிய வாழ்க்கை முறைகள் கொண்டு வாழ்பவன் சமுதாயம், இனம் ஆகியவற்றில் மேம்பாடு அடைகின்றான் என்பதை அறிய முடிகிறது.

முடிவுரை
மனித வாழ்க்கை தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பதன் ஊடாகப் பல மாற்றங்களும் தோற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதன்வழி மனிதனின் வாழ்வியல் முறைகள் ஆக்கம் பெற்று வருகின்றன. இதனை, மேலும் வலுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு என்ற கருத்தைப் பனுவலாசிரியர்கள் தம் பனுவல்களில் திட்டமிட்டு நுட்பமாகக் கையாண்டுள்ளனர். விழிப்புணர்வானது மனிதன் சமூகத்தில் செயல்பாடுகளிலிருந்தும், தம் இனத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்ற செயல்பாடாக மேற்கொள்ளப்படுகிறது. பல நுட்பமான வாழ்வியல் முறைகளைத் தரும் திருக்குறள் போன்ற நூல்களில் கல்வி குறித்த செய்தி மனித உடல் உறுப்புகளின் ஒரு கூறாகக் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒழுக்கம் குறித்து வரும் கருத்துக்கள் நடப்புச் சூழலுக்கும் பொருந்திப் போகும் முகமாக அமைகின்றன. இவ்விதக் கருத்தியல் மனிதப் பண்பாட்டை உயர்வடையச் செய்வதாகவும், வாழ்வியல் முறைகளை நெறிப்படுத்துவதாகவும் மனிதத்தை மேல்நிலைக்கு கொண்டு செல்வதாகவும் அமைகின்றன.


உசாத்துணை நூற் பட்டியல்:

துரைசாமிப்பிள்ளை, அவ்வை (1996) - நற்றிணை, சென்னை, கழக வெளியீடு.

கைலாசபதி .க (1999) - பண்டைத்தமிழர் வாழ்வும் வளமும், குமரன் புக்ஸ் ஹவுஸ்

கணேசராஜா. K (2018) - கீழைத்தேய சிந்தனை மரபில் ஆசாரக்கோவை ஒழுக்கவியல் நோக்கு, Journal Of Social Review, Vloume 5 (1).

Kovinthasami. M. S., Joseph. N., Editor., (2013), Valviyar kazanjiyam, Thanjavur: ThanjavurTamil university.

Manikam., Vasuba., (1993), Valluvam, Chennai: Manivasakar pathipagam. http://www.tamilvu.org/library/nationalized/pdf/65-va.suba.manikkam/valuvam.pdf

Saravanajothi, S. (2020, jun14), Kopaththin moziyum veliyum, Sivakasi: Vahai Puplication.com., http://vahaipublication.com.

Saravanajothi, S. (2020), Ethic literature and tradition of thinnai theory, Journal Of Tamil Studies Vo 1 No 1., https://ejournal.upsi.edu.my/index.php/JTS/issue/view/321

Thirumalai. Ma., (2005), Oppilakkiya Kolkaikalum Payilmuraiyum, Madurai: Meenachi puththaga nilaiyam.

Varatharasanaar., Muva., Thirukural, http://www.tamilvu.org/library/l2100/html/l2102vur.htm

* கட்டுரையாளர் -  உதவிப்பேராசிரியர் (தமிழ்) , தியாகராஜர் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு, இந்தியா.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.