மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு நிலையில் இந்தக் கட்டுரை ஆய்கிறது.

படகர்களின் இறப்புச்சடங்கில் இன்றியமையானதாகத் திகழக்கூடிய இறந்தவர்களின் பாவத்தினைப் போக்கும் “கரு ஹரசோது” சடங்கில் இடம்பெறும் “பெள்ளிய கம்புக ஒரெயலி” (இறந்தவரின் ஆன்மா வெள்ளியால் ஆன கம்பத்தில் உராயட்டும்) என்ற மரபார்ந்த சொல்வழக்கு வெள்ளிக்குப் படகர்களிடம் உள்ள மதிப்புநிலையையும் அவர்தம் வாழ்வியலில் வெள்ளி பெற்றுள்ள இடத்தினையும் உணர்த்துகின்றது. வெள்ளியைப் படகர்கள் “பெள்ளி” என்று அழைக்கின்றனர். இப்பெயரை தம் ஆண்பால் பெயராகவும் இடுகின்றனர். வெள்ளிப் போன்றவன் எனும் அடிப்படையில் “பெள்ளா” என்ற பெயரும் இவர்களிடம் உண்டு. பொதுவாகவே “மாதா – மாதி”, “மல்லா – மல்லெ”, “களா – காளு” என்று இருபாலிற்குரிய இவர்களின் தொன்மையான இணைபெயர்களுள் வெள்ளியைக்குறிக்கும் “பெள்ளி”, “பெள்ளா” எனும் பெயர்களுக்கான பெண்பால் பெயர்கள் இல்லை. வெண்மை நிறத்தினைப் படகர்கள் “பெள்ளெ” என்கின்றனர். மேற்கண்ட “பெள்ளா” என்ற பெயரை வெண்மை நிறமுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே நீலம்கலந்த வெண்மைநிறமுறைய வெள்ளியின் நிறத்தன்மையினைக் கொண்டு படகர்கள் வெள்ளிக்கு “பெள்ளி” என்று பெயரிட்டிருக்கலாம்.

பங்கரா –

“பங்கரா” என்ற படகுச்செல் ஆபரணம் என்று பொருள்படுகிறது. படகர்களின் மரபார்ந்த ஆபரணங்கள் பெரும்பாலும் வெள்ளியால் ஆனவை. “செருப்பினிகெ”, “மாலெ மணி” (அல்லது) “குப்பிகெ மணி”, “உங்கரா”, “முத்தரா”, “குண்டு”, “குசுறு”, “பே” போன்றவை படகர்களின் மரபார்ந்த வெள்ளி ஆபரணங்களாகும். இவைகளனைத்தும் சடங்கியல், அழகியல் சார்ந்து படகர்களின் வாழ்வியலில் தவிர்க்கவியலாதவைகளாகும். இவர்தம் வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்திலும் வெள்ளியே முதன்மை வகிக்கின்றது.

படகர்கள் தம் வெள்ளி ஆபரணங்களுக்கு இட்டுள்ள பெயர்களின் காரணங்கள் பெரும்பாலும் தம் சூழலோடுப் பொருந்தக்கூடியவையாகும். சான்றாக “குப்பிகெ மணி” என்ற ஆபரணத்தின் பெயர்க்காரணத்தினை நோக்கும்போது “குப்பெ” என்பது படகுமொழியில் குவியல் என்று பொருள். குவியலான இறகுகளைக்கொண்ட சிட்டுக்குருவி வகையொன்றினை இவர்கள் “குப்பிசி” என்று அழைக்கின்றனர். இந்தக் குப்பிசி பறவையைப் போன்ற அமைப்புடையதால் இந்த ஆபரணம் “குப்பிகெ மணி” என்று பெயர்ப்பெறுகின்றது. அதே நிலையில் வளையலைப் படகர்கள் “பே” என்று அழைக்கின்றனர். “கை பே”, “முங்கை பே”, “தோ பே” என்று மூன்றுவிதமான வளையல்களைப் படகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். படகு மொழியில் “பே” என்பதற்கு வாய் என்ற பொருளுமுண்டு. திறந்த வாயினுடைய அமைப்பினை ஒத்திருப்பதால் இதற்கு “பே” என்று பெயரிட்டுள்ளனர். அதேபோல “உங்கரா” என்பது விரலணியைக் குறிக்கின்றது. “உக்கு” என்றால் படகுவில் “நுழை” என்று பொருள். “உக்குவது” என்றால் ‘நுழைவது’ என்று பொருள். ஆகவே விரலில் நுழைகின்ற ஆபரணமாக இருப்பதால் இதற்கு இப்பெயரிட்டுள்ளனர். அதேபோல “முத்தரா” என்பது முத்திரை என்று பொருள்படவிளங்கும் ஆபரண வகையாகும். இந்த “முத்திரா” தனித்த அமைப்புடையதாகவோ, இல்லை ஏதேனுமொரு ஆபரணத்தின்மீது மரபார்ந்த இம்மதிப்பு ஏற்றப்பட்டதாகவோ அமைந்திருக்கும். பெரும்பாலும் படகர்களிடையே விரலணியே “முத்திராவாக” அமைந்திருக்கின்றது.

குறியீட்டு நிலையில் வெள்ளி ஆபரணங்கள் -

முத்திரா மற்றும் உங்கரா -

படகர்களின் சமூகம் மற்றும் வாழ்க்கைவட்டச் சடங்குகள் அனைத்திலும் வெள்ளி ஆபரணங்கள் குறியீட்டு நிலையில் மட்டுமே அமைவது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக “பெள்ளி உங்கரா” (வெள்ளி மோதிரம்), “முத்தரா” (முத்திரையாக விளங்கும் வெள்ளி மோதிரம்) எனும் இணை விரலணிகள் சமூகம் சார்ந்த, மரபார்ந்த சடங்குகளில் இன்றியமையான குறியீடுகளாக இடம்பெறுகின்றன. “பெள்ளி உங்கரா” எனும் விரலணி இருபாலருக்குமான ஆபரணமாகும். ஆனால் “முத்தரா” என்பது ஆண்கள் மட்டும் அணியக்கூடியது. குறிப்பாக சமூகத்தின் “கவுடர்” (தலைவர்), “பார்பத்தி” (ஆளுநர்), “கவுண்டிக்கெ” (ஊர்த்தலைவர்) போன்ற முக்கிய சமூகப்பொறுப்பிலுள்ளவர்கள், அவர்களின் பொறுப்பின் குறியீடாக, அடையாளமாக இதை அணிகின்றனர். அவர்கள் இந்தப்பொறுப்பினை ஏற்கும்போது அணியும், மரபார்ந்த வழியில் வரும் இந்த ஆபரணத்தினை அவர் இப்பொறுப்பில் உள்ளவரை அணிந்திருப்பர். அவருக்குப்பின் அடுத்து இப்பொறுப்பிற்கு வருபவர்கள் அவர் அணிந்துக் கொண்ட அம்முத்திரையை அவரின் ஆசியோடு அணிந்துக் கொள்கின்றனர். இந்த ஆபரணத்தோடு “பெள்ளி உங்கராவினையும்” அணிந்துக் கொள்வதுண்டு.

சமூகம்சார்ந்த அனைத்து சடங்குகளிலும் அதை முன்னின்று நடத்தும் மேற்கண்ட சமூகப் பொறுப்பிற்குரியவர்கள் இந்த “முத்திரா” ஆபரணத்தினை அணிந்திருப்பது கட்டாயமாகும். இத்தகுச் சமூகச் சடங்குகளின்போது தம் முன்னோர்களால் மரபார்ந்து வழிவழியாக அணியப்பட்டதாக விளங்கும் இந்த விரலணிகள் படக முன்னோர்களின் குறியீடாக அமைகின்றன. அவ்வாபரணம் ஏதேனும் சிதிலமடையும்போது ஊரார் பொதுவில் அதைச் செப்பனிடவோ, புதிதானவொன்றினை ஆக்கவோ செய்கின்றனர்.

சமூகம் சார்ந்த சடங்குகளில் சடங்கிற்குரிய எல்லா ஏற்பாடுகளும் முடிந்ததும், அதற்கு தலைமைவகிக்கும் ஊர்த்தலைவர் தம் கையில் அணிந்திருக்கும் இந்த முத்திரையைக் கழற்றி அச்சடங்கிடத்தில் வைத்து தம் முன்னோர்களை அழைக்கின்றார். அவரைத்தொடர்ந்து மற்றவர்களும் தம் முன்னோர்களை வணங்குகின்றனர். இச்சடங்கு முடியும்வரை தம் முன்னோர்களின் குறியீடாக இந்த முத்திரைகள் அச்சடங்கில் இடம்பெற்றிருக்கும். எல்லா சடங்குகளிலும் இந்த மரபார்ந்த முறையில் தம் முன்னோர்களை அழைப்பது படகர்களின் மரபாகும்.

குலதெய்வக் கோயில் சடங்கிற்கான விரதத்தினை மேற்கொள்ளும் காலத்திலும் தம் விரதத்திற்கான காப்பாக படகர்கள் இந்த முத்திரையை அணிகின்றனர். மரபார்ந்த மற்றும் சமூகப் பொறுப்பிற்குரியவர்கள் வாழ்கின்ற, வாழ்ந்த இல்லத்தினை “முத்துரு மனெ” (முன்னோர்களின் வீடு) என்று இந்த முத்திரை ஆபரணத்தினைக் கொண்டே பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த முத்திரைக்குப் படகர்கள் மரபார்ந்து பெரும் புனிதம் மற்றும் மதிப்புநிலையைக் கட்டமைத்துள்ளனர். தம் ஊரிற்கு வெளியே நடக்கின்ற நிகழ்வுகளில் “பெள்ளி உங்கராவினை” கொண்டும் தம் முன்னோர்களை அழைப்பதுண்டு.

“பெள்ளி உங்கரா” படகர்களிடம் பெரும்பாலான சடங்குளில் இடம்பெறும் ஆபரணமாகும். குறிப்பாக அனைத்து வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும் இந்த ஆபரணம் குறியீட்டு நிலையில் இடம்பெறுகின்றது. குழந்தைக்குப் பெயர்ச்சூட்டும்போது விளக்குத் திரியியோ அல்லது நூலிலோ இவ்வணியைக் கோர்த்து குழந்தையின் கழுத்தில் கட்டுகின்றனர். ஒரு வகையில் இந்த ஆபரணத்தை (வெள்ளி) படகு குலத்தின் குலக்குறியீடாக கருதக்கூடிய இடமுமுண்டு. புதிதாக இந்தக் குலத்தில் பிறந்துள்ள பிறப்பினை வரவேற்கும் விதமாகவும், அச்சிசுவிற்கு முன்னோர்களின் ஆசி கிட்டுவதற்காகவும் பெயர்சூட்டும் நிகழ்வில் இவ்வணி முன்னோர் மற்றும் குலத்தின் குறியீடாக விளங்குகின்றது. “கச்சு கங்குவ” எனும் வெங்கலத்தட்டில் சாமைச்சோறு, பால் ஊற்றி, அத்துடன் தம் முன்னோர்களின் குறியீடாக இந்த வெள்ளி மோதிரத்தினையும் அத்தட்டில் இட்டு குழந்தைக்கு ஊட்டிப் பெயரிடுகின்றனர். ஒருவகையில் இச்செயலை அறிவியல் நோக்கிலும் காணும் இடமுண்டு. வெள்ளி சிறந்த கிருமிநாசினியாக திகழ்வது நாம் அறிந்ததே. பூப்படைந்த பெண்களும், திருமணமான ஆண்களும் தம் வலக்கரத்தில் இந்த “பெள்ளி உங்கராவினை” அணிந்திருப்பது இவர்களின் பண்பாடாகும். உண்ணும்போது இவ்வணியிலிருந்து கரைந்துசெல்லும் வெள்ளி உடலிற்கு எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் என்பதும் இவர்களின் நம்பிக்கையாகும்.

பூப்புச் சடங்கின்போதும் பூப்பெய்திய பெண்ணின் தகுதி மற்றும் பொறுப்பிற்கான குறியீடாக இந்தப் “பெள்ளி உங்கரா” திகழ்கின்றது. வளர்ப்பிறைக் கண்டதும் வீட்டினுள் வைக்கப்பட்டிருக்கும் “மடக்கெ” எனும் மண்குடுயில் முழுவதும் நீரூற்றி, அதனுள் இந்த வெள்ளி மோதிரங்களையும் அதன் மேல் தும்பை மலரினையும் இடுகின்றனர். வீட்டிற்குள் நுழையும் அந்நிறைப்பெண் தன் முன்னேர்களை நினைத்து, தம் வலது காரத்தினால் அம்மண்சட்டியினுள் உள்ள மோதிரங்களை எடுத்து தம் வலதுகரத்தில் அணிந்துக் கொள்கிறாள். அவள் அம்மண்சட்டியினுள்ளே தம் கரத்தினை நுழைக்கும்போது வெளியே சிந்தும் தும்பை மலரிட்ட நீரும், எடுத்து அணியும் வெள்ளி மோதிரமும் வளமைக் குறியீடாக விளங்குகின்றன. மேலும் பூப்புச் சடங்கிற்குப்பிறகு ஒரு குடும்பத்தினை நிர்வகிக்கும் தனக்கான பொறுப்புணர்வு மற்றும் திருமணத்திற்குரிய பருவமெய்தியதன் குறியீடாகவும் அவள் இம்மோதிரத்தினை அணிந்துக்கொள்வாள். ஆண்களும் உரிய பருவம் வரும்போது எருமையை முதல்முறையாக பால்கறக்கும் “மடிகரவது” சடங்கினை மேற்கொள்ளும்போதோ, தம்முன்னோர்களின் இல்லங்களுக்குச் சென்று தம் பருவவயதிற்கு அடுத்தநிலைக்கான வாழ்விற்கு ஆசிபெறும் சடங்கினை மேற்கொள்ளும்போதோ இந்தப் “பெள்ளி உங்கரத்தினைத்” தம் அடுத்தக்கட்ட பொறுப்பிற்கான குறியீடாக அணிகின்றனர்.

திருமணத்தின்போதும் ஆண் மற்றும் பெண்வீட்டார் முதலில் வாங்குகின்ற ஆபரணமாக இந்த வெள்ளி மோதிரம் விளங்குகின்றது. திருமணப்பெண்ணை அழைத்துவர பெண்வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்வீட்டினைச் சார்ந்த ஐவர் இந்த வெள்ளி மோதிரத்தினை விளக்குத்திரி அல்லது நூலில் கோர்த்து திருமணப்பெண்ணிற்குக் கட்டுகின்றனர். இச்சடங்கினை “உங்கரமணி கட்டுவது” என்கின்றனர். நூலில் கோர்க்கப்பட்ட இந்த வெள்ளிமோதிரத்தினை “உங்கரமணி” என்று அழைக்கின்றனர். இதைக்கட்டியதும் அப்பெண் ஆண்வீட்டிற்கு உரியவளாகிறாள். இந்தச் சடங்கில் உரிமையின் குறியீடாக இவ்வெள்ளி மோதிரம் விளங்குகின்றது. இவ்வணியை ஆண்வீட்டின் மூத்த மருகள் மணப்பெண்ணிற்குக் கட்டுவாள். இவ்வணியைக் கட்டியதும் மணப்பெண்ணை தம் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

மணப்பெண் ஆண்வீட்டிற்குச் செல்ல தன் வீட்டின் வாசல்படியைக் கடக்கும் முன்பு தம் கரத்தில் அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தில் ஒன்றினை கழற்றி திரும்பிபார்க்காமல் வீட்டின் உள்ளே நிற்கும் தன் தந்தைக்குத் தந்துவிட்டுச் செல்கிறாள். குடும்பத்தின் பெரும் செல்வமாக பெண்களைக் கருதும் படகர்கள் மணமாகி செல்லும் தம் வீட்டுப் பெண்ணோடு வீட்டின் எல்லா நிறைவுகளும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும், ஆண்வீட்டிற்குச் செல்கின்ற பெண்ணின் நினைவாகவும் இச்சடங்கினை இவர்கள் நிகழ்த்துகின்றனர். இச்சடங்கில் ஈட்டிமைக் குறியீடாக இந்த வெள்ளி மோதிரம் விளங்குகின்றது. தொடர்ந்து பெண்வீட்டில் அப்பெண்ணின் குறியீடாகவும் அம்மோதிரம் பத்திரப்படுத்தி வைக்கின்றனர். திருமணப்பெண்ணிடமிருந்து ஒற்றை மோதிரத்தினைப் பெறுகின்ற படகர்களின் தொல்குடி பண்பு ‘முரியா’ பழங்குடிகளிடமும் வழக்கிலுள்ளது குறிப்பிடதக்கது. அவர்கள் தம் பெண்ணிடமிருந்து பெறும் இம்மோதிரத்தினைத் தாம் வைத்திருக்கும் முன்னோர்களின் குடுவையுள் இடுகின்றனர். (சு.சக்திவேல், இந்தியப் பழங்குடிகள்)

படகர்கள் ஒற்றை வெள்ளி மோதிரத்தினைப் பொதுவாக அணிவது கிடையாது. திருமணச்சடங்கிலும் கூட திருமணப்பெண் தம் பிறந்தகத்திற்குக் கழற்றிக்கொடுத்த மோதிரம்போக மீதமிருக்கும் ஒற்றை மோதிரத்தோடு மற்றொரு ஒற்றை மோதிரத்தினைவாங்கி அணிந்துக் கொள்கிறாள். இல்லையெனில் “உங்கரமணி” சடங்கில் கட்டிய மோதிரத்தினை அணிந்துக்கொள்வாள். ஒற்றை மோதிரத்திற்கான விலக்கினைக் கண்ணுறும்போது அதற்குரிய வலிமையான காரணமாக அவர்தம் இறப்புச்சடங்குத் திகழ்கின்றது.

இறந்தவரை படகர்கள் எரிக்கவோ, புதைக்கவோ செய்கின்றனர். இறந்தவரை எரிப்பதே படகர்களின் தொன்மையான வழக்காக இருந்திருக்கிறது. இன்றும் பூசாரி போன்ற சமூகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் சடலத்தினை எரிக்கின்றனர். இறந்தவரைப் புதைப்பதற்கோ, எரிப்பதற்கோமுன்பு அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளி மோதிரத்தில் ஒன்றினை அகற்றி பத்திரப்படுத்திக் கொள்கின்றனர். ஒற்றை மோதிரத்தோடே சிதையிடவோ, அடக்கஞ்செய்யவோ செய்கின்றனர். மறுபிறப்பின்மீது நம்பிக்கையில்லாத படர்கள் தம் முன்னோர்கள் வாழ்கின்ற உலகத்திற்கு இறந்தவர் செல்வதற்கான குறியீடாகவும், இக்குலத்தில் வாழ்ந்ததற்கான குறியீடாகவும் இம்மோதிரத்தை அணிவிக்கின்றனர். கழற்றிய மோதிரத்தைக் கழுவி, நெருப்பில் வாட்டி பெண்களாக இருந்தால் வியாழக்கிழமையோ, ஆண்களாக இருந்தால் ஞாயிற்றுக் கிழமையோ மேற்கொள்ளும் “கொரம்பு” என்னும் இறுதி சடங்கில் இறந்தவரின் குறியீடாக வைத்து வணங்குகின்றனர். தொடர்ந்து இறந்தவரின் நினைவாக இம்மோதிரத்தைப் பாதுகாக்கின்றனர். இது இம்மக்களின் தனிப்பண்பாகத் திகழ்கின்றது. பொதுவாக எல்லா தொல்குடிகளும் எப்படி பிறந்தோமோ அப்படியே புதைக்கவோ, எரிக்கவோ செய்யவேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக வெள்ளி மோதிரத்தோடு இறுதிசடங்கினை நிறைவேற்றும் படகர்களின் இந்தத் தனிப்பண்பு அவர்களிடையே வெள்ளிக்குரிய மதிப்பினைக் காட்டும் மேலுமொரு சிறந்த கூறாகும்.

குழந்தைப் பிறந்ததும் வெள்ளி மோதிரத்தின் முனையில் தேனினைத் தொட்டு குழந்தைக்கு ஊட்டி, அக்குழந்தையைத் தம் குலத்திற்கு, இந்த உலகத்திற்கு வரவேற்கின்றனர். பொன்னுக்கு வீங்கி நோயினை இவர்கள் “பங்கர பாவு” என்று அழைக்கின்றனர். “பாவு” என்ற படகுச் சொல்லிற்கு வீக்கம் என்று பொருள். இதற்கு மருத்துவமாகவும் வெள்ளி மோதிரத்தினை நூலில் கோர்த்து பாதிப்படைந்தவர்களின் கழுத்தில் கட்டுகின்றனர்.

குப்பிகெ மணி (அல்லது) மாலெமணி –

படகர்களின் திருமண அணியான “குப்பிகெ மணியின்” ஆக்கமே, முழுதும் குறியீட்டு நிலையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தவொன்றாகும். “குப்பிகெ”, “குண்டு”, “குசுறு”, “உங்கரா” எனும் நான்கு அணிகளின் கூட்டே இந்த அணிகலனாகும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறியீட்டு நிலையைக் கொண்டவை.

குப்பிகெ – இது இந்த ஆபரணத்தின் நடுவில் அமைந்திருக்கும், ஏற்கனவே கண்ட குப்பிசி பறவையையொத்த அணியாகும். இது குடும்பத்தின் குறியீடாக இடம்பெற்றிருக்கும்.

குண்டு – குண்டு என்பது சற்று பெரியளவிலான, முனைப்பகுதிகள் வழுவழுப்புத் தன்மைக்கொண்டு தட்டையாக அமைந்துள்ள, சிறு பகடைக்காயைப் போன்ற மணியாகும். இதனைப் படகர்கள் ஆணின் குறியீடாகக் கொள்கின்றனர். ஆண்குழந்தைப் பிறந்தால் இந்தக் குண்டு மணிகள் ஐந்தினை திரி அல்லது நூலில் கோர்த்து கழுத்தில் கட்டுகின்றனர்.

குசுறு - இது உள்ளிடற்ற துளையினையுடைய மெல்லியதான, வட்டவடிவிலான மணியாகும். இதை படகர்கள் பெண்களின் குறியீடாகக் கொள்கின்றனர். பெண் குழந்தைப் பிறந்தால் ஐந்து குசுறு மணிகளைக் கோர்த்து கட்டுகின்றனர்.

உங்கர - இவ்வணியின் இரு முனைகளிலும் மேற்கண்ட வெள்ளி மோதிரங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இது உரிமைக்கான குறியீடாக அமைந்துள்ளது.

மணப்பெண் தன்வீட்டிலிருந்து வரும்போதும் பெண்வீட்டின் சார்பாக, அக்குடும்பத்தினரின் மீது கொண்ட அன்புநிலை, கடப்பாட்டின் குறியீடாக ஒரு “குப்பிகெ மணியை” அணிந்து வருவாள். மணமகன் வீட்டிற்கு வந்தவுடன் வீட்டிற்கு வெளியே நிற்கவைத்து ஆண்வீட்டின் கால்வழியின் மூத்த மருமகள் அப்பெண்ணிற்குக் ஆண் வீட்டின் சார்பிலொரு “குப்பிகெ மணியைக்” கட்டிவிடுவாள். புகும்வீட்டின் குடும்பம், ஆண், பெண், உரிமை போன்றவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் குறியீடாக இந்த ஆபரணம் அணிவிக்கப்படுகின்றது. இந்த ஆபரணமும் படகர்களின் தனித்தன்மைவாய்ந்த, முழுதும் குறியீட்டோடு அமைந்த உலோக வழக்காறாகும். இவ்வணியின் “குண்டு” மற்றும் “குசுறு” மணிகளின் குறியீட்டுநிலை ஃப்ராய்டின் கோட்பாடுடன் பொருந்தி நிற்பது குறிப்பிடதக்கதாகும்.

செருப்பினிகெ மற்றும் பே –

சிறிய சங்கிலிகளைக் கோர்த்ததுபோல அமைந்திருக்கும் “செருப்பினிகெ” எனும் அணிகலனும் திருமணத்தின்போது பெண்களுக்கு அணிவிக்கப்படுகின்றது. அதேபோல “பே” எனும் வளையல்களையும் பூப்புச் சடங்கின் போதும், திருமணத்தின் போதும் பெண்கள் அணிகின்றனர். இவைகளும் உரிமையின் குறியீடாக அமைபவையாகும். மணிக்கட்டில் அணிகின்ற வளையலை “கை பே” என்றும், முழங்கையில் அணியும் வளையை “முங்கை பே” என்றும், தோள்விந்தியாக அணியும் வளையலைத் “தோ பே” என்றும் இவர்கள் அழைக்கின்றனர். பெண்கள் பொதுவாக திருமணத்திற்குப் பின்பே “தோ பே” அணிகின்றனர். திருமணம் ஆனதற்கான குறியீடாக இந்தத் “தோ பே” அமைகின்றது. “செருப்பினிகெ” வளமையின் குறியீடாகவும் கொள்ளப்படுகின்றது. “தோ பே” அணிவதை அறிவியல் அடிப்படையில் அணுகும்போது இதனை அணிவதனால், தோளுக்குகீழே உள்ள பகுதியில் ஊளைச்சதை வளர்வது தடைபடுகிறது. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது. அவ்விடத்தில் வளரும் சதை வேலைகள் செய்வதார்ந்து வேகமாக இயங்குவதை தடுக்கும் இடர்பாடாக படகர்கள் கருதுகின்றனர். மேலும் அவ்விடத்தில் தோன்றும் சதை குறையாது என்ற எண்ணமும் இவர்களிடையே நிலவுகின்றது. கால்நடை வளர்ப்பு மற்றும் கடும் வோளாண்மைப் பணியின் போது மேற்கொள்ளும் வேலைகளின் உறுதியைக் கூட்டுவதற்கான ஒரு விதமான தசை பிடிமானத்தினையும், உறுதி எண்ணத்தையும் இவ்வணி தருகின்றது.

படகர் இனத்தினைச் சார்ந்த பெண்கள் கணவனை இழந்தப்பிறகும் இந்த ஆபரணங்களை அணிகின்றனர். முன்னரே கண்டதுபோல இவர்களின் ஆபரணங்கள் அழகிற்கானவைக் கிடையாது. சடங்கு மற்றும் குறியீட்டிற்கானது. இறந்தவுடன் அகற்றப்படும் ஆபரணங்களை இறந்தவர்களின் நினைவாக பத்திரப்படுத்தி வைக்கின்றனர். இல்லையென்றால் அணிகலனாக மாற்றி அவர்களின் நினைவாக அணிகின்றனர். படகரின பெண்களிடையே மார்பாகப் புற்றுநோய் அருகியிருப்பதற்கு அவர்கள் அணிகின்ற வெள்ளி ஆபரணங்களையும் இன்றிமையான காரணமாகக் கொள்ளலாம்.

இயற்கை, அருவ வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டையும் மேற்கொள்ளும் படகர்களின் வழிபாட்டு ஆபரணங்களும் மேற்கண்ட மரபார்ந்த ஆபரணங்களாகவே அமைகின்றன. அதிலும் “எலெ முக்குத்தி” எனும் வெள்ளி மூக்கணி இவர்களின் சடங்குகளில் முன்னோர்களின் குறியீடாக அமையும் இன்றியமையான ஆபரணமாகும். பெண்வீட்டிலிருந்து ஆபரணங்களை வரதட்சணையாக பெறும் வழக்கு படகர்களிடையே கிடையாது. தங்கத்தினை “சின்னா” என்று அழைக்கும் படகர்கள் அதை வெள்ளியைவிட உயர்வாகக் கருதினாலும் வெள்ளியே அவர்களின் வாழ்வியலிற்கான அடிப்படையாகவும், குலக்குறியீடாகவும் விளங்கிவருகின்றது. இன்றும் படகர்களின் வெள்ளி ஆபரணங்கள் குறியீடுகளாக விளங்கி அவர்தம் தொல் பண்பாட்டினைச் சுமந்து நிற்கின்றது.

துணைநின்றவை

    இந்தியப் பழங்குடிகள், முனைவர் சு.சக்திவேல் .

    படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குப் பொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, முனைவர் கோ.சுனில்ஜோகி.

    பொறங்காடு சீமெ படகர்களின் மூலிகை மருத்துவம், ஆய்வியல் நிறைஞர்பட்ட ஆய்வேடு, முனைவர் கோ.சுனில்ஜோகி.

    நேர்காணல் திரு. இரியன் , கன்நேரி , நீலகிரி.

    நேர்காணல் திரு. கோபால், ஒரசோலை, நீலகிரி.

    நேர்காணல் திருமதி. மாதி, கூக்கல், நீலகிரி.

    நேர்காணல் திரு, அஜ்ஜன் குண்டாட.

    நேர்காணல் திரு. பானி ரங்காகவுடர், கடக்கோடு, நீலகிரி.

    நேர்காணல் திருமதி. மிச்சி, மர்லகம்பெ, நீலகிரி.


* கட்டுரையாளர்: முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.