முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -உலகப் பூர்வக்குடிகளான நீலகிரி படகர் இன மக்களிடம் பல தொன்மையான தனிக்கூறுகள் விரவிக்கிடக்கின்றன. நீலகிரியில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற படகர்களின் வாழ்வியல் பரிணாமம் மற்றும் பரிணாமத்தினை விளக்கும் மரபு, பண்பாட்டின் நிலைச்சான்றாக விளங்கிவருகின்றது “அக்க பக்க” எனும் அமைப்பு.

“நாடு” அல்லது “சீமெ”, “ஊரு”, “ஹட்டி” எனும் தம் வாழ்க்களத்தினை வகுத்து வாழும் படகர்களின் “ஊரு” எனும் பகுப்பில் உள்ள படகு மூதாதையர்களின் தொல்வாழிடம் மற்றும் தொல்குறியீடாக இந்த “அக்க பக்க” திகழ்கின்றது.

அக்க பக்க –

படகர்களின் இந்த “அக்க பக்க” அமைப்பு “ஹெப்பாயிலு” (பெருவாயில் அல்லது பெருவாசல்), “கருகம்பு” (எருமைக் கன்றுகளைக் கட்டும் கல்தூண்), “அஜ்ஜிகூடு” (முன்னோர்களின் உறைவிடம்) எனும் மூன்று குறியீடு மற்றும் அமைப்பு நிலைகளைக் கொண்டது. இதை “அக்க பக்க” என்ற இணைச்சொல்லோடுப் படகர்கள் சுட்டினாலும் பொதுவாக இப்பகுதியைப் “பக்க” என்றே அழைக்கின்றனர். ஆதியில் இவை படகு முன்னோர்கள் வாழ்ந்த இடங்களாக இருந்து இன்று குறியீடாக, புனித இடமாக, முன்னோர் மற்றும் மரபு வழிபாட்டுத் தளமாகத் திகழ்கின்றன.

ஹெப்பாயிலு –

“பாயிலு” என்ற படகுச் சொல்லிற்கு வாசல் என்று பொருள். இது தமிழின் வாயில் என்பதோடு பெருந்தொடர்புடையது. இரண்டு அல்லது மூன்றடி இடைவெளியில் நடப்பட்ட இரண்டு கல்தூண்கள் மற்றும் அதன்மேல் கிடைமட்டமாக வைக்கப்பட்ட கல்லினைக் கொண்ட வாயில் போன்ற அமைப்பு இதுவாகும். படகர்களின் கால்வழியில் குறிப்பிட்ட பெருங்கிளையினர் தோன்றிய தொல்குடியிருப்பின் நுழைவாயிலாக இந்த “ஹெப்பாயிலு” திகழ்கின்றது. “ஹெப்பு” என்ற படகச்சொல்லிற்குப் பெரிய, வலிமையான, முதன்மையான போன்ற பல பொருட்கள் உண்டு. அந்த வகையில் பெரிய, முதன்மையான, வலிமையான வாயில் என்ற அடிப்படையில் இந்த “ஹெப்பாயிலு” பொருள்படுகின்றது.

படகு மொழியில் “ஹெப்புலி” என்றால் வலிமையானவன் என்று பொருள். உயர்ந்த மரக்கிளையில் கட்டியிருக்கும் பெருந்தேனினைப் படகர்கள் “ஹெப்புஜேனு” என்று அழைக்கின்றனர். படகர்கள் தேனெடுக்கச் செல்லும்போது அவர்களின் முதல்தேர்வாக இந்த “ஹெப்புஜேனுவே” திகழ்கின்றது. இந்தப் “பக்க” அமைப்பின் தொடக்கமாக, நுழைவாக இந்த “ஹெப்பாயிலு” விளங்குகின்றது. இது நான்கு அல்லது ஐந்தடி உயரத்தில் குனிந்துச் செல்லுமாறு அமைந்திருக்கும். ஊர்சார்ந்த, சமூக சார்ந்த அனைத்து நிகழ்விலும் இந்த “ஹெப்பாயிலின்” மேற்புறத்தினைத் தொட்டு வணங்கிவிட்டு படகர்கள் உள்ளே குனிந்து செல்வார்கள். இது இவர்களின் மரபுவழுவாமையின் குறியீடாகவும் திகழ்கின்றது. "உப்பு ஹட்டோது" எனும் உப்புச்சடங்கு, "கரி ஹத்தோது" எனும் மழைவேண்டி மலையேறும் சடங்கு மற்றும் வழிபாடு, "தெவ்வ ஹப்பா" எனும் அறுவடைத்திருநாள் மற்றும் "காப்பு இக்கோது" எனும் காப்பிடும் சடங்கு போன்ற படகர்களின் மரபார்ந்த தொன்மையான சடங்குகளில் இந்த "பக்க" அமைப்பு முதன்மைவகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தம் இல்லத்தின் முன்வாயிலையும் படகர்கள் “ஹெப்பாயிலு” என்றே அழைக்கின்றனர் .

குனிந்துச் செல்வதற்கேற்ப அமைப்பினையுடைய இந்த “ஹெப்பாயிலு” படகர்களின் மரபறிவோடும், சூழல் தகவமைப்போடும் தொடர்புடையது. நீலகிரியில் நிலவும் கடும்குளிர்ச் சூழலிலிருந்து தற்காத்துக்கொள்ள வாசலையும், கூரையையும் குறுக்கிக் கட்டுவதே தகும். இதை “கூரைய குறுக்கிக் கட்டு. கேரிய அரத்துக் கட்டு” (வீட்டின் கூரையைக் குறுக்கிக் கட்டு, “கேரி” - முற்றத்தினை “அரத்து” - விரித்துக் கட்டு) எனும் படகு முதுமொழி விளக்குகின்றது. படர்களின் இந்த மரபறிவு அவர்களின் ஆதிக்குடியிருப்பான “ஹெப்பாயிலிலே” வெளிப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் “பக்க” அமைப்பிற்கு முன்பாக, வனங்களில் படகு முதாதையர்கள் வாழ்ந்த “பனா” என்ற ஆதிக்குடியிருப்பின் வாசல் இதனினும் குறுகலாக இருந்திருக்கின்றது. இந்தப் “பனாவின்” அடுத்த பரிமாணமாக இந்த “ஹெப்பாயிலு” திகழ்கின்றது.

ஆதியிலிருந்து இன்றுவரை தம் குடியிருப்புகளை அமைக்கும்போதெல்லாம் அதில் ஆநிரைகளின் நலனிற்கே முதன்மையளித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அந்த ஆநிரைகளின் நலன்பேணுவதன் அடிப்படையிலேயே படகர்கள் அமைத்த குடியிருப்புகளின் வாயிலமைப்பு திகழ்ந்து வந்திருக்கின்றது. இன்னும் குறுகலாக வாயிலை அமைப்பது குளிரிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கு உதவும். ஆனாலும் ஆநிரைக் கன்றுகளைக் கருத்தில் கொண்டே அவையும் தராளமாகப் புழங்கும் அளவிற்கு படகர்களின் வாயில்கள் விளங்குகின்றன. இன்றும் படகர்கள் சிறு கன்றுகளை சில நாட்கள்வரை குளிரிலிருந்து பாதுகாக்க தம் இல்லத்தினுள் வைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருக்கம்பு –

“கருக்கம்பு” என்பது நிலத்தில் நடப்பட்ட நீள்வட்ட வடிவிலான கல்தூணாகும். சில ஊர்களில் கல்திட்டு அமைக்கப்பட்டு அதன்மேல் ஒன்றோ, இரண்டோ “கருக்கம்புகள்” நடப்பட்டிருக்கும். “கம்பு” என்பது படகுவிலும் கம்பத்தினையே குறிக்கின்றது. “கரு” என்பது எருமை மற்றும் பசுவின் கன்றினைக் குறிக்கின்றது. அதாவது எருமைக்கன்றினைக் கட்டும் தூண் என்று இந்தக் கம்பம் பொருள்தருகின்றது. படகர்களின் பண்பட்ட ஆநிரை வாழ்வின் தொடக்கமாக இந்தத் தூண் விளங்குகின்றது.

படகர்களின் வாழ்வில் நான்கு கம்புகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அதில் முதன்மைப்பெறுவது “கருக்கம்பு”, இரண்டாவது “கல்லக்கம்பு” இந்தக் “கல்லக்கம்பு” என்பது இல்லம் அமைக்கும்போது அந்த இல்லத்திற்குள் அமைக்கப்படும் கல்லாகும். ஒருகாலத்தில் அந்த இல்லத்தினைத் தாங்குகின்ற கல்லாக அது இருந்திருக்க வேண்டும். இன்று அதன் மரபின் நீட்சியாக வீட்டிற்குள் சிறிய “கல்லக்கம்பினை” நடுகின்றனர். இது அந்த இல்லத்திற்கான தொடக்கமாகவும், தம் முன்னோர்களின் மரபின் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த மரபார்ந்த வாழக்காற்றினை அடியொற்றியே படகர்களிடம் “கல்லா” எனும் தொன்மையான பெயர்வழக்கு நிலைப்பெற்று வருகின்றது. “கல்லா” என்பதற்கு ஒரு கிளைவழியினரின், ஒரு குடும்ப வழியினரின் வாழ்வு மற்றும் இல்லம் அமைவதற்கு முதல் விதையிட்டவன், “கல்லகம்பினை” நட்டவன் என்று பொருள்.

படகர்கள் தம் வாழ்வியலில் அறிந்த, பெரிதும் மதிக்கும் உலோகங்களாகப் பொன்னும், வெள்ளியும் விளங்குகின்றது. பொன்னை “சின்னா” என்றும், வெள்ளியைப் “பெள்ளி” என்றும் படகர்கள் அழைக்கின்றனர். படகர்களின் மரபார்ந்த ஆபரணங்கள் பெரும்பாலானவை வெள்ளியால் அமைந்திருந்தாலும் வெள்ளியைவிட பொன்னையே மேலதிகமாக மதிக்கின்றனர். அடிப்படையிலேயே மேற்கூறிய நான்கு கம்புகளில் மீதமிரு கம்புகள் விளங்குகின்றன. படகர்களின் “கருஹரசோது” (இறந்தவருக்காக எருமைக்கன்றினை நேர்ந்து விடல்) சடங்கின்போது சொல்லப்படும் வழக்காறில் “சின்னத கம்புக சேரலி” (தம்முன்னோர்களை அடையும் ஆன்மா, பொன்னால் ஆன கம்பத்தினைச் சேரட்டும் (சேரலி – சேரட்டும்)), “பெள்ளிய கம்புக ஒரேயலி” (தம் முன்னோர்களை அடையும் ஆன்மா வெள்ளியால் ஆன கம்பத்தில் உராயுட்டும் (ஒரேயலி – உராயட்டும்)) என்ற இரண்டும் கம்பத்தினை அடிப்படையாகக் கொண்டுவருவனவாகும்.

ஆன்மாவினைப் புனிதப்படுத்தவும், மதிப்பினைக்கூட்டவும், வரவேற்கவும் பொன் மற்றும் வெள்ளியைப் படகர்கள் அதன் மதிப்பின்பாற்பட்டுக் குறியீடாகப் பயன்படுத்துகின்றனர். குழந்தைக்குப் பெயரிடும் சடங்கில், குழந்தைக்குப் பெயரிட்டு பாலுணவூட்டும் “கச்சு கங்குவ” எனும் வெண்கலத்தட்டில் பாலுடன் பொன்னின் குறியீடாக “சின்னதஅணா” எனும் பொற்காசையும், வெள்ளியின் குறியீடாக தம் கரத்தில் அணிந்திருக்கும் “பெள்ளி உங்கர” எனும் வெள்ளி மோதிரத்தினையும் இட்டு குடும்பத்திற்கு வந்திருக்கும் புது ஆன்மாவினை வரவேற்கின்றனர். மேலும் தம் முன்னோர்களின் குறியீடாகவும் இச்சடங்கில் அந்த உலோகங்கள் விளங்குகின்றன.

அஜ்ஜி கூடு –

“கூடு” என்ற படகுச்சொல் வீடு என்பதைக் குறிக்கின்றது. படகர்களிடம் “காய்கூடு” எனும் புழங்குபொருளொன்று உண்டு. இது போர்அடித்துப் பிரித்த தானியத்தில் உள்ள தூசினை அகற்றும் புழங்கு பொருளாகும். இதன் மேல்முனை குறுகிப்புடைத்தும், கீழ்முனை விரிந்து படுத்தும் அமைந்திருக்கும். இதை தலைக்கீழாக வைக்கும்போது வீடினைப்போன்ற அமைப்பினைக் கொண்டிருப்பதாலும் இப்பொருளுக்கு இப்பெயர் அமைந்திருக்கலாம். வரிசையாக வீடுகளை அமைப்பதற்கு முன்னர் படகர்களின் வீடுகள் இவ்வாறு அமைந்திருந்ததாகக் கொள்ளலாம். வட்டவடிவிலும், கூம்புவடிவிலுமான கூரைகள் அமைக்கப்பட்ட வீடுகளிலும் படகு முன்னோர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவ்வகையில் ஊர் அமைத்து வாழ்ந்த படகர்களின் ஆதி முன்னோர்களின் ஆதி வாழிடங்களாக இந்த “அஜ்ஜி கூடு” திகழ்கின்றது.

முன்புறம் மட்டும் திறந்தநிலையில் அமைந்திருக்கும்படி தனித்தனியான கற்களை நட்டு உருவாக்கப்பட்டப் பெட்டகம் போன்ற அமைப்புடையதாக இந்த “அஜ்ஜி கூடு” அமைந்திருக்கும். அதன் மேற்புறம் கற்பலகையால் மூடப்பட்டிருக்கும். இது பார்ப்பதற்குச் சிறிய வீடமைப்பினைபோல காட்சிப்படுகின்றது. ஒருசில ஊர்களில் இன்று இந்த “அஜ்ஜிகூடு” புனரமைக்கப்பட்டு சிறிய கல்திடல்மேல் கற்குடை அமைப்போடு காணப்படுகின்றது. சில ஊர்களில் எழுப்பப்பட்ட கல்திடலின்மேல் நடப்பட்ட “கருக்கம்பினை” அடுத்து இந்தக் குடைவடிவிலான “அஜ்ஜிகூடு” அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கற்குடை என்பது படகர்களின் குலதெய்வமான “ஹெத்தெயின்” குறியீடாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

“அஜ்ஜெ” எனும் படகுச்சொல்லிற்குக் கால்தடம் என்று பொருள். மரபிற்கான தடம் பதித்தவர்கள் என்ற நிலையில் வயதானவர்களை “அஜ்ஜா”, “அஜ்ஜி” என்று படகுவில் அழைக்கின்றனர். ஆனால் படகுமொழியில் இந்த “அஜ்ஜா”, “அஜ்ஜி” என்ற சொற்களுக்கு நேரடிப்பொருள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே “ஆதகூடு” என்ற சொல்லே பிறகு “அஜ்ஜிகூடு” என்று மாறியிருக்கலாம் என்று கருதவும் இங்கு இடம் உண்டு. படகுமொழியில் “ஆ” என்பது ஆட்களைக் குறிக்கும். அதாவது ஆட்கள் வசிக்கும் இடம் என்ற பொருளில் ஆநிரைகளைப் பெருவாயிலிற்கு உள் உள்ள “கருக்கம்புவில்” கட்டிவிட்டு உள்ளே ஆட்கள் தங்கிய இடம் என்ற நிலையில் “ஆதகூடு” எனும் பெயர் சரியாகப்பொருந்தி நிற்கின்றது. மேலும் தம் முன்னேர்களின் ஆதி வாழிடம் என்பதைக் குறிக்கின்ற நிலையில் “ஆதிகூடு” மற்றும் “ஆயகூடு” என்ற சொற்களும்கூட இவ்விடத்திற்கும் அதன் தன்மைக்கும் பொருந்தி வருகின்றன. “ஆய” என்ற படகுச் சொல்லிற்குப் பழமையான என்ற பொருளுண்டு. இந்தப் பக்காக்களின் அமைப்பும், இன்றும் நிலைத்துள்ள இந்தப் “பக்க” குறியீடுகளின் அமைப்பும் படகர்களின் கலையியல் அறிவிற்குத் தக்கச் சான்றுகளாகத் திகழ்கின்றன. இன்று சில ஊர்களில் புனரமைக்கப்பட்ட “ஹெப்பாயிலில்” ஆநிரைகளின் சிலையையும் அமைத்துள்ளனர். இததை கலைநயத்தால் தோன்றிய தற்கால வடிவேற்றமாகக் கருதலாம். “அக்க பக்காக்களை” அமைத்து வாழ்வதற்கு முந்தைய படகர்களின் இருப்பிடத்தைப் “பனா” என்ற அமைப்பு விளக்குகின்றது.

பனா –

“பனா” என்ற படகுச்சொல்லிற்கு வனம் என்று பொருள். தமிழ்ச்சொல் வனம் என்பதுடன் இது பொருந்துகின்றது. இந்தப் “பனாவினை” “பனகுடி” என்றும் படகர்கள் அழைக்கின்றனர். படகர்களிடம் கோயில்வழிபாடு கிடையாது. தம் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தையே தம் வழிபாட்டு, புனித இடமாக படகர்கள் வணங்குகி வருகின்றனர். ஆனால் “குடி” என்ற படகுச்சொல் கோயிலைக் குறிக்கின்றது. ஆகவே தம் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்ற அடிப்படையில், அவ்வழிப்பாட்டிடத்தின் மதிப்பு மற்றும் புனிதம்கருதி இது “பனகுடி” என்று பிற்கால வழக்காக படகர்கள் அழைத்திருக்கலாம். வட்ட அல்லது அறுங்கோணவடிவ கல்கொண்டு அமைக்கப்பட்ட கட்டிடத்தின்மேலே கூம்புவடிவ அல்லது வட்டவடிவ புற்கள் வேயப்பட்டதாக இந்தப் “பனா” அமைந்திருக்கும். குறிப்பக “பாம்பெ உல்லு” என்ற படகர்கள் புனிதமாகக் கருதும் புற்கள் வேயப்பட்டதாகத் திகழும். படகர்களின் அடர்வனம்சார்ந்த ஆதிவாழ்வின் எச்சமாக இந்தப் “பனா” திகழ்கின்றது.

நீரோடைக்கருகில் அமைந்திருப்பது, சுற்றியும் “துடே”, “பிக்கெ”, “நேரி”, “பாய்கெ”, “கக்குண்டி” போன்ற அடர்க் காட்டு மரங்கள் நிறைந்திருப்பது போன்று இந்தப் “பனா” அமைந்திருக்கும் முறையானது படகர்களின் வனம்சார்ந்த ஆதிவாழ்வினைக் காட்சிப்படுத்துகின்றது. இந்த மேற்கண்ட அடர்க்காட்டு மரங்கள்யாவும் படகர்களால் புனிதத்துவம் மிகுந்தவையாகக் கருதப்படுபவையாகும். மேலும் இன்றும் தம் முன்னோர்கள், குலதெய்வம் மற்றும் சமூகம்சார்ந்த சடங்குகளில் பயன்படுத்தப்படுபவைகளாகவும் விளங்குகின்றன. படகர்களின் அறுவடைத்திருவிழாவான “தெவ்வ ஹப்பாவின்” போது தம் முன்னோர்களை நினைத்து வழிபடும் இடமாக இன்று “பனா” திகழ்கின்றது. வருடத்தில் அந்த ஒருநாளில்மட்டும் திறக்கும் இடமாகவும் இது விளங்குகின்றது.

“அக்க பக்காவினை” நோக்கும்போது “பீக” என்ற வழக்கினையும் கவனிக்க வேண்டியுள்ளது. “ஒந்து பக்கக ஒந்து பீக” என்பது படகர்களின் “பக்க” சார்ந்த தொல் வழக்காகும். இந்தப் “பீக” என்பதற்கான சொல்வழக்கினை நோக்கும்போது “ ‘பீக’ எனும் சொல் திருமண உறவால் ஏற்படும் உறவினரைக் குறிக்கும் பொருளுடன் கன்னடம், துளு போன்ற மொழிகளில் இருக்கின்றது. ஆனால் படகுமொழியில் இந்த “பீக” என்னும் சொல் பங்காளி முறையினர் கூட்டத்தினைக் குறிக்கிறது. படகுவில் இருக்கும் பொருளே பழையதாக இருக்கக்கூடும். இம்மொழியில் உள்ளதுபோல முன்னர் ஒரு பெருங்கால் வழியினரைக் குறிக்கும் சொல்லாக இருந்து பின்னர் திருமண உறவால் ஏற்படும் உறவுக்கிளையினரைக் குறிக்க கன்னடம், துளு போன்ற மொழிகளில் மாறியிருக்க வேண்டும்” (படகர் அறுவடைத் திருநாள், இரா.கு.ஆல்துரை) எனும் விளக்கத்தினைக் கொள்வது சாலத்தகும்.

படகர்களின் பரிணாமமும் பரிமாணமும் -

நீலகிரியில் ஆதியிலிருந்து வாழ்ந்துவரும் படகர்களின் பரிணாமம் மற்றும் பரிமாணங்களின் குறியீடாக இந்த “அக்க பக்க” திகழ்கின்றது. குகைகளைப் படகர்கள் “அளெ” என்று அழைக்கின்றனர். இது “அளை” எனும் சங்கச்சொல்லோடு பெரிதும் பொருந்துகின்றது. குகைகளிலும் படகர்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் உண்டு. வேட்டை சமூகமாக வனங்களில் வாழ்ந்து, பிறகு ஆநிரை சமூகமாக ஊரமைத்து, வாழ்வதற்கான கூடு அமைத்து, பிறகு உற்பத்தி சமூகமாக வேளாண்மையை மேற்கொண்ட படகர்களின் வாழ்வியல் பரிணாமமாக “பனா” – “பக்க” – “பீக” ஆகிய மரபு அமைப்புகள் திகழ்கின்றன. மேலும் ஆநிரைப் பாதுகாத்தல் மற்றும் வேளாண்மை வாழ்வியலிற்கான இடம், அதில் ஆநிரைகளைக் கட்டும் “கருகம்பு”, வாழ்வதற்கான உறுதியான கல்கூடு, வேளாண்மைச் செய்வதற்கான அகன்ற இடம் போன்ற படர்களின் வாழ்வியல் பரிணாம வளர்ச்சியின் பரிமாணங்களாகவும் இந்த அமைப்பு திகழ்கின்றது.

படகர்களின் அறுவடைத் திருவிழாவின்போது இன்றும் இந்தப் “பக்காவிற்கு”, குறிப்பாக அதிலுள்ள “ஹெப்பாயிலிற்குக்” கார்போகத்தில் வளர்ந்திருக்கும் கதிர்கள் நீக்கப்பெறாத “சாமை”, “கஞ்ஜெ” ஆகியவற்றைக் கோர்த்துக் கட்டுகின்றனர். இதை “அரிகட்டுவது” என்று அழைக்கின்றனர். “அரி” எனும் படகுச்சொல் தவசங்களோடு தொடர்புடையது. இந்த வழக்கினைக் கொண்டு நோக்கும்போது படகர்கள் வேளாண்வழ்வினை ஆரம்பித்த நாட்களில், ஒரு கால்வழியினராக ஊரமைத்து வாழ்ந்த நாட்களில் தம் விளைச்சல் அனைத்தையும் இந்தப் “பக்காவிற்குக்” கொண்டுவந்துவிட்டு அங்கு பங்கியிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

நீலகிரியில் வாழ்ந்து வருகின்ற தம் அண்டை குடிமக்களுடன் சுமூகமான உறவினைப் பேணுகின்ற, சிறந்த சமூக நல்லிணக்கத்தினைக் கட்டமைத்துள்ள படகர்கள் இந்தப் “பக்க” அமைப்பில் குரும்பர் இன மக்களுக்கும் இடம் அளித்திருக்கின்றனர். ஊரினைப் பாதுகாக்கும் “கல்லக்குருமா”, படகர்களின் வேளாண் தொழிலிற்கு உதவும் “மனெகுருமா” போன்று படகர்களின் வேளாண் வாழ்விற்குப் பலவிதங்களில் குரும்பர்கள் படகர்களிடம் பணிபுரிந்திருக்கின்றனர். இப்பணிகளுக்கு மாற்றாக தாம் விளைக்கும் தவசங்களைப் பண்டமாற்றாகக் குரும்பர்களுக்குப் படகர்கள் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வேளாண் நிலங்களைப் பாதுகாப்பதிலும், விளைச்சலை அறுவடைச் செய்வதிலும் குரும்பர்கள் படர்களின் வேளாண்மையில் துணைப்புரிந்துள்ளனர். அந்த மரபின் எச்சமாக இன்றும் “பக்காவில்” குரும்பனே அரிக்கட்டுகின்றார். மேலும் படகர்களின் முன்னோர்களுக்குப் படைக்கும் இந்த முதல் அறுவடைப்படையலை அறிவிக்கத் தெய்வத்தினை அழைக்கும் “தே இடுவது” என்ற செயலையும் அறுவடைத்திருவிழாவின்போது குரும்பனையே படகர்கள் மேற்கொள்ளச் செய்கின்றனர்.

இந்தத் “தேஇடுவது” என்பது படகர்களின் முன்னோர்களை அழைப்பதாகவும், ஊரில் நிறைவேற்றிய இச் சடங்கினை அவ்வூரினைச்சார்ந்த “ஹட்டிகளுக்கும்”, அருகில் உள்ள ஊரிற்கும் அறிவிக்கும் நோக்கம் கொண்டதாகவும் அமைகின்றது. குரல்வளம் மிகுந்த குரும்பர்கள் செய்திகளை ஒலிக்குறிப்பின்மூலம் படகர்களின் பிற ஊர்களுக்கு அறிவிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இதனடிப்படையிலேயே “கூவெகுருமா” (கூவெ - கூவி கூறுபவன்) என்று குரும்பர்களைக் குறிக்கும் படகர்களின் சொல்வழக்கொன்று விளங்கிவருகின்றது. அதேநிலையில் படகர்கள் தம் முன்னோர்களின் ஆதி இருப்பிடமான, தம் வழிப்பாட்டிடமான “பனகுடியினை” தூய்மைச்செய்யும் பொருப்பினையும் குரும்பர்களுக்கே கொடுத்துள்ளனர். இவையெல்லாம் படகர்கள் குரும்பர்களை அரவணைத்ததையும், படகர்களோடு குரும்பர்கள் கொண்டிருந்த சமூக நல்லிணக்கத்தினையும் காட்டுகின்றன. மேலும் தம் வேளாண் பணிகளில் உதவிக்குத் தம்மை அமர்த்தி, தம் வாழ்வியலிற்கான தேவையை நிறைவேற்றிய படகர்களையும், படகு முன்னோர்களையும் நன்றி மறவாமல், இன்றும் அறுவடைச்சடங்கின்போது தமக்கொதுக்கிய கடமையினை வழாமல் குரும்பர்கள் செய்துவருகின்றனர். மேலும் காட்டிலிருந்து குங்கிலியத்தைக் கொண்டுவந்தளித்து அதற்கு மாற்றாக தவசங்களைப் பெற்றுச் செல்கின்றனர். படகர்கள், குரும்பர்களுக்கிடையேயான இந்தப் பண்டாமாற்று இன்றும் நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தாகும். குரும்பர்கள் படகர்களை அப்பா என்றே அழைக்கின்றனர். இது படகர்களின் மீது குரும்பர்கள் கொண்டுள்ள மதிப்பு மற்றும் நன்றி நிலையை வெளிப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

படகர்களிடம் இன்று வழங்கிவரும் “பக்க” அமைப்புகளின் எண்ணிக்கையை நோக்கும்போது ஒரு சில பக்க அமைப்பு அது அமைந்துள்ள ஒரே ஊருடனேயே விளங்குகின்றன. அந்த ஊரிற்கென ஹட்டிகள் இல்லை. “தாம்பட்டி”, “பந்திமெ”, “ஸிரியசீகெ” போன்றவை இவ்வகையினதாக அமைந்துள்ளன. மேலும் அட்டிகளோடு இணைந்திருக்கும் அக்க பக்கங்களைக் காணும் போது “அதிக்கரட்டி” ஊரிற்குக் கீழ் “அணெயட்டி”, “அரெயட்டி”, “ஓரநாயி”, “கேத்தட்டி”, “கொதங்கட்டி”, “ஜோணிகண்டி”, “தடஹட்டி”, “தொட்ட ஹண்ணி”, “மஞ்சகம்பெ”, “முட்டிநாடு”, “ஹாலாட”, “ஸக்கலட்டி”, “ஸேகத்தொரெ” ஆகிய ஹட்டிகளும், “உப்பதலெ” ஊரிற்குக் கீழ் “தொட்டட்டி” எனும் ஊரும், “எப்பநாடு” ஊரிற்குக் கீழ் “அரெகடன்ஹட்டி”, “எப்பநாடு மேலட்டி”, “எப்பநாடு ஹெசஹட்டி”, “கெங்கமுடி”, “மொரக்கொட்டு” ஆகிய ஹட்டிகளும், “ஒந்நதலெ” ஊரிற்குக்கீழ் “ஒன்னதலெ ஹட்டி” எனும் ஊரும், “கக்குச்சி” ஊரிற்குக்கீழ் “கடெ ஹட்டி”, “கலிகநட்டி”, “தாத்தர் பெந்நு”, “தீனட்டி”, “நடு ஓரெ”, “பந ஹட்டி”, “பிக்கெமொர ஹட்டி”, “சொடலி ஓரெ” போன்ற ஹட்டிகளும், “காட்ரு” ஊரிற்குக்கீழ் “அஜ்ஜூரு”, “தூரட்டி”, “நடுஹட்டி” போன்ற ஊர்களும், “கடநாடு” ஊரிற்குக்கீழ் “அரசகல் கம்பெஹட்டி”, “அரெயட்டி ஒசாட்டி”, “இடுஹட்டி”, “உலுப்பட்டி”, “ஊரமலெ”, “கப்பச்சி”, “காரெகல்லு”, “காவிலோரெ”, “கித்தலெ கம்பட்டி”, “கீயெ கவ்வட்டி”, “குந்தெசப்பெ”, “கெந்தொரெ”, “கொதமுடி”, “கொதமுடி கீயூர்”, “ஜக்கலோரெ”, “தும்மனட்டி”, “தூனேரி”, “தாவணெ”, “பரலட்டி”, “பில்லிக்கம்பெ கீயட்டி”, “பில்லிக்கம்பெ மேலட்டி”, “பேரகல்லு”, “மடித்தொரெ”, “மரெகல்லு”, “மயினலெ”, “மேல் கவ்வட்டி”, “மேல் கொதமுடி”, “மேல் தொரெயட்டி”, “மொரட்டுவ”, “மேரிகல்லு” மற்றும் “ஹண்ணி கொரெ” ஆகிய ஹட்டிகளும், “கிண்ணக்கொரெ” ஊரிற்குக் கீழே “அப்பட்டி”, “கியெ பிக்கட்டி”, “மேலெ பிக்கட்டி”, “நெலகாடு”, “ஹாட”, “ஒசஹட்டி” போன்ற ஹட்டிகளும், “கீயூரு” ஊரின்கீழே “கோக்கலாட”, “கோத்தி பெந்நு”, “பெங்கால்”, “மயிநலெ”, “மாசிகண்டி”, “ஹாலட்டணெ” ஆகிய ஊர்களும், “கீயெ குந்தெ” ஊரிற்குக் கீழே “எடக்காடு தலையட்டி”, “எடக்காடு நடுஹட்டி”, “எடக்காடு சுண்டட்டி”, “கண்டிபிக்கெ”, “கரியமலெ”, “குஞ்ஜநஓரெ”, “காயிகண்டி”, “குண்டிநாயி”, தூனேரி”, “பாக்கொரெ”, “பிக்கட்டி”, “மஞ்ஜூரு”, “மட்டகண்டி”, “மணிக்கல்லு”, “முக்கிமலெ”, “முல்லெகுரு”, “ஒசஹட்டி” போன்ற ஹட்டிகளும், “கூக்கலு” ஊரிற்குக்கீழே “உயிலட்டி”, “கம்பட்டி கம்பெ”, “கூக்கத்தொரெ”, “குறுமுடி”, “தேகலி”, “சீகொல” போன்ற ஹட்டிகளும், “கெங்கரெ” ஊரிற்குக் கீழ் “இம்பிமொரெ ஒசட்டி”, “கக்குவ”, “கெங்கரெ கீயட்டி”, “கெங்கரெ மேலட்டி”, “தும்பி மலெ”, “தொட்ட மநெ ஹட்டி”, “படுமுடி”, “ஹொந்நட்டி” போன்ற ஊர்களும், “கேத்தி” ஊரிற்குக் கீழே “அச்சநகல்லு”, “எல்லெநாயி”, “கம்மந்து”, “கெக்கட்டி”, “கெராடா”, “கேர்கண்டி”, “தீட ஹட்டி”, “பொரெயரட்டி”, “மனெபட்டு”, “தலெஹட்டி”, “மொக்கட்டி”, சோரகுண்டு”, “உல்லடா” ஆகிய ஹட்டிகளும், “கோடமூலெ” எனும் ஊரின் கீழ் “கோடமூலெ ஒசாட்டி”, “கோத கம்பெ” ஆகிய ஹட்டிகளும், “ஜக்கதா” ஊரின்கீழ் “ஓதநட்டி”, “காரக்கொரெ”, “கீயெ பிக்கட்டி”, “பேரட்டி”, “மஞ்ஜித”, “மல்லிகொரெ”, “மேல் பிக்கட்டி” ஆகிய ஹட்டிகளும், “ஜக்கநாரெ” ஊரின்கீழ் “அரவேனு”, “அரெபெட்டு”, “கல்லாட”, “திண்ணியூர், “தும்பூர்”, “தப்ப கம்பெ”, “நடுஹட்டி”, “பங்களாட”, “முடியகம்பெ”, “சேலவெ”, “ஹள்ள மனெ” போன்ற ஹட்டிகளும், “தங்காடு” ஊரில் “தங்காடு ஓடேரு” எனும் ஹட்டியும், “தந்தநாடு” ஊரின்கீழ் “அரக்கம்பெ”, “அரெயட்டி”, “ஒரசோலெ”, “கடக்கோடு”, “கன்னேரிமுக்கு”, “கடெகம்பட்டி”, “கீயெ அணெஹட்டி”, “கீயெ ஓடேணு”, “குன்னிட்டு”, “கெச்சிகட்டி”, “கேர்பெட்டா”, “கோட்டுநாயி”, “குண்டாட”, “ஜக்கல கம்பெ”, “ஜக்கல ஓடெ”, “தலோரெ”, “திம்பெ ஹட்டி”, “நாரகிரி”, “பட்டகொரெ”, “புடியங்கி”, “பெந்தட்டி”, “பேட்டெஹாட”, “மரலகம்பெ”, “மேல் அணெஹட்டி”, “மேல் ஓடேணு”, “சாமெஉல்லு திட்டு”, “சுண்டட்டி”, “சேலெகொரெ”, “அய்யூரு” ஆகிய ஹட்டிகளும், “தூடேகுய்யி” சீமெயின்கீழ் “அசுவந்தொரெ”, “அத்திகல்லு”, “ஏக்குணி”, “ஏக்குணி பிக்கட்டி”, “கடசோலெ”, “கவரட்டி”, “காரெபிள்ளு”, “குருந்தீகெ”, “நஞ்சநாடு”, “நெல்லிமந்து மல்லிகொரெ”, “மாசிகல்லு”, “மேலூரு”, “உல்லத்தி” ஆகிய ஹட்டிகளும், “தேநாடு” ஊரின்கீழ் “கதுகட்டி”, “குயி சோலெ”, “தூநேரி”, “தேநாடு கீயெஹட்டி”, “தேநாடு நடு ஹட்டி”, “தேநாடு மேலட்டி”, “பௌ;ளாட”, “ஹவ்வூரு”, “ஹிட்டெ கல்லு”, “ஒலகேரி” ஆகிய ஹட்டிகளும், “நிருகுவ” ஊரின்கீழ் “குருகத்தி”, “ஒசகேரி” ஆகிய ஹட்டிகளும், “பூஸெ குந்நூரு” ஊரின்கீழ் “கெங்காலு”, “கெத்தலு”, “கோக்கொடலு”, “கோணகட்டி”, “பரமண்ணு”, “பெந்தட்டி”, “மொத்த கம்பெ”, “ஒசஹட்டி” ஆகிய ஹட்டிகளும், “பெத்துவா” ஊரின்கீழ் “அட்டவெ”, “இருபுக்கல்லு”, “ஈத்தொரெ”, “எடெபிள்ளு”, “கட்டபெட்டு”, “கல்லட்டி”, “காத்திகெ ஹட்டி”, “கேர்பெந்நு”, “தொகலட்டி”, “தொத்தமொக்கெ”, “நட்டக்கல்லு”, “நடுஹட்டி”, “புதுமந்து”, “பையங்கி”, “பெட்டட்டி”, “ஆலுகேரு”, “ஒன்னொரெ”, “ஓசஹட்டி” போன்ற ஹட்டிகளும், “மீதேனு” ஊரின்கீழ் “கன்னேரி முக்கு”, “கேர்க்கம்பெ”, “கோணக்கொரெ”, “பட்டெகொரெ” போன்ற ஹட்டிகளும், “மேல் குந்தெ” ஊரின்கீழ் “அட்டுமண்ணு”, “கெச்சிகட்டி”, “கெரப்பாடு”, “நடுஹட்டி”, “முள்ளிமலெ”, “மேல்குந்தெ” போன்ற ஊர்களும், “மேலுர் ஒசாட்டி” ஊரின்கீழ்; “மணியட்டி”, “புதுஹட்டி” ஆகிய ஊர்களும், “மேலுரு” ஊரின்கீழ் “அங்கடியட்டி”, “அட்டுபாயிலு”, “ஆரகட்சி”, “இத்தலார்”, “ஊமரிகண்டி”, “ஒட்டிமொர ஒசட்டி”, “ஓடேரு”, “ஓரெநாயி”, “கந்நேரி”, “கரிகல்பே”, “கரிமொர”, “கல்லக்கொரெ”, “கோடேரி”, “கொடலட்டி”, “தூதலெ”, “நுந்துவா”, “நய்யட்டி”, “போர்த்தி”, “பாய்கெ மந்து”, “பாக்கொல”, “பிக்கோளு”, “பிங்கச்சக் கல்லு”, “பெம்பட்டி”, “பௌ;ளாட”, “பேலிதோ”, “மந்தணெ”, “மீக்கேரி”, “முதோலு”, “மேலுரு”, “ஒச ஹட்டுபாயிலு” போன்ற ஹட்டிகளும், “சோலூரு” ஊரின்கீழ் “கோட்டட்டி”, “தட்டனேரி”, “தலெமலெ”, “நாகரத்தணெ”, “பிக்கெ கண்டி”, “பேகோடு”, “ஒசஹட்டி” போன்ற ஹட்டிகளும், “உலிக்கல்லு” ஊரின்கீழ் “கெந்துவ”, “தேனலெ”, “பந்நெ மனெ” போன்ற ஹட்டிகளும் அமைந்துள்ளன. படர்களின அக்க பக்காவிற்கு கீழ் அமைந்துள்ள ஊர் மற்றும் ஹட்டிகளின் பெயர்கள் அனைத்தும் அது அமைந்துள்ள நிலவியல் மற்றும் கருப்பொருள் அடிப்படையில் பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கால்வழியினரின் வாழ்கள அமைப்பாக விளங்கும் இந்தப் பக்காக்கள் படகர்களின் மணமுறைக்கான பண்பட்ட, தெளிவான பிரிவாகவும் கூறாகவும் திகழ்கின்றன. மேலும் ஆதியில் ஓரிடத்தில் ஊரமைத்து வாழ்ந்து, மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் வாழ்நிலை பரிணாமத்தின் அடிப்படையில் ஹட்டிகளாகப் பெருகி அமைக்கப்பட்ட வாழ்கள அமைப்பாகவும் இது திகழ்ந்து வருகின்றது. ஆதியிலிருந்து இன்றுவரை பிரியாத ஒரு கால்வழியினரின் கூட்டுக் குடும்பக் கூறாகவும், பங்காளிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும், தம்முன்னோர்களின் மரபின் நெறியினின்று இடைவிடாது தொடரும் சமூகக் கட்டமைப்பாகவும், சமூகக் கட்டமைப்புச்சார்ந்த மரபறிவாகவும் இந்த “அக்க பக்காக்கள்” திகழ்கின்றன. படகர்களின் ஆதிவாழ்வின் ஆவணங்களாகத் திகழும் இந்த “அக்க பக்காக்கள்”; பல்லாயிர ஆண்டைய படகர்களின் மரபினைப் பேணிக்காக்கும் தொல்லியல் சின்னங்களாகவும் விளங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

துணைநின்றவை

1. முனைவர். இரா.கு.ஆல்துரை, படகர்களின் அறுவடைத் திருநாள், நூல்.

2. நேர்க்காணல் திரு. கல்லன், ஒரசோலை, நீலகிரி மாவட்டம்.

3. நேர்க்காணல் திருமதி. செள்ளி, ஒரசோலை, நீலகிரி மாவட்டம்.

4. நேர்க்காணல் திரு. பானிரங்கன், கம்பட்டி, நீலகிரி மாவட்டம்.

5. நேர்க்காணல் திரு. ஹிரியன், கம்பட்டி, நீலகிரி மாவட்டம்.

6. முனைவர் ஆ.இரமகிருஷ்ணன், பொரங்காடு சீமை படகர்களின் வழிபாட்டுமரபுகள்,

முனைவர்பட்ட ஆய்வேடு, பராதியார் பல்கலைக்கழகம்.

7. முனைவர் கோ.சுனில்ஜோகி, படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள்,

முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியர் பல்கலைக்கழகம்.

8. நிழற்பட உதவி - முனைவர் கோ.சுனில்ஜோகி மற்றும் அறிஞர்கள் திரு. இரகுஜோகி

மற்றும் முக்கிமலை சுகுமாரன், நீலகிரி.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.