மொழியை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படும் கலை பல்வேறு வடிவங்களையுடையது. அவை வாய்மொழியாகவும் பாட்டு வடிவமாகவும் கதை வடிவமாகவும் நாடகமாகவும் உரைநடை வடிவமாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். மனித இன நாகரிக வளர்ச்சியில் நெடுங்காலமாகப் படைக்கப்பட்டுக் கலைத் தன்மையோடு கூடியவையை இலக்கியமாக கருதும் எண்ணப்போக்கு உருவாகியதை உணர முடிகிறது. ‘இலக்கியம் எழுத்து வடிவத்தை வெளிப்படுத்தும் கலை’ என இலக்கிய இயல்பு நூலாசிரியர் விளக்கமளிக்கிறார். ஆனால் இன்றளவும் மக்களோடு கலந்த காவியமாகத் திகழும் நாட்டார் வழக்காற்றில் வாய்மொழி மரபான பாடல்களும் (Oral literature) இவையும் வாய்மொழி இலக்கியமாகவே கருதப்படுகின்றன. எனவே ஏட்டிலக்கிய வடிவத்திற்கு மூலகர்த்தாவாக இருப்பது வாய்மொழி இலக்கியமே என்பதை நம்மால் மறுக்க முடியாது. இவ்வாறு வாழ்க்கையின் விழுமியமாக விளங்குகின்ற இலக்கியங்களை 20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒப்பிட்டு ஆராயும் நிலை இலக்கிய உலகில் தோற்றம் பெற்றது. இத்தகைய ஓப்பியல் ஆராய்ச்சியின் விளைவாக ஏட்டிலக்கியத்திற்கு அடிப்படையாக வாய்மொழி இலக்கியமே அடிப்படைத் தரவாக அமைந்தது என்ற கருத்து ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

ருசிய நாட்டு அறிஞர் ராட்லவ், டார்டர்ஸ் (Tatars) இனத்தை ஆய்வு செய்து அவர்களால் வீரயுகப்பாடல்களில் கையாளப்படும் உத்திகளை அடையாளப்படுத்தினார். ஜோசப் ருசோ, எச்.எம். சாட்விக் தம்பதியரும் வீரயுக இலக்கியம், பேச்சு மொழியிலிருந்து எழுந்தது என்ற கருத்தை முன்வைத்தனர். சி.எம்.பெளரா ஒடிசி இலியட்டையும், சித்தார்த்தா இராமாயண மகாபரதத்தை ஆராய்ந்து அவற்றில் கணப்படும் வீரகாவியப் பண்புகளை அடையாளப்படுத்தினர். பாமர வாய்மொழி மரபினை (Oral Tradition) பாடல்கள் வழியாகவும், கதைகளாகவும், கதைப்பாடல்களாகவும் இனங்கண்டு வகைப்படுத்தி வாய்மொழி மரபினை வெளிப்படுத்தும் உயர்ந்த நோக்கத்தில் நாட்டுப்புறவியலுக்கே உரித்தான கோட்பாடுகளுள் ஒன்றான ‘வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டை’ மில்மன் பாரி – லார்டு உருவாக்கினர். இக்கோட்பாடு அகில உலக ஆராய்ச்சிப் போக்கில் தனக்கென்ற அடையாளத்தை நிலைநாட்டத் தொடங்கியது. ரஷ்யா, ஜெர்மன், ருசியா, சீனா, செர்போஃக் கோட்டன் போன்ற பல்வேறு நாடுகளில் ஊடுருவிய இக்கோட்பாட்டுத் தளத்தினைப் பாரிக்கு முன்பே நான்கு தலைமுறையாக வளர்த்தெடுக்கப்பட்டன. 1856-ல் தொடக்கம் பெற்று 1926-ல் மூன்றாம் தலைமுறையான மில்மன்பாரியின் வருகையால் அகன்ற ஆய்வுப் பரப்பான இக்கோட்பாடு பல்வேறு ஆய்வாளர்களால் விமர்சனங்களுக்கும், ஆய்வுக்கு உட்பட்டுப் பிரமாண்ட கோட்பாடாக வடிவம் பெற்றது. ஹார்வேர்டு கல்லூரியானது பதினான்கு நபர்களைக் கொண்டு ஜேம்ஸ் வால்கர் (James walker) தலைமையில் உருவாக்கப்பட்டது. இளங்கலைப் படிப்பாகச் சுமார் 382 மாணவர்கள் பயின்றனர். பிரான்சிஸ்ஜேம்ஸ் சில்டு (Francis James Child) 1856-ல் ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியாகப் பணியாற்றினார். இலக்கிய ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு வாய்மொழி மரபோடு தொடர்புடைய பிரட்டன் (Britain) கதைப்பாடல்களைச் சேகரித்து 40 வருடங்களாகத் தனது வாழ்க்கையை ஆய்வு உலகிற்கு அர்ப்பணித்துப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். தி பிரிட்டிஸ் போயட்ஸ் (The British Poets) என்ற நூலில் 300-க்கும் மேற்பட்ட ஆங்கில மற்றும் ஸ்காட்டிஸ் (Scotish) கதைப்பாடல்களைத் தொகுத்து 8 மடலங்களாக 1856-1859யில் வெளியிட்டார். இதன் மூலம் பிரட்டன் வாய்மொழி மரபின் வரலாற்றினை எடுத்துயிம்பினார். 7000 புத்தகங்களை அறிஞர் சார்லஸ் மின்னாய்ட் (Charles minont) என்பவரின் துணையோடு ஹார்வேர்டு நூலகத்தில் திரட்டி வைத்துள்ளார். இவை வாய்மொழி மரபினை இலக்கியத்தோடு ஒப்பிடும் ஆராய்ச்சிக்கு வழிகோலாக அமைந்தன.

1882-ல் பிரான்சிஸ் ஜேம்ஸ்சிலைடுவின் மாணவரான ஜார்ச் லைமேன் கேட்ரேஜ் (George Lyman Kittredge) ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் வாய்மொழி மரபில் தனது ஆய்வினை மேற்கொண்டு , தனது ஆசிரியரான சிலைடின் நூலினை வெளியிட உதவியாக உள்ளார். அவருடைய திரட்டுகளை 34 மடலங்களாக அவுடன் நூலகத்தில் (Houghton) ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் வைத்துள்ளார். 1890-ல் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1907முதல்1917 வரை தனது ஆய்வு சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டார். பிரிட்டிஸ் ஐரோப்பிய வாய்மொழி இலக்கிய மரபினை ஆய்வு செய்து, பழமை இலக்கியம், இடைக்கால இலக்கிய காலக்கட்டங்களில் வாய்மொழி மரபினை ஒப்பிட்டு ஆராய்ந்து இலக்கியத் தரத்தினை மேம்படுத்தினார். 1936-ல் பணி ஒய்வு பெற்று 1948-ல் மரணமடைகிறார். அவருடைய மகன் ஆலைன் (Alan) ஹார்வேர்டு கல்லூரியில் புலமுதன்மையராகப் பதவி பெற்று அவருடைய பாடல்களின் திரட்டுகளைப் பாதுகாத்து வைத்துள்ளார். 1926 – ல் மூன்றாம் தலைமுறையான மில்மன் பாரியின் வருகையால் வாய்மொழி மரபானது கோட்பாடாக வடிவம் பெற்றது.1928-ல் கலிப்போர்னிப் பல்கலைக்கழகத்தில் சர்போனிய மொழியில் (Sarbonne) ஆன்தாயின் மில்லட் என்ற பேராசிரியரின் நெறியில் ஆய்வு மேற்கொண்டு ‘ரேயிக்யேவுலுக்கு’ (Harichavlook) என்ற தனது ஆய்வேட்டைப் பிரெஞ்சு மொழியில் வெளியிட்டார். பின்னர் 1932-ல் ஹார்வேர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகத் திகழ்ந்த பாரி செவ்விலக்கியவாதியாவார். இவருக்கு ஹோமரின் இலியட், ஒடிசியில் காணப்படும் சில அமைப்புகள் வாய்மொழி மரபுடன் தொடர்புடையது என ஐயம் பிறந்தது. அவற்றுக்கு விடைகாணும் முகமாக அமைந்ததே ‘வாய்மொழி வாய்பாட்டு கோட்பாடாகும். வாய்மொழி இலக்கியத்தை தழுவியே எட்டிலக்கியம் வந்தது என்ற கருத்தினை மெய்பிக்க ஹோமரின் இலியட், ஒடிசியாகிய காவியங்களில் காணப்படும் சில பெயரடை அமைப்புக்கு இணைப்புத் தன்மைக்கு புதிய விளக்கம் தந்தார்.

நாட்டுப்புறப்பாடலில் சில சொல்லமைப்புகள் காரணம் தெரியாமல் தங்கியிருக்கும். அவை வாய்பாடு தன்மை பெற்றது என்பதை ஹோமரின் காவியத்தில் பொருத்திப் பார்த்து விளக்கம் அளித்தார். எனவே ஹோமர் மரபுக் கவிஞர் அல்ல, வாய்மொழிக் கவிஞர் என்ற கருத்தை முன்மொழிவதற்கு அவருடைய பேராசிரியர் ஆன்தாயின் மில்லட் முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். எனவே இதனை மெய்ப்பிக்க பாரி – லார்டும் 1933 முதல் 1935 வரை யூக்கோஸ்லோவிய நாட்டில் களப்பணி செய்து, பல்வேறு பாடகர்களைச் சந்தித்துப் பாடல்களைப் பதிவு செய்தனர். பாரி தற்செயலாகக் குண்டடிபட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற இடத்தில் மரணமடைகிறார். இவருடைய களப்பணியை லார்டு தொடர்ந்து முடிக்கிறார். அந்தக் களப்பணியின் முடிவுகளைக் கொண்ட நூலைப் பாரியின் மரணத்திற்குப் பின் 1960–ல் லார்டு வெளியிடுகிறார். அந்நூலின் பெயர்தான் ‘கதைப்பாடகன்’ (The Singer of Tales). இந்நூலானது இலக்கிய ஆய்வுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வாய்மொழிப் பாடகர்களின் நிகழ்த்துக்கலையைக் கொண்டு வாய்மொழி மரபினை இனங்காணக்கூடியதாகத் திகழ்கின்றது. கோட்பாட்டுத் தளத்தில் வாய்பாடு (Formula) குறிப்பிட்ட இன்றியமையாத ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரே விதமான யாப்புச் சந்தத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சொற்தொகுதி என லார்டு கூறுகிறார்.(A.B.Lord:32) வாய்மொழிப் புலவர்க்கும் வாய்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் அடிக்கருத்து (Theme) பாடல்கட்டப் பாடகனுக்கு உதவும் கூறுகளுள் ஒன்றாகும். எடுத்துரைத்தலில் திரும்பத் திரும்ப வரும் கூறு அல்லது மரபு வழிப்பாடகன் வாய்பாட்டு நடையில் ஒரு கதையைச் சொல்லுவதற்காக வழக்கமாகப் பயன்படுத்தும் கருத்துகளின் தொகுதிகள் அடிக்கருத்தாகும். (A.B.Lord:36) இக்கோட்பாட்டை கிரேக்க கவிஞர் ஹோமரின் இலியட், ஒடிசியில் பொருத்தி ஆய்வு செய்யப்படுகிறது. அதன் புதிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடனது வாய்மொழி இலக்கியங்களின் அமைப்புமுறை, எடுத்துரைப்பவனின் சொல்லும் முறை, சொல்லும்போது பாடகன் செயல்படும்முறை ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கின்றது.

ஹோமரின் இலக்கிய மொழியமைப்பு பற்றிய தமிழக ஆராய்ச்சிப் போக்கில், ஒப்பியல் ஆய்வில் தமிழறிஞரான க.கைலாசபதி ’தமிழில் வீரநிலைக் கவிதை’ என்ற நூலில் இக்கோட்பாட்டினை சங்க இலக்கியத்தில் பொருத்திப் பார்த்துள்ளார். இவரைத் தொடர்ந்து சரஸ்வதிவேணுகோபால் நாட்டுப்புறக்கதை ஒன்றில் இக்கோட்பாட்டைப் புகுத்திப்பார்த்துள்ளார். பேராசிரியர் ஆ.திருநாகலிங்கம் வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டை நாட்டுப்புறக்கதைப்பாடல் ஒன்றில் பொருத்திப் பார்த்துச் செம்மொழி மாநாட்டில் கட்டுரை வழங்கியுள்ளார். தமிழவன் போற்றாரும் இக்கோட்பாடு தொடர்பாக எழுதியுள்ளனர். நான் 2011-ல் எனது முனைவர்பட்டத்திற்காக வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டினை கம்பராமாயணத்தில் பொருத்தி ஆய்வுமேற்கொண்டேன். இதுவரை பாரி – லார்டு கூறும் வாய்பாடுகள் குறித்த முழுமையான கோட்பாடு எடுத்துக்கொள்ளப்பட்டுத் தமிழில் யாதொரு ஆய்வும் மேலை நாட்டில் நிகழ்த்தப்பட்டது போல இங்கு நடைபெறவில்லை. இதைத் தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்ப்பதின் மூலம் தமிழ் இலக்கியம் உலகளாவிய பார்வை பெறுவதற்கும் தமிழ் இலக்கியத்தின் உலக நோக்கு வெளிப்படும் என்ற அடிப்படையிலும் இந்த ஆய்வினைச் செய்துள்ளேன்.மேலும் “வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடும் கம்பராமாயணமும்” என காவ்ய பதிப்பத்தார் 2021 நூலக வெளியிட்டுள்ளேன். இக்கோட்பாட்டினை முழுமையாக விளக்கிச் செல்ல முயல்வதோடு, புதிய சிந்தனைக்கு அவை வித்திடுகின்றன. சமூக அக்கறையுடன் நாட்டுப்புறவியல் துறையில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும் சிறப்பானது. நாட்டுப்புறவியலுக்கே உரித்தான இக்கோட்பாட்டினைக் கதை, கதைப்பாடல், பாடல்கள், சமகாலத் தொலைக்காட்சியில் புதிய உள்ளடக்கத்துடன் கட்டப்படும் பாடல்களையும் ஆராயலாம். எனவே இக்கோட்பாட்டினை அறிமுகப் படுத்தும் நோக்கில் இக்கட்டுரையானது ஆய்வுலகில் புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில் உங்கள்முன் வைக்கப்படுகிறது.


பார்வை நூல்கள்

1. Albert Bates Lord, ‘The Singer of Tales’ Harvard University Press, Cambridge,
Massachusetts, London. 1960.


2. இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல்கள்

www.oraltrdition.org/zbm
http//chs.harvard.edu/mpc

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.