உலகெலாம் உணர்ந்து ஓதத்தக்க அருட்பாக்களை அருளிய அருட்புலவர்கள் திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும். அவர்கள் அருளிய அருட்பாக்கள் பன்னிரு திருமுறைகளாகவும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களாகவும் விளங்கி மக்களுளத்தில் இறைவேட்பினை அளித்து வருகின்றன. இறைவேட்பிலக்கியங்களான அவை பத்திமையை மட்டும் உட்கிடையாகக் கொண்டமையாமல் அக்காலத்திய வரலாற்றையும் கொண்டொளிர்கின்றது. குறிப்பாகக் கடைக்காப்பு இத்தன்மையன. அவை தரும் ஒளியில் வரலாற்றை அணுகுங்கால் தெள்ளிய நீரோடை போல அது காட்சிப்படும். நம்பகத்தன்மையுடைய வரலாறு வெளிப்படும். வரலாற்றெழுதியலுக்கு அவை உதவுமாற்றைச் சிறுகுறிப்புகளோடு எடுத்துக்காட்டும் போக்கில் இக்கட்டுரை அமைகிறது.

வரலாறெற்றெழுதியல்

வரலாறு என்பது அறிவியல்; கலையல்ல. கற்பனைகளுக்கு அதில் இடமில்லை. ஆனால் இலக்கியம் கற்பனையும் வரலாறும் கலந்தது. வரலாற்றைச் சுவைப்படுத்தித் தரும் இயல்பினது. இலக்கியத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக் கூறுகளைத் தக்க சான்றுகளோடு கண்டடைந்து எழுதப்படும் வரலாறு பெரும்பாலும் நம்பகத்தையோடு விளங்குமென நம்பலாம். அத்தகைய வரலாற்றெழுதியலுக்கு இறைவேட் பிலக்கியங்களான பன்னிரு திருமுறைகளும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும் பெரிதும் துணைசெய்கின்றன. கி.பி. ஐந்தாம் நுற்றாண்டு தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரலயிலான தமிழ்நிலத்தின் பல்வேறு சூழமைவுகளை அவை தன்னுட் கொண்டுள்ளன. அவற்றை இனங்கண்டு ஆய்ந்து வெளிப்படுத்த வேண்டியது தமிழுணர்ந்தாரின் கடனாகும்.

கடைக்காப்பு

திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும் அருளிச்செய்த பதிகங்கள்/பாசுரங்களின் கடைப்பாடல் கடைக்காப்பு/பயன்தலைக்கட்டுதல் என்று வழங்கப்படுகின்றன. அக்கடைப்பாடல்களைச் சற்று உற்றுநோக்கிடின் அவற்றில் வரலாற்றெழுதிலுக்குதவும் சில அடிப்படை வினாக்களுக்கான விடையிருப்பதைக் காணலாம். அப்பாடல்கள் எங்கு பாடப்பட்டன? யார் பாடினார்? ஏன் பாடப்பட்டன? அவற்றைப் பாடடினால் என்ன கிடைக்கும்? என்பன அவ்வினாக்கள். ஒன்றிரண்டு குறைந்தும் மிக்கும் வருவனவும் உள. சான்றாக, திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தைக் கொண்டு இதனைக் காணலாம்.

”ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே” (தே. 2.66.11)

என்பது அப்பதிகத்தின் கடைக்காப்புப் பாடல்.

மேற்கண்ட கடைக்காப்பின் முதலடி இப்பதிகம் ஆலவாயில் (மதுரை) பாடப்பட்டதாகக் கூறுகிறது. இரண்டாம் அடி யார் பாடியது என்ற வினாவிற்கு விடையாகப் புகலியைச் சேர்ந்த ஞானசம்பந்தன் பாடியது என்று விடை தருகிறது. எதற்குப் பாடப்பட்டது என்பதற்கு “பாண்டியன் மன்னன் ஒருவனின் வெப்புநோயைப் போக்குவதற்கு” என்று மூன்றாம் அடி விடை தருகிறது. இப்பாடல்களைப் பாடினால் பாடியவர்கள் நல்லவர்களாவர் என்ற பதிகப்பலனை நான்காம் அடி கூறுகிறது. இதுபோன்ற பல்வேறு வரலாற்றுக் கூறுகளைக் கடைப்பாடல்கள் கொண்டுள்ளன. குறிப்பாகத் தன்வரலாறும் சமூக வரலாறும் வெளிப்படுமாற்றை அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களிலும் காப்பிய இலக்கியங்களிலும் காணப்பெறாத கடைக்காப்பு என்னும் அமைப்பு திருமுறையாசிரியர்கள், ஆழ்வார்களின் பனுவல்களிற்றான் அதிகமாகக் காணப்படுகின்றன. காரைக்காலம்மையாரின் திருப்பதிகங்களில் தான் இவ்வமைப்பு முதன்முதல் பதிவாகியுள்ளதைக் காணமுடிகிறது. காரைக்காலம்மையாருக்குப் பின்னர் தோன்றிய தேவார மூவரும் ஒன்பதாம் திருமுறையாசிரியர்களும் இதனைப் பெருவழக்கிற் கொணர்ந்தனர். அக்காலங்களில் வாழ்ந்த ஆழ்வார்கள் சிலரும் இவ்வமைப்பைக் கைக்கொண்டனர் என்பதற்குத் திவ்வியப்பிரபந்தங்கள் சான்றாகின்றன.

கடைக்காப்பைக் கொண்டு வரலாறெழுத முற்படும்பொழுது நமக்குச் சில விடயங்கள் அவற்றினின்று எளிதிற் கிடைக்கின்றன. பாடிய புலவர்களின் பெயர்கள், அவர்களின் ஊர், குலம், கேளிர்பெயர், நிலவமைப்பு, நீர்நிலைகள் போன்ற புவியியற் குறிப்புகள், அக்காலத்திய வழக்காறுகள், இசைக்கூறுகள், மொழிக்கூறுகள், அரசர்கள் பற்றி செய்திகள், புராணங்கள் என்பன அவற்றுட் சில.

தமிழ்ப்பக்தி இலக்கியத்தின் முன்னோடி

தென்னிந்திய நிலப்பகுதி வடக்கில் மலையரணையும் கிழக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் கடலரணையும் கொண்டுள்ள நிலப்பகுதியாகும். இயற்கை அமைப்பு மிகப் பாதுகாப்பாகனதாகவும் வளமிக்கதாகவும் அமைந்திருந்த காரணத்தினால் இந்நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்முறை செம்மையாக இருந்துள்ளது. பண்பாடும், மொழியும், கலையும் ஓங்கி வளர்வதற்கும், அதிகமாகக் கலப்பின்றி நிலைப்பதற்கும் இந்நிலக்கூறமைப்பும் ஒரு முக்கியக் காரணம் எனலாம். எனவே அறிவுத் தேடலும், அறிவீட்டலும், அறிவுப் பகிர்தலும் இந்நிலத்திற் சாத்தியமாயின.

”தென்னிந்தியப் பண்பாடு மிக வலிமை வாய்ந்தது. பக்தி வழிபாடு இந்தியாவில் பல்வேறு நிலப்பகுதியில் கிளர்ந்தெழுந்ததனால் அந்தப் பண்பாடடைத் தொடங்கி வைத்தது தமிழ்ப் பக்தி இயக்கம். அதன் விளைவாகவே இந்தியத் துணைக்கண்டத்தின் பல நிலப்பகுதிகளில் பக்தி இயக்கம் பொங்கி எழுந்தது” (வைணவம், ப. x) என்ற ரோமிலா தாப்பரின் கருத்து தமிழ்ப் பக்தி மரபின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.

இந்தியத் துணைக் கண்டத்திதன் பல நிலப்பகுதிகளில் பக்தி இயக்கம் பொங்கிப் பெருகுவதற்குக் காரணமாக அமைந்த தமிழ்ப் பக்தி இயக்கத்தின் முன்னோடியாகக் காரைக்காலம்மையார் கருதப்படுகிறார். கடைக்காப்பு என்னும் அமைப்பு தமிழில் வழக்கில் வரவும் அம்மையாரே முன்னோடியாக இருந்தார் என்பதும் தேவார மூவர் (திருநாவுக்கரசர் சில இடங்களில் மட்டும்) அதனைப் பெருவழக்கிற் கொணர்ந்தனர் என்பதும் முன்னர் கூறப்பட்டது. ஊர் ஊராகச் சென்று இறைவனைப் போற்றிப்பாடும் மரபு இலக்கியத்தில் முதன்முதல் அம்மையாரிடம் காணப்படுகிறது. பக்திப் பரப்புரைக்கு இது வெகுவாக வித்திட்டது.

”தமிழர்களின் தொல்பழஞ் சமயமாகிய சைவம் எவ்வாறு எவ்வழியில் செல்ல வேண்டும் என்பதற்குக் கோடிட்டுக் காட்டியவர் அம்மையார். மூவர் தேவாரங்கள் இவர் வழியைப் பின்பற்றிச் சென்றனவே தவிரப் புதுவழி ஒன்றையும் வகுக்கவில்லை” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப. 119) என்று அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் அம்மையார் தமிழ்ப் பக்தி இயக்கத்திற்கு வித்திட்ட தன்மையை எடுத்துரைக்கிறார். மேலும் அவர் ”இறைவனிடம் முழு அன்பு செலுத்துதல், தன்னை முழுவதுமாக அவனிடம் அர்ப்பனித்தல், இருவினையைப் போக்க முயலுதல், பிறப்பை அறுக்க முயலுதல், இறைவன் தன் உள்ளத்திலேயே உறைவதை உணர்தல், இவற்றால் அவலம் நீங்குதல் என்பவை அம்மையார் சைவ சமய வளர்ச்சிக்குத் தந்த கொடைகளாம். இவருக்கு முன் இக்கருத்துக்களை இவ்வளவு அழுத்தமாகக் கூறும் நூல்களைக் கண்டதில்லை” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப. 119) என்றும் கூறுகிறார். இக்கூற்று தேவார மூவர் முதலிகள் கைக்கொண்ட நெறிக்கு வித்திட்டவர் காரைக்காலம்மையார் என்பதை எடுத்துரைக்கின்றன.

திருஞானசம்பந்தரின் கடைக்காப்பு

தமிழ்ப் பக்தி மரபில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை திருஞானசம்பந்தராவார். பத்தியைப் பரப்புதல் என்பதில் மட்டுமல்லாது தமிழ்மொழி பரப்புதல் என்பதிலும் மிகத் தீவரமாச் செயலாற்றியவர் அவர். காரைக்காலம்மையார் தொடங்கிவைத்த வரலாறும் பலனும் கூறும் கடைக்காப்புச் செல்நெறியைத் தன்னுடைய அனைத்துப் பாடல்களிலும் கைக்கொண்டு செயலாற்றியவர் திருஞானசம்பந்தராவார்.

பத்துப் பாடல்களைக் கொண்டது பதிகம். ஆனால் திருஞான சம்பந்தர் பதினோரு பாடல்களைக் கொண்டதாகத் தன் பதிகங்களை அமைத்துக் கொள்கிறார். அப்பதினோராம் பாடலே கடைக்காப்பாக அமைகிறது. இவ்வமைப்பில் சுந்தரரும், ஒன்பதாம் திருமுறையாசிரியர்களும் பாடியிருப்பினும் சைவ இகை்கியவுலகில் திருஞானசம்பந்தரின் பதிகங்களுக்கே “கடைக்காப்பு“ என்ற சிறப்புப் பெயர் வழங்கப்படுகிறது. அவ்வளவிற்கு அவர் இவ்வமைப்பைக் கைக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருஞானசம்பந்தர் இத்தகையதொரு அமைப்பைக் கைக்கொண்டதற்கான காரணம் யாதென்று ஆராயப்புகும்பொழுது வரலாறு வெளிப்படத் தொடங்குகிறது. காரணமின்றிக் காரியமில்லை என்பது ஆன்றோர் வாக்காகலின் இதற்கும் தக்க காரணம் இருத்தல் வேண்டும். அ.ச.ஞானசம்பந்தன், ”அன்றையச் சூழ்நிலையில் மக்கள்படம் அவதியைப் போக்க வேண்டமானால் அவர்கள் மனத்தில் ஓர் உறுதியான நம்பிக்கை துளிர்விட வேண்டம். சமணம், பௌத்தம், வைதிகம். வைணவம் என்பவை ஒவ்வொன்றும் தத்தம் கொள்கைகளே உண்மையானவை; உயர்கதியடைய விரும்புவோர் தம்மிடமே வரவேண்டுமென்று ஆளுக்கு ஒருபக்கம் இழுக்கையில் இதனிடையே அகப்பட்ட எதுவழி என்று தெரியாமல் அல்லல்பட்டுக் கலங்கிநிற்கும் மக்கட்கூட்டத்தை நெறிப்படுத்த ஒருவர் வந்தால், முதலாவது அம்மக்கள் மனத்தில் ஊட்ட வேண்டியது வலுவான நம்பிக்கையாகம். இறைவன் உளன் என்று கூறுவதனால் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டுவிடாது. எனவே மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அவர்கள் 'துன்பம் நீங்கும் துயரம் போகும்' என்று கூறுவதுடன் இது சத்தியம் இதை நம்பலாம் என்ற கருத்தில் 'ஆணை நமதே' என்றும் பாடினார் பெரியார். எனவே திருக்கடைக்காப்புப் பாடலையும் அதன் பயன் யாது என்பதையும் புரட்சிவீரராகிய பெருமான் பாடியது அன்றைய சமுதாயத்திற்கு ஓர் ஊன்றுகோல் தருவது போல உதவுதற்கேயாம்” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, பக். 146, 147) என்று கூறுவது கவனிக்கத்தக்கது. குறிப்பாக அக்காலத்தில் சமணம், பௌத்தம், வைதிகம், வைணவம் போன்ற சமயங்கள் மக்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்றன என்பதும் அதைத் தடுத்து நிறுத்தும்பொருட்டு திருஞானசம்பந்தரால் கடைக்காப்பு என்னும் உத்தி என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை. இது அக்கால சமூகத்தின் சமயச் செல்நெறியைக் குறிப்பால் உணர்த்துகிறது. அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் வாயிலாக மட்டுமல்லாது திருஞானசம்பந்தரின் பதிக அமைப்பினாலும் இதனை அறியமுடிகிறது. அவரது பதிகங்களில் ஒன்பதாம் பாடல் மாலயன் காணப்பெறாதவன் சிவன் என்பதையும், பத்தாம் பாடல் சமண பௌத்தர்களின் இயல்பையும் எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்திருப்பது இதனைத் தெளிவுபடுத்தும். சமண பௌத்தம் என்பது இறைமறுப்புத் தத்துவங்கள் என்பதால் சம்பந்தர் அதை மறுத்தார் அதைப் போலவே இந்நிலத்துச் சமயமான இறையேற்புச் சமயமான வைவணவத்தையும் சைவத்தை நிலைநாட்டும் பொருட்டு அவர் மறுதலிக்கிறார். அதன் ஓர் உத்திதான் அவர்தம் பதிகங்களின் ஒன்பதாம் பாடலில் காணப்படும் மாலயன் காணாதவன் என்ற பதிவு. ”புராண இதிகாசக் கதைகளைத் தாராளமாகப் பயன்படுத்தும் பிள்ளையாருக்கு அடிமுடி தேடிய கதை, சக்கரம் மாலுக்கு ஈந்த கதை, திரிபுரம் எரித்த கதை, பிரம்மனின் தலையைக் கிள்ளிய கதை என்பவை பெரிதும் உதவின” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப. 145) என்ற அறிஞர் கூற்றும் இதை மெய்ப்பிக்கும்.

தமிழ்விரகினன்

திருஞானசம்பந்தர் தனது கடைக்காப்புப் பாடல்களில் தனது பெயரைப் பல்வேறு அமைமொழிகளோடு பதிவு செய்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது அவர் தன்னைத் தமிழுடன் அடையாளப்படுத்திக் கொள்வது. ”தமிழ்நாட்டில் தமிழராகப் பிறந்த ஒருவர் ஒவ்வொரு பாடலிலும் தன்னைத் தமிழுடன் சேர்த்துக் கூறிக்கொள்ள வேண்டுமானால் அதற்குரிய வலுவான காரணம் ஏதாவது இருத்தல் வேண்டும்… சங்கப் பாடல்களிலோ சிலப்பதிகாரம் முதலியவற்றிலோ தமிழைப் பற்றிய தனிச்சிறப்பு எதுவும் கூறப்பெறவில்லை. ஆனால் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி நடைபெறுங்காலத்தில் இந்தப் புதுமை நிகழ்கின்றது. அப்படியானால் சங்ககாலம் முதல் ஏழாம் நூற்றாண்ட வரை இத்தமிழகத்தில் நடைபெறாத ஒரு நிகழ்ச்சி இப்பொழுது நிகழ்ந்திருக்க வேண்டும்” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப. 004) என்பது அ.ச. ஞானசம்பந்தன் முன்வைக்கும் கருதுகோள். இதற்கு அவர் தண்டன் தோட்டச் சாசனம், கூரம் செப்பேடுகள் போன்றவற்றைத் துணைக்கொண்டு ஒரு முடிவினைத் தருகிறார். ”தமிழகத்திற்குள் சமண பௌத்தர், வடபுல வைதீகர்களின் குடிபுகுதல்” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப. 132) என்பது அவர்தம் துணிபு. இதனால் பல்லவர் காலத்தில் சமணமும் பௌத்தமும் அரசியல் செல்வாக்குடன் விளங்கின என்பதை உய்த்தறியலாம்.

சமணம் சங்ககாலந்தொட்டே தமிழகத்தில் இருந்துள்ளதைப் பண்டைய இலக்கியங்கள் உணர்த்தினாலும் களப்பிரர் காலத்திற்குப் பிறகு தான் அது அரசியல் பலத்தைப் பெறுகின்றது. ”தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் ஏறத்தாழ கி.பி. முதலாம் நூற்றாண்ட தொடங்கி கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை ஆளும் வர்க்க மதமாக விளங்கின” (வைணவம், ப. xvii, xviii) என்பர் வரலாற்றறிஞர். சமணம் தொடக்க காலத்தில் குறிப்பாகப் களப்பிரர், பல்லவர் காலத்தில் வடமொழிக்கு முன்னுரிமை அளித்துவந்துள்ளது. அரசியல் கலம் பொருந்திய சமணம் வடமொழியைக் கைக்கொண்டதெனின் ஆட்சிமொழியாகவும் வடமொழியே இருந்திருக்கக் கூடும் எனப்தை எளிதில் ஊகிக்கலாம். இதனால் தமிழ்மொழியும் தமிழ்ப்பண்பாடும் பிற்படுத்தப்பட்டிருக்கலாம்.

இத்தகைய சூழமைவில் தோன்றிய திருஞானசம்பந்தருக்குத் தமிழையும் சைவத்தையும் ஏற்றம் பெறச் செய்ய, புறச் சமயங்களான சமண பௌத்தத்தையும் வடபுல வைதீகர்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்ாயம் இருந்திருக்கலாம். திருஞானசம்பந்தர் திருத்தலச் செலவு மேற்கொண்டு தமிழையும் சைவத்தையும் மக்களிடம் பரப்புரை செய்தார். அதற்குத் தன்னைத் தமிழுடன் இணைத்து அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை அவருக்கு உருவாயிற்று. அ. ச. ஞானசம்பந்தன் அவர்களுடைய ஆய்வின் சாரம் இது. இதனடிப்படையில் கண்டால் தமிழ்மக்கள் அரசியல் அதிகாரத்தாலும், விழிப்புணர்வின்மையானும் இழந்துகொண்டிருந்த மொழிப்பற்றையும் பண்பாட்டுணர்வையும் சரியாகக் கண்டடைந்து அவற்றை மக்கள் மனத்தில் மீண்டும் புகுத்த அவர் செயல்பட்டதை அறிமுடிகிறது. அச்செயல்பாட்டிற்குத் தமிழ்மொழியை ஒரு கருவியாகவே பயன்படுத்திய அவரது உத்தி அறியற்பாலது. தமிழ் என்ற ஒற்றைச் சொல்லைத் தனது கடைக்காப்புப் பாடல்களில் பல இடங்களில் திருஞானசம்பந்தர் பயன்படுத்துவது அன்றைய சமூகம் எவ்வாறு இயங்கியது என்ற வரலாற்றை ஆராய்வதற்கு எடுகோளாக அமைவது கவனிக்கத்தக்கது. கடைக்காப்பைக் கொண்டு வரலாறெழுத முற்படும்பொழுது சிறுவிடயமும் கவனிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

நான்மறை நாவன் தமிழ்

சைவத்திற்கு வேதாகமங்கள் முக்கியமான அளவைகளாகும். கவுணியர் குலத்தோன்றலான திருஞானசம்பந்தர் தனது குலமரபான வேதம் ஓதுதலை விடுத்துத் தமிழ்மரபை வளர்க்கப்புகுந்தார் என்று அறுதியிட்டுக் கூறுதற்கில்லை. ஆயினும் அவரது பதிகங்கள் பல வேதத்தினும் தமிழையே அவர் பெருவழக்காகக் கொண்டார் என்பதை உறுதிசெய்கின்றன.

”நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்” (தே. 1.40.11)

”நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ்” (தே. 1.41.11)

”நான்மறை நாவன்” (தே. 1.76.11)

”மறைமலி தமிழ்விரகன் மொழி” (தே. 1.124.11)

என்பன மேற்கூறப்பட்ட கருத்தைக் கொண்ட பாடலடிகள்.

தன்னை வேதமறிந்தவன், வேதமோதும் குலத்துதித்தவன் என்று அவர் கூறும் பல இடங்களில் தமிழுடன் தன்னை இணைத்துக் கூறுகிறார். தமிழையும் சைவத்தையும் பரப்பப் புகுந்த அவர் இவ்வாறு கூறுவது சிந்தனைக்குரியது. ”வேதவேள்வி அறிந்தவனாகிய நான் இவ்வாறு கூறுகிறேன். வேதத்தினும் உயர்ந்தது தமிழே என்று பிள்ளையார் கூறும்பொழுதுதான் அவர் கூற்று வலுப்பெறுகிறது” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, பக். 141, 142) என்ற அ.ச.ஞானசம்பந்தனின் கருத்தும் இவன் ஒப்புநோக்கத்தக்கது.

சம்பந்தர் மட்டுமல்லாது ஆழ்வார்களும் இவ்வாறு கூறுவதைக் காணமுடிகிறது.

”மறைவாணன் பட்டர்பிரான்” (தி.பிர. 337)

”மறையவர்சேர் புதுவைப்பட்டன்” (தி.பிர. 53)

”வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன்” (தி.பிர. 473)

என்பன பெரியாழ்வார் வாக்கு.

இவையாவும் பக்தி இயக்கம் வளர்ந்துவந்த காலத்து சமூகச் சூழலை எடுத்துக்காட்டுகின்றன.

பக்தி இயக்க காலச்சூழலும் கடைக்காப்பும்

தமிழகத்தில் களப்பிரர் காலத்திலும் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தையாண்ட பல்லவ காண்டியர் காலத்திலும் நிலவிய சமூக, மொழிசார்ந்த சூழலைக் கவனித்தால் திருமுறையாசிரியர்கள், ஆழ்வார்கள் ஆகிய அருளாளர்களின் செயல்பாடுகளின் பின்னணியை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள ஏதுவாகும்.

பல்லவர் கால ஆட்சியில் சமண பௌத்தமும் வடமொழியும் செல்வாக்குப் பெற்று விளங்கின என்பது முன்னர் கூறப்பட்டது. அது அவர்களின் சாசனங்களிலும் இலக்கியங்களிலும் வெளிப்படுகின்றன. வரலாற்றிஞர்கள் பலர் இதுகுறித்துப் பதிவு செய்துள்ளனர். ”கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் முற்பட்ட பல்லவ மன்னர்கள் தமிழ்மொழியில் பற்றில்லாதவரென்பதும் தமிழை நன்கு பயிலாதவரென்பதும் அவர்களது ஆட்சிக்காலத்தில் வெளிவந்த சாசனங்களை் தமிழல்லாத வேற்று மொழியிற் காணப்படுதலாலும் அவர்கள் புனைந்துகொண்ட பட்டங்களுள் ஒன்றேனும் தமிழாக இன்மையானும் நன்கு துணியப்படும்” (பன்னிரு திருமுறை வரலாறு, இரண்டாம் பகுதி, ப. 709) என்பார் க. வெள்ளைவாரணன். கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் பாண்டியர்களும் வடக்குப் பகுதியில் பல்லவர்களும் வலுவான ஆட்சி செலுத்தி வந்தனர் என்பது வரலாற்று நூல்கள் தரும் குறிப்பு. பல்லவர் தமிழ் மன்னர்களா அல்லது வேறு நிலப்பகுியினின்று வந்தவர்களா என்பது இன்று வரை விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றது. ஆனால் பாண்டியர்கள் தமிழ்நிலம் சார்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களும் தங்கள் பட்டங்களை வடமொழியற் சூட்டிக் கொண்டிருப்பது அன்றைய காலத்தில் வடமொழி பெற்றிருந்த செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.

”தூய தமிழ்ப் பெயர்களையும் பட்டங்களையும் கொண்டு தமிழ் வளர்த்த பாண்டிய மரபில் வந்த இம்மன்னர்களின் சிறப்புப் பெயர்கள் வடமொழியில் அமைந்துள்ளமை சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டுவோம். சீவரன், வீதகன்மஷன், விநயவிச்ருதன்…, மகாதேவநன்மன் முதலிய வடமொழிப் பெயர்களை அவர்கள் சூட்டிக் கொண்டமைக்கு வடபுலத்துச் செல்வாக்கே காரணம் எனலாம்”. (தமிழ்நாட்டு வரலாறு, பல்லவ – பாண்டியர் வரலாறு, முதற்பாகம், ப. 407) இதனால் தொடக்க கால பல்லவர் ஆட்சியில் மொழிச்சூழல் தமிழ்மொழிக்கு நன்மை செய்யுமாறில்லை. ”பல்லவர்கால இலக்கியங்களை நாம் படித்துப் பார்ப்போமேயாயின் தமிழ் தமிழ் என்னும் ஆவேசக் குரலைக் காமதாறக் கேட்கலாம். ஏனென்றால் பல்லவர் காலத்தில் வடமொழியே அரசவை மொழியாகவும் இருந்தது. அதுமட்டுமன்று சமண சமயப் பிரச்சாரத்துக்காகவும் அதனைச் சார்ந்த தேவைகளுக்காகவும் சமணர்களால் இயற்றப்பட்ட சில நூல்களைத் தவிரப் பெருந்தமிழிலக்கிய நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டில. ஆனால் இக்காலப் பகுதியில் பல சிறப்புவாயந்த வடமொழி நூல்கள் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இயற்றப்பட்டன. பல்லவ மன்னர்களே வடமொழி நூலாசிரியர்களாகவும் இருந்தனர். பல்லவர் ஆட்சிக் காலத்திலேயே லோகவிபாகம், கிரார்தாச்சுனியம், அவந்திசந்திரிகா, காவ்யாதர்சம், மத்தவிலாசப் பிரகசனம், மாவீரசரிதம், உத்தமராமசரிதம், மாலதிமாதவ, முகுந்தமாலா முதலிய வடமொழி நூல்கள் எழுந்தன” (சமணர் கழுவேற்றம், ப. 69).

மகேந்திரவர்ம பல்லவன் வடமொழியில் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நாடகநூல் குறிப்பிடத்தக்கதாகும். சமண சமயத்தின் பெருமை பேசும் நூல் அது. மகேந்திரவர்ம பல்லவன் தொடக்க காலத்தில் சமண சமயம் சேர்ந்தவனாயிருந்து திருநாவுக்கரசரால் சைவ சமயத்திற்கு ஆட்கொள்ளப்பெற்றவன். மத்தவிலாசப் பிரகசனம் அவன் சைவ சமயத்திற்கு மாறும் முன்பு எழுதப்பட்ட நூல் என்பது சொல்லாமலே விளங்கும். வடமொழியில் நாடகநூல் எழுதும் வல்லமை பெற்றிருந்த மகேந்திரவர்மன் சைவம் சார்ந்த பிறகு தமிழ்நூல் யாத்தனரா என்பது அறியக்கூடவில்லை. ஆனால் மகேந்திரவர்மனது கல்வெட்டுகளில் தமிழும் இடம்பெறத் தொடங்கியது என்பதைச் சில வரலாற்றுச் சான்றுகளின்வழி அறியவருகிறது.

“திருமெய்யம் குடைவரைக் கோயிலில் உள்ள முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய இசைக் கல்வெட்டின் தொடக்கத்ததில் 'நமசிவய' என்று எழுதப்பட்டுள்ளது. அப்பர் இயற்றிய நமச்சிவாயத் திருப்பதிகம் தான் இவ்வாறு எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றும். அஃது உண்மைதான் என்பது போன்று மகேந்திரவர்மனின் திருச்சி குகைக் கல்வெட்டில் இச்சொல் காணப்படுகிறது” (தமிழ்நாட்டு வரலாறு, பல்லவ – பாண்டியர் வரலாறு, முதற்பாகம், ப. 90). திருநாவுக்கரசரின் தமிழ்ப்பதிகம் செய்த மாற்றமாக மகேந்திரவர்மனின் இச்செயலைக் கண்டால் தேவார மூவரின் பாடல்கள் செய்த தமிழ்ச்சமூக முறுமலர்ச்சியை உணரலாம்.

பல்லவர்கள் வடமொழியைப் பரப்புவதற்குப் பல பள்ளிகளையம் ககைகளையம் அமைத்திருருந்தனர். அவற்றின் வாயிலாக வடமொழி கற்பிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலிருந்து அங்குவந்து கல்வி கற்றுச் சென்றுள்ளனர். ”மகேந்திரவர்மன் காலத்தில் வடமொழியும் அம்மொழியின் இலக்கியங்களும் தமிழ்நாட்டில் பெருவாரியாகப் பரவுவதற்கும் அவற்றை மக்கள் படித்து உணர்வதற்கும் பிறருக்கு கற்பிப்பதற்கும் ஏற்ற முறையில் வடமொழிப் புலவர்களும் வடமொழியைக் கற்பிக்கும் கல்லூரிகளும் பள்ளிகளும் தமிழ்நாட்டில் அதிகமாகத் தோன்றலாயின” (தமிழ்நாட்டு வரலாறு, பல்லவ – பாண்டியர் வரலாறு, முதற்பாகம், ப. 139).

பல்லவர்காலக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் கூட இதை அறிவிக்கின்றன. அரசாணை குறித்த கல்வெட்டுக்கள் வட்டெழுத்திலும் ஊர்மக்கள் எடுத்த கல்வெட்டுக்கள் தமிழிலும் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் காலத்தில் காணப்படுவதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர் (தமிழ்நாட்டு வரலாறு, பல்லவ – பாண்டியர் வரலாறு, முதற்பாகம், ப. 87). இவ்வரசர்கள் காலத்தில் பொதுமக்கள் மொழி வேறாகவும் அரசலுவல்மொழி வேறாகவும் இருந்துள்ளதை வரலாற்றுக் குறிப்புகள் அறிவிக்கின்றன.

சமணத்திற்கும் வடஅமாழிக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்த பல்லவர்கள் பிற்காலத்தில் குறிய்பாக ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்மொழியிலும் சைவத்திலும் பற்றுடையவர்களாக மாறினர் என்பதையும் அவர்கள் காலத்துச் சாசனங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ”பிராகிருதம் வடமொழி ஆகிய இரு மொழிகளையம் தங்களுடைய செப்பேடுகளில் கையாண்ட பல்லவ மன்னர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தோராவர். வடமொழியையும் தமிழையும் செப்பேடுகளில் கையாண்ட பல்லவ மன்னர்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர்” (தமிழ்நாட்டு வரலாறு, பல்லவ – பாண்டியர் வரலாறு, முதற்பாகம், ப. 53) என்னும் அறிஞர் குறிப்பைக் கொண்டு பார்க்கும்பொழுது ஓர் உண்மை புலனாகம். கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஊரூராகச் சென்று தமிழ்பாடிய பின்னர் பல்லவ மன்னர்களின் சாசனங்களில் தமிழ் இடம்பெற்றுள்ளது இவண் நோக்கத்தக்கது.

மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் காலத்தில் தேவார ஆசிரியர் இருவர் தமிழ்ப்பதிகம் பாடி தமிழ் பரப்பியிருப்பினும் அது பல்லவ அரச மரபில் ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக நிலைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு நரசிம்மவர்மனின் பெயரன் முதலாம் பரமேசுவரவர்மன் முன்னையோர்போல சிவபக்தனேயாயினும் வடமொழியின்கண் அதிக ஈடுபாடுடையவனாக இருந்தமை சான்றாக அமைகிறது. அவன் கூரம் என்னும் இடத்தில் கட்டிய சிவன் கோயிலில் மானியம்விட்டுள்ளான். அதைக் கூறும் செப்பேட்டில் வடமொழிப் பாடல்களே காணப்படுகின்றன. மாமல்லபுரத்துக் கல்லெட்டுக்களும் அவனது வடமொழி ஈடுபாட்டிற்குத் தக்க சான்றுகளாகும்.

மொழியும் பண்பாடம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. சமணமும் பௌத்தமும் வடமொழிக்கு ஆதரவு அளித்த சமயத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமிழையும் சைவத்தையம் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். கல்வெட்டுக்கள் சில மக்கள் மொழியில் இருந்தது மன்னர் கூறப்பட்டது. அதுபோல் மக்கள் மொழியில் (தமிழ்) சமயத்தை முன்னிறுத்தினர். பல்லவர் காலத்தில் தான் இந்நத மறுமலர்ச்சி நடைபெறுகிறது. ”மகேந்திரவர்மனுடைய காலத்தில் திருஞானசம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் தொடங்கப் பெற்ற சைவ சமய வளர்ச்சியும் முதல் மூன்று ஆழ்வார்களால் தொடங்கப்பெற்ற வைணவ சமய வளர்ச்சியும் தமிழ்நாட்டில் நன்க வேரூன்றிச் சைவ வைணவர் சமயங்களாக வளர்ச்சி பெற்றமை” (தமிழ்நாட்டு வரலாறு, பல்லவ – பாண்டியர் வரலாறு, முதற்பாகம், ப. 146) என்பது வரலாற்றாசிரியர்களின் குறிப்பு.

இவ்வரலாறுகளின் அடிப்படையில் கடைக்காப்புப் பாடல்களை அணுகும்பொழுது தமிழகச் சமய சமூக மொழி வரலாற்றை இன்னும் தெளிவாக உணரமுடியும்.

கடைக்காப்பும் பெயர்ப்பதிவுகளும்

திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும் தங்களது பதிகம்/பாசுரங்களின் இறுதிப்பாடல்களில் தன்வரலாற்றைக் கூறிச் செல்கின்றனர். அதில் வரலாற்றெழுதியலுக்குதவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் அவர்களின் பெயர்ப் பதிவுகளாகும்.

கடைக்காப்பு பாடிய திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலாய திருமுறையாசிரியர்களும் தலைக்கட்டுதல் தந்த பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் முதலாய ஆழ்வார்களும் தங்கள் பெயரினைப் பல்வேறு அடைமொழிகளோடு பதிவு செய்துள்ளனர். அவற்றுள் அவர்கள் தங்களைத் தங்கள் நிலப்பகுதியின் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

சான்றாக,

”கலிக் காழியர் மன்னன்” (தே. 1.36.11)

”புகலி வேந்தன்” (தே. 1.50.11)

”சண்பையர் கோன்” (தே. 1.97.11)

”காழியர் மன்னன்” (தே. 1.99.11)

”சிரபுரக் கோன்” (தே. 1.132.11)

என்று சம்பந்தரும்,


”நாவலர் கோன்” (தே. 7.4.10)

”நாவலர் வேந்தன்” (தே. 7.57.12)

என்று சுந்தரரும்,

”புதுவை மன்னன்” (தி.பிர. 151)

”வில்லிப் புத்தூர்க் கோன்” (தி.பிர. 171)

என்று பெரியாழ்வாரும் கடைப்பாடல்களில் தங்கள் பெயர்ப்பதிவின்பொழுது தங்கள் ஊர்ப்பெயரைக் கூறி அதன் தலைவர்கள் தாங்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். பெரியாழ்வாரின் மகளான கோதையும்,

”புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை” (தி.பிர. 513)

”வில்லிப்புத்தூர்க் கோன் கோதை” (தி.பிர. 566)

என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் இவண் நோக்கத்தக்கது. மன்னர்களான குலசேகராழ்வாரும், திருமங்கையாழ்வாரும் தங்களை இவ்வடிப்படையில் பல இடங்களில் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

தங்களுடைய திறமை, தனித்துவம். உருவ அமைப்பு போன்றவற்றையும் இவ்வருளாளர்கள் குறித்துச் செல்வது வரலாற்றெழுதியலுக்குக் கிடைத்த கொடையாகும். திருஞானசம்பந்தர் தன்னை வாதத்திறமை மிக்கவன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

”நாவுய்த்தனைய தறலால் மிக்க ஞானசம்பந்தன்” (தே. 1.67.11)

என்பது அவர்தம் கூற்று.

மேலும் அவர் தன்னைப் நூல்களைக் கற்றவன் என்று கூறிக்கொள்வதையும் காணமுடிகிறது.

”நன்னிய நூலன் ஞானசம்பந்தன்” (தே. 1.75.11)

என்பது சான்று.

தன்னை இணையில்லாதவன் என்று கூறுவதோடு தன் பாடல்களையும் அவர் இணையில்லாதவை என்று கூறுவதை,

”இணையில் ஞானசம்பந்தன்” (தே. 1.81.11)

”நிகரில்லன தமிழ்மாலைகள்” (தே. 1.12.11)

என்னும் பாடலடிகள் முறையே அறிவிக்கின்றன.

சுந்தரரிடம் தன்னைத் தன் தாய் தந்தையர், மனைவியர், வளர்ப்பு மக்கள் ஆகியோருடன் இணைத்து அடையாளப்படுத்திக் கொள்ளும் போக்கைக் காணலாம்.

”சடையனவன் சிறுவன்” (தே. 7.7.10)

”இசைஞானி சிறுவன்” (தே. 7.16.11)

”வனப்பகையப்பன்” (தே. 7.12.11)

”சிங்கடியப்பன்” (தே. 7.57.12)

7.57.12 கடைக்காப்பில் தனது தந்தை, வனப்பகை, சிங்கடி ஆகிய மகள்கள் இருவர் என மூவரையம் குறிப்பிட்டுச் செல்கிறார். ஆண்டாளம் தன்னைப் பெரியாழ்வாரின் மகளாகப் பல இடங்களில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

”பட்டர்பிரான் கோதை” (தி.பிர. 503)

”விட்டசித்தன் வியன் கோதை” (தி.பிர. 636)

என்பன சில சான்றுகள்.

கடைக்காப்பில் தங்கள் தோற்றப்பொலிவையும் கடைக்காப்பு பாடியோர் காட்சிப்படுத்தியுள்ளனர்.

”வண்கமலத் தார்மிகுந்த வரைமார்பன் சம்பந்தன்” (தே. 1.60.11)

என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.

”தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து

தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்” (தி.பிர. 926)

என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும் பாடுகிறார். ஆண்டாள், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் போன்றோரும் இவ்வடிப்படையில் தங்கள் கடைப்பாடலை அமைத்துள்ளனர்.

”கொல்லியலும் படைத்தானைக் கொற்ற கொள்வான்

கோழியர் கோன் குடைக்குல சேகரன்” (தி.பிர. 751)

”கொற்றவேல் தானைக் குலசேகரன்” (தி.பிர. 697)

என்று குலசேகராழ்வாரும்,

”அணிபுதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை” (தி.பிர. 503)

என்று ஆண்டாளும்,

”வேல்வலவன் கலிகன்றி” (தி.பிர. 1157)

”மருவலர்தம் முடல்துணிய வாள்வீசும் பரகாலன்” (தி.பிர. 1237)

என்று திருமங்கையாழ்வாரும் தங்கள் பணியையும் தங்கள் கடைப்பால்களில் குறிப்பிட்டுச் செல்கின்றனர்.

கடைக்காப்பும் பயன்கொளும் முறையும்

இறையருள் வாய்த்த திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும் மக்கள் இம்மை நலமும் மறுமை நலமும் பெற்று நிறைவாழ்வு வாழ வேண்டும் என்று அருளிய பாடல்கள் நாளும் நாளும் ஓதி இன்புற வேண்டியவை. அவ்வருட்பாடல்களை அருளிய அப்பெருந்தகைகள் தங்கள் பாடல்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் கடைப்பாடல்களில் குறித்தச் சென்றுள்ளனர். அவற்றையும் அறிந்துணர்ந்து அவற்றை ஓதிடின் நற்பயன் விளையும்.

பயன்கொளும் விடயத்தில் திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும் பெரும்பாலும் வலியுறுத்தம் விடயம் யாதெனில், தங்கள் பதிகங்கள்/பாசுரங்களை முழுமையாகப் பாடவேண்டும் என்பதேயாகும். அதை எண்ணிக்கையுடன் சேர்த்துக் கூறி வலியுறுத்துகின்றனர்.

”பத்தும் பாட பறையும் பாவமே” (1.29.11)

என்று சம்பந்தர் பத்தும் என்பதற்கு 'உம்' கொடுத்துக் கூறுவது கவனிக்கத்தக்கது. பல இடங்களில் இப்போக்கினைக் காணலாம். சுந்தரரும் ஆழ்வார்களும் இவ்வாறே கூறுகின்றனர்.

”ஈரைந்தும் வல்லார்” (தி.பிர. 117)

”ஆராத அந்தாதி பன்னிரண்டும்” (தி.பிர. 151)

”பத்திவை பாடிட” (தி.பிர. 1157)

என்பன ஆழ்வார் பதிகங்களுட் சில.

இசையோடு பாட வேண்டியவை என்பதை,

”இசையோடு இவை பத்தம் பகரும் அடியார்” (தே. 1.12.11)

என்று திருஞானசம்பந்தரும்,

”பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார்” (தி.பிர. 263)

”பாடுவார் நாளும்” (தி.பிர. 997)

என்று ஆழ்வார்களும் வலியுறுத்துகின்றனர்.

சுந்தரர், ”தெரிந்தவண்ணம் மொழிய வல்லார்” (தே. 7.6.10) என்று இவ்விதியைச் சற்றுநெகிழ்த்தித் தருவதையும் அவர்தம் கடைக்காப்பில் காணலாம்.

தங்கள் கதிகங்களைப் பாடம்பொழுது பொருள் புரிந்தம், மன ஒருமைப்பாட்டுடனும் பாடுதல் வேண்டும் என்பதற்கு நிறை குறிப்புகளைத் திருமுறையாசிரியர்களும் ஆழ்வார்களும் தங்கள் கடைப்பாடலில் குறிப்பிடுகின்றனர்.

”மனங்கொளப் பயிற்றுவோர்” (தே. 1.126.11)

”ஒருபதும் மருவிய மனமுடையார் மதியுடையவர்” (தே. 1.19.11)

”பத்திசெய்து நித்தம் பாடுவார்” (தே. 7.16.11)

என்று திருமுறையாசிரியர்களும்,

”சித்தம் நன்கொருங் கித்திரு மாலைச்

செய்த மாலை யிவை பத்தும் வல்லார்” (தி.பிர. 380)

”தூய மனத்தராகி வல்லார்” (தி.பிர. 432)

”பரவு மனநன் குடைப் பத்தருள்ளார்” (தி.பிர. 274)

என்று ஆழ்வார்களும் தங்கள் பதிகங்களை எந்த முறைமையில் பாடினால் தங்களால் சொல்லப்பட்ட பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

திருஞானசம்பந்தரும் சுந்தரரும் சில இடங்களில் தங்கள் பாடல்களைப் பாடுபவர்களோடு அவற்றைக் கேட்பவர்களுக்கும் நற்பலன் விளையும் என்று கூறுவதைக் காணமுடிகிறது. ஆனால் பாடுபவர்களுக்கு விதி கூறியதைப் போலவே கேட்பவர்களுக்கும் சில விதிகளைக் கூறுகின்றனர்.

”வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார்” (தே. 1.105.11)

”சொல்லிடில் கேட்டிடில் வல்லார்” (தே. 1.117.11)

”உரைப்பவர்களும் கேட்பாரும்” (தே. 7.9.11)

”காதலித்துக் கற்றுங் கேட்பவர்” (தே. 7.17.11)

என்பன மேற்கண்ட விடத்திற்கான சான்றுகளுட் சில.

அருளாளர்கள் கூறிய பயன்கொள்ளுதற்கான இவ்விடயங்கள் எளிதிற் கடந்து செல்லுதற்குரியவையல்ல. இறையருள் பெற கருவியை வழங்கிய அவ்வருட்புலவர்கள் அக்கருவியைப் பயன்னடத்தும் விழிமுறைகளையும் தங்கள் கடைப்பாடல்களில் வழங்கியுள்ளது என்ன காரணம் பற்றியெனின், மக்கள் அனைவரும் சரியான வழியில் இப்பாடல்களைப் பயன்படுத்தி அருள்பெற வேண்டும், அதேசமயம் காலப்போக்கில் தங்கள் பாடல்களைப் பயன்படுத்தும் முறை திரிந்துவிடக்கூடாது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

இலக்கியவரலாறு என்பது இலக்கியத்தின் வரலாறு மட்டுமன்று. அது இலக்கியமும் வரலாறும் இணைந்த நிலையே என்பது ஆன்றோர் வாக்கு. திருமுறைகளும் பத்திமையையும் வரலாற்றையும் உட்பொதியாகக் கொண்ட இலக்கியங்களாகும். அதிலும் அவ்வருளாளர்கள் அருளிய கடைப்பாடல்கள் வரலாற்றுக் கருவூலங்களாக விளங்குகின்றன. பதிகம்ஃபாசுரக் கருத்துக்களின் குவிமுனையமாகக் கடைக்காப்பு விளங்குகின்றது. அவ்வரலாற்றுக் கருவூலத்தை தமிழ்கூறும் ஆய்வுலகம் ஆராய்ந்து அதன் கூறுபொருட்களை வெளிப்படுத்தினால் வரலாற்றெழுதியலுக்குப் பெருந்துணையாக அமையும்.

துணைநின்ற நூல்கள்

    இராசமாணிக்கனார். மா. டாக்டர், பல்லவர் வரலாற, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை, டிசம்பர் , 2011.

    கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழிலக்கியத்தில் மதமும் மானிடமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ஏப்ரல், 2010.

    செங்குட்டுவன். கோ, சமணர் கழுவேற்றம், கிழக்குப் பதிப்பகம், சென்னை, செப்டம்பர், 2017.

    ஞானசம்பந்தன். அ.ச. பேராசிரியர் (பதி), தேவாரத் திருப்பதிகங்கள், கங்கை புத்தக நிலையம், சென்னை, ஜனவரி, 2005.

    ஞானசம்பந்தன். அ.ச, பெரியர்ராணம் - ஓர் ஆய்வு, கங்கை புத்தக நிலையம், சென்னை, மார்ச், 1999.

    தமழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ்நாட்ட வரலாறு, பல்லவர் - பாண்டியர் காலம். முதற்பகுதி, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, ஏப்ரல், 1990.

    தோதாத்ரி, எஸ், வைணவம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ஜீன், 2010.

    வெள்ளைவாரணன். க. வித்துவான், பன்னிருதிருமுறை வரலாறு, இரண்டாம் தொகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 1997.

    வேங்கடசாமி ரெட்டியார், கி. வித்துவான் (பதி), நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை, 2015.

    வேங்கடராமன். சு, திருஞானசம்பந்தர், சாகித்திய அகாதெமி, சென்னை, 2018.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.