“புவி அனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்து
தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும்
வசை என்னால் கழிந்த தன்றே”

என்று எட்டயபுரம் மன்னா் வெங்கடேசு ரெட்டப்ப பூபதிக்கு கி.பி.1919 ஆம் ஆண்டில் எழுதிய பாடலில் தன்னைப்பற்றி தன்னம்பிக்கை மேலோங்கும் குரலில் உரைத்த திறம் ஒன்றே போதும் பாரதி பற்றிய அறிமுகத்திற்கு… பாரதியின் தேச பக்தி கருத்துக்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி-மத-தீண்டாமை எதிர்ப்பும், பெண் விடுதலையும்,தேசம் தழுவிய மனித நேயமும், தமிழ்ப்பற்றும் இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் நமக்கு முழுமையாக வேண்டப்படுகிறது. ஆக காலம் பல கடந்தும் இன்றும் மகாகவியாய், மக்கள் கவியாய்,தேசத்தின் கவியாய் உயா்ந்து நிற்கும் பாரதி தனது உரைநடைதிறத்தாலே நாட்டில் விழிப்புணா்வையும், மொழியிலே புதிய மலா்ச்சியையும் உருவாக்கியவா். அவா் தம் உரைநடைப்படைப்புகள் மானுடா்களுக்கு எங்ஙனம் வாழ்வியல் மதிப்புகளை எளிமையாகவும், உள்ளத்தை நேராகத் தாக்கும்படியான வலிமையான சிந்தனைத் தெளிவுடன் அமைந்துள்ளன என்பதை, “பாரதி தமிழ் வசனத் திரட்டு” என்ற நூலின் தரவுகளை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

பாரதி படைப்புகளின் சமூகப் பின்னணி

பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியும், புதுவையில் பிரெஞ்சுக்காரர் ஆட்சியும் இருந்தன. பொதுநிலையில் தமிழகத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் புதுவையிலும் ஒரே வகையான சூழலே நிலவியது. ஆக அவா் தம் காலத்தில் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக, ஒன்றிணைந்த இந்திய சமுதாயத்தை ஒன்றுதிரட்ட முயன்ற காலச்சமூகப் பின்னணி என்பது புலனாகிறது.பெரும்பான்மையான மக்கள் யாவரும் எழுத்தறிவில்லாத மக்களாகவும், எத்தகைய கொடுமைகளையும் இழிவுகளையும் தங்கள் தலைவிதி என்றே ஏற்றுப் பழகிய மனப்பாங்குடைய குடிமக்களாகவும், யார் ஆட்சி செய்தால் என்ன என்ற அச்சத்தில், தனது உரிமைகளை வேண்டாத, உடமைகளைப் பாதுகாக்காத மனநிலை உடையவா்களாகத் திகழ்ந்தனா். இக்காலத்தில் தான் பாரதி தனது புதுமை, புரட்சி, சீா்திருத்தம் என்ற வாழ்வியல் மதிப்புகளைத் தரும் எண்ணங்களைத் தனது கவிதைகளிலும், உரைநடைகளிலும் பதிவு செய்கிறான். பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், எளியோருக்கு அருளும் திறம், சாதி வேறுபாடுகளுக்கு எதிராகச் செயல்படும் திறம், பெண்மையைப் போற்றும் திறம், அறிவார்ந்த சமுதாயம் மலர வேண்டிய திறம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக தனது இலக்கியங்கள் வாயிலாக மக்களிடம் உருவெடுக்கச் செய்தவன் பாரதி.

ஆனால் அவா்தம் உரைநடைநூல்கள் பெரும்பாலும் மணிப்பிரவாள நடையுடனே திகழ்கின்றன. ஏனெனில் அவா்காலத்து உரைநடைத்தமிழ் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி இணைந்து எழுதப்பட்ட மணிப்பிரவாள நடையே ஆயினும் பாரதி ஒரு பத்திரிகையாளனாகத் திகழ்ந்து அவற்றை மேலும் எளிமைப்படுத்தி தமிழ் மொழியை வளா்க்கச் செய்தவா்.

வாழ்வியல் மதிப்புகள் வரைவிலக்கணம்

உலகில் தோன்றும் ஒவ்வொரு மொழி இலக்கியங்களும், வாழ்க்கை மதிப்புகளை எடுத்துரைப்பதை முதன்மை நோக்கமாகக் கருதுகின்றன.

“வாழ்வியல் -என்பதற்கு விளக்கம் தருகையில், வாழ்வியல், என்பதில் ‘வாழ்வு’ என்பதன் பொருள் முறைமை, வாழ்தல் என்பதாகும். ‘இயல்’ என்பதற்கு, ஒழுங்கு என்று பொருள். வாழ்வு+இயல் = வாழ்வியல், முறையான ஒழுங்கினைக் கடைபிடித்து வாழும் வாழ்க்கை முறை ‘வாழ்வியல்’ ஆகும்.” 1 என்று கூறுவர்.

மேலும் சமுதாய வாழ்வியல் மதிப்புகளே, வாழ்வியல் நெறிகளாக மலர்கின்றன என்று கூறுவதை,

“முறையான சமுதாய வாழ்க்கைக்குப் பயன்படுகின்ற பண்புகளே சமுதாய மதிப்புகள் (Social Values) எனப்படுகின்றன. இவையே சமுதாய ஒழுங்கு முறையினை உருவாக்கும் வாழ்வியல் நெறிகளாகின்றன. சமுதாயத்தின் குறிக்கோளை வகுத்துத் தந்து மக்கள் நடத்தைக்கு வழிகாட்டுகின்றன என்பது சமூகவியலார் கருத்து. (“Social values, norms and institutions explain the way in which social processes operate in a given society. The values of a society provide goals or ends for its members to aim for. These goals or ends are to be pursued in different contexts and situations. Values provide the general guidelines for the behavior of the people)” 2 என்னும் கூற்று புலப்படுத்தும்.

எனவே வாழ்வியல் மதிப்புகள் வாழ்வியல் நெறிகளை உருவாக்குகின்றன என்பது புலப்படும்.

“வாழ்வியல் நெறிகள் - என்ற சொல்லிற்கு ஆங்கில சொற்களஞ்சியம் குறிப்பிடும் பொருள் ‘ETHICS’ என்பதாகும். இவ் ஆங்கில சொல்லுக்கு இணையாக தமிழில் அறநெறிகள், அறிவியல், நன்னெறிக் கோட்பாடுகள், வாழ்வியல் ஒழுக்கங்கள், பண்புகள், ஒழுக்க முறைகள் முதலான சொற்கள் வழங்கி வருகின்றன இவற்றுள் ‘வாழ்வியல் நெறிகள்’ என்ற சொல்லே பரவலான ஏற்பினை பெற்றுள்ளது. வழக்கிலும் நிலைப்பெற்றுள்ளது” 3 என்று எடுத்துரைப்பர்.

மேற்கூறப்பெற்ற வாழ்வியல் மதிப்புகள் நெறிகள் பற்றிய வரைவிலக்கணம் தரவுகளை பாரதியின் உரைநடை இலக்கியங்களில் பொருத்தி காணலாம்.

அன்புடமை அளிக்கும்மதிப்புகள்

ஆணும் பெண்ணும் அன்புடமையோடு உண்மையாக இருந்தால் மட்டுமே நன்மை உண்டாகும் நல்மதிப்புகளையும் அவை நல்கும். ஆனால், இன்றைய அதிவேக தகவல்தொழில் நுட்ப உலகில் ‘உண்மையான அன்பு’ என்ற சொல் பொருள் இழந்து நிற்கிறது. உண்மை அன்பு குறித்த பாரதியார் கூற்று இன்றைய இளம் தலைமுறைகளுக்கு ஏற்புடைத்ததாகிறது. ஆடவா்கள் யாவரும் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தாது அன்பினால் அனைத்தையும் சாதிக்கலாம் என்று கூறிச்செல்கிறார். அச்சம் என்றும் ஒரு குடும்பத்திற்குள் அன்பை விளைவிக்காது. அன்புடமையே ஒருவருக்கு வாழ்வியல் நல் மதிப்புகளை வழங்கும் என்றும் ‘பதிவிரதை’ என்ற உரைநடைப்பகுதியில் எடுத்துரைக்கின்றார்.இதனை,

“நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும் குருவாயினும் புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது, அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமை போல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக்கொண்டு தான் இருக்கும் . அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.” 4

என்ற பகுதியில் காணலாம். இங்கு பாரதியார் வாழ்வியல் மதிப்புகளை எடுத்துரைப்பதோடு, தான் வாழ்ந்த அரசு நிலையினையும் இணைத்துப் பதிவிடுகிறார். ஆங்கிலேய அரசுபோலத்தான் பெண்கள் மீது ஆடவா்கள் செய்யும் கட்டாய ஆட்சியும் என்றுரைக்கிறார். மேலும், கட்டாயப்படுத்தி, ‘என்னிடம் அன்பு செய் என்று சொல்வது அவமானமல்லவா? என்ற இச்செயலைத் தான் ஆங்கிலேய அரசும் செய்கின்றது என்றும் எடுத்துரைக்கிறார்.

பரிபூரண ஸமத்துவம் வழங்கும் மதிப்புகள்

உலகிலுள்ள மத பேதங்களையெல்லாம் வேருடன் களைய ஸா்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டும். மேலும், பரிபூரண ஸமத்துவம் மட்டுமே பூமண்டலத்தில் புதிய விழிப்பினை, மதிப்பினை நல்கும் என்றும் பாரதி எடுத்துரைக்கிறார். ‘ஜாதிக் குழப்பம்’ என்ற உரைநடைப்பகுதியில் தமிழகத்தின் ஜாதிகள் நிலையினை, ‘தமிழ் நாட்டின் விழிப்பு’ என்ற கட்டுரையில்,

“ஜாதிக்கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நமது நாட்டில் மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்வம், ஸஹோதரத்வம் என்னும் கொள்கைகளை நிலை நிறுத்துவதென்றால் அது ஸாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம்! நுளை நூற்றெட்டாம்!”5 என்றுரைக்கிறார்.

மேலும் தமிழ்நாடு நல்மதிப்பு பெற, விழிப்பு நிலை அடைய வேண்டுமானால்,

“சகல மனிதரும் சகோதரா், மனுஷ்ய வா்க்கம் ஓருயிர், என்றில்லாமல், நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசராரச் சுவா்கள் கட்டி. “நான் வேறு ஜாதி, என் மைத்துனன் வேறு ஜாதி. இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது . அவனை ஜாதிப் பிரஷ்டம் பண்ண வேண்டும்” 6

என்ற நிலையில் மாற்றம் வருதல் வேண்டும் என ‘ஜாதிக்குழப்பம்’ என்ற கட்டுரையில் எடுத்துரைக்கிறார். பரிபூரண சமத்துவமே நல்மதிப்பையும் உயா் நிலையையும் நல்கும் என்பதையே,

"ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே" (பாரதியாரின் தேசிய கீதங்கள், 30.விடுதலை, ப.54)

என்ற கவிதை வரிகளில் அறியலாம். சுதந்திர இந்தியாவின் உயர்நிலையைக் கனவு கண்ட பாரதியின் கனவு கனவாகி விட்டதோ..

மனம்,வாக்கு, செயல் மாசற்ற தன்மை நல்கும் மதிப்புகள்

பாரத நாடு அடிமையில் இருக்கும் பொழுது, தமிழ் மக்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்யவேண்டும் என்பதே பாரதியின் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே உயிர்தரித்துள்ளோம் என்று ‘ஆனந்தசக்தி’ கட்டுரையில் எடுத்துரைக்கின்றார்.

மேலும்,

“மாதா இந்த நாட்டு ஜனங்களுக்குச் சக்திஅதிகரிக்கும்படி செய்க, அக் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக ” என்று நம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும், ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை. மற்போர் முதலியவற்றிலே பழகுதல், பாடுதல், தா்க்கம், வாதம், பரம்மசரியம், சுத்தம் முதலியவற்றால் ஓர் ஜாதிக்கு சக்தி அதிகப்படுகிறது. மனம், வாக்கு,செயல் மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளும் ,புறமும் மாசில்லாது செய்யப் பழக வேண்டும். பயம், ஸந்தேஹம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் நல்மதிப்பாகிய ஆனந்த சக்தி ஏற்படும்”. 7

என்று எடுத்தரைக்கிறார். அடிமை இந்தியாவில் துணிவுடன் உள்ளத் தூய்மையுடன் ஏதேனும் லட்சியத்தின் பிடியினிலே மனதை பற்றுறச் செய்தால் சமூகத்தில் நல்மதிப்புடன் வாழ் இயலும் என்பது அறியலாகின்றது.

பெண் விடுதலை தரும் மதிப்புகள்

தமிழ் நாட்டில் பெண் விடுதலை இயக்கத்திற்கு பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் ஒரு மாபெரும்விடிவளெ்ளியாகும். ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என்பது மட்டுமல்ல, பெண்மையை மேன்மைப்படுத்தியே பாரதி தனது படைப்புக் கருத்துக்களை முன் வைக்கிறார். அவா் தம் சிறந்த உரைநடைக்குச் சான்றாக பின்வரும் பகுதியைக் கூறலாம்.

“இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டலம் முழுவதிலும் பெண் தாழ்வாகவும், ஆண் மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு, அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவராம். அந்திகளுக்கெல்லாம் கோட்டை, கலியுகத்திற்குப் பிறப்பிடம்” 8

என்ற பகுதியில் பெண்விடுதலை ஒரு நாட்டிற்கு தரும் மதிப்புகளை காண இயலுகின்றது.

மேலும்,

“அடிமைகள் யாராயினும், அவா்களுக்கு விடுதலை கொடுத்தால், அதனின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு. அண்டச் சுவா்கள் இடிந்துபோய் ஜகமே அழிந்து விடும் என்று சொல்லுதல் அவா்களை அடிமைப்படுத்தி ஆள்வோருடைய ஸம்பிரதாயம்” 9

என்று பெண் விடுதலை என்ற உரைநடையில் பாரதி ஆள்வோரின் பொய் மனநிலையினை பதிவுசெய்துள்ள விதம் சிறப்பிற்குரியது.

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இருக்கும் பத்து படிநிலைகளை இவ் உரைநடைப்பகுதியில் எடுத்துரைத்துள்ளார்.அதில் தமிழ் நாட்டில் ஆண் மக்களுக்கே ராஜரிக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டும் என்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும், சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜயம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறிய பாரதி மொழிகள் இன்று உண்மையாகிற்று.

நிறைவாக
பாரதியின் உரைநடைகள் யாவும் கருத்துக்களில் மட்டுமல்ல, மொழி நடை, தரவுகளை எடுத்துக்கூறும் வழிமுறையில் எளிமை, கருத்து வேகம் கருத்தாழம், தெளிவு, சொல் கூா்மை ஆகிய பல திறன்களிலும் முதன்மையும் புதுமையும் பெற்றவை எனில் மிகையில்லை. பாரதி உரைநடை வகுக்கும் வாழ்வியல் மதிப்புகள் என்ற இப்பகுதியில் சமூக மதிப்புகளான தமிழ்நாட்டின் விழிப்பு, பெண் விடுதலை, அன்புடமை, ஆனந்த சக்தி, பரிபூரண ஸமத்துவம் அடையும் திறம் யாவும் தரும் மதிப்புகளே இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

குறிப்புகள்
1. நா.கதிரைவேற்பிள்ளை,தமிழ்மொழி அகராதி,ப.14.
2. C.N.ShankarRao,Sociology.P.469.
3. International Advanced Deluxe Dictionary, P.508.
4. பெ.தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டு,ப.87
5. மேலது,ப.111.
6. பாரதியார் கட்டுரை, ப.432.
7. பெ.தூரன்,மு.நூ.,ப.123
8. அ.சீனிவாசன் , தமிழ்மொழி வளா்ச்சியில் பாரதியின் உரைநடை.ப.97
9. பெ.தூரன்,மு,நூ.,ப.92

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.