முன்னுரை

நாட்டுப்புற மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், வரலாறு, அன்றைய நாட்டு நடப்பு ஆகியவற்றை உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம். மண்ணின் மைந்தர்கள் தம் மனக் கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியின் வெளிப்பாடே நாட்டுப்புற இலக்கியங்கள். இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றால் நாட்டுப்புற இலக்கியம் சமுதாய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியெனில் மிகையாகாது. மனிதன் தோன்றிய போதே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன எனக் கூறுவது சரியானதாகும். அத்தகைய நாட்டுப்புற இலக்கியத்தில் பெண்களை பற்றியக் கருத்தாக்கமும் சிந்தனைகளும் எத்தகைய நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வதே இவ்வாய்வின் நோக்காகும்.

நாட்டுப்புற இலக்கியம்

நாட்டுப்புறங்களில் பல்வேறு நிலைகளில் வாழும் மக்களின் வாழ்வையும், வாழ்வுக் கூறுகளையும் படம் பிடித்துக் காட்டுவது நாட்டுப்புற இலக்கியங்களாகும். இது ஏட்டில் எழுதாத, எழுத்திலே காணமுடியாமல் மக்கள் மனதிலே ஊறிக்கிடக்கும் எத்தனையோ எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் படம் பிடித்துக் காட்டுவது நாட்டுப்புற இலக்கியம். அத்தகைய நாட்டு;ப்புற இலக்கியங்களைப் பல வகைமைகளில் பகுத்துக் காணமுடியும் அவையாவன,

1. நாட்டுப்புறப் பாடல்கள் (Folk songs)
2. நாட்டுப்புறக் கதைகள் (Folk tales)
3. நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் (Folk ballads)
4. பழமொழிகள் (Proverbs)
5. விடுகதைகள் (Riddles)
6. புராணங்கள் (Myths) 1

என்ற அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார் டாக்டர் சு. சக்திவேல். இதற்கு அரண் சேர்க்கும் வகையில் பல்வேறு அறிஞர்களும் இவ்வாறேப் பாகுபடுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.

தொல்காப்பியமும் நாட்டுப்புற இலக்கியமும்

தொல்காப்பியர் நாட்டுப்புற இலக்கியத்திற்குக் பலவிதமான வரையறைகளை நமக்கு அளித்துள்ளார். தொல்காப்பியர் ஏழு யாப்பு வகைகளைக் குறிப்பிடும் போது,

“பாட்டு உரைநூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ் நிலத்தும்” 2

என்று யாப்பின் வழி வழங்கப்படுவதாக தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மேலும் அடிவரையில்லாத செய்யுட்கள் இவை எனக் கூறி இலக்கணமும் வகுத்தளித்துள்ளார்.

“எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின்
ஆடிவரை இல்லன ஆறென மொழிப.” 3

என்று அடிவரையுள்ள செய்யுட்களுக்கு இலக்கணம் கூறி அடுத்து அடிவரையில்லாச் செய்யுட்களுக்கு இலக்கணம் கூறுகிறார். ‘ஆறென மொழிப’ என்றுக் கூறுவதன் மூலம் பழங்காலத்திலிருந்தே வழக்கில் வழங்கி வந்துள்ளது என்பது அறியலாகிறது. மேலும் அடிவரையில்லாதவற்றையும் ஆறாகப் பகுத்து குறிப்பிடுகிறார்.

“அவைதாம்
நூலி னான உரையி னான
நொடியோடு புணர்ந்த பிசியி னான
ஏது நுதலிய முதுமொழி யான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பி னான.” 4

இந்நூற்பாவின்கண் முறையே, நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி என்னும் ஆறு வகைகளாக தொல்காப்பியத்தில் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டுப்புற இலக்கியங்களின் கூறுகளாக வகைப்படுத்தியுள்ளார்.

நாட்டுப்புற இலக்கியத்தில் கற்புநெறி

நாட்டுப்பற இலக்கியங்களில் பெண்கள் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாமன் மகனை சந்தித்து உறவாடினாலும், தன்னுடைய கற்பு நெறியைப் போற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக வாழ்ந்துள்ளாள் என்பதை,

“மண்குடம் கொண்டு
மலையோரம் தண்ணிக்குப்போகும் - மாமன் மகளே
உன் இரண்டு மண்குடத்தின்
விலை என்ன?
மண் குடம் போனால்
மறுகுடம் வாங்கலாம்
மானம் போனால் - மாமன் மகனே
உலகம் என்ன சொல்லும்?” 5

என்ற பாடலின் வழி கற்பு என்பது ஆண் பெண் என்ற இருபாலருக்கும் பொதுவானதாக இருந்தாலும், அதனைக் காக்க வேண்டிய கடமை பெண்களுக்கு மட்டுமே திணிக்கப்பட்டுள்ளதாக இக்காலம் உள்ளது என்பதை அறியலாகிறது.

ஒரு ஆண் பரத்தையர் தொடர்பு, கள்ளக்காதல், மனக்கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் கணவன் மனைவியிடையே உறவு முறிந்து போன பெண்ணொருத்தி தன் துயரத்தினை,

“கூடனமே கூடினமே
கூட்டுவண்டிக் காளைபோல
விட்டுப் பிரிஞ்சமையா
ஒத்தவண்டிக் காளைபோல.” 6

என்ற பாடலின் வழி, கணவன் எத்தகைய தவறு செய்தாலும், அவன் மீதே குற்றம் குறை இருப்பினும் தங்களது காதல் வாழ்க்கையை மறக்க முடியாமல் அவனை நினைத்து வருத்தம் அடைபவளாக பெண்ணே சித்தரிக்கப்படுகிறாள்.

கணவனை இழந்தவளின் ஒப்பாரி

நம் முன்னோர்கள் குடும்பத்தில் எந்த சுபநிகழ்வுகளை மேற்கொண்டாலும் சோதிடம் பார்த்து நாள் குறித்த பின்பே செய்வர். அவ்வாறு நாள், கிழமை, இராசி பார்த்து மேற்கொண்ட திருமணத்தில் நம்பிக்கை கொண்ட பெண் ஒருத்தி தன் கணவன் அற்ப ஆயுளுடன் இறப்பை எய்தியதை எண்ணி,

“தாலிக்கு அரும்டிபடுத்த
தட்டானும் கண்குருடோ?
சேலைக்கு நூலெடுத்த
சேணியனும் கண்குருடோ?
பஞ்சாங்கம் பார்க்கவந்த
பார்ப்பானும் கண்குருடோ?
எழுதினவன்தான் குருடோ?
எழுத்தாணி கூர் இல்லையோ? 7

என்று தனக்கு தாலி செய்த ஆசாரி, திருமணச்சேலை செய்த சேணியன், பஞ்சாங்கம் பார்த்த பார்ப்பான் முதலானவர்கள் கைராசி இல்லாதவர்கள் என்று சாடுகிறாள். தன் நெஞ்சில் புதைந்திருக்கும் சோகங்களைக் பாடலின் வழி வெளிப்படுத்தி மனஆறுதல் தேட முயல்கிறாள்.

திருமணம் என்ற சமூகக் கட்டுப்பாட்டில் ஒரு பெண்ணானவள் ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்த நிலையை இச்சமூகம் கட்டமைத்துள்ளது. இதனால் அவள் தன் கணவன் இறப்பு எய்தும் போது, அல்லது கணவனால் தனித்து விடப்படும் போதோ மீளாத் துயரத்தினை எய்துகிறாள். தன்னால் இந்த வாழ்க்கையை கடந்து போக முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு துன்பப்படுகிறாள்.இதன்கண் ஆணைப் பெண் சார்ந்து வாழ வேண்டிய அவலநிலையை இச்சமூகம் உருவாக்கி வைத்துள்ளது என்பதை அறியலாகிறது.

சகுனத்தடைகளும், சமூக எண்ணமும்

மதுரையை ஆண்டு வந்த இராமலிங்க மகாராசனின் மகன் நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளுக்கு ஊர்முழுதும் பந்தலிட்டு, பாக்கு வைத்து முன்னூறு பார்ப்பனர்கள் வேதம் முழங்க சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைத்தான். மேலும் பொன், பொருள், ஆடு, மாடு, கழனி போன்றவற்றைச் சீதனமாகக் கொடுத்து வழியனுப்பும் போது பல்வேறு தீச்சகுனங்கள் எதிர்படுகின்றன. அஃதாவது,

“கன்னி கழியாப்பெண் கையில் நெருப்பெடுத்தாள்
வாழாக் குமரியவள் மீளா நெருப்பெடுத்தாள்
வண்ணான் வெளுத்த புடவைக்கண்டாள் மங்கையரும்
வாணியன் கூடைதனை வரக்கண்டாள் தன்னெதிரே” 8

என்பது போன்ற சகுனங்கள் வெளிப்பட்டதாக டாக்டர் சு. சக்திவேல் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீச்சகுனங்களை ஆய்ந்து நோக்கும் போது பெண்களை மையமிட்டே அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. அதாவது சகுனத்தடைகளில் பெண் கன்னி கழியாமல் வெகுநாட்கள் இருப்பதால் அப்பெண்ணை ‘கன்னி கழியாப்பெண்’ என்று அழைத்துள்ளனர். மேலும் தன் கணவனிடமிருந்து பிரிந்து வாழ்பவளை ‘வாழாவெட்டி’ என்றும் அழைத்துள்ளனர். இவற்றிலிருந்து அக்காலத்திலிருந்தே பெண்களை வாழாவெட்டி, கன்னிக் கழியாதவள், விதவை, மலடி, என்ற அவச்சொற்கள் பெண்களை மட்டுமே பின்தொடர்ந்துள்ளன என்பது நாட்டுப்புற பாடலின் வழி புலனாகிறது.

கணவனை இழந்தவளின் எதிர்பார்ப்பு

குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய கணவன் இறந்து போனால் மனைவி பெரும் பாதிப்புக்குள்ளாகிறான். கணவன் இழந்த பேரிழப்பு மட்டுமின்றி அமங்கலி என்ற சொல்லையும் தாங்கிக் கொள்ள வேண்டியவளாகிறாள். கணவனை இழந்த இழப்பைக் காட்டிலும் கைம்மை நோம்பின் துயரம் மிகக் கொடுமையானது. விதவைப்பெண்கள் எந்த சுபநிகழ்விலும் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் அவர்கள் துவங்கும் காரியம் எதுவும் துலங்காது என்ற மாற்ற முடியாத நம்பிக்கை மக்களிடையே காலங்கடந்து இன்றளவும் நின்று நிலவுகிறது.

பெண்களுக்கு பிறந்த வீட்டில் சொத்துரிமை இல்லாதக் காலத்தில், கணவனை இழந்த பின்பு கவனிப்பார் யாருமில்லாததால், தன் பிறந்த வீட்டிற்கு சென்றால் தன் வயதையொத்த அண்ணியின் அவச்சொல்லுக்கு நடுங்கி நிற்கும் விதவைப் பெண்ணின் மனக்குமறலை ஒப்பாரிப் பாடல்களின் வழி புலனாகிறது. தன் அண்ணியிடம்,

“அள்ளிக் கொடுக்க வேண்டாம்
அரண்மனையில் பாகம் வேண்டாம்
அன்பான வார்த்தை சொல்லி – என்னை
அரவணைத்தால் போதும்,
பணங்காசு கொடுக்க வேண்டாம்
பட்டுப்பாய் போட வேண்டாம்
பாசமுள்ள வார்த்தை சொல்லி – என்னை
பராமரிச்சா போதும்
சீரவரிசை செய்ய வேண்டாம்
சாந்தமான வார்த்தை சொல்லி – என்னை
சிரிக்கவைச்சா போதும்” 9

என்பது போன்ற பாடலின் வழி ஒரு விதவைப் பெண்ணின் துயர நிலையை ஒப்பாரி வடிவில் வெளிப்படுத்தியிருப்பது உணரலாகிறது. பெண்ணுக்கு பிறந்த வீட்டில் பெற்றோருக்குப் பின் பிறந்த வீட்டிலும் எவ்வித வரவேற்பும் இருக்காது. அண்ணன் தன் தங்கையென்று ஏற்றுக்கொண்டாலும், அண்ணி கொடுமையை நினைத்து கதறும் பெண்ணின் யதார்த்தமான இயல்பை காணலாகிறது. ஒரு சூழலின் அடிப்படையில் மற்றவர் கீழ் வாழும் அடிமை நிலையானது நடைபிணமாய் வாழ்வதற்கு சமமாகும் என்பது அறியலாகிறது.

பிள்ளைப்பேறின்றி தவிக்கும் பெண்ணின் மனநிலை

இல்லறவாழ்வு இனிதே நடக்க குழந்தைப்பேறு என்பது அவசியமொன்றானதாக, காலங்காலமாக மக்கள் மனதில் வேரூன்றி இருக்கின்றது. அப்பிள்ளைக் கனியமுது கிடைக்கப்பெறாவிட்டால், அப்பெண்ணை இச்சமூகம் மலடி என்று தூற்றுகிறது. ஆகவே பிள்ளைப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதுகின்றனர். இச்செய்தி நாட்டுப்புற இலக்கியங்களிலும் காண்பதை அறியலாம்.
“கிண்ணியிலே போட்ட சோற்றைக்
கீறித் தின்னப் பிள்ளை இல்லை
ஊருக்குப் போகையிலே
உடன்வரப் பிள்ளை இல்லை.” 10

என்று வருந்துவதோடு மட்டுமின்றி தான் இன்பம் இல்லாமல் வாழ்வதை,
“பூக்கிற காலத்திலே
பூமாறிப் போனேனே!
காய்க்கிற காலத்திலே
காய்மாறிப் போனேனே” 11

என்று தன்னையே நொந்துக் கொள்கிறாள். திருமாணமானப் பெண்ணிற்கு குழந்தைப்பேறு இல்லையெனில் அவளை இச்சமூகம் ஒரு இழிவான பிறவியாகவேப் பார்க்கின்றது. மேலும் குழந்தைப்பேறின்மைக்கு முக்கிய காரணியாக ஒரு பெண்ணேக் கருதப்படுகிறாள். இதனால் மனமுடைந்த பெண்கள் நிம்மதியின்றி தவிக்கின்றனர் என்பது உணரலாகிறது.

குழந்தைப்பேறு பெற இறைவனை வேண்டுதல்

திருமணமானப் பெண்கள் கூடிய விரைவில் குழந்தைப்பேறு அடைய வேண்டும் என்றே விரும்புவர். குழந்தை குறிப்பிட்ட காலத்திற்குள் பிறக்கவில்லையெனில் சமூகத்தின் தூற்றுதலுக்கு ஆளாக வேண்டும் என்ற பயம் கொள்வர். குடும்பத்தின் பெயர் சொல்ல வாரிசு வேண்டும் என்பதற்காக பல்வேறு நோன்புகளை மேற்கொள்வர். நல்லத்தங்காளின் தாய் குழந்தைப்பேறு இல்லையென ஏங்கி கடுந்தவம் புரிந்த பின்பே நல்லத்தங்காளையும்,
நல்லத்தம்பியையும் ஈன்றாள். அதாவது,
“புலியாசனம் போட்டும் பொற்பா யிருபேரும்
புல்லும் படியமர்ந்து பூசை வழிபாடு
அல்லும் பகலுமாக வாசியாலே சிவனை
மனத்தி லிருத்தியே வந்தித்தார் சிந்தனையுள்ளே” 12

என்ற பாடலின் வழி பெண்கள் பிள்ளைப் பேற்றிற்காக தங்களின் இன்ப துன்பங்களைத் தொலைத்து, உற்றார் உறவினர்களின் அவச் சொல்லிற்கு பயந்து இறைவனின் திருவடிகளில் தஞ்சடைந்துள்ளனர். பிள்ளைப்பேற்றுக்காக இறைவனை வழிபட்டனர் என்பதை பறைசாற்றும் வகையில் ‘அரசமரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்’ என்ற பழமொழியின் வழி உணரலாகிறது. பிள்ளைபேறு பெற பெண்கள் மட்டுமே முழு பொறுப்புடையவர்களாக சமூகத்தால் கருதப்பட்டனர் என்பது நாட்டுப்புற இலக்கியங்களின் வழி உணரலாகிறது.

முடிவுரை

நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்களுக்குச் சமவுரிமை அளிக்கப்பெறாமையால் மற்றவர்களைச் சார்ந்து தாழ்வான நிலையில் வாழ்ந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணியாக விளங்கியது சமூகத்தில் நிலவிய பொருளாதாரகக் கட்டமைப்பே. எச்சூழ்நிலையிலும் பெண், ஆணைச் சார்ந்தே வாழவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சமூகசூழலில் பெண்கள் தனித்துவமாக இயங்குவதற்கோ, பொருளீட்டுவதற்கோ குடும்பத்தினரால் ஊக்குவிக்கப்பட்டு, ஆண்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளையும், வழிவகைகளையும் பெண்களுக்கு அளிப்பதில்லை. பெண்களுக்கு சமூக, அரசியல், உளவியல், பொருளாதார ரீதியாக உரிமைகளும், சுதந்திரமும் ஆண்களுக்கு இணையாக சமூகத்தால் வழங்கப்படவில்லை. அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, கல்வியுரிமை, சொத்துரிமை ஆகியவை மறுக்கப்பட்டன. இதனால் பெண்களை உதாசினப்படுத்தி, பெண் சிசுக்கொலை, பால்ய விவாகம், மறுமணம் தவிர்ப்பு, மணவிலக்கு அளிப்பு, போன்றவை அக்காலத்தில் திணிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பெரும்பாலும் நாட்டுப் புற இலக்கியங்களில் பாவத்தின் சின்னமாகவே சித்திரிக்கப் பட்டுள்ளார்கள் என்பது இவ்வாய்வின் வழி அறியலாகிறது

சான்றெண் விளக்கம்
1. நாட்டுப்புற இயல் ஆய்வு – ப. 24
2. தொல்காப்பியம். செய்யுளியல் ப. 79
3. மேலது. ப. 164
4. மேலது. ப. 165
5. நாட்டுப்புற இயல் ஆய்வு – ப. 51
6. மேலது. ப. 52
7. மேலது. ப. 210
8. மேலது. ப.97
9. மேலது. ப. 63
10 மேலது. ப. 45
11. மேலது. ப. 45
12. மேலது. ப. 98

துணைநூல் பட்டியல்
1. டாக்டர். சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், எட்டாம் பதிப்பு 2009.
2. முனைவர் ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம் (தெளிவுரை),மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.