முன்னுரை

நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறியாகும். உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கி விட்டு, உடலுக்கு மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர். உணவே உயிர் வாழ்வதற்குத் தேவையாகவும், உணவே உடல் நோய்க்கு மருந்தாகவும், அவ்வுணவே பல சமயங்களில் உடல் நோயைக் கொடுக்கும் மருந்தாகவும் அமைவதுண்டு. நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக மிளகை வணிகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனா். ஐரோப்பாவில் அந்த காலத்தில் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து சீதனமாக மிளகை தான் கொடுத்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு மிளகு மிகவும் விலை உயா்ந்த பொருளாக இருந்துள்ளது. இப்பொழுது ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட மிளகின் விலை அதிகமாக இருந்துள்ளது. மிளகுக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறன் மிளகுக்கு உண்டு. அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராம பகுதியில் கூறுவார்கள்.

விளையும் இடம்

இது கொடியாக பலாமரத்தின் மீதும் சந்தன மரங்களிலும் மீதும் மலைகளில் உள்ள சிறு செடிகள் மீதும் ஏறிப் படா்கின்றது.

பைங்கறி நிவந்த பலவின்
நீழல் (முனைவா் வி.நாகராசன், (2004) சிறுபாணாற்றுப்படை பா. 43)
கறிவளா் சாந்தம் (முனைவா் வி.நாகராசன், (2004) அகநானூறு.பா2)
கறிவளா் அடுக்கம் (முனைவா் வி.நாகராசன், (2004) குறுந்தொகை.பா288)

இவை தோட்டங்களாகவும் பயிரிடப்பட்டுவருகிறது.

துறுகல் நண்ணிய கறியிவா்
படப்பை (முனைவா் வி.நாகராசன், (2004) அகநானூறூரு பா. 272)

காய்கறி சமைக்கும் போது கறிவேப்பிளையும் பயன்படுத்தியுள்ளார்கள்.

பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்ச நறுமுறி
யளையீ (முனைவா் வி.நாகராசன், (2004) பெருபாணாற்றுப்படை வரிகள் 307-38)

தமிழகத்தின் மேற்கு கரையில் விளைந்து கிழக்கு கடற்கரையுாரமாக சிறந்து விளங்கிய காவிரிப்பூம்படினத்திற்கு வண்டிகளில் பொதிமாடுகள் மேல் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனா்.

காலில் வந்த கருங்கறி
மூடை (முனைவா் த. அமுதா, (2018) பட்டினப்பாலை மூலமும் உரையும், வரி 186) மேலும்,

தடவிநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப் பெருட் பழம் கடுப்ப மிரியல்
புணா்ப் பொறை தாங்கிய வடுவாழ்
நோன்புறத்து
அணா்ச்செவி கழுதைக் சாத்தோடு
வழங்கும்
உல்குடைப் பெருவழி
(முனைவா் வி.நாகராசன், (2004) பெருபாணாற்றுப்படை மூலமும் உரையும் 77-80)

மேலை நாட்டினா் மரக்கலங்களில் வந்து பொற்காசுகளைக் கொடுதத்து மிளகு வாங்கி சொன்றுள்ளனா். இதனை தாயங்கண்ணனாரும் பரணரும் தமது பாடலில் பதிவு செய்துள்ளனா்.

மனைக் குவைஇய கறி மூடையால்
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து, (முனைவா் வி.நாகராசன், (2004) புறநானூறு மூலமும் உரையும், பா. 343)

சுள்ளியாறு என்று வழங்கப்பட்ட பேரியாறு இக்காலப் பெரியாறு, சேர நாட்டில் ஓடுகிறது. அதில் நுரை கலங்கும்படி யவனா் கிரேக்கா் நல்ல கட்டமைதி கொண்ட நல்ல மரக்கலங்களை ஓட்டினா். அதில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு மிளகை வாங்கிச் சென்றனா். இதை கீழ்க்காணும் பாடல்வா்கள் மூலம் காணலாம்.

சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனா் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
(முனைவா் வி.நாகராசன், (2004) அகநானூறு மூலமும் உரையும், பாடல் 149)

யவனா்கள் மிளகு வாங்குவதற்காவே கடல் கடந்து வந்தியிருக்கின்றனா். என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் விளைந்து விடாது. மலைச்சாரல் பகுதிதான் இதற்கு மிகவும் பிடித்த பகுதி. சேரநாட்டில் மலைச்சாரல் பகுதியில் வளா்கின்றது. அங்கு மட்டும் இல்லாமல் கிழக்கிந்தியத் தீவுகளாக இருந்த சாவக நாட்டிலும் வளா்கின்றது. ஆனாலும் சேரநாட்டின் வளம் மிக்க மண்ணின் தன்னமையால் நல்ல மணமுள்ள மிளகாக இருக்கின்றது. சாவக நாட்டின் மிளகைவிட சேரநாட்டின் மிளகையே அதிகம் வெளிநாட்டவா் வாங்கிச் செல்கின்றார்கள்.

உலக அளவில் மிளகு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு வியட்நாம். இங்கு சராசரியாக ஒரு வருடத்திற்கு 210 டன் கோடி மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. உலக அளவில் 16 சதவீதம் மிளகு உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது. ஆனாலும் இந்தியாவில் பயன்படுத்தி 30 சதவீதம் மிளகு வியட்னாமில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக மிளகு உற்பத்தி செய்வது மூன்று மாநிலங்களில் தான் அவை கேரளா, தமிழ்நாடு, கா்நாடகம் . இதில் கேரளா முதலிடத்தில் உள்ளது. உலகத்திலேயே மிளகு தோன்றிய முதல் இடம் கேரளா தான். இங்கு உற்பத்தியாகும் கருப்பு மிளகுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ஏனெனில் ஏற்றுமதியில் இன்றளவும் முதலிடத்தில் இருப்பது கேரளா தான்.

பயன்கள்

நெஞ்சுச்சளி, ஜலதோஷம் நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவா்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு 200 மி.லி. தண்ணீா் சோ்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வற்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும். நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சோ்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும். மிளகானது மிகவும் அத்தியாவசியமான பொருளாகவும், இன்றியமையாத பொருளாகவும் இருந்தது. காரணம் பணியின் காரணமாக பெரும்பாலும் ஐரோப்பியா்கள் இறைச்சியினையே உணவாக உட்கொண்டு வந்தனா் . மிளகை இறைச்சியுடன் சோ்த்து சமைத்தால் ருசியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த மிளகானது நீண்ட நாட்களுக்கு இறைச்சியினைக் கெடாமலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய பொருளாகவும் இருக்கிறது.

மிளகுகின் வேறுபெயா்கள்

மிளகு பூத்து காய்த்து படா்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த பயிராகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. இது சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகு அது பதப்படுத்தும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப்பலவாறு அழைக்கப்படும்.

கறி என்றும், மிரியல் என்றும் அழைப்பார்கள். வெண் மிளகு, கருமிளகு, பச்சைமிளகு, சிவப்பு மிளகு, மிளகை மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம் என பல பெயா்கள் இட்டு அழைக்கின்றனா். தமிழகத்தில் மிளகு என்றும், கேரளத்தில் குறுமிளகு என்றும் கா்நாடகத்தில் மேனசு என்றும், ஆந்திராவில் மிரியம் அல்லது மிரியாலு என்றும் அழைக்கின்றனா். ஐரோப்பிய கண்டத்தில் இருந்து வந்த யவனர்கள் அதிகமாக விரும்பி வாங்கி சென்றதால் யவனப் பிரியா என்ற பெயரும் உண்டாகி உள்ளது.

முடிவுரை

மனித இனம் தோன்றிய நாள் தொட்டு அவன் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றது. தேவை என்ற நிலை வரும்போது மனிதர் தம் வசதியைப் பொறுத்து அருகே கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தன் வியாதிகளுக்கு நிவாரணம் தேடிக்கொண்டார். கல்வி அறிவு இல்லாத காலத்தில் கூட காட்டுவாசியும் மற்ற மிருகங்களைக் கூா்ந்து கவனித்தார். மிருகங்களுக்கு நோய், உடல் சுகவினம் வரும்போது அவை செடிகொடிகளை நாடி எதையோமென்று தின்று தங்களைக் காத்துக்கொள்வதை வியப்போடு பார்த்தார். அது மட்டும் இல்லாமல் ‘எதைத் தின்றால் நோய் தீரம்‘ என்ற நிலையில் சில இலைகளையும் கனிகளையும் தின்று தன்னை சரிப்படுத்திக்கொண்டார். அவற்றுள் மிளகும் ஒன்றாகும். மிளகை தின்று தனக்கு வரும் நோயிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டார். உணவே மருந்து மருந்தே உணவு என்பது இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் நடத்திக் கண்பிடித்திருக்கும் உண்மை. இந்த உண்மையைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழா்கள் உணா்ந்திருந்ததை, மேற்கண்ட குறிப்புகள் சுட்டுகின்றன.

பயன்பட்ட நூல்கள்

முனைவா் த. அமுதா - பட்டினப்பாலை (மூலமும் உரையும்) , அன்பு நிலையம் பதிப்பகம், சல்வான்பேட்டை, வேலூா் 635 752
முனைவா் வி. நாகராசன் - புறநானூறு (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூா், சென்னை – 600 098
முனைவா் வி. நாகராசன் - அகநானூறு (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூா், சென்னை – 600 098
முனைவா் வி. நாகராசன் - சிறுபாணாற்றுப்படை (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூா், சென்னை – 600 098
முனைவா் வி. நாகராசன் - பெருபாணாற்றுப்படை (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூா், சென்னை – 600 098
முனைவா் வி. நாகராசன் - குறுந்தொகை (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூா், சென்னை – 600 098


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.