தொல்பழங்காலந்தொட்டு தமிழ்நிலத்தில் சிறந்த பண்பாட்டு நெறிகள் வளர்ந்தோங்கியுள்ளன. தூய தமிழ் மரபுகள், வாழ்க்கை நெறிகள் காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. ‘பண்புடையார்ப் பட்டுண்டுண்டு உலகம்’ என்பது திருக்குறள் விதித்த விதியாகும். உலகின் மூத்த நாகரிகங்களில் முதன்மையானது தமிழ் நாகரிகமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பண்பாடு
இலக்கணச் செறிவும் இலக்கியச் செம்மையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி இத்தமிழ்மொழிப் பேசும் தமிழரின் பண்பாடு மிகவும் பழமை வாய்ந்தது, பண்பாடு உடையது. பண்பாடு உள்ளவர்களாலேதான் இப்பாரதம் வாழ்ந்து வருகிறதென பண்பாட்டின் பெருமைதனை,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன் (திருக்குறள்: 996)

என வள்ளுவம் பேசுகிறது.

தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரின் இயல்புணர்ந்து அதற்கியையப் பழகுதலே பண்பாடு எனப்படும். மனிதனை விலங்கினின்று வேறுபடுத்துவதும் நல்ல பண்பாடுதான். இப்பண்பாடு காலத்திற்குக் காலம்; நாட்டுக்கு நாடு; இனத்திற்கு இனம் வேறுபடும். கரடு முரடான நிலப்பகுதியை வேளாண்மைக்கு ஏற்ப, நிலமாக மாற்றுவது பயன்படுத்துதல் எனப்படும். இதைப் போன்று மனித உள்ளத்தையும் தீய எண்ணங்களில் இருந்து விலக்கி உயர்ந்த எண்ணங்களுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மனதைப் பயன்படுத்துதல் பண்பாடு என்பர். இதனையே கலித்தொகை,

பண்பெனப் படுவது பாடறிந்து தொழுகுதல் (கலி, பா.133:8) என்கிறது.

அஞ்ச வேண்டுவன இவையென்று அறவோர் உரைத்தனவற்றிற்கு அஞ்சி, புகழ் என்றால் இன்னுயிரையும் ஈந்து, பழியென்றால் உலகையே பெறுவதாய் இருப்பினும் வேண்டாமென ஒதுக்கி, தமக்கென்றில்லாமல் பிறர்க்கென்றே பெரிதும் வாழும் நற்பண்புகள் வாய்ந்த சான்றோர் உள்ளமையால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றென்பதை,

உண்டால் அம்ம இவ் உலகம் - இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்க என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே. (புறநானூறு, பா.182)

என்ற புறநானுற்றுப் பாடலும் இக்கருத்தை வலியுறுத்துகிறது.

விருந்தோம்பல்
கணவன் மனைவியோடு இல்லத்தில் இருந்து வாழ்வதென்பது விருந்தினரைப் பேணுதற்கே என்ற உயர்ந்த கொள்கையை பைந்தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதை,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (திருக்குறள்:81)

என்ற குறட்பா சுட்டுகிறது.

இல்வாழ்க்கை வாழ்வார்க்குரிய தலை சிறந்த பண்பாடாக விருந்தோம்பல் போற்றப்பட்டதை பழந்தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. பண்டைத் தமிழர் மேற்கொண்டொழுகிய பண்புகளில் விருந்தோம்பல் தனிச்சிறப்புடையது. விருந்து என்னும் சொல்லுக்குப் புதுமை என்பதே பொருள். எனவே, முற்றிலும் புதியவராகத் தம்மிடம் வந்தோரை இன்முகத்தோடு வரவேற்று, உபசரித்து, உணவளித்து மிக்க அன்போடும் ஆர்வத்தோடும் அவர்களைப் பேணுதலையே விருந்தோம்பல் என்று எண்ணியமை புலப்படுகிறது. இதனை தொல்காப்பியம் ‘விருந்து புறந்தருதல்’ என மனைவிக்குரிய மாண்புகளுள் ஒன்றாகக் கூறுகிறது.

இலங்குவளை மகளிர் வியல்நகர் அயர
மீன் நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர் (நற்றிணை, பா.215:4-5)

என்ற நற்றினைப் பாடலடிகளால், மாலைப் பொழுதில் வளையணிந்த மீனவமகள் அகமும் முகமும் அன்புற மலர்ந்து விருந்தினர் வருகையை விரும்பித் தன் கணவனோடு சென்று அழைத்தாளென அறியமுடிகிறது.
இல்வாழ்க்கையை மேற்கொண்ட மகளிர் முகமலர்ச்சியுடனும் விருப்பத்தோடும் விருந்தினரை வரவேற்று உபசரித்தனர் என்பதை,

இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போல …. (புறநானூறு, பா.331:6-9)

என்ற புறநானூற்றுப் பாடல் வழி, விருந்தோம்பி வாழ்வதே வாழ்வின் சிறப்பாகக் கருதியமைப் புலப்படுகிறது.

தம்மை நாடிவரும் விருந்தினருக்குச் சுவையான உணவளித்து விருந்தோம்புவதே பழியற்ற வாழ்க்கையென கருதியமையை,

வருநருக்கு விரையா வசை இல் வாழ்க்கை (புறநானூறு, பா.10:8)

என்னும் இப்புறனாற்றுப் பாடலடி உணர்த்துகிறது.

பழந்தமிழர்கள், தான் சேகரித்த உணவைத் தான்மட்டுமே உட்கொள்ளும் சுயநலமில்லாது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையே விரும்பினர் என்பதை,

கல அதர் அரும்புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி
குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட (நற்றிணை, பா.336:3-6)

என்ற நற்றிணைப் பாடலடிகள் சுட்டுகின்றன. மேலும் தன்பெண்டு, தன்பிள்ளை, தன்சோறு என குறுகிய உள்ளமில்லாமல் பகிர்ந்துண்ணும் பண்பாட்டோடு வாழ்ந்ததனை மேற்காணும் பாடல் காட்டுகிறது.

உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு (திருக்குறள், 89)

நிரம்பச்செல்வம் இருந்தும் இல்லாமை போன்றது விருந்தினர்களைப் போற்றி பாதுகாவாது இருக்கின்ற மடமை. இது அறிவற்றவர்களிடம் உண்டு என்கிறார் வள்ளுவர்.

இன்சொல் அளாவில் இடம் இனிது ஊண்யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல் – மென்சொல்
முருந்து ஏய்க்கும் முட்பால் எயிற்றினாய்! நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து (ஏலாதி, பா.7)

என்னும் ஏலாதிப்பாடல், தம்மைநாடி விருந்தினராக வருகின்ற அனைவரிடமும் இனிய சொற்களையே எந்நாளும் பேசவேண்டும்; அவர்களுடன் உள்ளம் கலந்து உறவாட வேண்டும்; தங்குவதற்கு வசதியான இடம் கொடுக்க வேண்டும்; ஆடை அணி முதலியவைகளையும் அளிக்க வேண்டும். இவ்வாறு விருந்தினரை உபசரிப்பவர்களை வின்னோர் தன் இல்லத்திற்கு விரும்பி அழைப்பர் என்று விருந்தோம்பலின் சிறப்பை விளக்குகிறது.

மாரி ஒன்றி இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு நீர் உலையுள்
பொன் திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்று உறாமுன்றிலோ இல் (பழமொழி, பா.171)

என்னும் பழமொழிப்பாடல் விருந்தோம்பலின் மாண்பினை, மழையே பெய்யாது மிகுந்த வறட்சியான காலத்தின் போது பாணன் ஒருவன் பாரி வீட்டிற்குச் சென்றான். அப்போது பாரி வீட்டிலில்லை அவன் மனைவி மட்டும் இருந்தாள். பாணன் பாணையில் சோறு கேட்கிறான். ஆனால் அவளோ அப்பாணையில் சோற்றுக்குப் பதில் பொன்னை நிறைத்து கொடுத்தாள் என்ற செய்தியினைப் பகர்கிறது. இதன்மூலம் இல்லாள் என்பவள் விருந்தோம்பலின் ஊடே கொடையும் வழங்கியுள்ளாள் என்பதை உணர்த்துகிறது.

வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ (நற்றிணை, பா.120:5)

எமக்கே வருகதில் விருந்தே (நற்றிணை, பா.120: 10)

என்ற நற்றிணைப் பாடல் வரிகளின் வழி, விருந்தினர் வரவைப் பெரிதும் எதிர்பார்த்த செய்தியையும்; தலைவி வந்த விருந்தினர்க்கு வாழையிலை பரப்பி உணவு பரிமாறிய செய்தியையும் அறியமுடிகிறது.

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” (குறள்.82) என்பது குறள் கூறும் அறமாகும். இல்வாழ்க்கையில் வரும் விருந்தினரை ஓம்புவதும், சுற்றத்தாரை உபசரிப்பதும், இரப்பார்க்கு ஈவதும் முக்கிய அம்சமாகும். பெண்கள் செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருந்தனர் என்பதை,

விருந்து அயர் விருப்பொடு வருந்தும்

திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே (நற்றிணை, பா.374)

என்னும் நற்றிணைப் பாடலடிகள், பெண்களின் விருந்தோம்பல் விருப்பத்தைப் புலப்படுத்துகின்றன.

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயர் கடைநாள்
பாணி கொண்ட பல கால் மெறி உறி…….
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே…. (நற்றிணை, பா. 142)

என்னும் பாடல், வினைமுடித்து திரும்பும் தலைவன் ஒருவன் தன் மனைவியின் விருந்தோம்பல் பண்பினை நினைத்து மகிழ்தலைக் காட்டுகின்றது.

விருந்தினரைப் போற்றுதல் என்பது உயர்ந்த மனிதப் பண்புகளுள் ஒன்றாகும். அத்தகைய நற்பண்பினைப் பெற்ற பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து நின்றனர். இரவு நேரத்தில் விருந்தினர் வரினும் முகம் கோணாமல் விருந்தினரை வரவேற்று மகிழ்ந்தனர். இது அந்நாளில் போற்றப்பட்ட பேரறமாக திகழ்ந்ததை,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (திருக்குறள், 81)

என்பார் வள்ளுவர். மேலும், விருந்து என்பது உபசரிப்பாகும். தன்னுடைய வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு உபசரிக்க வேண்டும். இதனை,

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று (திருக்குறள், 83)

என்னும் குறட்பாவில், தினமும் தன்னை விருந்தினர் நாடி வந்தாலும் முகம் கோணாமல் உபசரிப்பவனுடைய வாழ்க்கை வறுமையால் வாட்டப்படுவதில்லை என விருந்தோம்பலின் சிறப்பை வள்ளுவர் சிறப்பிக்கின்றார். இதனையே,

எமக்கே வருகதில் விருந்தே! - சிவப்பு ஆன்று
சிறுமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே (நற்றிணை, பா.120)

என விருந்தினால் தலைவியின் முகம் மலர்ந்ததை நற்றிணைப் பாடல் சுட்டிக்காட்டுகிறது.

தமிழர்கள் விருந்தோம்பலைத் தலைச்சிறந்த பண்பாகக் கருதியதால், தன்னை நாடி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்று உபசரிக்கும் உண்ணத தன்மையினர் என்பதனை கீழ்வரும் ஏலாதிப்பாடல் எடுத்தோதுகிறது.

இன்சொல் அளவால் இடம் இனிது ஊன் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல்- மென்சொல்
முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினால் நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து (ஏலாதி, பா.7)

மயிலிறகின் அடியை ஒக்கும் கூரிய பற்களையுடைய பெண்ணே! விருந்தாய் வருவாரெல்லாருக்கும் இன்சொல்லும் உள்ளங்கலந்த உறவும், தங்குமிடமும், ஆடையணி முதலிய பொருளும், உணவும், கடுஞ்சொற்களை நீக்கியப் பணிவு மொழியும் என்றும் முறையே வழங்குவாயானால் உன்னைத் தேவர்கள் முன்வந்து ஏற்றுக் கொள்வர் என்று பெண்களின் விருந்தோம்பல் முறமையை வியம்புகிறது.
அதியன் மகன் பொகுட்டெழினி உண்ணத்தகுந்த முறையில் மட்டுமல்லாது உண்ணும் முறையறிந்தும் விருந்து படைத்த தலைவன் என்பதை,

கோண்மீன் அன்ன! பொலங்கலத்து அளைஇ
ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோன்முறை (புறநானூறு, பா. 392:17-18)

எனவரும் இப்புறநானூற்று பாடலடிகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் விருந்தோம்பலை தம் வாழ்வின் பயனாகக் கருதிப் போற்றி வந்தனர் என்பதை,

விருந்து புறத்ததாகத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (திருக்குறள், 82)

என்னும் குறட்பாவும், இறப்பைத் தடுக்கும் மருந்தே என்றாலும் விருந்தினரைப் புறத்தே விட்டுத் தாம் மட்டும் உண்ணும் தன்மை இல்லாதவர் என்பதை,

……………………….இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே …….(புறநானூறு, 182:1-3)

என்னும் புறப்பாட்டும் உணர்த்துகின்றன.

“சிற்றூர்களைச் சேரும்போது ‘நாங்கள் நன்னனுடைய கூத்தர்கள்’ என்று சொன்னால் போதும். உங்களுடைய வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுற்குள் நுழையலாம். உறவினர்களைப் போலவே உங்களுடன் அவர்கள் ஒன்றுபடுவார்கள். நீங்கள் நீண்ட வழியைக் கடந்த துன்பந்தீர உங்களுக்கு இனிய மொழிகளைக் கூறுவார்கள். நெய்யிலே வெந்த மாமிசத்தின் பொரியலையும் சிறிய தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்” என்பதை மலைபடுகடாம்,

மானவிறல்வேள் வயிரியம் எனினே
நும்மில்போல நில்லாது புக்குக்
கிழவிர் போலக் கேளாது கெழீஇச்
சேட்புலம்பு அகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த
நெய்க்கண் வேவையோடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகிவீர் (மலைபடுகடாம், வரி.164 -169)

என்னும் அடிகளின் வழி சிற்றூர் மக்களின் சிறப்பை விளக்குகிறது.

தொகுப்புரை
பழந்தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர் என்பது யாம் அனைவரும் அறிந்ததே. அவர்கள் தம் வீடு தேடி வந்தோர் யாவராயினும் அவர்களை உபசரித்து, தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை விருந்தினர்க்குக் கொடுத்து தாமும் உண்டு மகிழ்வர். இது நம்மவரின் பரம்பரைக் குணம். இக்குணம் தமிழகத்தில் வாழ்ந்த அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்ததென்பது தனிச்சிறப்பு. பொதுவாக தமிழர்கள் எனக்குறித்தாலும், விருந்தோம்பல் என்னும் பேரறத்தினை பெரும்பாண்மைச் செய்தவர்கள் பெண்களே என்பதை உணரமுடிகிறது.

நூற்பட்டியல்
1. திருக்குறள், செந்தூர்முத்து (உரை), கங்கை புத்தக நிலையம், தி.நகர், சென்னை, மூன்றாம் பதிப்பு 1996.
2. கலித்தொகை மூலமும் உரையும், கழக வெளியீடு, ஆழ்வார்பேட்டை, சென்னை, முதல் பதிப்பு 1943.
3. புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை, முதல் பதிப்பு 2004.
4. நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை, முதல் பதிப்பு 2004.
5. பழமொழி மூலமும் உரையும், சாந்தா பப்ளிஷர்ஸ், இராயப்பேட்டை, சென்னை, முதல் பதிப்பு 2008.
6. ஏலாதி மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, நான்காம் பதிப்பு 2008.
7. மலைப்படுகடாம் மூலமும் உரையும், கதிர் முருகு, சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு 2009.

அனுப்பியவர் மின்னஞ்சல் முகவரி; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.