முன்னுரை

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல குறைவான அடிகளைக் கொண்டு விளங்கினாலும் முல்லைப் பாட்டில் இல்லாத செய்திகளே இல்லை எனலாம். சங்க காலத்தில் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் புலமையில் சிறந்து விளங்கினார்கள் என்பதை முல்லைப்பாட்டின் வழி காணலாம். “முல்லை சான்ற கற்பு” என்று கற்புடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இத்திணையின் உரிப்பொருள் ‘இருத்தல்’ ஆகும். போர்க் காரணமாகவோ பொருள் தேடும் பொருட்டோ பிரிந்து சென்ற தலைவன் கார்காலத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறி பிரிவான். அத்தலைவன் வரும் வரை ஆற்றியிருத்தல் தலைவியின் கடமையாகும். இதுவே முல்லைத் திணையின் சிறப்பாகப் போற்றப்படுகிறது.

நிலம், காலம், பொருள் ஆகிய இயற்கையின் அடிப்படையில் எழும் மனம் உணர்வை முல்லைப் பாட்டு எடுத்துக் கூறுகிறது. அகத்திணை ஒன்றினை முதன்மையாக் கொண்டு அதற்கு இயைபான புறத்திணையும் கொடுத்துப் பாடும் ஓர் அரிய நூலாக முல்லைப் பாட்டு விளங்குகின்றது. புறத்திணையான வஞ்சி முல்லை திணையோடு தொடுக்கப்பட்ட போதிலும்,

மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் (தொல்.அகத்.நூ.5)

என்னும் அகநூல் மரபைப் பின்பற்றி, பாட்டுடைத்தலைவனின் இயற்பெயரைச் சுட்டிக் கூறாத அப்பொருள் சார்ந்த இலக்கியமாகவே இந்நூல் விளங்குகிறது. முதல், கரு, உரி ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முல்லை, வஞ்சி என்னும் இவ்விரண்டு திணைகளையும், நப்பூதனார் தம் முல்லைப் பாட்டில் முல்லை ஒழுக்கமே முதன்மை பெறுகின்றது என்கிறார்.

விரிச்சி கேட்டல்

    மகளிர், தெய்வம் உறையும் இடங்களுக்கு நெல்லும் மலரும் கொண்டு சென்று வழிபடுவது சங்க காலப் பழக்க வழக்கங்களுள் ஒன்றாகும். விரிச்சி கேட்டல் என்பது பழந்தமிழ் மக்களிடம் நிலவிய ஒரு நம்பிக்கை ஆகும். தாம் விரும்பி மேற்கொள்ளும் செயல் நன்கு முடிதலை விரும்பி, அதற்கான நன்னிமித்தம் பெறும் வரையில் ஊரின் புறத்தே படியில் நெல்லும் மலரும் கொண்டு சென்று தெய்வத்தை வழிபட்டு நிற்பர். இதை,

யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கை தொழுது
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப    (முல்லை. 7-10)

என்ற பாடலடிகள் விளக்குகிறன.

தலைவியைத் தேற்றுதல்

    தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வரக்கண்டும் அவன் வரவில்லையே என்று தலைவி ஆற்றுகிறாள். அவளின் வருத்தத்தைக் கண்ட பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்கச் செல்வர். குளிரால் நடுங்கும் தன் தோள்களைக் கையணைத்துத் தடுத்தவளாய், கன்றுகளை நோக்கி இப்பொழுதே வந்து விடுவர், நின் தாயார், வருந்த வேண்டாம் என்ற நல்ல சொற்களைக் கேட்போம். ஆகையால் போர் சென்ற தலைவன் பகைவரை வென்று விரைவில் திரும்புவான் என்பதை,

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் (முல்லை. 10-17)

முல்லைப் பாட்டு விளக்குகின்றது.

பாசறையின் அமைப்பு

    பண்டைக் கால அரசர்கள், அரண்மனைகளுக்கு நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டரண் என நான்கு வகை அரண்கள் அமைத்தல் வழக்கம் என்பதை,

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் (குறள். 742)

எனும் இக்குறட்பா காட்டுகிறது.

    காடுகளின் இடையே வேடுவர்கள் சிறுசிறு அரண் அமைத்துக் காவல் புரிவர். போர் மேற்சென்ற அரசர்கள் வேட்டுவரின் அரண்களை அழித்துக் காட்டிலே தம் பாசறையை அமைத்து பாசறையைச் சுற்றி இடுமுள் வேலி அமைப்பது அக்காலப் போர் வழக்கங்களுள் ஒன்றாகும் என்பதை முல்லைப் பாட்டு,

வேட்டுப்புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி (முல்லை. 26-28)

என்ற அடிகளால் விளக்குகிறது.

யானைப் பாகரது செயல்

    நான்கு தெருக்கள் கூடும் நாற்சந்தி முற்றத்திடைத்தே காவலான மத யானைகள் நிறுத்தப்பட்டன. யானைகள் பெரிதும் விரும்பியுண்ணும் செழிப்புடைய தீங்கரும்பும், நெற்கதிர்க்கட்டு, அதிமதுரத்தழை ஆகியன முன்னால் இருந்தும் அதை தின்னாமல் அவற்றால் தம் நெற்றியைத் துடைத்து உண்ணாமல் நிற்பதைக் கண்டு முள்ளையுடைய பரிக்கோலால், கல்லா இளைஞர்கள், யானைப் பேச்சான வடமொழிகளைப் பலகாலும் சொல்லின் கவளத்தை தின்னும்படி குத்துகின்றனர். இதனை,

ஓங்குநிலைக் கரும்பொடு, கதிர்மிடைந்து யாத்த
வயல்விளை இன்குளகு உண்ணாது, நுதல் துடைத்து
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் வைப்ப (முல்லை. 31-36)

என்ற அடிகள் விளக்குகின்றன.

படை வீடு, பாசறை

    போரில் புறமுதுகிட்டு ஓடாமல் இருக்க வீரர்கள் வலிய வில்லை சேரி ஊன்றி அவற்றின் மேல் துணிகளைத் தொங்க விட்டனர். கூடாரமாக கால்களை நட்டு கயிற்றால் கட்டி, இருக்கைகளில் குந்தர் கோல்களை நட்டு கிடுகுப் பட்டைகளை நிரலாகப் பிணைந்தனர். பல்வேறு படை வீரர்களின் இருக்கைக்கு நடுவே வேறு ஒரு தனி இடத்தில் நெடிய குத்துக் கோலையுடைய கண்டத்திரை வளைத்து, அரசனின் அரண் அமைக்கப்பட்டது.

வேறுபல் பெரும்படை நாப்பண், வேறு ஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி (முல்லை. 43-44)

என்பதை முல்லைப் பாட்டு விளக்குகிறது. இதனை சிலப்பதிகாரமும்,

நெடுங்காழ் கண்டம், நிறல்பட நிரைத்த
கொடும்பட நிரைமதில் (சிலப். 27:151-152)

என எடுத்துக் காட்டுகிறது.

பாசறையின் இயல்பு

    இரவைப் பகலாக்கும் ஒளி பொருந்திய திண்மையான பிடியமைந்த வாளினைக் கச்சோடு சேர்த்துக் கட்டிய மகளிர், பாவை நீண்ட திரியை இட்டு, நெய் வார்த்து விளக்கேற்றுகின்றனர். இந்தச் செய்தி பெண்களின் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது என்பதற்குத் தக்க சான்றாக அமைகிறது.

    ஒளி பொருந்திய மணியின் ஒலி குறைந்து அடங்கின நள்ளிரவில் நல்லொழுக்கமிக்க வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர் துயில் மயக்கத்துடன் ஆடி அசைந்து கொண்டே மன்னனைச் சூழ்ந்து காவலாக நின்றனர். இதை,

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்  (தொல்.உரியில் நூ.32)

என்று தொல்காப்பியம் கூறுகிறது.

    பொழுது அறிந்து கூறும் நாழிகைக் கணக்கரும் பாசறையில் இருந்தனர். மன்னனைக் கையால் தொழுதபடியே வாழ்த்தி நாழிகையை உணர்த்தினர் என்பதை,

பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர், தோன்ற வாழ்த்தி (முல்லை. 55-56)

என முல்லைப் பாட்டு உணர்த்துகிறது. மேலும் இச்செய்தியை சிலம்பும் மேகலையும் எடுத்து இயம்புவதை,

நாழிகைக் கணக்கர் (சிலம்பு 5-49)

குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர் (மணிமே. 7:64-65)

என்ற அடிகளின் வாயிலாக உணரலாம். மன்னரின் அகப்பணிக்கு வாய் பேச முடியாத, மொழி அறியமுடியாத மிலேச்சரைப் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதை முல்லைப்பாட்டு உணர்த்துகிறது.

முடிவுரை

    இதுவரை தலைவனைப் பிரிந்து ஆற்றிருந்த தலைவிக்கு, பகைவரை வெற்றிக் கொண்டு திரும்பும் தலைவனின் குதிரையுடைய காலடி ஓசை காதில் இனிதாகக் கேட்கிறது. விரைந்து செல்லும் குதிரையை மேலும் தூண்டிச் செலுத்துவதால் தலைவியைக் காண்பதற்குப் பெரும் ஆவல் கொண்டு இருக்கும் தலைவனின் மனநிலையை உணர முடிகிறது. மேலும் முல்லை நிலத்து மக்களின் தெய்வ நம்பிக்கையும், இல்லறத்தில் இருந்தாலும் நாட்டின் வீரத்தை நிலைநிறுத்தும் தலைவனின் மாண்பும் குறிப்பிடப்படுகிறது. தமிழர்கள் காதலையும், வீரத்தையும் கொண்டு வாழ்ந்ததை முல்லைப் பாட்டு அழகான ஓவியம் போல எடுத்துக் காட்டுகிறது.

துணைநின்ற நூல்கள்

1.    முல்லைப்பாட்டு தெளிவுரை - ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்,புதுத்தெரு, சிதம்பரம், முதற்பதிப்பு – 2009.
2.    தொல்காப்பியம் தெளிவுரை - ச.வே. சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை. பத்தாம் பதிப்பு, 2009.
3.    திருக்குறள் - நாமக்கல் கவிஞர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு – 2010.
4.    சிலப்பதிகாரம் - ந,மு.வேங்கடசாமி நாட்டார் உரை, இராமையா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2005.
5.    மணிமேகலை - துரை. தண்டபாணி உரை, உமா பதிப்பகம், மண்ணடி சென்னை, இரண்டாம் பதிப்பு – 2005.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.