முன்னுரை
பள்ளு இலக்கியங்கள்‌ உழவியற்‌ செய்திகளைச்‌ சிறப்புறக்‌ கூறும்‌ இலக்கியம் பள்ளு இலக்கியங்கள்‌. இத்தகைய இலக்கியங்களில்‌ இன்றைய அறிவியலுக்குப்‌ பொருந்தும்‌ வகையில்‌ உழவியற்‌ செய்திகள்‌ பல சுவைபெற விளக்கப்பட்டுள்ளன.  பள்ளா்‌ வயல்களில்‌ உழவுத்‌ தொழில்கள்‌ செய்து வாழ்பவர்‌. பண்ணைக்காரனான நில உடைமையாளனிடம்‌ வயல்‌ வேலை செய்து வருபவர்‌. உழவுத்‌ தொழிலில்‌ ஒவ்வொரு கட்டத்திலும்‌ செய்யப்படும்‌ சடங்குகளுக்குப்‌ பள்ளர்களே அதிகாரிகளாக உள்ளனர்‌. வயலில்‌ உழுவதற்கு முதன்முதலாக பூட்டுவதற்குமுன்‌, மழை பெய்வதிலிருந்து, வயல்களில்‌ விளைந்து அறுவடையாகும்‌ நெல்லை அளப்பது வரைவுள்ள ஒவ்வொரு நிகழ்வும்‌ பள்ளர்களைச்‌ சுற்றியே அமைகின்றன.

உழவு
உழவுப்பணி பருவமழையை நம்பி நடந்தது. பருவமழை பொழிந்ததும்‌ உழவுப்பணிகள்‌ தொடங்கின. உழவுத்‌ தொடங்கும்‌ முன்னர்‌ நன் நிமித்தம்‌ பார்த்துத்‌ தொடங்கினர்‌. இதனை,

 சத்தமி புதன்சோதி தைதுலக்‌ கரணம்‌
தவறாத சுபயோகந்‌ தருபஞ்‌ சாங்கம்‌
மெத்தநன்‌ றெனப்பார்த்து மேலான வேதியர்கள்‌
மிக்கதுலா முகிழ்திதம்‌ விதித்தார்‌ இன்று
(புலியூர்க்கேசிகன்‌, முக்கூடற்‌ பள்ளு, பா-113)

என வரும்‌ பாடல்‌ உழத்தொடங்கும்‌ முன்‌ நன்நிமித்தத்தை நவிலக்‌ காணலாம்‌. சத்தமி திதி, புதன்‌ வாரம்‌, சோதி நட்சத்திரம்‌, தைதுலம்‌ கரணம்‌, சுபயோகம்‌ எனத்‌ திதி, வாரம்‌, நட்சத்திரம்‌, கரணம்‌, யோகம்‌ என வரும்‌ பஞ்சாங்கம்‌ பார்க்கப்பட்டது. உழவு முடிந்த பின்னர் தெய்வக்கடன்‌ கழிக்கப்பட்டு, தொளியில்‌ விதை விதைக்கப்பட்டது. முளைக்குத்‌ தண்ணீர் அடைத்து, கொல்லை முழுதும்‌ மறுநாள்‌ வெட்டி விடப்பட்டது. பயிர்ப்‌ பாதுகாப்புக்காக வேலி சூழ நடப்பட்டது. நாற்று வளர்ந்தது. நாற்று பிடுங்கி நடப்பட்டது பதிந்த நடவு தேறியது, பசப்பும்‌ ஏறியது பசந்து குருத்துக்கள்‌ மேன்மேலும்‌ பரந்துச்‌ செறிந்தன. முதிர்ந்த தமிழிசைக்கு முடியசைக்கும்‌ முதல்வரைப்போல்‌ காற்றில்‌ பயிர்‌ அசைந்து தழைத்து முதல்‌ குழைந்தது. வணங்கியபின்‌ கதிர்‌ முதிர்ந்து இடைபழுத்தது. விளைவு அறுவடைக்குத்‌ தயாராகிறது. உழவியலின்‌ பல்வேறு செயல்முறைகள்‌ அனைத்தும்‌ சிறப்புற அமைக்கப்பட்ட நிலையில்‌ விளங்குவது. இதனை,

பதிந்த நடவுதேறிப்‌ பசப்பு மேறிப்‌
பசந்து குருத்து மேன்மேற்‌ பரந்து செறிந்து
முதிர்ந்த தமிழிசைக்கு முடிய சைக்கும்‌
முதல்வ ரெனத்தழைத்து முதல்கு ழைந்தே
பொதிந்த பொதியைநீட்டிப்‌ புட்டில்‌ காட்டிப்‌
புரப்போர்பொன்‌ னிணங்குகை போல வணங்கி
எதிர்ந்த கதிர்‌ முதிர்ந்தே இடைப முத்து
ஏற்ற விளைவு தோற்றந்‌ தோற்றியதே
(புலியூர்க்கேசிகன்‌, முக்கூடற்‌ பள்ளு, பா-136)

என்ற பாடல்‌ வழி அறியலாம்‌.

பள்ளனின்‌ விடுதலைக்குப்‌ பின் பண்ணைச்‌ செயல்கள்‌ உரிய பருவத்தில்‌, விரைவாகவும்‌ செப்பமாகவும்‌ செய்யப்படுகின்றன. உழுதான்‌, பரம்படித்தான்‌, சாலி விதையை நன்‌ முகூர்த்தத்தில்‌ விதைத்தான்‌. அவை அளவாய்‌ முளைத்தன. பின்பு நீரைப்‌ பாய்ச்சினான்‌. பண்ணைக்காரன்‌ முன்னிலையில்‌ நடவுப்‌ பணிகள்‌ நடந்தன. கொங்கையாட, மரகக்‌ குழையும்‌ கொப்பும்‌ ஆட, கோவை ஆட, கோதை ஆட, கோலமுத்தாரம்‌ ஆட, சங்கம்‌ ஆட, சரிகள்‌ ஆட, தனத்தில்‌ கச்சை அசைந்தாட நாற்றை ஒருவர்க்கொருவர்‌ தள்ளி நின்று நட்டனர்‌.

பள்ளர்‌ யாவரும்‌ வயலில்‌ வேளாண்‌ தொழிலைச்‌ செய்பவர்‌ அவர்களுக்கு வேலையைப்‌ பகிர்ந்து தரும்‌ குடும்பனாராகப்‌ (தலைவராக) பள்ளனார்‌ உள்ளனர்‌ என்று பள்ளு நூற்கள்‌ காட்டுகின்றன. வயல்‌ விளைச்சல்‌ நன்கு காணவும்‌, நாடு செழிக்கவும்‌ நல்ல மழை பெய்ய வேண்டும்‌ என்று அம்மக்கள்‌ அனைவரும்‌ தெய்வத்தைப்‌ போற்றி வணங்குகின்றனர்‌. அவ்வாறு, பரவியபின்‌ மழை பெய்யப்‌ போவதற்கான அறிகுறிகள்‌ காணப்பட, அவர்கள்‌ ஆனந்தப்‌ பரவசத்துடன்‌ “துள்ளிப்‌ பள்ளர்‌ ஆடிப்‌ பாடித்‌ துள்ளிக்கொள்வோமே' என மழையை எதிர்கொள்ளுகின்றனர்‌. மழை பெய்து, வெள்ளப்‌ பெருக்கு எடுத்து, ஆறுகளில்‌ எல்லாம்‌ பாய்ந்து செல்கிறது. வயல்களில்‌ உழவுத்‌ தொழில்‌ செய்வோர்‌, மழை வெள்ளத்தையும்‌ நீர்நிலைகளான ஆறு, ஏரி, குளம்‌ யாவும்‌ நிறைந்ததையும்‌ கண்டு மகிழ்ந்தனர்‌.

வயல்‌ வேலைகளுக்கு அனைவரும்‌ ஆயத்தமாயினர்‌. இந்தச்‌ சூழலில்‌ வயல்களில்‌ வகை (வயல்‌ காட்டு வகை), நெல்‌ வகை (வித்து வகை), மாட்டுவகை, ஏர்கால்‌ வகை, கலப்பை, மேழி, நுகம்‌ வகை என்னும்‌ உழவுக்‌ கருவிகள்‌ வகை (தள(வா)பாடம்‌ என்றும்‌ குறிப்பிடப்படும்‌ எனும்‌ விவரங்கள்‌ பள்ளனாரால்‌ பண்ணைக்காரனிடம்‌ கூறப்படுகிறது. உழவுத்தொழில்‌ தொடர்புடைய அனைத்துத்‌ தொழில்‌ நுட்பங்களையும்‌ நுணுக்கமாக அறிந்தவராகப்‌ பள்ளனார்‌ உள்ளார்‌.

உழவுத்தொழில்‌ முழுமைக்கும்‌ பண்ணைக்காரன்‌, பள்ளனாரையே முற்றிலுமாகச்‌ சார்ந்தவனாகவும்‌ அவரையே நம்பி இருப்பவனாகவும்‌ உள்ளான்‌ என்பது மீண்டும்‌ இப்பகுதியால்‌ வலுப்பெறுகிறது. உற்பத்திக்‌ கருவிகளை (மேமழி, கலப்பை, நிலம்‌) அவரிடமிருந்து பிற ஆதிக்க அதிகார வகுப்பினர்‌ பறித்துச்‌ சென்றனர்‌. நிலம்‌, உற்பத்திக்‌ கருவிகள்‌ அனைத்தையும்‌ இழந்த நிலையில்‌ பள்ளர்கள்‌ இப்போது பண்ணைத்‌ தொழிலாளர்களாக ஆனார்கள்‌.

              “மேழியை இப்புவி நாட்டுக்‌ கங்கை குலத்தோர்‌ கொடூபோனார்‌””
(திருவேட்டை நல்லூர்‌ அய்யனார்‌ பள்ளு, பா-83)

என்று கூறுகிறது.

பள்ளர் வயல்களில்‌ விவசாயத்‌ தொழில்கள்‌ செய்து வாழ்பவர்.‌ பண்ணைக்காரனான நில உடைமையாளனிடம்‌ வயல்‌ வேலை செய்து வருபவர்‌. உழவுத்‌ தொழிலின்‌ ஒவ்வொரு கட்டத்திலும்‌ செய்யப்படும்‌ சடங்குகளுக்கும்‌ பள்ளர்களே முதன்மையாக உள்ளனர்‌. அவர்களுக்கு முதன்மை தந்து அதன்‌ வழி அவர்களை மதிப்பதாக அச்சடங்குகள்‌ உள்ளன. ஆகவே அவர்களின்‌ வாழ்க்கையோடு இரண்டறக்‌ கலந்து விட்ட அச்சடங்குகள்‌ அவர்களுடைய தொழில்‌ சார்ந்த பண்பாட்டுக்‌ கூறுகளாக அமைகிறது.

வயலில்‌ உழுவதற்கு ஏர்‌ பூட்டுவதற்கு முன்பு மழை பெய்வதிலிருந்து, வயலில்‌ விளைந்து அறுவடையாகும்‌ நெல்லை அளப்பது வரை உள்ள ஒவ்வொரு நிகழ்வும்‌ பள்ளர்களைச்‌ சுற்றியே அமைகின்றன. இது இப்பள்ளர்‌ இன மக்கள்தான்‌ வேளாண்‌ தொழில்‌ வல்லுநர்கள்‌ என்பதைக்‌ காட்டும்‌ “சுழன்றும்‌ ஏர்ப்பின்னது உலகு”, உழுவார்‌ உலகத்தார்க்கு ஆணி”, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்‌?” (திருக்குறள்‌ - 1032). என்னும்‌ தமிழ்‌ மரபின்‌ கருத்துகளை எடுத்துகாட்டுகிறது.

உழவுப்‌ பணிகள்‌
மழை பெய்தபின்‌ உழவர்கள்‌ உழவுப்பணியைத்‌ தாம்தொடங்க ஆயத்தமாகின்றனர். நன்னிமித்தங்கள்‌ பார்ப்பதும்‌ சகுனம்‌ பார்ப்பதும்‌, நல்ல நாளைத்‌ தோந்தெடுத்துப்‌ பொன்னேரு பூட்டியும்‌ தொடங்குகின்றனர்‌. சோமவாரம்‌, பஞ்சமி திதி, பூச நட்சத்திரம்‌ ஆகிய மூன்றும்‌ கூடிய நாளில்‌ சூரிய உதயம்‌ ஒன்பது நாழிகைக்குமேல்‌ (காலை 10 மணி) இறைவனை வழிபட்டு அந்நேரத்தை நல்ல நேரமாகக்‌ கொண்டு தம்முடைய பணியைத்‌ தொடங்கியதை,

“இன்று சோமவாரமென்றார்‌ பஞ்சமியென்றார்‌ - நல
மேற்ற பூசநல்ல தினமிந்த நாளென்றார்‌
நன்றிலக்கண வோரையு நல்லவே ளையுமான
ஞாயிறுதுதித்த வொன்பானாழி கைக்கு மேல்‌”
(சோது, சிங்காபுரிப்‌ பள்ளு, பா-106)

என்ற வரிகள்‌ உழுவதற்குமுன்‌ நல்ல நேரமும்‌ நல்ல சகுனமும்‌ பார்ப்பதைக்‌ குறிப்பிட்டுக்‌ காட்டுகிறது. விதை விதைத்தபின்‌ எருவிட்டு நீர்பாய்ச்சி நாற்றுப்‌ பிடுங்கி நடப்பட்டது. நாற்றுக்கள்‌ வளர்ந்து கதிர்மணிகள்‌ குலுங்கி நின்றன. கதிர்‌ முற்றியபின்‌ அறுவடை செய்யப்பட்டது என சிங்காபுரிப்பள்ளுவில்‌ குறிப்பிடுகின்றன.

உழத்திப்‌ பாட்டு
“ஏரோர் களவழி அன்ற்றிக் களவழித்
தேரோர் தோற்ற்றிய வென்ற்றியும்” (தொல். புறம்.24)

தொல்காப்பியர் சுட்டிய ஏரோர் களவழி, பன்னிரு பாட்டியல் கூறும் உழத்திப் பாட்டு முதலிய துறைகளைப் பின்பற்றி எழுந்தவையே பள்ளு இலக்கியங்கள்.

மருத நில மக்களான பள்ளர்கள்‌ நெல்லின்‌ மக்கள்‌ என்றும்‌ செந்நெல்‌ முதுகுடியினர்‌ என்றும்‌ ஏருடன்‌ பிறந்தவர்கள்‌ என்றும்‌ மழையின்‌ மைந்தர்கள்‌ (இந்திரனின்‌ மக்கள்‌) நீராணிக்கர்‌ என்றும்‌, நீர்க்கட்டி என்றும்‌, பண்டைக்‌ காலம்தொட்டு இன்றுவரை புகழப்படுபவர்‌ ஆவர்‌. இம்மக்களின்‌ முன்னோரே நெல்லினை முதன்முதலில்‌ இப்பூவுலகில்‌ பயிர்‌ செய்தவர்‌ ஆவர்‌. இதனால்‌ நெல்‌ பயிரிட்ட மருதநிலத்தின்‌ தலைவன்‌ வேளிர்‌ என்று அழைக்கப்பட்டான்‌. இவனே பின்பு வேந்தனானான்‌.

“நல்வினை செய்தவர்களின்‌ உயிர்கள்‌ இறந்த பின்‌ மேலுலகத்திற்குச்‌ செல்லுமென்றும்‌, உலகில்‌ (மருதநிலத்தில்‌ அரசனாயிருந்தவன்‌ மறுமையில்‌ மேலுலகத்திலும்‌ அரசனாவான்‌ என்றும்‌ மருதநில மாந்தர்‌ கருதி. முதன்‌ முதலில்‌ இறந்த அரசனையே வேந்தன்‌ என்று பெயரிட்டு வணங்கினார்கள்‌. மழை மேலிலிருந்து பெய்வதால்‌, மேலுலக வேந்தனாகிய தங்கள்‌ தெய்வத்தினிடமிருந்தே வருவதாகக்‌ கருதி, மழை வளத்திற்காகவும்‌ அவனை வழிபட்டார்கள்‌”
(தேநேயப்‌ பாவாணர்‌, ஒப்பியின்‌ மொழிநூல்‌, ப.201)

உழத்திப்‌ பாட்டு பற்றி அறியப்படுகிறது.

மழைக்‌ குறிகள்‌
பள்ளகள்‌ இயற்கையோடு இயைந்த வாழ்வு முறையைப்‌ பெற்றவர்கள்‌. பட்டறிவின்‌ மூலம்‌ பல்வேறு குறிகளையும்‌ உணர்ந்து அவற்றிற்கு ஏற்ற வகையில்‌ வாழும்‌ திறம்‌ வாய்ந்தவர்கள்‌. பருவகாலத்தில்‌ மழைபொழியும்‌ காலத்தையும்‌ நேரத்தையும்‌ தங்கள்‌ பட்டறிவால்‌ மிகத்‌ துல்லியமாகக்‌ கணக்கிட்டு அறிந்திருந்தனர்‌. மேல்‌ திசையிலும்‌ தென்திசையிலம்‌ மின்னல்‌ மின்னுவது, சுழல்‌ காற்றடிப்பது, தவளை கத்துவது, நண்டு வளை தோண்டூவது, வானம்பாடி என்னும்‌ பறவை ஆடுவது முதலியன மழைக்‌ குறிகளாக முக்கூடற்‌பள்ளு நூலில்‌ சுட்டப்படுகின்றன. இக்குறிகளின்‌ மூலம்‌ மழைபொழியும்‌ என அறிந்து அதற்கேற்ற உழவியல்‌ செய்‌ நோத்திகளையும்‌ முன்னேற்பாடுகளையும்‌ செய்து கொள்வர்‌.

“வயிரவரே நெல்முதலாய்ப்‌
பயிர்தழைய மழைதருள்‌
கயிரவவாய எழுதையலீ
செயிர்‌ அறுநீர்‌ மழைதருவீர””

(பசுபதி, பதி.ஆ, திருப்புடைமருதூர்ப்‌ பள்ளு, பா-28)

என வரும்‌ பள்ளுப்பாடல்‌ மழைக்‌ குறிகளைத்‌ தொகுத்துணர்த்தும்‌ சிறப்புடையது. பள்ளர்கள்‌ வேண்டுதல்‌ பலித்தது. வானத்திலும்‌, நிலத்திலும்‌ மழைக்குறிகளைக்‌ கண்டு மழை வரும்‌ எனப்‌ பள்ளர்‌ ஓர்ந்தனர்‌. நாலுதிசையும்‌ கூழ மின்னல்‌ மின்னுதல்‌, சிறுநண்டுகள்‌ சேறு கொண்டு வளையை அடைத்தல்‌, நீலமேகங்கள்‌ வெள்ளை மேகங்களாய்‌ மேலே எழுதல்‌, கிணற்றில்‌ வாழும்‌ சொறித்தவளைகள்‌ ஒலியெழுப்புதல்‌, வாடைக்‌ காற்று வீசுதல்‌, கோழி காலை நிமிர்த்தி இறகை ஒடுக்கிக்‌ கண்‌ துயிலுதல்‌ ஆகியன மழைக்‌ குறிகளாக இந்நூலுள்‌ குறிக்கப்பட்டுள்ளன.

மழை பொழிந்து ஆற்றிலே வெள்ளம்‌ பெருக்கெடுத்து ஓடிவருகின்றது. பஃறுளியாற்றின்‌ வெள்ளப்பெருக்கு ஐவகை நிலத்திலும்‌ ஓடிய இயல்‌ திணை மயக்கமாய்‌ அமைந்த பாடல்களும்‌ அடுத்து இடம்‌ பெற்றுள்ளன. பஃறுளியாறு என  இந்நூலில்‌ சுட்டப்பெறும்‌ ஆறு இன்று பழையாறு எனக்‌ கூறப்படுகிறது.

மழைக்குறி ஓர்தல்‌
மழை பொழிய ஜம்பூதங்களாகிய நிலம்‌, நீர்‌, காற்று, நெருப்பு, ஆகாயம்‌ ஆகியன ஒளி பெற்று விரவின சூல்‌ கொண்ட மேகத்தோடூ வானம்‌ சிவந்தது. ஸ்படிகம்‌ போன்ற வெண்மை நிறம்‌, பச்சை நிறமாய்‌ மேகத்தின்‌ மேற்கு கட்டியாகத்‌ தோன்றியது. கருமேகங்கள்‌ காளிபோல்‌ காட்சி அளித்தன. அந்த மேகம்‌ உயர்ந்தமலை உச்சியில்‌ தங்கியது. மேகம்‌ ஒன்று திரண்டு அன்பான உள்ளத்தில்‌ இன்பம்‌ போலும்‌ உறுதியாக இருந்தது. கடலை நாடி, தானாக ஓடியது, மின்னல்‌ சிவசொரூபம்‌ போல்‌ ஒளி வீசியது. திருவைந்தெழுத்தே இடியாக எட்டுத்‌ திசையிலும்‌ முழுங்கியது. இதனை,

“முந்தப்‌ புவியும்‌ பனலும்‌ காலும்‌ உயரும்‌ வன்னி வெளி உள்ளே முதிரும்‌
வெளியும்‌ ஒளியும்‌ விரவிவியன கரு இருந்து ஓங்கியே வந்த வானில்‌ வெளி சிவந்து
வெண்‌ படீகம்‌ போல ஆனதே வானி போல வானமேகம்‌ காளி போல ஆனதே”
                                                                    (காவேரி. பரிமேலழகர்‌ ஞானப்பள்ளு, பா-41).

பள்ளர்‌ மழை வேண்டுதல்‌
மழை பொழிந்து ஆற்றிலே வெள்ளம்‌ பெருக்கெடுத்து ஓடிவருகின்றது. பஃறுளியாற்றின்‌ வெள்ளப்‌ பெருக்கானது ஐவகை நிலத்திலும்‌ ஓடிய இயல்பும்‌ திணை மயக்கமாய்‌ அமைந்து உள்ளது. பஃறுளியாறு எனச்‌ சுட்டப்பெறும்‌ ஆறு இன்று பழையாறு எனக்‌ கூறப்படுகிறது.

பள்ளு இலக்கியங்களில்‌ கவிஞர்களின்‌ கற்பனைக்கும்‌ பக்தி வெளிப்பாட்டுக்கும்‌ உரிய பகுதிகள்‌ சிலவுள. மழை காலுன்றல்‌ என்ற பகுதி இந்தப்‌ பாடல்‌ மூலம்‌ சிறப்புறுகின்றது.

“தடையில்‌ லாமலே சசிம ணாளனை
விடைகொண்‌ டெழுந்து படியுங்கார்‌
சண்மு கத்துரை வேலி எனுமின்னி
விண்மு கத்தினி லரியுமாய்‌”
                             (வையாபுரிப்பள்ளு, பா-54)

மேகங்களுக்குத்‌ தலைவனாக விளங்குபவன்‌ தேவேந்திரன்‌ மழை பொழிவதற்கு மேகக்‌ கூட்டங்கள்‌ தங்கள்‌ தலைவனாகிய சசிமணாளனிடம்‌ விடை கொண்டு எழுந்தன. மழை பொழிவதற்கு முன்‌ மின்னல்‌ ஒளிர்தல்‌ வேண்டும்‌

முடிவுரை
“புறந்தூய்மை நீரீரால் அமையும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ஒருவனை அவனுடைய நடத்தை, செயல்பாடுகள் மூலம் சமூகம் மதிப்பிடுகிறது. மருத நிலத்தின் முதன்மைத் தொழிலாக வேளாண்மை கருதப்படுகிறது. பெரும்பான்மையான மக்கள் உழவர், நிலக்கிழார் என்பதால் உழவுத் தொழில் முதன்மையான தொழிலாக இருந்தது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்ல்லாம்
தொழுதுண்டு  பின்செல் பவர்” (குறள் - 1033)

என உழவின் மேன்மையை வள்ளுவர் உலகுக்குப் பறை சாற்றுகின்றார். உழவு தொழில் அன்றிப்பிற தொழில்களும் மருத நிலத்தில் நடைபெற்றன. உழவுத் தொழிலையும், மீன் பிடித்தலையும், விழா இயற்றலையும் மருத நிலத்து மக்களின் தொழில்களாகக் கொள்ளலாம். உழவரின் ஏழ்மை வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் இனங்காணப் பட்டுள்னன. பள்ளு இலக்கியத்தில் சிறப்பு மிக்க ஒரு பண்ணையிலே பள்ளன் ஒருவன் பரம்பரையாகப் பயிர்த் தொழில் செய்து வருகிறான் என்றும், உழவு தொழிலில் ஈடுபட்டான் என்பதையும் வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலப்பகுதியாகக் கூறப்பட்டது எனவும் பல ஊர்களில் வாழ்ந்த பள்ளர்கள் மருதநில உழவர்கள் என்றும், உழவுத் தொழிலால் நெல் முதலிய பொருள்கள் விளைவிக்கும் உழவர்கள் நாட்டின் உயிர் நாடியாக கருதப்பட்டது.

துணைநின்ற நூல்கள்:
1.    காவேரி.த,  பரிமேலழகர் ஞானப்பள்ளு, அரசு பதிப்பகம், மதுரை, 2004.
2.    சேது.இரா, சிங்காபுரிப் பள்ளு, பாலக்கிருஷ்ணா பதிப்பகம், சென்னை, 2006.
3.    நாகராசன்.ப.வெ, திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1992
4.    பசுபதி.ம.வே, திருப்புடைமருதூர்ப் பள்ளு,  உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 2007.
5.    பரிமேலழகர்.(உரை.ஆ), திருக்குறள்,  சாரதா பதிப்பகம், சென்னை, 2002.
6.    புலியூர்க் கேசிகன், உரை.ஆ, முக்கூடற்பள்ளு, பாரி நிலையம், சென்னை, 2010

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.