முன்னுரை

அறம் என்ற ஒற்றைச் சொல்லால், மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் செயல்படுத்திய, பண்டைத் தமிழரின் அறவோர் வாழ்க்கை நெறி இன்று தனது பழம் வடிவத்தை இழந்து நிற்கிறது. கொடை, நீதி, இன்பம், தலைமை, பொது நலம் என்ற சொற்கள் இன்றைய சமூகத்தில் இளைய தலைமுறைகளால் புதிய வடிவாக்கம் பெறுகின்றன. கொடை என்பது இன்று புகழ் தரக்கூடிய விளம்பரச்சூழ்ச்சி;  நீதி என்பது தனது மனதின் எண்ணத்திற்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் தலையாட்டி பொம்மை; இன்பம் என்ற பெயரில் தீய அறிவின் வழியே புலன்களை மயக்கம் காட்டிச் செல்வது அழியா இன்பம்; தலைமை என்பது தனக்கென மட்டுமே வாழும் கொள்கை; பொதுநலம் தனது அகராதியின் பொருள் இழந்து காட்சி அளிக்கின்றது. அவ்வகையில் வழக்கிழந்த நீதிகளின் நிலைமைகளை  முதுமொழிக் காஞ்சியின் வழி எடுத்துரைப்பதோடு,  சமூகத்தில் அறம் தகவு பெற்று, புத்துயிர் பெற வழி காட்டுவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

முதுமொழிக்காஞ்சி வரலாறு

         முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. காஞ்சித்திணை குறி்த்து தொல்காப்பியா்,

“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பின்னெறியானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே ”
                                                  (தொல்காப்பியம் - புறத்திணையியல்,18)   

என்று வரையறுக்கிறார். இதில், ‘வீடு, பேறு  அடைவதற்குத்  தடைகளாகத் திகழும் பல்வேறு நிலையாமைக் கருத்துக்களைச் சான்றோர் எடுத்துரைப்பதே காஞ்சி’ என்ற இலக்கணம் புலப்படுகிறது. அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் முதுமொழிக்காஞ்சி என்ற நூலின்  ஆசிரியா் மதுரைக் கூடலூர் கிழார். இவரை புலத்துறை முற்றிய கூடலூா் கிழார்  என்றும் அழைப்பா்.  ‘மூத்தோர் சொற்கள் பலவற்றை தொகுத்துரைக்கும் நூலே முதுமொழிக்காஞ்சி’ என்றும், அறவுரைக்கோவை, ஆத்திச்சூடியின் முன்னோடி என்றும் வழங்குவா். இந்நூல் தோன்றிய காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். பத்துப்பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டு இந்நூலில் 100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய நவீன அறிவியல் உலகில் மாந்தா் துன்பமின்றி வாழ, மனித வாழ்வியலுக்கு தேவையான அறக்கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.. ஆனால் காலத்தின் காரணமாக வழக்கு இழந்த நீதிகளை முதுமொழிக்காஞ்சி என்ற நூலினை முன் வைத்து பின் வரும் பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.

சிறந்தபத்து இன்று மறைந்த பத்து

    ஐந்தாம் நூற்றாண்டில் சிறந்த பத்து என்று அழைக்கப்பட்ட பத்து இன்றையகாலத்தில் மறைந்த பத்தாகவே அறத்தில் காட்சி அளிக்கின்றன என்று கூறலாம். ஒழுக்கமே நமது வாழ்வின் நல் வழிகாட்டி. ஒருவனது பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை, அவனது நடத்தை இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து ஒழுக்கம் அமையப்பெறுகிறது.  அவ் ஓழுக்கம் கல்வியை விட உயா்ந்தது என்பதை,

    “ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
    ஓதலிற் சிறந்தன் றொழுக்கமுடைமை” (சிறந்தபத்து ,பாடல் எண்-1)

என்ற அடிகளில் காணலாம். ஆக, மனிதன் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ளும் ஒழுக்கம், கற்றலைக்காட்டிலும் மேலாகப் போற்றப்பட்ட சமுதாயம் பண்டை சமுதாயம்.. விவேகானந்தா் ஒழுக்கம் பற்றி எடுத்துரைக்கையில் சுயநலம் அற்றதே நல்லொழுக்கம் என்று வரையறை செய்கிறார். இதனை,

    “உலகம் வேண்டுவது ஒழுக்கமே!
    சுயநலம் தீய ஒழுக்கம்!
    சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”   1

என்ற வரிகளில் காணலாம். இன்றோ ஒழுக்கத்திலும் கல்வி இல்லை, கல்வியிலும் ஒழுக்கம் இல்லை.. ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தும் சமுதாயமாக இல்லாமல் பொருளை மதிக்கும் சமுதாயமாக இன்று மலா்ந்து விட்டது
மேலும், கல்வி கற்பதைக்காட்டிலும் கற்றாரை வழிபடுதல் சிறந்த பண்பு என்று வரையறுக்கப்பட்ட அறம் இன்றுள்ள காலகட்டத்தில் முற்றிலும் அழிந்து விட்டன என்றே கூறலாம்.

    “கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று”
                                                                    (சிறந்தபத்து ,பாடல் எண்-8)

என்ற பாடல் கருத்து இன்றய நவீனதகவல் தொழில் நுட்ப உலகில் வழக்கிழந்தன. ஆசிரியா்களை வழிபடவில்லை என்றாலும் பரவாயில்லை உயிருக்கு பாதுகாப்பு வழங்கிடுங்கள்.

    அடுத்ததாக உண்மை என்ற அறம் வழக்கிழந்த நிலையைக் கூறுகையில், நமது செல்வத்தைக்காட்டிலும், உண்மை வாழ்க்கை போற்றத்தக்கது என்ற கருத்தெல்லாம் அன்று.. இன்றோ  செல்வம் வருகிறது என்றாலோ, செல்வத்தை தக்க வைக்க வேண்டும் என்றாலோ உண்மை என்பது, அங்கு காலவதியாகிய பொருளாகக் காட்சியளிக்கிறது.

    “வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை”
                                                                      (சிறந்தபத்து,பாடல் எண்-4)

என்பதில்   இருந்த அறம் இன்று மாயமாகியது.  தப்பெல்லாம் தப்பு இல்லை, தப்பை நீ சரியாகச் செய்தால் தப்பு இல்லை, என்ற  திரைத்துறைப் பாடலால் வரையறை செய்யப்படும் நவீனமயமாக்கலுக்குள் நாம் வாழ்கிறோம்.

பழியாப்பத்து இன் றோ அழிந்த பத்து

    இன்றைய அரசியலின் சுயநலநிலை, இணையத்தின் இடா்பாடுகள், ஊடகவியல் துறையின் உண்மையின்மை, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஊடகவியல் துறையில் எத்தகைய அறங்கள் வழக்கிழந்தன என்பதை பழியாப்பத்தில் காண்கையில்,

    “நிறையச் செய்யாக் குறைவினை பழியார்” (பழியாப்பத்து,பாடல் எண் - 4)

என்ற வரியில் காணலாம். ஒரு பணி முழுமை அடையாது இருக்கும் பொழுது அறிஞா் அச்செயலை பழித்தல் செய்யார். அவ்வாறு அறிஞா் பழித்துக் கூறினால், அச்செயல் முழுமைஅடையமலே இடை நின்று விடக் கூடும் என்று எண்ணினா்.

  ஆனால் இன்றைய இருபத்திஒன்றாம் நூற்றாண்டிலே காணக்கூடிய தகவல் பரிமாற்றப் பொதுவெளியில், குறிப்பாக இணையத்தில்  பழித்தலும், புகழ்தலும் மிகுதியாகக் காணப்படுகிறது. இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்கள் கணக்கெடுப்பினை முன்வைத்தது. “சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20கோடியே 70 இலட்சம் பயனாளிகளோடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.வரும் ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தைப் பெறும்” 2 என்ற கணக்கெடுப்பு இளைய சமூகத்தை இணையத்திலே என்றும் இணைந்திருக்கச் செய்யும் என்பது தெளிவாகின்றது.

    அடுத்ததாக, நடுவுநிலையில்லாத அரசனுடைய நாட்டில் இருந்துகொண்டே மன்னன் இயல்பை பழித்துரையார் என்பதை,

    “முறையிலரசா் நாட்டிலிருந்து பழியார்” (பழியாப்பத்து,பாடல் எண் - 6)

என்ற வரியில் அறியலாம். ஊழல் செய்யும் நாட்டிலே, பயன்களை அனுபவித்துக்கொண்டே இன்று அரசியல் தலைவா்களைப் பழித்துரைக்கும் நிகழ்வு உலகமெங்கும் நடந்து கொண்டே வருகிறது.

    மேலும், சிறுமைக்குணம் ஒருவரிடம் இருந்தால் ஒழுக்கத்தில் மிகுதியான சான்றோர்  அவரைப் பழியார். சிறுமைக் குணம் உடையவரே அவரது குணம் கண்டு மகிழ்வா் என்ற  அறத்தை,
    “சிறியா ரொழுக்கம் சிறந்தோரும் பழியார்” (பழியாப்பத்து,பாடல் எண் -10)

என்ற வரியில் அறியமுடிகின்றது. இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் பழித்தல் இல்லையெனில் அதீத புகழ்தல் என்பதை  அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. பலராலும் விரும்பி பார்க்கப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்வு, சிறியார் ஒழுக்கத்தை பழித்தல் மட்டுமே .. இந்நிகழ்வின் உச்ச கட்ட இலக்கு, நல் குணம் உள்ளோர் மனநிலையையும், கீழோர் சிந்தனை போன்று சிந்திக்கச் செய்திடுவதே…மேலை நாட்டு நாகரிகத்தை நம் நிலத்தில் பதிவிடுவது போன்ற மற்றொரு நிகழ்ச்சி 'பிக்பாஸ்'. நாம் நாமாக இந்த சமூகத்தில் இன்று வாழ இயலவில்லை. பல்வேறு துறைகளிலும் ஏகாதிபத்திய அரசுகளின் சிந்தனைகள் புகுத்தப்பட்டு, நாம் மூளைச்சாவு அடைந்தவா்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தைகைய கால கட்டத்தில் முதுமொழிக்காஞ்சி அறங்கள் யாவும் முற்றிலுமாக வழக்கிழக்கும் நிலையை நோக்கிச் செல்கிறது எனலாம்.

துவ்வாப்பத்து இன்று துவண்ட பத்து

துவ்வாப்பத்து என்ற பகுதியில் மனிதன் தன் வாழ்நாளில் வெறுத்து ஒதுக்க வேண்டிய பத்து முதுமொழிகள் காணப்படுகின்றன.இன்று இம் மொழிகள் துவண்ட பத்தாக காட்சிஅளிக்கின்றன.  செய்யத்தகாத செயல்களைச் செய்யத் தொடங்குவது மூடத்தன்மைக்கு ஒப்பானது என்பதை,

“செய்யாமை மேற்கோள் சிதடியிற் றுவ்வாது” (துவ்வாப்பத்து,பாடல் எண் - 5)

என்ற வரியில் அறியலாம். ஆக செய்யத்தகாதச் செயல்களைச் செய்திடும், மானுடா்களின் உளவியல் சிந்தனைகளை பின்வருமாறு கூறுவா். பொதுவாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உணா்ச்சிகளும், காம இச்சைகளுமே மறை மனத்தில் அழுந்திக் கிடப்பதாக பிராய்டு கூறுகிறார். அவ்வுணா்ச்சிகள் மேலழிந்து ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனவென்றும், மனிதன் அவற்றை அடக்க முயல்வதால், மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்கின்றதெனறும், அதன் விளைவின்படி அவனுடைய தன்மையும் நடத்தையும் அமைகின்றன என்றும்” 3 விளக்கம் வகுக்கிறார். இன்றைய நவீன சமூத்தில் பிராய்டு உரைக்கும் மனநிலைக்கு மானுட சமூகம் ஆட்பட்டுள்ளன ஆக துவ்வாப்பத்து துவண்ட பத்தாகவே திகழ்கின்றன.

அல்லபத்து இன்று அடிப்படைப்பத்து

பண்பாடு என்பதை வரையறை செய்கையில், “மக்கள் வாழ்க்கை முறை வேறு. அம்முறையை நாம் அறிந்து எழுதுவது வேறு. முதலதைப் பண்பாடு (culture) எனின் அடுத்ததைப் பண்பாட்டு ஆக்கம் (culture-construction) என்று வரையறுக்கலாம். முதலாவது உண்மை நிலை. அடுத்தது  அவ்வுண்மை நிலையைப் பலவாறாக விளக்கும் நிலை” என்றுரைப்பா். ஆக சமூகப்பழக்கவழக்கங்கள், சட்டங்கள், நீதிகள், கலைகள் இவற்றை எல்லாம் உள்ளடக்கியதே பண்பாடு. ஆனால் அவை இன்று மாற்றம் பெற்று வருகின்றன. இவ்வாறு வழக்கிழந்த நீதிகள் பண்பாட்டு மாற்றத்திற்கு அடிப்படை ஆகின்றன. அவற்றின் எச்சமே,  அல்ல பத்து அடிப்படை பத்தாக மாற்றம் பெற்றது என்றுரைக்கலாம்.

    தொடக்காலத்தில் பெண் வீட்டினுள் அடிமையாக இருந்த சமூகம் காணப்பட்டது. அதனைத் தொடா்ந்து ஆண்களைக் கண்காணிக்கும் சமூகமாக வளா்ந்தது. இங்கு ஒழுக்கம் என்ற வெற்றுக்கற்பிதங்கள் மக்கள் வாழ்வில் திணிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் ஆண் பெண் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் கட்டாயமாக இணைந்து வாழ்ந்திட வேண்டும். இக்காலச்சூழலில் வகுக்கப்பட்ட அறமே,

“ஆா்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்
              நீரறிந் தொழுகாதாள் தார மல்லள்”  (அல்ல பத்து,பாடல்எண்-1)

என்ற  பாடலில் புலப்படுகிறது. கணவன் குறிப்பிறிந்தொழுகாதாள் உண்மை மனைவி அல்ல  என்ற கருத்து,இன்றைய சமூகத்தில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளன. பெண் வீட்டை விட்டுச் சுதந்திரமா சிந்திக்க,  வாழத்தொடங்கி விட்டாள். இருவரும் குறிப்பறிந்து வாழ்வதே நல்லதொரு இல்லறமாகத் திகழும் என்பது என்றும் அழியா அறமாகும்.

    அடுத்ததாக அல்ல பத்தில் ஒற்றுமைப்படாத  உள்ளம் உடையவன் நண்பனாகத் திகழ மாட்டான் என்ற அறக்கருத்து முன்னிலைப்படுத்தப்படுகிறது.இதனை,

         “நேரா நெஞ்சத்தோன் நட்டுா னல்லன்” (அல்ல பத்து,பாடல்எண்-5)

என்ற வரியில் காணலாம். இன்றோ இணையத்தின் மூலமாக வாழ்க்கை முடிவுகளை முடிவு செய்யும் தலைமுறைகள் வாழும் காலத்தில், ஒற்றுமைப்படாத உள்ளம் எல்லாம் தேவையில்லை, எனது புகைப்படத்தை காணொளியை கருத்தாக்கங்களை விரும்புகிறாய் என்றால் நீ எனக்கு நண்பன், உனது உண்மை உள்ளம் எனக்கு தேவையில்லை என்ற சமூகச் சூழலே மிகுதியாக காணப்படுகிறது.

நிறைவாக

அறம் தான்,  தனி மனித ஒழுக்கத்தை கட்டியமைக்கவும் உருவாக்கவும்  அடிப்படையாகத் திகழ்கின்றன என்று கூறலாம். இவ் அறங்கள் வழக்கிழந்த காரணத்தால் இன்று மானுட சமுதாயம் மதிப்பிழந்து திகழ்கின்றன. தனி மனித வாழ்வியல், குடும்ப வாழ்வியல், சமுதாய வாழ்வியல் ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய நீதிகள் அதிகமாகவேக் காணப்படும்  முதுமொழிக்காஞ்சியில் வழக்கிழந்த நீதிகள் காலத்தின்  ஆதிக்க வளா்ச்சியால், வழக்கிழந்து காணப்படுகின்றன. மானுட சமூகம் ஓங்கிட காலத்திற்கேற்ப அறங்களை முற்றிலும் பின்பற்றினால் மட்டுமே இவ்வுலகில் மன நிறைவான வாழ்வினை அடைந்திட இயலும். இவ் அறச் சிந்தனைகளை மேலும், மெய்யியல், மானுடவியல் கோட்பாட்டுகளுடன் இணைத்து ஆராயும் ஆய்வுக்களத்தை உருவாக்கிடலாம்.

முதன்மை ஆதாரம்

1. சுப்பிரமணியம்.ச.வே.(ப.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007

குறிப்புகள்

1. வாழ்க்கை நலம், குன்றக்குடி அடிகளார், ப.32.
2. தமிழ் - இணைய இதழ் ,இணையத்தின் சமூகப்பயன்பாடு,திசெம்பா்19,2013.
3. மனமும் அதன் விளக்கமும்,பெ.தூரன்,ப.27.
4. மானிடவியல்,ம.சு.கோபால கிருஷ்ணன்,ப.20.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.