முன்னுரை

மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய்திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். சங்கப்பாடல்களில் காணப்படும் நெஞ்சொடு கிளத்தல் மற்றும் தனிமொழியில் அமைந்த பாடல்களை ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனும் நிலையில் ஆராய இயலுகின்றது. சங்கஅக-புறப்பாடல்களில்;, ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல்’ என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது. சங்க அகப்பாடல்களைப் புறப்பாடல்களுடன் ஒப்பிடும் போது மாந்தர்கள் தனக்குத் தானே பேசுவதாக அமைந்துள்ள பாடல்கள் அகஇலக்கியங்களிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. களவுக்காலத்திலும், கற்புக்காலத்திலும் தலைவன் - தலைவிக்கு இடையிலான பிரிவின்போதே தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சூழல் மிகுதியும் உருவாகின்றது. இதன் காரணம் பிரிவே, உணர்ச்சியை மிகுவிக்கிறது எனலாம். மாந்தர் கேட்போர் யாருமின்றி தன்னந்தனியாக நின்று பேசுவது ‘தனக்குத்தானே பேசுதல்’ எனப்படும். இம்முறை சங்க இலக்கியங்களில் ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி’ என்ற சொற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் இன்ப, துன்ப உணர்வில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

நெஞ்சொடு கிளத்தல்

அகமாந்தர் பிரிவுத்துயரத்தினால் தனிமையில் தன் நெஞ்சிற்குக் கூறும் நிலை ‘நெஞ்சொடு கிளத்தல்’ ஆகும். நெஞ்சொடு கிளத்தலில், நெஞ்சுக்குக் கூறுபவரின் நனவுமனச் செயல்பாடுகளும் நனவிலி மனவுணர்வுகளுமே ஒன்றுக்கொன்று எதிர்கொள்கின்றன. தொல்காப்பியர், களவிலும் கற்பிலும் தலைவன், தலைவியின் கூற்றுகளை வரையறுக்குமிடத்து ‘நெஞ்சொடு பேசுவதும்’ அவர்களுக்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை,

“நோயும் இன்பமும் இருவகை நிலையில்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடையது போல்
மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்”1

என்ற நூற்பா விளக்குகின்றது. சங்க அகப்பாடல்களில் தலைவன், தலைவி இருவருமே நெஞ்சொடு பேசுவதைக் காணமுடிகிறது.

தலைவன்

சமுதாயத்தில் பெண்கள் தம் மனவுணர்வுகளைப் பிறரிடம் எளிதாகப் பகிர்ந்து கொள்வர். பெண்களைப் போல ஆண்கள் எளிதாகத் தம் மனவுணர்வுகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை. நெருங்கிய தோழனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வர். ஆனால், சங்கஇலக்கியத் தலைவனுக்குத் துணையாக இருக்கும் பாங்கனோ இடித்துரைப்பவனாக விளங்குகின்றான். தலைவனின் இத்தனிமைச் சூழலும், தம் உணர்வுகளைப் பங்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற துணையின்மையும் தலைவன் நெஞ்சொடு பேசுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. தலைவன் தன் எண்ணங்களுக்கு வடிகாலாக, தன் உணர்வுகளைப் பங்கிட்டுக் கொள்வதற்கு உறுதுணையாக, தன் நெஞ்சினையே கொள்கின்றான். தலைவி - தோழி மனஉறவு போலத் தலைவன் - பாங்கன் உறவு அமையாமையே, தலைவன் நெஞ்சிற்குக் கூறும் கூற்றுகள் சங்க இலக்கியப் பாடல்களில் மிகைப்பட்டமைக்குக் காரணம் என்று கருத இடமுள்ளது.

‘தலைவி மீது தலைவனுக்குள்ள காதல், தலைவியின்றி அவனால் வாழ முடியாத மனநிலை, இல்வாழ்வின் சிறப்பிற்குப் பொருள் தேட வேண்டிய கட்டாயநிலை’ போன்ற சூழல்களின் போது தலைவனின் கூற்றுகள் நெஞ்சொடு கிளத்தலாக அமைகின்றன. ஆகவே, தலைவன் நெஞ்சொடு பேசுகின்ற இச்சூழல்களைக் ‘காதல் உணர்வு, வினை உணர்வு’ என்று இருவகையாகப் பாகுபடுத்தி ஆராய இயலும்.

காதல் உணர்வு

காதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் அன்புணர்வாகும். தலைவியை எதிர்ப்பட்ட தலைவன் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகின்றான். தலைவியைக் காணும் போது ஏற்படும் காதல் மிகுதியால் இன்பவுணர்வினைப் பெறுகின்றான். தலைவியைக் காணாநிலையில் ஆற்றாமை பெருகி, துன்பவுணர்விற்கு ஆட்படுகின்றான். எனவே, காதல் உணர்வில் தலைவன் நெஞ்சொடு கிளத்தும் பாடல்களை ‘இன்பவுணர்வுப் பாடல்கள், துன்பவுணர்வுப் பாடல்கள்’ என்று இருவகையாகப் பாகுபடுத்தி ஆராய இடமுள்ளது.

இன்ப உணர்வு

தலைவியைக் கண்டு காதல் கொள்ளும் தலைவன் இன்பம் அடைகின்றான். தலைவனின் மகிழ்ச்சிக்குரிய பொருள், தலைவி ஆவாள். தலைவி மீது மனந்தோய்ந்தமையே தலைவனின் இன்பவுணர்வைத் தூண்டவல்லதாக அமைந்து நெஞ்சொடு பேசுவதற்குக் காரணமாகின்றது. இத்தகு உணர்வுநிலைகள், ஒரு மனநிகழ்வாகும். தலைவன் நெஞ்சொடு கிளத்தும் இன்பவுணர்வுப் பாடல்கள் பின்வரும் சூழல்களில் அமைந்துள்ளன.

தலைவியைக் கண்ணுற்று மகிழ்தல்

தலைவியைத் தன் கண்களால் பார்த்துத் தலைவன் மகிழ்ச்சி அடைதலே ‘கண்ணுற்று மகிழ்தல்’ ஆகும். நினைக்கவும், காணவும் மகிழ்ச்சி தரும் இன்பவுணர்வாகக் காமம் அமைகின்றது. மெல்லிய இயல்புடைய குறமகள் தினைப்புனக்காவலில் நிற்பதைத் தலைவன் காண்கின்றான். அவள் அவ்வாறு காவல் காக்குமாறு கிளிகள் செய்த உதவியைப் பாராட்டி உவந்து நெஞ்சொடு பேசுகின்றான். தலைவியைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அவனுடைய பேச்சில் வெளிப்படுகின்றது. இச்செய்தி,

“நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம்எவன் செய்குவம் நெஞ்சே!- காமர்
மெல்லியற் கொடிச்சி காப்பப்
பல்குரல் ஏனல் பாத்தருங் கிளியே”    - (ஐங்.288: 1-4)

என்ற பாடலடிகள் வழிப் புலனாகின்றது. இங்ஙனம், தலைவியைக் கண்ணுற்று மகிழ்ந்து தலைவன் தன் நெஞ்சொடு கிளக்கின்ற செயல் செய்திப்பரிமாற்றமாக அமைகின்றது.

தலைவியின் நலம்பாராட்டல்

தலைவியின் மீது காதல் கொண்ட தலைவன், அவள் அழகைப் பாராட்டுவது ‘நலம் பாராட்டல்’ ஆகும். இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைவன், தலைவியின் கூந்தல் சிறப்பைப் பாராட்டித் தன் நெஞ்சிடம் பேசுகின்றான். இதனைக் குறுந்தொகை 116-ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. இதுபோன்றே, மோர் விற்கும் தலைவியைக் கண்டு அவள் அழகைப் பாராட்டுமிடத்தும் தலைவன் நெஞ்சொடு பேசுகின்றான். இதனைக் கலித்தொகை 109-வது பாடல் வெளிப்படுத்துகின்றது.

இடந்தலைப்பாடு

முதன்முதலாக இயற்கைப்புணர்ச்சியில் கூடி மகிழ்ந்த தலைவன் மீண்டும் அடுத்த நாளும் அவ்விடத்தே வந்து தலைவியைக் கூடுதல் ‘இடந்தலைப்பாடு’ எனப்படும். (இடம் - முதன்முதலாகக் கூடிய இடம். தலைப்பாடு - மீண்டும் அவ்விடத்தே வந்து கூடுதல்).

இயற்கைப் புணர்ச்சியின்கண் தலைவியோடு அளவளாவிய தலைவன் அடுத்தநாள், முதல்நாள் கண்ட இடத்தில் தலைவியைக் கண்டு இன்புற வேண்டும் என்ற விருப்பத்தைத் தன் நெஞ்சிடம் கூறுகின்றான். தலைவியின் உடல் தளிரைக் காட்டிலும் மென்மை பொருந்தியதால் அதனைத் தழுவுதற்கு இனியதாக எண்ணிப் பார்த்துத் தலைவன் மகிழ்ச்சி அடைகின்றான். முதல்நாள் சந்தித்த இடத்திற்கே மீண்டும் சென்றதால் அவளைத் தழுவ வேண்டும் என்ற ஆவல் மிகுகின்றது. இச்செய்தியைக் குறுந்தொகை 62-ஆம் பாடல் உணர்த்துகின்றது.

புணர்ந்து நீங்கிய பின்

தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைவன், தலைவி கொடுத்த இன்பம் ஐம்புலனுக்கும் விருந்தாக அமைந்தது என்று மகிழ்ச்சியுடன் நெஞ்சிற்குக் கூறுகின்ற சங்கப்பாடல்கள் உள்ளன. தலைவியைப் புணர்ந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தலைவன் தன் நெஞ்சொடு பேசி வெளிப்படுத்தியதைக் குறுந்தொகை 70-ஆம் பாடல் காட்டுகின்றது.

துன்ப உணர்வு

மனித மனவுணர்வுகளைக் கணக்கிடும் செயலியாகத் துயரம் உள்ளது. துன்பம் என்பதற்கு ‘வருத்தம்’ அல்லது ‘அவலம்’ என்று பொருள் கொள்ள முடியும். இதனை ஆங்கிலத்தில் ‘Tragedy’ என்பர். துன்பம் என்பதற்கு, ‘வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை’ என்று அகராதிகள் விளக்கம் அளிக்கின்றன. தலைவியைப் பிரிந்த தலைவன் நெஞ்சொடு கிளத்தும் துன்பவுணர்வுப் பாடல்கள் பின்வரும் சூழல்களில் அமைந்துள்ளன.

தலைவியின் அழகை விரும்பித் துன்புறுதல்

அன்புள்ளம் கொண்ட தலைவனும், தலைவியும் பிரியும் போது பிரிவைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் துன்புறுவர். பிரிவுக்காலத்தில் தலைவியின் உடல் மெலிதல், உடலில் பசலை படருதல் போன்றவற்றை அகஇலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதேபோன்று பிரிவுக்காலத்தில் தலைவன், தலைவியின் அழகை விரும்பித் துன்புற்று மனஉளைச்சலுக்கு ஆட்படுவதையும் அகஇலக்கியங்கள் காட்டுகின்றன. மனஉளைச்சலினால் தலைவன் மிகுதியும் நெஞ்சொடு பேசுகின்றான்.

அழகு வாய்ந்த தலைவியின்பால் காதல் கொண்ட தலைவன், அவளை அடைவதற்குத் தோழியிடம் இரந்து நின்றும் உடன்பாடு பெறாத நிலையில் தலைவியின்பால் சென்ற நெஞ்சை நோக்கி, நெஞ்சே! தலைவியின் கூந்தலின் அழகைக் கண்ட நீ, கள் உண்டவர் அறிவிழந்த பின்னும் அக்கள்ளையே விரும்பி உண்டாற் போல, தலைவியை மறுபடியும் அடையும் விருப்பத்தைப் பெற்றாய் என்கின்றான். தலைவியின் அழகை விரும்பித் துன்புற்றுத் தலைவன் இவ்வாறாக நெஞ்சொடு கிளத்தலைக் குறுந்தொகை 165-ஆம் பாடலில் காணமுடிகிறது. தலைவியை அடையமுடியாத துன்பவுணர்வானது தலைவனின் பேச்சில் புலப்படுகின்றது.

குறைமறுத்தலினால் ஏற்படும் ஆற்றாமை

தலைவி மேல் காமமுற்ற தலைவன் தலைவியின் அழகு உருவத்தினை ஒரு கிழியில் எழுதிக் கொண்டு அதைத் தம் கையில் தாங்கிப் பிடித்துத் தன்னைத் துன்புறுத்தி மடலேறுதல் பண்டைய வழக்கமாகும். தோழியால் குறைமறுக்கப்பட்ட தலைவன் ஆற்றாமையால் மடலேறத் துணிந்து, தன் நெஞ்சிற்குத் தானே உரைக்கின்றான். குறுந்தொகை 182-வது பாடல் குறைமறுத்தமையால் ஏற்பட்ட துன்பநிலையை உணர்த்துகின்றது. தாம் கூறுவதைத் தோழி கேட்டு விரைந்து குறைமுடிக்குமாறு தன் நெஞ்சை நோக்கி,

“கொடிச்சி செல்புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?” - (நற்.204: 11-12)

என்று தலைவன் கூறுகின்றான். இப்பாடலடிகள், கொடிச்சியின் புறம் நோக்கி அவளைக் கைவிட்டு வருந்துகின்ற நெஞ்சே! அவளின் நலனை நுகராமல் கைவிடலாகாதே! என்று தலைவனின் ஆற்றாமை உணர்வை வெளிப்படுத்துகின்றன.

தோழியால் குறைமறுக்கப்பட்ட தலைவன், தான் உற்ற நோய்க்கு மருந்து ‘தலைவி’ மட்டுமே என்று ஆற்றாமை வெளிப்படத் தன் நெஞ்சொடு கிளத்தலை நற்றிணை 80,140-ஆம் பாடல்களில் காணமுடிகிறது.

“…………… நெஞ்சே! என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்க்கே”    - (நற்.140: 9-11)

என்று தலைவன் நெஞ்சொடு பேசுகின்றான். காதல்நோயால் துன்பப்படும் தலைவனின் ஆற்றாமை, அவனுடைய பேச்சில் வெளிப்படுகின்றது.

இற்செறிப்பினால் துயரம்

களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவியின் உடல்மாறுபாடு கண்ட தாய், அவளை வெளியில் செல்லவிடாது வீட்டினுள்ளேயே நிறுத்திக் கொள்வாள். இந்த மரபினை ‘இற்செறிப்பு’ என்பர். (இல் - வீடு, செறிப்பு - தடுத்து நிறுத்திக் கொள்ளல்). தலைவி இற்செறிக்கப்பட்டமையால் ஏற்பட்ட ஏமாற்றம், தலைவன் நெஞ்சொடு பேசும் பேச்சில் வெளிப்படுகின்றது. குறுந்தொகை 199-ஆம் பாடலில் தலைவியின் மீது தான் கொண்டிருக்கும் காதலினால், இப்பிறவியின்கண் தோன்றியது போன்ற நட்பினால் ஏற்படும் அன்பின் மிகுதியாகிய காமநோய் இப்பிறப்பில் முடிவு பெறுவதில்லை. மறுபிறவியிலும் நிலைபெற்றுக் காணப்படும் ஒன்றாகும் என்று நெஞ்சத்திடம் கூறுகின்றான்.

குறியிடத்தில் தலைவியைச் சந்திப்பதற்காக வந்த தலைவன், தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதை அறிந்து,

“பொருவில் ஆயமொடு அருவி ஆடி,
நீர்அலைச் சிவந்த பேர்அமர் மழைக்கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே!” - (நற்.44: 1-5)

என்கின்றான். இங்கு தலைவி, தோழியருடன் அருவியில் நீராடிவிட்டுச் சிவந்த கண்களுடன் விருப்பமாக அருள்பொருந்திய பார்வை பார்த்துப் புன்னகை செய்ததை மறக்க இயலாமை நெஞ்சமே உனக்குத்தான் தெரியும் என்று நெஞ்சை விளித்துத் தலைவன் பேசுகின்றான். துயரத்தால் கனத்த இதயத்திற்கு நெஞ்சமே வடிகால் என்பதும் புலப்படுகின்றது.

இரவுக்குறி மறுப்பினால் துன்பநிலை

தலைவியைப் பகலில் சந்திக்க இயலாத தலைவன், இரவுநேரத்தில் சந்திக்க வருவான். இரவில் வந்து தலைவியைச் சந்திக்கும் இடம் ‘இரவுக்குறி’ எனப்படும். தொடர்ந்து இரவில் வரும் தலைவனைத் தடுத்து இனிமேல் இரவில் வராதே, மணம் புரிந்து கொள் என்று தோழி கூறுவாள். இதனை ‘இரவுக்குறி மறுத்தல்’ என்பர். இரவுக்குறி வந்த தலைவன், வந்த செய்தியைத் தலைவியிடம் கூறுவதற்கு யாருமில்லை என்று வருந்தி நெஞ்சிடம் பேசுகின்றான். தனக்காகத் தலைவியிடம் சென்று தூதுரைப்பதற்கு யாருமில்லை என்ற தலைவனின் ஏக்கம் நற்றிணை 6-ஆம் பாடலில் வெளிப்படுகின்றது.

தலைவன், தலைவியை வரைந்து கொள்ளாது இரவுக்குறியை விரும்பத் தோழி மறுக்கின்றாள். இரவுக்குறி விரும்பும் நெஞ்சிடம் தலைவன், நின் குறையறிந்து நிறைவேற்றுவார் இல்லை. ஆதலால், நீ வருந்துவதனால் பயன் இல்லை என்கின்றான். இதனை,

“அரிது அவாவுற்றனை நெஞ்சே! நன்றும்”    - (குறுந்.29: 4)

என்ற பாடலடி தெரிவிக்கின்றது. இங்கு, தலைவியைச் சந்திக்கப் பெரிதும் விருப்பமுற்ற நெஞ்சே! தலைவியைக் காணுதல் அரிது என்று தன் நெஞ்சிடம் தலைவன் உரைப்பதைக் காணமுடிகிறது.

அல்லகுறிப்பட்டு மீளும் அவலநிலை

தலைவனால் அன்றிப் பிறிதொன்றினால் நிகழும் குறியே ‘அல்லகுறி’ ஆகும். தலைவன் குறியிடம் வருவதற்கு முன்னரே தலைவி குறியில்லாததைக் குறி என்று எண்ணிச் சென்று வறிதே மீள, குறிப்பிட்ட நேரத்தில் குறியிடம் வந்த தலைவன் அவளைக் காணாது வருந்தி மீளல் ‘அல்லகுறிப்பட்டு மீளல்’ எனப்படும். அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன் நெஞ்சிற்குக் கூறியதாகச் சங்கப்பாடல்கள் உள்ளன.

“இல்லோன் இன்பம் காமுற் றாஅங்கு,
அரிதுவேட் டனையால் நெஞ்சே! காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்
அரியள் ஆகுதல் அறியா தோயே”    - (குறுந்.120)

இங்கு, நெஞ்சமே! தலைவி நல்லவள் என்பதை நீ அறிந்தது போலப் பெறுதற்கு அரியவள் என்பதையும் அறியாது போயினையே! நீ கைப்பொருள் இல்லாதவன் இன்பம் அடைய விரும்பியதைப் போலப் பெறுதற்கு அரியதை விரும்புகின்றாய் என்று அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன், நெஞ்சிடம் பேசுவதாக இப்பாடல் உள்ளது. அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன், தலைவி பெறுதற்கு அரியவள். அவளை நெருங்க முடியாது என்று இதே செய்தியைத் தலைவன் நெஞ்சிடம் கூறுவதை அகநானூறு 258-ஆம் பாடலிலும் காணமுடிகிறது.

குறியிடம் மாறியதால் தலைவியைப் பெறமுடியாமல் கலங்கும் தலைவன், ‘தலைவி புகுதற்கு அரிய பொதியமலையைப் போன்று கிடைத்தற்கு அரியவள்’ என்று தன்னுடைய நெஞ்சை ஆறுதல்படுத்துவதை அகநானூறு 322-ஆம் பாடலில் அறியமுடிகிறது.

“சேயள் அரியோட் படர்தி;
நோயை நெஞ்சே! நோய்ப்பா லோயே”    - (குறுந்.128: 4-5)

இப்பாடலடிகளில், நெஞ்சே! வெகுதொலைவில் உள்ளவளும் அடைதற்கு அரியவளுமான தலைவியை அடைய நினைக்கின்றாய். நீ துன்புறுதற்கான ஊழ்வினையை உடையாய்! என்று அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன் தன் நெஞ்சொடு பேசும் அவலநிலை புலப்படுகின்றது.

மேலும், அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன் நெஞ்சோடு பேசும் பேச்சில், தலைவியின் அழகு கூறப்படுகின்றது. அழகால் துன்புறுத்தும் தெய்வத்தின் இயல்பை உடைய தலைவியை விரும்பி, யானைக்கூட்டம் இறங்கிக் குளித்த சிறிய குளத்தைப் போல அறிவு கலங்கினாய்; அவள் நமக்கு எட்டாக்கனி என்பதை எண்ணாது, நாள்தோறும் அவளைக் காண, இரவில் சென்று என்னைத் துன்பத்தில் மாட்டிவிட்டாய் என்று தலைவன் நெஞ்சொடு பேசுவதை, அகநானூறு 212-ஆம் பாடல் தெரிவிக்கின்றது.

ஆர்க்காடு என்ற ஊரை நெருங்குவதற்குப் பகைவர் அஞ்சுவதைப் போலத் தலைவியின் தோள்கள் நெருங்குதற்கு அரியன. தலைவியின் கண்கள், சொற்கள், சிரிப்பு ஆகியவற்றிற்கு மகிழ்ந்த தலைவனுக்குத் தலைவி கிடைக்கப் பெறாத நிலையில் அவன் நெஞ்சம் துன்புற்றது. அத்துன்பத்துடன் தலைவனின் நெஞ்சம் நீண்டகாலம் வாழட்டும் என்று தனக்குத்தானே அல்லகுறிப்பட்டு மீளும் தலைவன் நெஞ்சொடு கிளத்துவதை நற்றிணை 190-ஆம் பாடல் உணர்த்துகின்றது. குறியிடத்துக் காணாது மீளும் நெஞ்சத்தின் ஏமாற்றவுணர்வு இங்கு வெளிப்படுகின்றது.

தனக்குத் துணை வேறு யாரும் இல்லை. தன்னுடைய ‘நெஞ்சே, உற்ற துணை’ என்பது தோன்ற,

“ஒறுப்ப ஒவலை; நிறுப்ப நில்லலை;
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்குயான்
கிளைஞன் அல்லனோ? நெஞ்சே!” - (அகம்.342: 1-3)

என்ற இப்பாடலடிகளில் அல்லகுறிப்பட்ட தலைவன், நெஞ்சை விளித்து ஆற்றாமை மீதூரப் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைக் காணமுடிகிறது. நெஞ்சே! வன்சொல் கூறித் தடுப்பினும் தலைவியை நினைப்பதைக் கைவிட மாட்டேன் என்கிறாய். இன்சொல்லால் தடுத்தும் மாட்டேன் என்கிறாய். நான் உனக்கு உறவுடையவன் அல்லவா? உள்ளம் ஒன்றிக்கலந்த நட்பினர் போல நான் சொல்வதை நீ போற்றுவாயாக! என்று தலைவன் நெஞ்சை விளித்துப் பேசும் அவலம் இங்குப் புலனாகின்றது.

வரைவு மறுக்கப்பட்டதால் வருத்தநிலை

வரைவு என்ற சொல்லுக்குத் திருமணம் என்பது பொருளாகும். வரைவு மறுத்தல் என்பது திருமணத்திற்கு உடன்படாமை என்பதைத் தெரிவிக்கின்றது. தலைவனின் வரைவினை மறுக்கும் நிலையைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. வரைவு மறுக்கப்பட்ட சூழ்நிலையில் தலைவனின் மனம் வருத்தமடைகின்றது. ஆடவருக்கு ஏற்படும் இவ்வேதனைமிகு மனவுணர்வு நற்றிணை 356-ஆம் பாடலில் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றது. தமரால் மணம் மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைவன், தன் நெஞ்சை ஆறுதல்படுத்துகின்றான். வரைவு மறுக்கப்பட்டமையால் தனக்குத்தானே தலைவன் ஆறுதல் சொல்லிக் கொள்கின்றான். தலைவனிடமிருந்து தலைவியிடம் பலமுறை சென்று வருவதால் வருந்தும் தன் நெஞ்சைத் தான் நன்றாக அறிந்திருப்பதாகத் தலைவன் கூறுகின்றான். எனவே, நெஞ்சமே வருந்தாதே! என்று தனக்குத்தானே கூறும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் இங்கே நடைபெறுகின்றது. இவ்வாறான வேதனை மிகுந்த மனநிலையில் நெஞ்சமே தஞ்சம் என்பதை விட வேறு வழியில்லை.

ஊடலில் ஏற்படும் தன்னிரக்கம்

கருத்து வேறுபாட்டால் ஏற்படும் பிணக்கு ஊடல் எனப்படும். தலைவி ஊடல் கொண்டு தலைவனைப் பிரிந்து செல்வது இயல்பாகும். சட்டென்று மாறக்கூடிய ஒன்றாகவும், கோபத்தைத் தொடர்ந்து செயலில் காட்டாத ஒன்றாகவும் ஊடல் இருக்கும் என்று இலக்கியங்கள் பகர்கின்றன. பொதுவாக ஊடலில் தன்னிரக்கம் ஏற்படுவதுண்டு. தன்னுடைய நிலையை எண்ணித் தனக்குத்தானே இரக்கப்படுதலே தன்னிரக்கம் ஆகும்.

“வருந்தும் ஒருவர் மீது கொள்ளும் காதலும், அவ்வருத்தத்தை
நீக்க இயலாநிலையில் தோன்றும் துன்பமும் சேர்ந்ததே
தன்னிரக்கம்”2

என்பர். தலைவனின் தன்னிரக்கம் அவன் நெஞ்சொடு பேசும் பேச்சில் சங்கப்பாடல்களில் வெளிப்படுகின்றது. தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்குத் தலைவன் பலவாறு முயல்கின்றான். அதனை உணராத தலைவி ஊடியிருக்கத் தலைவன் தன்னிரக்கம் கொள்கின்றான்.

“எவ்வி இழந்த வறுமை யாழ்ப்பாணர்
 பூஇல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர் நெஞ்சே!” - (குறுந்.19: 1-3)

இப்பாடலடிகளில், நெஞ்சே! எவ்வி என்ற வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணர்களின் பொற்பூ சூடாத வறிய தலை போலப் பொலிவற்று வருந்துவாயாக என்று தலைவன் தன்னிரக்கம் கொள்வதைக் காணமுடிகிறது.

தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்குத் தலைவன் தவறுடையவன் அல்லன் என்று பணிந்த மொழிகள் பலவும் கூறி இரந்தான். ஆயினும், தலைவி தெளியவில்லை. அதனால் இரந்து நிற்கும் நெஞ்சை ‘மட நெஞ்சே!’ என்று சாடுகின்றான். இதனை,

“மின்நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம்கெழு நெஞ்சே?” - (அகம்.126: 21-22)

என்ற பாடலடிகள் தெரிவிக்கின்றன. மின்னல் போன்று ஒடுங்கிய இடையை உடைய தலைவியைப் பின்தொடரும் நெஞ்சத்தை எண்ணித் தலைவன் துன்புறுகின்றான்.

ஊடல் நீங்காதவளாக மேலும் ஊடல் கொள்ளும் தலைவியின் நிலை கண்டு வருந்திய தலைவன், தலைவியின் அன்பு எங்கே போயிற்று? என்று தன்னிரக்கம் கொள்வதை அகநானூறு 136-வது பாடல் தெளிவுறுத்துகின்றது.

தொகுப்புரை

சங்கஅக-புறப்பாடல்களில் நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல் என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது. மிகுதியும் மனப்போராட்டத்திற்கு ஆளாகக்கூடிய தலைவனே, சங்கஇலக்கிய மாந்தர்களுள் அதிகமாக நெஞ்சொடு பேசுகின்றான். தலைவி மீது தலைவனுக்குள்ள காதல், தலைவியின்றி அவனால் வாழமுடியாத மனநிலை, இல்வாழ்வின் சிறப்பிற்குப் பொருள் தேட வேண்டிய கட்டாய நிலை போன்ற சூழல்களின் போது தலைவனின் கூற்றுகள் நெஞ்சொடு கிளத்தலாக அமைகின்றன. ஆற்றாமை மிகும் சூழலில் தனக்குத்தானே பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், தலைவன் தனிமொழி பேசுகின்றான். தனிமொழி பேசுதல் என்பது, தலைவியை எண்ணி உறங்காமல் தனித்திருக்கும் தலைவனின் மனதிற்குத் தக்க வடிகாலாக அமைகின்றது.

 
சான்றெண் விளக்கம்

1. தொல்.பொருள்.பொருளியல், நூ.2

2. Pity is a mixture of love for an object that suffers, and a grief that we are not able to remove those sufferings (John Walker, 1825, p.322)


துணைநூற் பட்டியல்

1. அறவாணன், க.ப., - அற்றைநாள் காதலும் வீரமும்,
மெய்யப்பன் தமிழாய்வகம்,
சிதம்பரம்,
முதல் பதிப்பு - 2002.

2. அமிர்த கௌரி, ஆ., - சங்க இலக்கியத்தில் உரையாடல்,
கவின்கலை அச்சகம்,
சென்னை - 41.
முதல் பதிப்பு - டிசம்பர், 1989.

3. இராமகிருட்டிணன், ஆ., - அகத்திணை மாந்தர் - ஓர் ஆய்வு,
சர்வோதய இலக்கியப் பண்ணை,
மதுரை.
முதல் பதிப்பு - 1982.

4. சிவராஜ், து., - சங்க இலக்கியத்தில் உளவியல்,
சிவம் பதிப்பகம்,
வேலூர், 1994.

5. சுப்பிரமணியன், ந., - சங்ககால வாழ்வியல்,
நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிட்,
சென்னை - 98,
2010.

6. சுப்புரெட்டியார், ந., - அகத்திணைக் கொள்கைகள்,
பாரி நிலையம்,
சென்னை - 04,
முதல் பதிப்பு - 1981, மறுபதிப்பு - 2016.
     
7. மாணிக்கம், வ.சுப., - தமிழ்க்காதல்,                                                                    
பாரி நிலையம்,
சென்னை, 1962.                                                                                                                                                                                       

                              
ஆய்வுக் கோவைகள் :

1. குருமூர்த்தி. இராம., - சங்க இலக்கியக் கட்டுரைகள் தொகுதி,
மெய்யப்பன் தமிழாய்வகம்,
சிதம்பரம்,
2007.

2. சண்முகதாஸ், அ.,
(தொ.ஆ.) - சங்க இலக்கிய ஆய்வுகள்,
(க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கக் கட்டுரைகள்),
தேசிய கலை இலக்கியப் பேரவை,
2002.

3. சுப்பிரமணி, இரா., - தூது இலக்கியங்களில் தொடர்பாடல் - சங்க
இலக்கியத்தில் தொடர்பியல், கட்டுரைத் தொகுப்பு,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை - 2014.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.