- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவாக 17.11.2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய நினைவுப் பேருரையின் எழுத்துவடிவமே இக்கட்டுரை. இக்கட்டுரையாசிரியர் முனைவர் செல்லத்துரை சுதர்சன் - சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். -


அறிமுகம்

பருத்தித்துறைச் சந்தையில் இருந்த புளியமரம் ஒன்றின் கதை சுவாரசியமானது. வரலாற்று நூல்களில் பதிவான அந்தப் புளியமரத்தின் கதையைக் கூறுவதோடு, இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பது பொருத்தம் என எண்ணுகிறேன். 1548 இல் சவேரியார் என்னும் பெயருடைய கத்தோலிக்க மதகுரு யாழ்ப்பாணம் வந்து, சங்கிலி அரசனைச் சந்தித்த பின்னர், பருத்தித்துறை வழியாகத் திரும்பிச் சென்றபொழுது, இந்தப் புளியமர நிழலில் நின்று சமயப் பிரசங்கம் செய்தார் என்ற செவிவழிக் கதையோடு இதன் புகழ் பரவ ஆரம்பிக்கிறது. ஒல்லாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பால்டியஸ் (Baldaeus) என்ற புரட்டஸ்தாந்து மதகுரு, 1658 இல் நான்கு புறமும் சடைவிரித்துப் பரந்த, கடலோரக் காற்று இதமாகத் தழுவிய, இந்தப் புளியமர நிழலில் நின்று வேதாகம சுவிஷேசத்தைப் பிரசங்கம் செய்து மக்களைச் சுவீகரித்தார். இந்த வரலாற்றுச் செய்தி புளியமரத்தின் புகழை மேலும் ஓங்கச் செய்தது. எவ்வாறெனில், இது பால்டியஸ் செய்த முதல் பிரசங்கம் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் புரட்டஸ்தாந்து சமயத்தின் முதல் பிரங்கமாகவும், இந்தப் புளியமர நிழலில் நிகழ்த்திய முதலாவது பிரசங்கமாகவும் வரலாற்று எழுத்துகளில் பதிவுபெற்றுள்ளது. இதன் பின்னர், தென்னிந்தியாவின் தரங்கம் பாடி மிஷனைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற மிஷனரியுமாகிய பிரடெரிக் வார்ச் என்பார், 1760 இல் இந்தப் புளியமர நிழலில் நின்று, கிறிஸ்தவப் பிரசாரம் செய்து சென்றார் என்பதும் எழுத்துமூல வரலாறு. (வேலுப்பிள்ளை, சி.டி. 1984:25-26). முன்னர் குறிப்பிட்ட பால்டியஸ் என்பார், தெல்லிப்பளையிலிருந்து பலகாலம் கிறிஸ்தவத்தைப் பரப்பியும், ‘கொறமண்டலும் இலங்கையும்’ எனும் வரலாற்று நூலை எழுதியுமிருந்த காலத்தில்தான், புளியமர நிழலிலே, கடலோரக் காற்றில் கலந்த அவரது பிரசங்கம், அவ்வாறு கலவாதிருக்க, அச்செழுத்துக்களை வேண்டியிருந்தது! முதன் முதலில் தமிழ் அட்சரங்களை ஐரோப்பாவில் அச்சிடுவதற்குக் காரண கர்த்தாவான பால்டியஸ் என்பவரால், அவர் முதலில் நின்று பிரசங்கித்த புளியமரம், ‘பால்டியஸ் புளியமரம்’ (வேலுப்பிள்ளை, சி.டி. 1984:25-26) என்ற பெருமையையும் சூடிக்கொண்டது.

இந்தக் கதையும் நூல்களின்வழி கிடைக்கப்பெறுகின்ற இதுபோன்ற பிறகதைகளும், அச்சுக்கு முந்திய காலனிய யாழ்ப்பாணத்தில், சமயப் பிரசாரமானது, வழிபாட்டிடங்களிலும் மர நிழல்களிலும் கொட்டகைகளிலும் நிகழ்த்தப்பெற்ற செய்தியைத் தெரிவிக்கின்றன. வழிபாட்டிட முன்றில்களும் மக்கள் அதிகம் கூடும் சந்தை போன்ற பொது இடங்களும் பாரிய மரநிழற் குடைகளும் சமயப் பிரசாரக்களங்களாக ஆரம்பப் பிரசாரகர்களுக்கு அமைந்தன. அவற்றினால், அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களே அச்சு ஊடக எண்ணத்தை அவர்களிடம் உருவாக்கியது என முன்னர் கூறிய புளியமரத்தின் கதையின்வழி வாசிக்க முடிகிறது. பால்டியஸ் எனும் சமயப் பிரசங்கி, முதன்முதலில் தமிழ் எழுத்துக்களை ஐரோப்பாவில் உருவாக்கி அச்சிட்ட நிகழ்வு, பிரசங்கத் தேவையின் வழியாக அச்செழுத்துப் பிரதிகளின் பிறப்பைப் புலப்படுத்துவதோடு யாழ்ப்பாணத்தில் அச்சுவாகன வருகையின் தேவையையும் அறிவித்து நிற்கிறது. மேரி மற்றும் மார்க்கிரட் லெஜ்ச் (Mary and Margaret W.Leitch) “சைவர்களுக்குச் சமய உபதேசம் என்பது முற்றிலும் புதிய விஷயமாகும். சைவக்குருமார்கள் ஒருபோதும் சமய உபதேசம் செய்ததில்லை” (1890:36) எனவும், நரசிங்கபுர வீரசாமி முதலியார், “யாழ்ப்பாணம் ஒரு சிறுநூலையேனும் ஒரு சிற்றுரையையேனுஞ் செய்குநரில்லாத தேசம்” (ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு. 1996:143) எனவும் கூறியநிலையில் அச்சின் வருகை, மாற்றத்தை ஏற்படுத்தியது. நாவுள்ள உபதேசிகள் நிகழ்த்திய பிரசாரம், நாவில்லாத உபதேசிகளான சிறுபுத்தகங்களாக முளைகொண்டு பரவிய வரலாறும் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

காலனிய யாழ்ப்பாணம் என்னும் நீண்ட வரலாற்றுப் பரப்பில், சமயஞ்சார் சிறுபுத்தகங்களை முன்னிறுத்தி அவற்றின்வழியாக, கிறிஸ்தவ மற்றும் சைவக் கருத்தாடலின் போக்கைக் கட்டமைக்க முயல்வதே இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கம். அந்தவகையில், காலனிய யாழ்ப்பாணச் சூழமைவின் முக்கியமான அடிப்படைகள் எவை, சமயக் கருத்தியற் போர்வெளியில், சமயப் பிரசாரம் குறித்த சொற்களின் பயில்நிலை எவ்வாறமைந்து, அச்சின் வருகை மற்றும் அதன்வழி உருவான எழுத்துப் பண்பாட்டின் உருவாக்கம் எவ்விதத்தில் நிகழ்ந்தது, சிறுபுத்தகங்களின் தோற்றம் மற்றும் பெருக்கம் எவ்வாறிருந்தது, சமயக் காலனியம் எவ்வாறு தோன்றி வளர்ச்சிபெற்றது, கிறிஸ்தவ மற்றும் சைவர்களின் சிறுபுத்தகங்களின்வழி சமயம்சார் கருத்தாடல் எவ்வாறு நிகழ்த்தப்பெற்றது போன்ற புலமைசார் வினாக்களை இந்தக் கட்டுரை அவாவி நிற்கிறது. இவையனைத்திற்கும் பின்புலமாக அமைந்த, காலனிய யாழ்ப்பாணச் சூழமைவின் முக்கியமான அடிப்படைகள் குறித்து முதலில் நோக்கலாம்.

காலனிய யாழ்ப்பாணம்

ஐரோப்பியமைய முதலாளித்துவம் தனது பொருளாதார நலன்கருதி ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மேற்கொண்ட பொருளாதார, கலாசார ரீதியிலான ஆதிக்கத்தைக் ‘காலனியம்’ (Colonialism) எனும் பதம் குறிக்கிறது. (Nayar, Pramod k.2013:5) காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக, விடுதலையை அவாவிநிற்கும் கருத்துநிலை, ‘காலனிய எதிர்ப்பு’ (Anti-Colonial Resistance) ஆகும். ஐரோப்பியப் பேரரசுவாதத்தின் ஆட்சிநிலைக் கருத்தியலான தேசியவாதம் (Nationalism) காலனிய நாடுகளில் ஆதிக்கத் தேசியவாதமாக அமைந்தது. (Nayar, Pramod k.2013:9) இதற்கு மாறாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் எதிர்நிலைத் தேசியவாதம் எனும் பண்பாட்டுத் தேசியவாதம் (Cultural Nationalism) எழுச்சிபெற்றது. இத்தகைய எதிர்நிலைத் தேசியவாதக் கருத்தியல் (Ideology of Oppositional Nationalism) சமய அடையாள அரசியல் இயக்கங்களை (Religious Political movements) உருவாக்கிற்று. (Nayar, Pramod k. 2013:14) இவ்வியக்கங்கள் காலனிய நீக்கத்திற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் வினையாற்றின. இந்தவினை யாற்றல் பெரும்பாலும் மதம், மொழிசார் புலமைத்துவத்தைத் தளமாகக் கொண்டமைந்தது. இதன்விளைவாக, மரபார்ந்த சுதேசச் சமூகங்கள் நவீன சமூகங்களாக மாற்றமுற்றன. இச் சமூகங்களில் உருவாகிய புலமைமரபுகள், காலனிய எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தன.

இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்த இலங்கைத்தீவின் கேந்திர, வர்த்தகநிலை முக்கியத்துவம் காரணமாக, ஆங்கிலேயக் காலனியத்தின் (1796-1948) முக்கியமான நாடாக இலங்கை விளங்கியது. 1796 ஆம் ஆண்டு, ஆங்கிலேயக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. 1802ஆம் ஆண்டு, முடிக்குரிய ஆங்கிலேயக் காலனிய ஆட்சியின்கீழ், ‘காலனிய இலங்கை’ (Colonial Ceylon) என்ற ஒருமைப்பாடு ஏற்படுத்தப்பட்டது. எனினும், இந்தியாவின், மதராஸ் மாகாணத்தின் (Madras Presidency) ஓர் அலகாக, யாழ்ப்பாணம் ஆங்கிலேயரால் இணைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், மூன்று பக்கம் நீராற் சூழப்பட்டதும், இலங்கைத் தீவின் வடமுனையில் உள்ளதுமான நிலப்பகுதி. இதன் காரணமாக ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ (The Jaffna Peninsula) எனப் பெயர்பெற்றது. இத்தகைய புவியியல் அமைவு காரணமாக, பிரத்தியேகமான சிறப்பியல்புகளை வரலாற்று ரீதியாகப் அது பெற்றிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலவரங்களும் யாழ்ப்பாணத்தை இலங்கையின் இரண்டாவது தலைநகரமாகக் கட்டமைத்தன.

காலனிய யாழ்ப்பாணத்தின் தமிழ்ச் சமூக பண்பாட்டு இயங்குநிலைகளை அறிந்துகொள்வது, அக்காலப் புலமைமரபின் முக்கிய அம்சங்களைக் கண்டறிவதற்கு வாய்ப்பாய் அமையும். பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்ச் சமூகத்தை ஆராய்ந்த பலரும், இக்காலத்தை நிலைமாறு காலகட்டமாக இனங்கண்டுள்ளனர். இக்கால யாழ்ப்பாணத்தில், (அ) கிறிஸ்தவ மிஷனரிகளால் வழங்கப்பட்ட கல்வியும் அக் கல்விகற்ற சுதேசிகளும் யாழ்ப்பாணப் பூர்விக மக்களுக்குக்கிடைத்த தொழில் வாய்ப்பும் சமூக அந்தஸ்தும் (இ) யாழ்ப்பாணப் பூர்விக மக்களின் குடியகல்வும் குடியசைவும் (ஈ) பூர்விக மக்களின் அரசியல் தொடர்பான விழிப்புணர்வும் செயற்பாடுகளும் (உ) அச்சுப் பண்பாடும் அதன்வழித் தோன்றிய பத்திரிகைகள், பதிப்பு நூல்கள், பாடநூல்கள், அகராதிகள், மொழிபெயர்ப்பு நூல்கள் முதலிய அறிவுப் பரம்பற் செயற்பாடுகளும் கிறிஸ்தவக் காலனியத்தினதும் அதன்மீதான எதிர்ப்பினதும் முக்கிய அடிப்படைகளாய் அமைந்தவை.

யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசரும் (கத்தோலிக்கம்) ஒல்லாந்தரும் (புரட்டஸ்தாந்து) மேற்கொண்ட சமயக் காலனியத்தால் (Religious Colonialism) யாழ்ப்பாணத்துச் சைவாலயங்கள் இடித்தழிக்கப்பட்டுச் சாம்பலாயின. ஆங்கிலேயரின் புரட்டஸ்தாந்துக் காலனிய மானது, ‘சைவம்சார் உலகநோக்கு’ (Saiva Mindset) என்பதைச் சைவர்களிடமும், ‘கிறிஸ்தவம்சார் உலகநோக்கு’ (Chirstian Mindset) என்பதை கிறிஸ்தவர்களிடமும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிகம் வலியுறுத்துவதாய் அமைந்தது.

இலங்கையில் முதன்முதலாக 1737 இல், அச்சு இயந்திரம் அறிமுகமாகியது. மதப் பிரசாரம், கல்வித்தேவை ஆகியவற்றின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு அச்சியந்திரம் கொண்டுவரப்பட்டது. மதப்போர் அரசியலில், ‘நாவில்லா உபதேசி’ எனும் நிலையில் தோன்றிய பெருமளவு ‘சிறு புத்தகங்கள்’, யாழ்ப்பாணத்தை, சமயப் போராட்டக்களரியாக மாற்றின. சமயப் பொருள்கோடல்கள் (Religious Discourses) எதிரும் புதிருமாக நிகழ்ந்த இக்காலத்தில் தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் ஆகியவற்றை முதன்மைப்படுத்திய புத்தக உற்பத்தியும், நுகர்வும் அதிகமாயின.

ஆறுமுகநாவலர் தலைமையிலான, ‘சைவமே மெய்ச்சமயம்’ எனும் கொள்கையினை வரித்த ‘சைவ மறுமலர்ச்சி இயக்கம்’ (Saiva Renaissance Movement) மிஷனரி ஊழியத்துக்கு எதிரான சைவ ஊழியமாகியது. இதன்வழி, ஈழத்தில் ‘புரட்டஸ்தாந்துச் சைவம்’ (Protestant Saivam) என்று கருதத்தக்க ‘புதிய சைவம்’ (New Saivam) உருவாகியது.

‘காலனிய எதிர்ப்பு உயர்குழாம்’ (Anti Colonial Resistance Elites) என்ற புலமைசார் புதிய சமூக அமைப்புத் தோன்றியது. இப்புலமைச் சமூக அமைப்பு கல்வி போதிப்பவர், சைவப் பிரசாரகர், புலவர், உரைகாரர், கண்டன ஆசிரியர், புராணபடனகாரர், பத்திராதிபர் முதலிய பலரை உள்ளடக்கியது. இப்புலமைச் சமூகத்தால் (Intellectual Society) கோயில்கள் மற்றும் பிரபுக்கள் மீதான பிரபந்தங்கள், உரைநூல்கள், பழந்தமிழ் நூற்பதிப்புகள், பாடநூல்கள், அகராதிகள், மொழி பெயர்ப்புகள், வசன நூல்கள், நாடகநூல்கள், புலவர் வரலாறுகள், ஆய்வு நூல்கள், கண்டன நூல்கள், தத்துவ நூல்கள், பத்திரிகைகள் முதலாய பன்முக வளத்;தினை ஈழத்துத் தமிழியல் பெற்றுக்கொண்டது.

இக்காலத்தில், ‘சைவத்தமிழ்;’ எனும் கருத்துநிலை (Saivaththamizh Ideology) தோன்றி வலுப்பெற்றது. சைவம், தமிழ் ஆகிய இரண்டும் ஒன்றிக்கலந்த ஓர் இணைவுநிலையான இக்கருத்து நிலை, சைவ சித்தாந்தத்தினைத் தமிழர் வாழ்வியலின் தளமாகவும் சாரமாகவும் முன்மொழிந்தது. வேதாகமங்களைவிடவும், இறைவனுக்கு மிகுந்த பிரீதி உடையவையாகத் தேவார திருவாசகங்களை அது முன்னிலைப் படுத்தியது. இக்கருத்து நிலை கிறிஸ்தவத்தையும் ஆங்கிலத்தையும் புறமொதுக்கி, சமஸ்கிருதத்தை உள்வாங்கியதாகவும் அமைந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிரான சைவமறுமலர்ச்சி இயக்கச் செயற்பாடுகளினால் ‘குகசைவ சைவசித்தாந்தம்’ (Guha Saiva Siddhanta) எனும் சைவ சித்தாந்தத்தின் புதிய கருத்துநிலை உருவாக்கத்தையும் அடையாளங்காண முடிகிறது. (சுதர்சன், செ., 2019:154-162)

ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் யாழ்ப்பாணம் இந்தியாவின் மதறாஸ் மாகாணத்தின்கீழ் (Madras Presidency) விளங்கியது. “நாவலர் காலத்திலும் அவரது மறைவிற்குப் பின்னரான ஏறத்தாழ மூன்று தசாப்த காலங்களிலும் சென்னை எழுத்தறிவுச் சூழலில் யாழ்ப்பாணக் குழுமமே ஆதிக்கம் செலுத்தியது” (கைலாசபதி, க. 2005:79). புவியியல் வரைபடத்தில், இலங்கைக்குத் தலையாக இருக்கும் யாழ்ப்பாணம், சென்னைக்கு மூளையாக விளங்கிய இக்காலத்தில்தான் அச்சுப்பண்பாடு வேர்வைத்து விருட்சமானது. காலனிய யாழ்ப்பாணம் பற்றிய இத்தகைய புரிதலோடு, சமயப் பிரசார நிலத்தில் சொற்களின் பயில்நிலை குறித்து நோக்கலாம்.

சமயப் பிரசார நிலத்தில் அகராதிச் சொற்கள்

‘உபதேசம்’ என்பது ஒரு வாய்மொழிக் கலையாக ஆரம்பத்தில் இருந்ததால், ‘மததத்துவ போதனாமுறை’ எனும் கருத்தில் ‘உபதேசகலை’ எனக் குறிக்கப்பட்டிருந்தது. (தமிழ் லெக்சிகன். ப.423) அந்தவகையில், உபதேசம் என்பது ‘ஞானபோதனை’, ‘மந்திரோபதேசம்’ எனும் கருத்தில், பக்குவப்பட்ட உயிர்களுக்கானதாக அமைந்தது. இந்த ஆய்வின் பொருண்மைப் பரப்பு காலனிய காலமாக அமைவதால், அக்கால நிலவரத்தை ஒட்டி, உபதேசம், பிரசங்கம் ஆகியவை தொடர்பாக, காலனிய காலத் தமிழ் அகராதிகள் தரும் சுவாரசியமான விளக்கத்தை அறிவது பயனுடையது.

மிஷனரிகளில் ஒருவரான வின்சுலோ பாதிரியார் உருவாக்கிய ‘எம். வின்சுலோ தமிழ் - ஆங்கில அகராதி’ (1862), ‘உபதேசம்’ என்பதற்கு ‘போதகம்’, ‘புத்தி’, ‘சமயாசாரவுபதேசம்’, ‘மந்திரோபதேசம்’ ஆகிய நான்கு பொருள்களைத் தருகிறது. (1862:133) எனினும், அவ்வகராதி, ‘உபதேசி’ என்பதை வினையடியாகக் கொண்டு, ‘புத்தி சொல்ல’ அதன் வழி ‘சம்மதிக்கச் செய்ய’ (1862:133) என விரிக்கும் பொருள், ‘கிறிஸ்தவர் அல்லாதவருக்குப் புத்தி சொல்லி, அவரைச் சம்மதிக்கச் செய்தல்’ எனும் அகராதி தோன்றிய கால அர்த்தத்தைக் கற்பிக்கிறது. இன்னும், ‘உபதேசி’ என்ற வினையை நிகழ்த்தியவர் ‘உபதேசி’ (போதகன்) எனப் பெயருமாகினார். ‘பிரசங்கம்’ என்பதற்கு ‘விரித்துப்பொருளுரைக்கை’, ‘பகிரங்கப்படுத்துகை’, ‘பிரபலம்’, ‘தெளிவு’ ஆகிய நான்கு பொருள்களை அகராதி குறிக்கிறது. (1862:773) இந்நான்கு பொருள்களையும் முறையே, ‘சமய உண்மையை விரித்துப் பொருளுரைக்கும்’, ‘மக்களுக்கு அதைப் பகிரங்கப்படுத்தும்’, ‘சமயத்தையும் அதன் கருத்தையும் பிரபலப்படுத்தும்’, அதனால் ‘மக்களைத் தெளிவடையச் செய்யும்’ என விளக்கம் செய்தால், காலனியகாலச் சமய நிலவரங்களால் அவை அகராதி சொற்களானமையை உணர முடியும். ‘பிரசங்கி’ என்பதற்கு ‘விளம்பரப்படுத்த’, ‘சாதுரியமாய்ப் பேச’, ‘வெளிப்படுத்த’ ஆகிய மூன்று பொருள்களை அவ்வகராதி தருகிறது. (1862:773) இம்மூன்று பொருள்களையும் முறையே, ‘சமயத்தையும் அதன் உண்மைகளையும் விளம்பரப்படுத்தும்’, ‘சுதேசச் சமயிகளிடம் சாதுரியமாய் உரையாடும்’, ‘வேதப் புத்தகத்தின் சுவிஷேசத்தை அவர்களுக்கு உண்மையென வெளிப்படுத்தும்’ என விளக்கம் செய்தால், காலனியச் சமயப் பரப்புரைச் சூழலின் விளைவாக அவை அகராதிச் சொற்களானமையை உணரமுடியும். இங்கும், ‘பிரசங்கி’ என்ற வினையை நிகழ்த்தியவர் ‘பிரசங்கி’ என்னும் பெயர்நிலை பெறுகிறார். ‘பிரசங்கமாய் வாசிக்க’ (1862:773) என அகராதியில் வருவது, ஆலயத்தில் வேதப்புத்தக வசனங்கள் பிரசங்க பாணியில் வாசிக்கப்பட்டதை உணர்த்துகிறது. இது, பிரசங்கமுறை வழிபாட்டிடத்தில் புகுந்து, வழிபாட்டு முறையில் ஓர் ஊடகமாகிய நிலையை உணர்த்தி நிற்கிறது.

சந்திரசேகர பண்டிதர், சரவணமுத்துப்பிள்ளை ஆகியோர் உருவாக்கிய யாழ்ப்பாண அகராதி என்று அறியப்படும் மானிப்பாய்த் தமிழ் அகராதி (1842) ‘உபதேச கலை’ என்பதற்கு ‘ஓரளவை’ எனக் கூறி, ‘கடவுட்டன்மையை அறிவித்தல்’ என விளக்கம் தருகிறது. (1842:137) ‘உபதேசகன்’ என்பதற்கு ‘உபதேசி’ எனக்கூறி, ‘உபதேசம்’ என்பதற்கு ‘சமயபோதகம்’, ‘தீட்சை, ‘போதனை’ ஆகிய மூன்று பொருள்களைக் குறிக்கிறது. (1842:137) ‘பிரசங்கம்’ என்பதற்குத் தரும் பத்துப் பொருள்களில் (1842:231) எட்டுப் பொருள்கள், பிரசாரகர்களின் சமயக் கருத்தாடலால் அகராதி அமைவுபெற்றவை. அவ் எட்டுப் பொருள்களையும் அக்காலச் சூழலைக் கருத்திற்கொண்டு பின்வருமாறு விளக்கம் செய்யலாம். ‘உட்படுத்தல்’ - பிற சமயத்தாரைத் தம் சமயக் கருத்தியலுக்கு உட்படுத்தல், ‘கூட்டம்’ - குறித்த சமய விசுவாசம் உள்ள கருத்தைச் சொல்வோனும் கேட்போனும் உள்ளடங்கிய குழு, ‘தருக்க தீர்மானம்’, ‘நியாயத் தொடர்பு’ - பிறர் சமயம் மறுத்து, தம் சமயக் கருத்தை நிறுவ அளவைப் பிரமாணம் கொள்ளல், ‘தெளிவு’ - தமது சமய உண்மைகளைப் பிற சமயத்தவரிடம் எடுத்துக்கூறி, அவர்களைத் தெளிவாக்கல், ‘பிரபலியம்’ - தம் சமய உண்மைகளைப் பிறசமயத்தார் மத்தியில் பெருமளவு அறியச்செய்தல், ‘வாக்கியம்’ - வேதப் புத்தக வசனங்களை விரிவாகப் பிறருக்குக் கூறுதல், ‘வெளிப்படுத்தல்’ - வேதப் புத்தக வசனங்களின் இறையியல் உட்கிடையைப் பிற சமயத்தார் உணரும் வகையில் தெரிவித்தல்.

தருக்க அறிவின் துணைகொண்டு நிகழ்ந்த சமயப் பிரசாரத்தினால், ‘பிரசங்கித்தல்’ என்பதற்கு ‘தீர்மானமெடுத்துக் காட்டல்’ (1842:232) என்ற பொருளும், பிரசாரகர்களைப் பிற சமயத்துக்கு எதிராக, தம்சமய உண்மையைப் பரப்புக என அனுப்பியதால், ‘பிரசங்கி’ என்பதற்கு ‘பிரசங்கியென்னேவல்’ (1842:231) என்ற பொருளும் அகராதியுள் வரலாயிற்று. சமயப் பிரசாரகர்கள் கவரத்தக்க ஆடை, அணிகலன்களுடன் நட்சத்திர அந்தஸ்து உடையவர்களாகச் சமூகத்தில் வலம் வந்தமையால், ‘பிரசங்கி’ என்பதற்கு ‘ஆடம்பரகாரன்’ என்ற பொருளும் (1842:231) இக்கால அகராதியில் இடம்பெற்றமை சுவாரசியமானது.

மேற்குறித்தவற்றிலிருந்து, பிரசங்கியும் உபதேசியும் ஒரு பொருளையே குறிப்பதாயினும் சைவர்கள் பிரசங்கி என்பதிலிருந்தும் மிஷனரிகள் உபதேசி என்பதிலிருந்தும் கிளைத்த பதங்களையே கையாண்டனர். இன்னும், அவற்றைத் தத்தம் சமயநிலைநின்று ஒருவர் பதத்தை மற்றவர் எதிர்நிலையாகவும் கருதினர். ஒரு சமய வட்டத்துள் சமய உண்மையைப் பரப்பிய தன்மையிலிருந்து எதிர்ச் சமயத்தார்க்கும் அவற்றை வெளிப்படுத்தும், ‘பலர் அறியச் செய்யும்’ நிலையையும், சமயப் பரப்புகைக்கும், வழிபாட்டுக்கும் சொற்களைப் பிரக்ஞை பூர்வமாகப் பயன்படுத்திய நிலையையும் அவதானிக்கமுடிகிறது. இக்காலத்தில்தான், ‘பிரசங்க பீடம்’, ‘பிரசங்க மேடை’, ‘பிரசங்காசனம்’ முதலாய புதிய சொற்கள் உருவாகி தமிழ் அகராதிகளில் அமர்ந்துகொண்டன. காலனியப்படுத்தியவர் காலனியப்படுத்தப்பட்டவரின் மொழியில் புலமை பெறும்போது சொற்களைத் தம்தேவை கருதி எவ்வாறு அர்த்தம் செய்கிறார் என்பதையும், அவற்றை காலனியப்படுத்தப்பட்டவர் எவ்வாறு எதிரிடையாகக் கையாள்கிறார் என்பதையும், இருவேறு சமயப் பண்பாட்டைக் கொண்டவர்கள் சமூத்தையும் சமூகத்திலிருந்து மொழியையும் எதிர்கொண்டு பயன்படுத்திய தருணங்களை, அகராதிகள் எவ்வாறு கையகப்படுத்தியிருக்கின்றன என்பதையும், இதன்வழி கண்டுணர முடிகிறது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் அச்சுப் பண்பாடு குறித்து நோக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் அச்சுப் பண்பாடு

“அச்செழுத்துமொழி கூட்டுத் தன்னிலையை உடைப்பதற் கான, சிதைப்பதற்கான தகுதியைப் பெற்றது.” (கலையரசி, அ. 2013:66) காலனியப்படுத்தப்பட்ட மக்களைத் தனித்தனியே சிதைத்து, தனிமனித எழுவாய்களை (single subject) உருவாக்கும் தன்மையை, காலனியச் சமயப் போர்க்களத்தில் அச்செழுத்தின் முக்கிய பாத்திரமாகக் கருதுவது பயனுடையது.

யாழ்ப்பாணச் சுதேசிகள் அச்சியந்திரத்தைத் தம்வசப் படுத்தியதென்பது, ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தை எதிர்ப்பதற்கான எழுத்துக்களை வெளியிடுவதற்கல்ல என்பதும், கிறிஸ்தவக் காலனிய எதிர்ப்பை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில், சைவ மறுமலர்ச்சி இயக்கத்தின் கருத்தியலுக்கு இசைவான கூட்டுத் தன்னிலை உருவாக்கத்திற்கு முதன்மையளிப்பதற்காகவே என்பதும் ஊன்றி நோக்க வேண்டியவை. ‘எழுதா எழுத்து’ (சிவத்தம்பி, கா. 2002:36) நிலையில் அமைந்த அச்செழுத்தை, ‘வாகன எழுத்து’, ‘யந்திர எழுத்து’ என்றெல்லாம் அவர்கள் கொண்டாடிய நோக்கத்தை சமய இயக்கத் தேவையின் பின்னணியில் வைத்தே புரிந்துகொள்ளவேண்டும். ‘எழுதா எழுத்து’ என்று ஆய்வாளர் கூறுவதை, இதுவரை காலமும் எழுதாதவற்றை, எழுத மறைத்தவற்றை எழுதும் எழுத்தே ‘எழுதா எழுத்து’ என இன்னொரு விதமாகவும் புரிந்துகொள்ளலாம். காலனிய காலத்தில் அறிமுகமான பல புதிய அம்சங்களை யாழ்ப்பாணப் புலமையாளர்கள் தயக்கத்துடன் நோக்கி, ஏற்றுக்கொண்டாலும், அச்சு நவீனத்தைத் திறந்த மனதோடு வரவேற்றார்கள். அச்சு எழுத்து என்பதனுள் எழுத்தைப் பேணும் முறையை, பாதுகாக்கும் முறையை, பரப்பும் முறையை அவர்கள் கண்டதன் விளைவே அந்த வரவேற்புக்குக் காரணம். நூலின் ஆக்கமுறை, வடிவமைப்பு, அளவு ஆகியவற்றை அச்சு மாற்றியமைத்தது. காலனிய கால யாழ்ப்பாணப் புலமைவெளியைத் தீர்மானித்த அச்சு வாகனம், ‘அச்சுப் புலமை மரபு’ என்ற புதிய மரபையும் கூடவே வளர்த்துச்சென்றது. முக்கியமாக, இந்த அச்சுப்புலமை மரபு, சைவ மறுமலர்ச்சி இயக்கத்தினரும் கிறிஸ்தவ மிஷனரிகளும் தத்தமக்கேயான கூட்டுத் தன்னிலைகளை உருவாக்குவதால் வளர்ச்சிகண்டது.

எழுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அறிவுசார் செயற்பாடுகளின் ஊடாகச் சமய நடவடிக்கைகளில் ஈடுபடும் புரட்டஸ்தாந்து மிஷனரிகளே, யாழ்ப்பாணத்திற்கு அச்சுப் பொறியை அறிமுகம் செய்தனர். அவர்கள் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அச்சியந்திரம் வந்த வரலாற்றை, யாழ்ப்பாண வைபவ கௌமுதி பின்வருமாறு பதிவு செய்கிறது.

“அமெரிக்க மிஷனரிமார் அச்சியந்திரசாலை ஒன்றை ஸ்தாபிக்க, 1820 ஆம் ஆண்டு ஓர் அச்சியந்திரத்தை அமெரிக்காவில் இருந்தும் அதற்கு வேண்டிய எழுத்துக்கள் ஆகியவற்றைக் கற்குத்தாவில் இருந்தும் வருவித்தனர். இதுவே யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப் பட்ட முதல் அச்சியந்திரமாம். அமெரிக்க மிஷனரிமா ருக்கு உதவியாய் இருந்த பிறவுண்றிக் தேசாதிபதி, தம் ஆளுகைக்காலம் முடிந்து இங்கிலாந்துக்குச் செல்ல, 1920ஆம் ஆண்டு ஆளுகைசெய்த பாண்ஸ் தேசாதிபதி அமெரிக்க மிஷனரிமாரில் நன்மனமற்றவராய் இருந்து, அச்சுக்கூடம் நடத்த அமெரிக்காவிலிருந்து வந்த துரைமகனை (ஜேம்ஸ் கரட்) யாழ்ப்பாணத்தில் வசிக்கக் கூடாதென்று தடுத்தமையால் அத் துரைமகன் இந்தியாவுக்குப்போக, அந்த அச்சியந்திரமும் அதற்குரிய தளபாடங்களும் அம் மிஷனரிமாரால் சேட்சு மிஷனரிமாருக்கு விற்கப்பட்டன. சேட்சு மிஷனரிமார் (வண. ஜேசப் நைற்) அந்த அச்சியந்திரத்தை நல்லூரில் ஸ்தாபித்துச் சில புஸ்தகங்களைப் பிரசுரித்து வெளிப்படுத்தினர்... கோட்டன் தேசாதிபதி (1831-1837) புதிய மிஷனரிமார் வரக்கூடாதென விதித்த பிரமாணத்தை நீக்கிவிட... அவருள் மைனர் என்னும் பேருடைய அமெரிக்கத் துரைமகன் (இவர் அமெரிக்காவிலே அச்சகக் கலையில் தேர்ச்சி பெற்றவர்) யாழ்ப்பாணத்தில் அச்சியந்திரத்தை ஸ்தாபித்து நடத்த யாழ்ப்பாணம் வந்து, அமெரிக்க மிஷனரிமார் முன் சேட்சு மிஷனரிமாருக்கு (ஊ.ஆ.ளு) விற்ற அச்சியந்திரத்தையும் அதன் தளபாடங்களை யும் வாங்கி, மானிப்பாயில் ஸ்தாபித்து, அதைச் செம்மையாய் நடத்தி, அநேக புஸ்தகங்களை அச்சடித்துப் பரப்பினர்.” (வேலுப்பிள்ளை, க. 1918:280)

யாழ்ப்பாணத்தில் 1918,ல் பன்னிரண்டுக்கும் அதிகமான அச்சுக்கூடங்கள் இருந்தன. நாவலர், வித்தியானு பாலனயந்திர சாலையை 1849,ல் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபித்தார். அதன் பின்னர், யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் பல அச்சுக்கூடங்கள் நிறுவப் பட்டன. அச்சியந்திர வருகைக்கு முன்னர், “யாழ்ப்பாணத்திலே ஒரு காவிய ஏடு இரண்டு பொன் காதணிகளுக்குச் சமமாக இருந்தது” (சிவலிங்கராஜா, எஸ். 2008:25) என்ற நிலை மாறியது. எனினும், அச்சுத் தொழிலின் பெருக்கம் அச்சகங்களை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளவும் தவறவில்லை. சமயப் பிரசாரத்தாலும் கல்வித் தேவைகளாலும் ஏற்பட்ட அச்சுத்தொழில் பெருக்கம் காரணமாக, ஆரம்பத்தில் தோன்றிய அச்சகங்களுக்கு வருமானம் குறைவுற்றது. இந்நிலை பத்திரிகைகள் பலவற்றிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக, இந்துசாதனத்தில் வெளிவந்த செய்தி ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

“யாழ்ப்பாணத்தில் ஒரு அச்சியந்திர சாலைக்குத்தானும் போதிய வேலையில்லாதிருப்ப, ஒருவரை ஒருவர் பார்த்து, எத்தனையோ அச்சியந்திர சாலைகள் ஸ்தாபித்து நடாத்தப்பட்டு வருகின்றனவே. இவ்வியந்திர சாலைக ளில் உள்ள அச்சியந்திரங்களெல்லாம் ஓயாதியங்கு கின்றனவா? ஒரு அச்சியந்திரசாலைக்குச் செல்லவேண்டிய லாபத்தை எல்லாரும் பங்கிட்டுப் புசிப்பதற்காகவே பல அச்சியந்திரசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டனவேயன்றி அவற்றால் உள்ளவாறு லாபமடைதற்கன்று... ஒரு தொழில் மலியும்போது அதன் வருவாயும் அத் தொழிலுடையார்க்குச் சிறிது சிறிதாக அருகுமன்றோ. நாம் ஒரு தொழிலைச் செய்ய ஆரம்பிக்கும் போது அத்தொழிலில் நமக்கு லாபம் வருமோவென்று தீர்க்காலோசனை செய்தலோடமையாது அத்தொழில் பிறருடைய வருவாய்க்கு இடையூறாயிருக்குமோ என்றுஞ் சிந்தித்தே அத்தொழிலைச் செய்தல் வேண்டும். ஒருவருடைய வருவாயையே நாமும் பகிர்ந்துண்டலாற் புண்ணியம் யாதுமில்லை. அச்செயல் தேசவன்பர்களுக்கு ஒருபோதும் அழகாகாது. (இந்துசாதனம்., 21.07.1909)

சைவர்களும் கிறிஸ்தவர்களும் நிறுவிய அச்சகங்கள், சைவ மற்றும் கிறிஸ்தவ அடையாளங்களைச் சுமந்த இக்காலத்தில்தான் நூற் படைப்பு, அதன் பரவல் மற்றும் நுகர்வு குறித்த புலமைப் பரப்பின் விரிவாக்கத்தை, தமிழ்ச் சூழலில் அவதானிக்கமுடிகிறது. இதனை, ‘காலனிய யாழ்ப்பாணத் தமிழ் நூற்பரப்பாக்கம்’ என்ற என்ற கருத்தியலாகக் கட்டமைக்கலாம். பிரபந்தங்கள், சிறுநூல்கள், பிரசுரங்கள், பத்திரிகைகள், நிகண்டுகள், அகராதிகள், பாடநூல்கள், கண்டனங்கள், பதிப்புகள் முதலியவற்றால் பெருகிய இந்த வெளி, கடவுளையும் மன்னர் மற்றும் பிரபுக்களையும் பாடிப் பரவிய மரபையும் தாண்டி, நூல்களைப் பாடும், அதை அச்சிடுவித்தவரைப் பாடும், அதற்குப் பொருள் உபகரித்தவரைப் பாடும், நூலை அச்சிட்ட அச்சியந்திரசாலையை மற்றும் அச்சியந்திரத்தைப் பாடும் புதிய நிலையையும் எய்தியது. இப்புதுநிலைக்குச் சான்றாக, சைவப்பிரகாச யந்திரசாலைமீது,

“சைவப்ர காசயந்த்ர சாலையிது குன்றாம
லெவ்வெப் பகலு மினிதாகச் - செவ்விச்சீர்
வண்ணைநகர் வாச வயித்தியலிங் கப்பெருமான்
றண்ணளியா லோங்கத் தகும்.” (சி.பி.பெ.தி., 2014:524)

எனச் சிவசம்புப் புலவர் பாடிய வெண்பாவைக் குறிப்பிடலாம். இவ்வாறு அமைவுபெற்ற ‘காலனிய யாழ்ப்பாணத் தமிழ் நூற்பரப்பாக்கம்’ என்பதனுள் ‘சைவத் தமிழ் நூற் பரப்பாக்கம்’, ‘கிறிஸ்தவத் தமிழ் நூற் பரப்பாக்கம்’ என்னும் இருவேறு வெளிகளையும் அவற்றின் ஊடாடுதலையும் அவதானிக்கும்போது, அதிகம் வெளித்தெரிவது சிறுநூல்களும் அவை நிகழ்த்தும் சமயக்கருத்தாடல்களுமே. இந்தப் பின்னணியில், சிறுபுத்தகங்களின் வருகையை நோக்குவது பயன் தரும்.

சிறுபுத்தகங்களின் வருகையும் பெருக்கமும்

கிறிஸ்தவத்தைப் பரப்ப மிஷனரிகள் மேற்கொண்ட முயற்சிகளும் இவற்றுக்கு எதிரான சைவச் சுதேசிகளின் சமயக் காப்பு முயற்சிகளும்; மொழி மற்றும் இலக்கியத் தளத்தைப் புதிதாக்கியது. 1804 இல் இலண்டன் மிஷனரி சபையும், 1812 இல் பப்ரிஸ் மிஷனரிச் சங்கமும் 1814 இல் வெஸ்லி மிஷனும் 1816 இல் அமெரிக்கன் மிஷனும் 1818 இல் சேர்ச் மிஷனும் கிறிஸ்தவமதப் பரப்புகைக்காக இலங்கைக்கு வந்தன. இச்சபைகளைச் சார்ந்த மிஷனரிகள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் சமயப் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அமெரிக்க மிஷனரிகள் யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு செயற்பட்டனர். அமெரிக்க மிஷனரிகளின் சமயப் பரப்புகை நடவடிக்கைகளே யாழ்ப்பாணச் சைவர்களுக்குச் சவாலாக அமைந்தது எனினும், ஆங்கிலேயர் காலத்தில் கத்தோலிக்க மதப் பரப்புகையும் இடம்பெற்றது என்பது மறுப்பதற்கில்லை.

யாழ்ப்பாணத்தில் அச்சுப்பண்பாட்டின் மேலெழுகையும் ஸ்திரப்பாடும் சைவ மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையிலான சமயம்சார் கருத்தியல் மோதலால் நிகழ்ந்தேறின. சிறிய அளவிலான புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் வெளிவந்தன. மிகக் குறைவான அளவு பக்கங்களைக் கொண்டமைந்த இந்தப் புத்தகங்கள், குறுகிய நேரத்தில் வாசிக்கக்கூடியவையாய் அமைந்தன. காலனிய காலத்தில் இவற்றைச் ‘சிறுபுத்தகங்கள்’ என்றே அழைத்தனர்.

இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தமிழ் பேசும் மக்களுக்குக் கிறிஸ்தவக் கருத்துக்களைப் பரப்புவதற்காக, 1823 இல் யாழ்ப்பாணத் துண்டுப்பிரசுர சங்கம் என்று அறியப்படும் he Jaffna Religious Tract Society நிறுவப்பட்டது. அது, 1862ஆம் ஆண்டிற்குள் அறுபது இலட்சம் சிறு பிரசுரங்களையும் சிறு புத்தகங்களையும் அச்சிட்டுப் புழக்கத்திற்கு விட்டது. (The Ceylon Overland Bimonthly Examiner, June 28, 1862, Vol. X. No.12)

அமெரிக்க மிஷனரி ஜேம்ஸ் கெரட் (James Garrett) என்பார், தாம் அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்திருந்த கை அச்சுப்பொறியை ((hand press) நல்லூரில் சேவையாற்றிய சேர்ச் மிஷனரி சங்கத்தைச் (Church missionary Society) சேர்ந்த வண. ஜோசெப் நைற் (Rev. Joseph Knight) என்பவருக்கு விற்றார். இதனை வாங்கிய அவர் 1826 இல் நல்லூரில், தனது அச்சகத்தை ஸ்தாபித்தார். இந்த அச்சகம் ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் 1,002,800 பக்கங்களை அச்சிட்டது. அனைத்துமே சிறுபுத்தகங்களாக அமைந்தன. முத்திவழி (The Way to Paradise) என்ற முக்கியமான முதல் புத்தகம் இங்குதான் அச்சிடப்பட்டது. 1833 இல் The Little Catechism என்ற நூலின் 10,000 பிரதிகள் அச்சிடப் பட்டன. நல்லூரிலிருந்த அச்சுக்கூடம் பின்னர் மானிப்பாய்க்கு இடம் மாறியது. அமெரிக்க சிலோன் மிஷனின் (American Ceylon Mission) ACM அச்சகம் 1834 இல் மானிப்பாயில் நிறுவப்பட்டது. 1850 இல் இந்த அச்சகத்தில் 70 பேர் வேலை செய்தனர். மானிப்பாய் அச்சகத்தில், துண்டுப்பிரசுர சங்கத்தினருக்கான சிறுபுத்தகங்கள் அதிகம் அச்சிடப்பட்டாலும், பாடசாலைப் பாடப் புத்தகங்களும் பைபிளின் சில பகுதிகளும் அச்சிடப்பட்டன. 1834 இல் ‘சாலமனின் பாடல்கள்’ (Songs of Solomon)) ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது. பொது வழிபாட்டிற்காக வேதாகம சங்கீதங்களின் (Psalms) சில பகுதிகள் கெட்டி மட்டையில் அச்சிடப்பட்டன. மிஷனின் தேவைக்காக, ‘இலக்கணச் சுருக்கம்’ என்ற நூலின் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டன. யாழ்ப்பாணத்தவரின் சமய, கல்வித் தேவைகளுக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் பெருந் தொகையான சிறுபுத்தகங்களை மானிப்பாய் அச்சகம் வெளியிட்டது. 1834 இற்கும் 1854 இற்கும் இடைப்பட்ட காலத்தில், 171,747,198 எண்ணிக்கை கொண்ட பக்கங்கள் அங்கு அச்சிடப்பட்டன. இவ்வாறெனில் சராசரியாக, ஆண்டிற்கு 80 இலட்சம் பக்கங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் மூன்றில் ஒரு பகுதி ‘தேவனின் வார்த்தைகள்’ பற்றிய சிறுபுத்தகங்களாக அமைந்தன. இன்னும், சமயப் பொழிப்பு 1000 பிரதிகளும், திருவிழா நடைமுறை 5000 பிரதிகளும் நாவழு 5000 பிரதிகளும் தேவவாக்கியம் 3000 பிரதிகளும் குருட்டுவழி 3000 பிரதிகளும் சிறுபுத்தகங்களாக அச்சிடப்பட்டன.

மதுரையில் 1834 இல் ஒரு மிஷன் அமைக்கப்பட்டதாயினும், அச்சுக்கலையைப் பொறுத்தவரை யாழ்ப்பாண மிஷனே அதில் தனியுரிமை பெற்றதாய் இருந்தது. ஓர் அச்சு இயந்திரத்தை வழங்கியோ அல்லது அச்சுக்கலை தெரிந்த ஒரு மிஷனரியை அனுப்பியோ உதவுமாறு மதுரை மிஷன் விடுத்த வேண்டுகோளை, யாழ்ப்பாண மிஷன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. தெல்லிப்பளையில் 1904 இல் மிஷனால் அமைக்கப்பட்ட அச்சகமானது, ஓராண்டிற்குள் இருபது இலட்சம் தாள்களை அச்சிட்டது. அவை சமயப் பரப்புகை சார்ந்த சிறுபுத்தகங்க ளாக அமைந்தன. இவ்வாறு சமயப் பரப்புகைச் சிறுபுத்தகங்கள் பெரு வாரியாக வெளிவந்திருந்தும், மக்களின் கல்வி முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தி, சைவர்களைக் கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது என்ற நிறுவன நோக்கத்தில் அதிகம் வெற்றியடையவில்லை என்ற முடிவுக்கு வந்த, ஈ.பி. ஹாஸ்ரிங் (நு.P.ர்யளவiபௌ) என்பார் தமது ஆளுகையின் கீழிருந்த வட்டுக்கோட்டை செமினரியை 1855 இல் மூடினார் என்பது வரலாறு. (A Brief history of the American Ceylon Mission Press, 1956)

மேற்குறித்த சூழல் உபதேசிகள், பிரசாரகர்கள் ஆகியோரை விடவும் சிறுபுத்தகங்களை முதன்மையாக்கியது. சமயப் பரப்புகை வெளியில் பிரசுரகாரர்களைப் பின்தள்ளி, பிரசுரமான சிறுபுத்தகங்கள் முன்னரங்கிற்கு வந்த தன்மையை உதயதாரகை பின்வருமாறு பதிவுசெய்தது.

“நான் துணைக்காரரை உபயோகமாகச் செய்வதைப் பார்க்கிலும், அச்சுச் சூத்திரத்தினாற் செய்வததிகமென்பது என் மனத்திற்குத் திருட்டாந்தமாயிருக்கின்றது. பிரசங்கத்திற் பெரிய காரியந்தான், ஆனாலும், அது முதன்மை பெற்றதல்ல. ஏலாத சிறிய காரியத்தைப் பிரசங்கத்தினாலேதான் செய்யக்கூடும். ஆனாலும், அச்சுச் சூத்திரமோ பெரிய காரியத்தைச் செய்யக்கூடும். சிறுபுத்தகங்கள் எங்கும் செல்லக்கூடும்.” (28.2.1850)

சிறுபுத்தகப் பண்பாடு, சமயப்பிரசார அடிப்படையில் தோற்றம்பெற்றது எனினும், அது பிரக்ஞை பூர்வமாவே நிகழ்ந்தது என்பதை மேற்படிகூற்றுப் புலப்படுத்துகிறது. கிறிஸ்தவ மிஷனரிகளே இதற்கு வித்திட்டனர்.

நாவலர் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபித்த வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையை மையமாகக்கொண்டு, 1864ஆம் ஆண்டு ‘பரமத கண்டனஞ் சுயமத ஸ்தாபன சங்கம்’ எனும் பெயரில், சங்கம் ஒன்றினைச் சங்கரபண்டிதர் ஆரம்பித்தார். இச்சங்கத்தில் சைவத்தமிழ்ப் புலமையாளர்கள் பலரும் அங்கம்வகித்தனர். இவர்கள், ஒரு வாரம் பிறமத கண்டனமும் மறுவாரம் சுயமத ஸ்தாபனமுஞ் செய்யும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர். ‘சம்பளக் கிறிஸ்தவர்’, ‘பதுங்கினர் பாதிரிமார்’ முதலாய தொடர்களைப் பயன்படுத்தி கிறிஸ்தவப் பரப்புகைகளை கண்டித்தனர்.

யாழ்ப்பாணத் துண்டுப் பிரசுர சங்கம் தனது முதன்முயற்சியாக ‘சிறுபுத்தகத்தால் வரும் பலன்’ என்ற பெயரிலேயே ஒரு சிறுபுத்தகத்தை வெளியிட்டது. இரண்டாவது பதிப்பில் ‘இரண்டாவது பதிப்பு பத்தாயிரம் பிரதிகள்’ எனக் குறிப்பும் உள்ளது. சிறுபுத்தகத்தின் முக்கியத்துவம் தொடர்பாக அதில் குறிக்கப்படும் ஒரு பகுதி வருமாறு.

“அற்ப சிற்பி முத்தைத் தரும், சிறிய முத்து அதிக பொன்னைப் பெறும். அற்ப கரி வச்சிரத்தை விளைக்கும்… இரு புறமுங் கருக்குள்ள வேதவசனத்தின் ஒரு சொல் ஒரு சிறு புத்தகத்திலிருந்து அநேக ஆத்துமாக்களைச் சீர்ப்படுத்தி நித்திய சீவனுக்கு ஊற்றாகாதா?.... இப்படிப்பட்ட சிறுபுத்தகங்கள் ஒரு குருவாகிலும் உபதேசியாகிலும் இல்லாத தேசங்களுக்குப் போகிறதல்லவா? குருவுக்கும் உபதேசிக்கும் முடியாத செயல்களைச் செய்து முடிப்பது சிறு புத்தகந்தான்.... ஒரு சிறு புத்தகங் குருவுக்குங் கிறிஸ்தவர்களுக்கும் உபயோகமாயிருந்து அவர்கள் வேலையை நடப்பிக்கிறது. இந்தச் சிறுபுத்தகமில்லாத சங்கங் கொழுவில்லாத ஏராளன். இதுவே நாவில்லாத உபதேசி... சிறு புத்தகங்களை எடுத்து அவ பாவனை பண்ணி மருந்துகட்டிப் பட்டம் ஒட்டிக் கெடுத்ததினால் வருந் தோஷம் புத்தகத்துக்கல்ல, புத்தகத்தைச் சேதப்படுத்தின வனுக்கே ஆகும்.” (1877:1-4)

மறுபுறத்தில், மிஷனரிகளின் அத்தகைய வெளியீடுகளைச் சைவப் பிரசாரகர்கள் கண்டித்தனர். காலனிய காலம் முழுவதுமே இந்தக் கண்டனங்கள் பத்திரிகைகளில் வெளியாகின.

“கிறிஸ்தவ மார்க்கத்தைப் புகழ்ந்தும், இந்துமார்க்கத்தை இகழ்ந்தும் பல்லாயிரம் தினுசான புத்தகங்களை நியாயவிரோதமாக மிகுந்த துணிகரத்துடன் அச்சிட்டுக் கொடுத்தல். அதேமாதிரியான சிறு துண்டுப் பத்திரிகைகளை வெளியிடல். மாதாந்தரமாகவும் வாரக்கணக்காகவும் பத்திரிகைகளை வெளியிடல். பைபிள் புத்தகத்தை நமது தேச பாஷைகளில் அச்சிட்டுச் சொற்பவிலையாக விற்பனை செய்தல்” (இந்துசாதனம்.,12.03.1901)

முதலிய செயற்பாடுகள் கண்டிக்கப்பட்டிருந்தன. சைவமறுமலர்ச்சி இயக்கத்தினர் தமது சமய உண்மைகளைச் சிறுபுத்தக வடிவில் வெளியிட்டமை என்பது மிஷனரிகளின் சிறுபுத்தக முயற்சிகளின் பிரதிபலிப்பே என்பதும் ‘ஆறுமுகநாவலருக்கு முன்னர் மிஷனரிகளுக்கான மறுப்பினை இயக்க ரீதியாக யாரும் மேற்கொள்ளவில்லை’ (ஜெபநேசன், எஸ்., 2007:50) என்பதும் மனங்கொள்ளத்தக்கவை.

கிறிஸ்தவப் பிரசாரகர்கள் நற்கொடை, நற்சமயம், சிறுபுத்தகத்தால் வரும் பலன், துன்னெறி விலக்கு, குலாசாரம், ஆத்தும இரட்சிப்பு, இந்துமத பாப்புமத சம்பந்த தீபம், மும்மூர்த்தி இலட்சணம், உருத்திர, இலட்சணம், வேதமொழி, உரோமை மார்க்கத்தார் கொடுக்கிற எதிர்மொழிக்கு மறுமொழி, ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம், சைவர் ஆட்சேப சமாதானம், புதுச்சைவம், சைவமும் மச்சமாமிசமும், சமய ஆராய்ச்சியும் நேர்மையும், மிருகபலி ஆராய்ச்சி, பிள்ளையார் சரித்திர ஆராய்ச்சி, சுப்பிரமணிய சரித்திர ஆராய்ச்சி முதலாய பல சிறுபுத்தகங்களை வெளியிட்டனர். சைவப் பிரசாரகர்கள் சைவ விரோதம், சைவ சமயி, சைவ சமயம், சமயம் சமயம், இது நல்ல சமயம், சுப்பிரபோதம், விவிலிய குற்சிதம், கிறித்துவப் பல பிரிவினை, சைவகண்டன பரிகரணம், மிலேச்ச மத விகற்பம், சிவ தூஷண கண்டனம் சைவ மகத்துவ பானு, சபிண்டி நாடக சங்காரம், சிவனுந்தேவனோ என்ற தீய நாவுக்கு ஆப்பு முதலாய பல புத்தகங்களை எழுதி வெளியிட்ட னர்.

இச்சிறுபுத்தகங்களை சமய உண்மைகளை விளக்குபவை, பிற சமயக் கண்டனம் சார்ந்தவை, ஆலயங்கள் பற்றியவை, பட்டினங்கள் பற்றியவை, சமூகம் பற்றியவை, தனிநபர்கள் குறித்தவை எனப் பலவாறு வகைப்படுத்த முடியும். இவை பெரும்பாலும் உரைநடை வடிவிலும் சிறுபான்மை செய்யுள் வடிவிலும் அமைந்திருந்தன.

அச்சு ஊடக வருகை நாவில்லா உபதேசிகளான பல பிரசுரங்களைத் தமிழுக்குத் தந்தது. இக்காலச் சிறுபுத்தகங்களை அடிப்படையாக் கொண்டு, குறித்த சமயத்தின் விரிவான கருத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தல், இலக்கு வாசகராக எதிர்ச் சமயத்தாரைக் கொண்டிருத்தல், அபிப்பிராய பேதமின்றிப் புத்தகத்தை ஏற்கவேண்டுமென வலியுறுத்துதல், சிறுபுத்தகத்தை அவமதித்தல் பாவம் என்றுகூறி அதற்குப் புனிதம் கற்பித்தல், சிறிய செய்தியொன்றைப் பரப்பினால் அது பெருகும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தல், சிறுபுத்தகத்துள் சமய மூலநூலின் கருத்து அடங்கியது எனும் உறுதி கூறல், வாசிப்பவனை வயப்படுத்தி அவனைச் சமய உண்மையைத் தேடி வாசிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளது எனும் நம்பிக்கையை வெளிப்படுத்தல், குருவை நாடும் வழியைக் காட்டுதல், சமயம்சார் வரலாறு மற்றும் புராண இதிகாசக் கதைகளைக் கூறி சமய உண்மைகளை மக்களுக்கு எளிதாகப் புரிவைத்தல், எளிதில் வாசிக்கக்கூடியதாக இருத்தல், குருவும் உபதேசியும் போகாத இடங்களில் எல்லாம் போகும் வல்லமை பெற்றிருத்தல், இலவசமாக வழங்குவதற்கு வசதியாய் அமைதல் மக்களிடம் சுலபமாகவும் விரைவாகவும் சென்றுசேரும் ஆற்றல் பெற்றிருத்தல், சமயப் பிரசார நிறுவனம் ஒன்றின் இயக்கியாக அமைதல் முதலாயவற்றைச் சிறுபுத்தகங்களின் பண்புகளாகக் குறித்துக்கொள்ளலாம். இத்தகைய புரிதலோடு யாழ்ப்பாணத்தில் சமயக் காலனியம் பற்றிச் சுருக்கமாக நோக்கலாம்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* நாவில்லா உபதேசிகள்:  காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி இரண்டு)